உயிரழுத்தம் கூடிக்கொண்டது
ஒருத்தி என்ற சொல்லை
ஐந்திணை மண்ணோடு பிசைந்து பார்க்கிறேன்
ஐவகை குற்றவுணர்வுகளோடு
ஆண் வர்க்கம் பெருமையுடன்
உருக்கொள்கிறது
ஏகாதிபத்தியத்தை பெண் யானை மீது
விட்டு விரட்டி தன் கூட்டத்தையே அழித்து
வனத்தில் சமத்துவத்தை சீர்குலைக்கும்
ஆண் யானை
கருணையோ கண்ணுக்கு எட்டும் நிம்மதி
அதனை
சிலம்பன்களின் கூட்டில் மணிக்குயில்
உயிர்கொள்ளும் போதும்
காட்டுப் பூனைகள் சிச்சிலம்பு ஒலியில்
வால் முறுக்கி ஆடும் போதும்
பெருகுவதைக் கண்டிருக்கிறேன்
அன்பே ஆக்கும் கலை
காமத்தில் கலைவது கலையாகாது
காமத்தின் சூழ்ச்சியே
எங்கும் வியாபித்திருக்கிறது
காமத்தால் அடிமையாக்கப்பட்டதே தாயகம் ( தாய் அகமும்)
தாயின் காமத்தின் மீது பூசப்பட்டதே வர்ணம்
காமத்தால் அனுசரிக்கப்பட்டதே தேசம்
காமத்தால் துண்டாடப்படுவதே வர்க்கம்
காமத்தால் வரையப்பட்டதே எல்லைக் கோடுகள்
காமத்தால் வீழ்த்தப்படுவதே வரலாறு
காமமே அரசாட்சியின் மனக்கண்ணாடி
காமத்தால் ஒடுக்கப்பட்டதே கிராமங்கள்
காமத்தால் பிரிக்கப்பட்டதே நாடுகள்
காமத்தால் விரிவாக்கப்பட்டதே சாதிகள்
காமம் குற்றவுணர்வுகளின் குரூரத் தகப்பன்
காமத்தின் படிக்கட்டுகளே ஞானத்திற்கான வழி
காமம் கண்ணின் விதி
மனதின் எதிர்நிலை
வீழ்த்தமுடியாத சுயநிலை
உறவுகளின் எமநாவு
நீதிக்கு நேர்நஞ்சு
பெண்ணிடம் வலுவாய் வலிந்து திணிக்கப்பட்ட முடிவில்லா போர்
ஆணின் ஐவகைக் குற்றவுணர்வு
•
- Composed by Thenmozhi Das
No comments:
Post a Comment