Search This Blog

Tuesday, December 29, 2020

கே.பாலசந்தர்

 கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

பள்ளிப்பருவத்தில் கே.பாலசந்தர் படங்களை பார்ப்பவர்கள் அறிவுஜீவிகளாக கிராமங்களில் அறியப்பட்டிருந்தார்கள். அதனால் அப்போது வெளியான அபூர்வராகங்கள் படத்தை நண்பர்களோடு போய் பார்க்கப் போயிருந்தேன். பார்த்து விட்டு ஒன்றும் புரியவில்லை என்று பரபரக்க நண்பர்கள் விழித்துக் கொண்டிருக்கையில், உருப்படியாய் பொய் பேச வராதவனாக இருந்த போதிலும் துணிந்து எனக்கு இந்த படம் நன்றாக புரிகிறதே என்று ஒரு வார்த்தையை சொல்லவும், நண்பர்கள் என்னை பிரமிப்போடு பார்த்தது அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது.
அப்படியாக அறிமுகமான கே.பி சார் பின்னர் ஏதோ ஒரு வகையில் என்னோடு இணைவார் என்றோ, என் தலை தொட்டு காட் பிளஸ் யூ மை சன் என்று வாழ்த்துவார் என்றோ சத்தியமாக அப்போது எனக்கு தெரியவே தெரியாது.
நன்றி வஸந்த் சார்..
பின்னாளில் வஸந்த் சாரிடம் துணை இயக்குநராக பணியாற்றியபோது கே.பி சார் பற்றி பல விசயங்கள் தெரிந்து பரவசிக்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கே.பி சார் படப்பிடிப்பிற்கு செல்கிறபோது உதவி இயக்குநராகிய வஸந்த் பின்னால் உட்கார்ந்திருப்பார். கே.பி முன்இருக்கையில். அவர் எங்கோ பார்த்தபடி முணுமுணுப்பாய் ஏதோ சொல்வார். அதை உற்று கவனித்து வஸந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதும் அதை கச்சிதமாக நிறைவேற்றி தயாராக வைத்திருப்பார். படப்பிடிப்பு நடக்கும். அந்த அளவு தனதான படைப்புல பிரவேசிப்பிற்குள் கே.பி சார் மிதந்து கொண்டிருக்கிறபோது சிறிய பிசிறல்கூட கல்லெறி வட்டங்களாய் அவரின் சிந்தனை போக்கை சிதைத்துவிடக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டவராய், எந்தவித ஓசையும் அவருக்கும் செலுத்தாமல், அவரின் முணுமுணுப்புகளில் இருந்தே, அங்கே என்னஎன்ன தேவை என்பதை உள்ளுணர்வால் முழுமையாய் கிரகித்துக்கொண்டு அவற்றை நிறைவேற்றக்கூடிய துணை இயக்குநராய் இருந்திருக்கிற தருணங்களை மிகுந்த பரவசத்தோடு பகிர்ந்தபோது அந்த கணங்களுக்குள் நானும் காலம் கடந்துபோய் பயணித்து வாழ்ந்து வந்திருக்கிறேன்.
எப்படியோ கே.பி சாரின் சிஷ்யர் வஸந்த்திடம் வேலை செய்ததன் மூலமாக கே.பி சாரிடமே பணி செய்த ஒரு திருப்தி.
இப்படித்தான் ஒரு நாள் ஹோட்டல் சங்கீதாவில் இயக்குநர் வஸந்த்துடன் என்னவோ சாட் ஐட்டம் சாப்பிட்டபடி உலக இலக்கியமும், உலக சினிமாவும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு சிறுகதை பற்றி திரும்பியது. என்னுடைய சொந்த வாழ்வில் நடந்த ஒரு அனுபவத்தை லவ் காட்டேஜ் என்கிற சிறுகதையாக எழுதியிருந்தேன். சென்னை மூலக்கடை பகுதியில் 1.5 கிரவுண்டில் நான் கட்டியிருந்த லவ் காட்டேஜ் என்கிற அந்த வீடு.. எதிர்பாராத காரணங்களால் உறவுகளின் திட்டமிடாத வழிநடத்தலினால் கை நழுவிப்போனது. பின்னர் ஒரு நாள் அந்த லவ் காட்டேஜை போய் பார்க்க நேர்ந்தபோது ஏற்பட்ட பரவச அனுபவத்தையே அந்த கதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. பார்த்திபன் சாருக்கும் இப்படியான ஒரு அனுபவம் நேர்ந்திருக்கிறதை அறிவேன். இதை வஸந்த்திடம் சொல்லிக் கொண்டிருக்கையில், சட்டென