Search This Blog

Thursday, January 21, 2021

மனம் என்பது மாஸ்டர் அல்ல (Kutti Revathi)


மனித உளவியல் எப்பொழுதுமே எனக்குப் பிடித்தமான ஒரு துறை. முறையாகப் பயில்வதுடன் சமூகக்களத்திலும் அதை இணைத்துப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. முறையாகப் பயில்வதற்கு இந்த உலகடங்கல் காலம் ஒத்துழைத்தது, வாய்ப்பும் நல்கியது.
என் உளவியல் ஆசிரியரை, மாஸ்டர் என்று தான் குறிப்பிடப்போகிறேன்.  நீண்ட வகுப்புகள், சுயப்பரிசோதனை முயற்சிகள், கேள்வி - பதில் முறைகள், நாடக முறைகள் என்று  அசத்திவிட்டார். ஒரு மனிதன் வேறு எந்தத் துறையிலும் நிபுணராக இருப்பதில் அர்த்தமில்லை. உளவியல் என்பதில் ஒருவர் முழுமையான அறிவும், திறனும் கொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால் வாழ்வதில் அர்த்தமில்லை என்கிறார்.
உளவியலில் நிறைய முறைகள் இருந்தாலும், நீங்கள் அவற்றை செயல்படுத்தவில்லையென்றால் அதனால் எந்தப்பொருளுமில்லை. ACT Therapy முறை. இதைப்பற்றி விரிவாக எழுதும் திட்டம் இருக்கிறது. ஆனால், சில முக்கியமான விடயங்கள் நம்மை பெரிதுமாக முன்செலுத்தக்கூடியவை.
தன்னுடைய மனம் என்பது ஒருவருக்கு மாஸ்டர் அல்ல. அது நினைப்பதை, சொல்வதை எல்லாம் நாம் கேட்கக்கூடாது. எண்ணங்கள் அதுபாட்டுக்கு மேகங்கள் போல நம்மைக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும், அவ்வளவே. அதற்கு மேல் ஒருவருக்கு ஒரு நாள் ஏற்படும் நான்காயிரம் ஐந்தாயிரம் எண்ணங்களுக்கு எந்த அர்த்தமுமில்லை என்கிறார்.
நம்மிடையே பெரிய அளவில் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்கள் உண்டு. பெர்சனாலிட்டி வேறு, அவற்றின் டிஸ்ஆர்டர்கள் வேறு. டிஸ்ஆர்டர்களை பெர்சனாலிட்டியாகக் கொண்டாடிக்கொண்டாடிக் கொண்டிருப்பதால் இவ்வளவு வன்முறை நம் உலகில் என்கிறார். நம்மில் நூற்றுக்கு இருபத்து நான்கு பேருக்கு இந்த டிஸ்ஆர்டர் இருப்பதை நாம் சிறப்பியல்பு என்று கொண்டிருக்கிறோம் என்கிறார்.
நாம் மற்றவர்களைப் பற்றி அவர் இப்படி நினைப்பார், அப்படி நினைக்கிறார் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்வதில் தான் நம் சிந்தனைப்பாதைகள் தவறான திசைக்குச் செல்கின்றன. உண்மையில் அவர் சிந்திக்க அவர் மண்டைக்குள் நம்மையும் தாண்டி நிறைய விடயங்கள் உள்ளன,  என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அம்மாதிரியான முன்முடிவுகளைத் தவிர்க்கவேண்டும் என்கிறார்.
கோபம், பயம், சோகம் இவை மூன்றுமே அழுத்தங்களைத் தரக்கூடிய உணர்வுகள். இவற்றின் அளவு மிகுந்து தான் நாம் மனச்சிதைவுக்கு ஆளாகிறோம் என்கிறார்.
‘அமைதி’, என்ற உணர்வின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்லுதலுக்கு நல்ல உபயோகமாக நம் சூழலைத் தூய்மைப்படுத்தும் பணியைச் சொல்கிறார்.
எனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது, நான் இப்படித்தான் என்பதன் வழியாகவே மனஅழுத்தத்தின் காரணிகளை நாமே உண்டாக்கிவைத்துக்கொள்கிறோமே தவிர பிறர் காரணம் இல்லை என்கிறார்.