உணர்ச்சிவசப்பட்வராய், வா.. கொஞ்சம் நடக்கலாம் என்றார். இருளுக்குள் அந்த தெருக்களில் நடந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். சட்டென என்ன நினைத்தாரோ, வா.. உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று நேராக கே. பி முன் கொண்டுபோய் நிறுத்தி, என் உதவி இயக்குநன்.. இவனை வாழ்த்துங்க என்றார். உடனே தான் நான் மேற்சொன்ன அந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்படியே மனசின் நாடிநரம்புகள் அத்தனையும் சிலிர்ப்பில் கதகதத்துக் கொண்டுவிட்டது.
கே.பி சாரை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அனந்து சார் அவருக்கு இயக்குநர் இங்மர் பெர்க்மன் பற்றியும், அவரின் படங்கள் பற்றியும் ஆழமான அறிமுகங்களை தந்தவர். இப்படியான பல ஆளுமைகளின் அறிமுகங்களை தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். அதனாலேயே அனந்து சாரை அத்தனை சௌகர்யங்களோடு வைத்துக்கொண்டவர். திறமையாளர்களை தன்னோடு நிரந்தரமாய் வைத்துக்கொண்டு, அவர்களுக்கான உரிய மரியாதையை செய்யக்கூடிய அவரின் பாங்கில், நூறு படங்களை அநாயாசமாக இயக்கக்கூடிய வீரியம் ஒளிந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
கல்கி திரைப்படத்தின் ப்ரிவியூ இப்போதைய ஃபோர் ஃபிரேம்ஸ் அப்போதைய குட்லக் திரையரங்களில் நடக்கிறது. படம் முடிந்து வெளிவருகிற அனைவரிடமும் படம் எப்படியிருக்கிறது என்றும், அவரவர் அபிப்பிரயாங்கள் பற்றியும் ஒவ்வொருவர் கையாய் பிடித்து ஆர்வத்தோடு கேட்டறிகிறார். அந்த தேலும், பரவசமும், திரையூடகத்தோடான ப்ரேமையுமே அவரை அந்த உச்சம் நோக்கி நகர்த்தியிருக்கிறது.
கமல் தான் அவர் படத்தில் அதிகம் நடித்த நாயகன். அவர் புன்னகை மன்னன் திரைப்படத்தில் மாமாவுக்கு குடுமா..குடுமா.. பாடலில் இரண்டு கதாபாத்திரமாய் வந்து நகைச்சுவையாய் ஜமாய்த்திருப்பார். அந்த காட்சியை எப்படி எடுக்கலாம் என தனக்கு தோன்றியதை கமல் கே.பி சாரிடம் சொன்னவுடன், அது சட்டென கே.பி சாருக்கு பிடிபடவில்லை. ஆனால் என்னவோ இருப்பதாக உணர்ந்து, மறுநாள் படப்பிடிப்புக்கு அவர் வராமல் இருந்து கொண்டு, நிர்வாகிகளிடம் இந்த பாடல் காட்சியை உங்களையே எடுத்துவிடும்படி கே.பி சார் சொல்லச்சொன்னதாக சொல்லியிருக்கிறார்கள். உடனே ஒருவித அசட்டு துணிச்சலோடே கமல் அந்த பாடல் காட்சியை தான் நினைத்த மாதிரி எடுத்து முடித்ததாக அவரே சொல்லியிருக்கிறார். பின்னர் எடிட்டிங்கையும் கமல் சாரையே பண்ணிவிடும்படி சொல்ல, எடிட் செய்து தயக்கத்தோடே காட்டியிருக்கிறார். பார்த்துவிட்டு கே.பி சார் அப்படி பரவசித்திருக்கிறார். அது தான் கே. பி சார்..
பதினாறு வயதினிலே பார்த்துவிட்டு, அறிமுக இயக்குநர் என்றெல்லாம் பார்க்காமல், என்னாலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது என மனதார பாராட்டி இருக்கிறார்.
அவரை பற்றி எழுதுவதென்றால் ஒரு புத்தகம் போடும் அளவிற்கு எழுதிக்கொண்டே போகலாம். அது பின்னொரு சமயத்தில் நிகழக்கூடும்.
அவரின் இந்த வாழ்வின் நிறைவு வைபவத்திற்கு இயக்குநர் பார்த்திபன் சாரோடு போயிருந்தேன். அப்போது அவர் அங்கிருந்த ஈசிசேரில் அமர்ந்திருந்த காட்சி தன்னிச்சையாக நினைவில் வந்து ஊஞ்சல் ஆடியது. இப்போது தன்னந்தனியாக.

Kulashekar T

No comments:

Post a Comment