என்ன தான் சிலம்பம் அறிந்திருந்தாலும், பொருளாதார விடுதலை இருந்தாலும், ஊக்கமுடைய பெண்ணாக இருந்தாலும் தன் மனதிற்குத் தான் ஊட்டி வளர்த்த வரையறைகளால் தாம் தன்னையே தான் கடக்கமுடியாமல் போகிறது என்கிறார்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதற்கு உங்களின் கூரிய உணர்வுகளை சரியாக இருபத்து நான்கு மணி நேரம் கழித்து வெளிப்படுத்தவேண்டும் என்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். எழுதி வைத்துக்கொள்வது, அதை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுவோமே என்ற சந்தேகத்தைக் கையாளத்தான். இருபத்து நான்குமணி நேரத்தில் அந்தக் கோபத்திற்கான காரணம் என்னவென்று உங்களுக்கே தெரிந்துவிடும். பெரும்பாலும் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்கிறார்.  அந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய அருமையான விடயங்களை உங்கள் முன் கோபம் தடுத்துவிட்டது என்பதை உங்கள் வாழ்விற்கும் உணர்ந்தவர்களாவீர்கள் என்கிறார்.
இன்னும் நுட்பமாகச் சென்று எழுத விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்தத்துறையில் நான் கற்றவை பற்றி எழுத விரும்புகிறேன். ‘மாஸ்டரிடம்’ கற்றதை இன்னும் ஒருவருக்கேனும் கற்றுத்தருவேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன். ஆகவே, எழுதுவேன்.
இதை வாசிப்பவர்களும் தங்கள் மனத்தைப்பற்றி அறிந்து கொள்ள இது உதவும் படியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வெளிப்படையான உரையாடல்கள் நம் இடைவெளிகளையும் தூரங்களையும் குறைக்கின்றன என்பதை உணர்கிறேன். நான் முன்பே சொன்னது போல, சோகம், பயம், கோபம் மட்டுமே மனிதனுக்கு இருக்கும் அடிப்படையான உணர்வுகள். அதிலும், இவை விலங்குகளுக்கு இருக்கும் உள்ளுணர்வுகளிலிருந்து மாறுபட்டு, மனிதர்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்வதற்காகவும், தற்காத்துக்கொள்வதற்காகவுமே உண்டானவை. இந்த உணர்வுகளைத் தவிர, மற்ற எந்தப் புதிய உணர்வுகளானாலும், அதாவது வலி, வெறுப்பு, வன்மம், வன்முறை, மகிழ்ச்சி, தவிப்பு, பதட்டம்,  காமம், காதல், தனிமை எல்லாமே வலிந்து மனிதன் வடிவமைத்துக்கொண்ட உணர்வுகள் தாம். கெளதம புத்தர், ‘வலி’, என்ற உணர்வு எப்படி வலிந்து மனித குலத்தினூடே உருவாக்கப்பட்ட ஒன்று என்பதைப் பற்றித் தீவிரமாகச் சொல்லியிருக்கிறார். சோகம், பயம், கோபம் இந்த உணர்வுகளைக் கூட ஒரு கோப்பையில் அளந்து பார்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாகக் கணிசமாகக் குறைத்துவிட முடியும். தினப்படிப் பயிற்சி அவசியம்.
‘உளவியல் கல்வி’,யைப் பற்றி நட்பு வட்டாரத்தில் பரிந்துரைத்தபோது பெரும்பாலோனோர் மறுத்தார்கள். ‘எனக்கே இதைப்பற்றியெல்லாம் நன்றாகத் தெரியும்’, என்று சொன்னார்கள். உண்மையில், அதைத் தன் மன உலகத்திற்குள் நுழைவதற்கான தயக்கமும் அச்சமும் கலந்த இறுக்கம் என்றே சொல்வேன். நவீன வாழ்வியலில் ‘மன வடிவாக்கம்’, என்பது நிறைய பழம்மரபுகளைக் கொண்டிருக்கிறது. அந்த ஒவ்வொரு மரபையும் ஊசியால் குத்திக் களைவது போல களைந்தெறிய வேண்டியிருக்கிறது. விலங்கிலிருந்து மேன்மையடைய நம் மேல் மூளையினை ஒட்டியிருக்கும் ‘கார்டெக்ஸ்’, தேவைப்பட்டது. அது வளர்ந்தது மனிதப்பரிணாம வளர்ச்சியில் முக்கியமான ஒன்று. இதைப்பற்றி நாம் தனி அத்தியாயத்தில் உரையாட வேண்டியிருக்கும். ஆக, மனம் என்பது மூளையின் செயல்பாடுகளுடன் பொருந்திப்போகும் ஒன்றென்பதால், ஆவியான ஒரு வெளியாக, காற்று வெளியிடையாக “மனதை” நாம் உணர்வது நம் வாழ்வின் அமைதியைத் தின்னக்கூடியது.
வெற்றி-தோல்வி, சரி-தவறு என்பவை என்று எதுவும் இல்லை. மகிழ்ச்சி - வேதனை என்ற இரு பக்கங்களில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான் முக்கியம். உலகச்சந்தையின் நுகர்வுப்பண்பாடு நம்மை எல்லாம் போட்டிக்கும் ஓட்டப்பந்தயங்களுக்கும் விரட்டியதில் தான் நாம் அன்றாட வாழ்வில் வெற்றி, தோல்வி என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினோம். ஒருவர் வெற்றி என்பதை நம்புகிறார் என்றால், அது மனமயக்கத்தின் உருவகமே. அப்படி ஒன்று இல்லவே இல்லை என்கிறார் என் மாஸ்டர். ஏனெனில், எல்லோரும் வெவ்வேறு. ஒவ்வொருவரும் இந்தப்பூமியில் தனித்த பயணத்தினை ஏற்பவர்கள், தனித்தே பயணிப்பவர்கள். ஒருவருக்கும் உடன் வாழும் உறவுக்கும் கூட எந்தத்தொடர்பும் இல்லை. ஆனால், போட்டியாக, பொறாமையாகப் பார்க்கத்தொடங்கிவிட்டால், ‘மனம்’, என்பதை விபரீதமான ஊடகமாக மாற்றி விடுகிறோம். பின், அது அபாயத்தின் எந்த எல்லைக்கு அழைத்துச்செல்லும் என்பதை அறியாத சறுக்கலுக்குத் தான் தயாராகிவிட்டார் என்றே அர்த்தம்.
இந்தப்பதிவில், முக்கியமாக நான் சொல்ல விரும்புவது, ABC கோட்பாடு பற்றி. எல்லீஸ் என்ற அறிஞர் நம் எண்ணங்கள் இயங்கும் திசைகளிலிருந்து கண்டறிந்தது.
A - என்பது ஒரு ‘சூழ்நிலை’ என்று வைத்துக்கொள்வோம். நாம் ஒருவரை ஃபோனில் அழைக்கிறோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
B - என்பதை நம் ‘சிந்தனை’ என்று கொள்வோம். நம் சிந்தனை உடனே எங்கே போகிறது என்று பார்ப்போம். அதாவது, அவர் நம் மீது கோபத்தில் இருக்கிறார் அல்லது அவருக்கு நெருக்கமாக இருக்கும் நமக்கு வேண்டாதவர் அவரிடம் எதையோ சொல்லிவிட்டார் என்று நாம் தவறாக, எதிராகச் சிந்திக்கத் தொடங்குகிறோம்.
C - என்பதை நம் ‘உணர்ச்சிகள்’ என்று கொள்வோம். உடனே நமக்குள்ளேயே உணர்ச்சிகள் கொந்தளித்து அவசர அவசரமாக முகநூலில் ஒரு தவறான, எரிச்சலான பதிவை இடுக்கிறோம். இல்லை, எப்படி அவருக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடமுடியுமோ அவற்றை எல்லம் செய்வோம்.
ஆக, மேல் சொன்னதை யோசித்தால், C - என்ற முடிவிற்கு A - என்ற சூழ்நிலை காரணமேயில்லை. B - என்ற தன்னுடைய சிந்தனை தான் காரணம். எப்படி என்றால், ஒரு கணம் நின்று நிதானமாகி, B - என்ற சிந்தனையை நேராக்கலாம். அதாவது, ஃபோன் எடுக்கமுடியாத மோசமான சூழலில் அந்த நண்பர் இருந்திருக்கலாம்,  நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது எந்த ஃபோனையும் ஏற்கமுடியாத சிக்கலில் கூட அவர் இருக்கலாம் என்று எண்ணத்தொடங்கினால், C - உணர்ச்சிகரமான செயல்பாட்டு நிலை உருவாகாது.  தன் தவறான சிந்தனையின் விளைவான கழிவே C யே தவிர, அந்த A - காரணமேயில்லை. அந்த விளைவிற்குத்தானே முழுமுதற்காரணம் என்பதை என் மாஸ்டர் அழகாகச் சொல்வார்.
உளவியலின் வெவ்வேறு கோட்பாடுகளை விளக்க மேற்கண்ட, இந்த உதாரணத்தை என் மாஸ்டர் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருப்பார். ஆக, ABC கோட்பாடு நம் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது சுவாரசியமானது, மனமகிழ்ச்சி தரக்கூடியது. சிக்கல்கள் அற்றது. நீங்களும் ABC என்ற அடிப்படையான மனக் கோட்பாட்டின் நிபுணர் ஆகிவிடுவீர்கள். அவரவர் மனம் அவரவர்க்கு பூந்தோட்டமாக இருக்கவேண்டும், இல்லையா?

No comments:

Post a Comment