இந்து என்ற சொல்லில் எதைக்குறிப்பிடுகிறேனோ அதுவும் வேதாந்தம் என்ற சொல்லும் ஒன்றுதான்
கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வ மிதம் விஜ்ஞாதம் பவதி (முண்டக உபநிடதம்1.1.3)எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறிய முடியும்? இந்த ஆராய்ச்யையே உபநிடதங்கள் தங்கள் ஒரே கருத்தாக கொண்டிருக்கின்றன.தற்கால மொழியில் சொல்வதானால்,பொருட்களின் ஓர் அறுதி ஒருமையேஉபநிடதங்களின் நோக்கம்
ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே துவைத உபதேசமான உபாசனையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,இறுதியில் நம்முள்ளே ஒடுக்கிக்கொள்பவனே இறைவன் என்று முதலில் கற்பிக்கப்படுகிறது. புற அக இயற்கையை வழிநடத்துபவரும் ஆள்பவரும் அவரே,இயற்கைக்கு வெளியே இருப்பதுபோல் தோன்றுகிறார் எனவே அவரை வணங்கவேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது.
அடுத்தபடியில் அவர் இயற்கைக்கு வெளியில் இல்லை,ஆனால் அந்தர்யாமியாக,அதாவது நமக்குள்ளே ஊடுருவிக்கலந்திருக்கிறார் என்று அதே ஆசிரியர் போதிக்கிறார்,இறுதியில் அந்த இரண்டு கருத்தும் கைவிடப்பட்டு,உண்மையானவை எல்லாம் அவரே,வேறுபாடு என்பது இல்லை என்று போதிக்கப்படுகிறது. தத்துவமஸி ச்வேதகேதோ(சாந்தோக்கிய உபநிடதம் 6.8.7)ச்வேதகேது அதுவே நீ.அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் அந்த ஒரே பொருள்தான் மனித ஆன்மா. அதுவே நீ,என தெளிவுபடுத்தப்படுகிறது. இங்கு எதற்காகவும் விட்டுக்கொடுத்தல் இல்லை,பிறருடைய அபிப்ராயங்கள் பற்றி பயம் இல்லை,உண்மை தைரியமாக கூறப்படுகிறது.
பிரபஞ்சதோற்றம் பற்றிய கருத்து
---------------
வேதாந்த நெறிகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஒன்று பிரபஞ்சக்கருத்து இரண்டாவது பொதுவான மன இயல் உண்மை.வேறுபட்ட ஆற்றல்களுக்கிடையே ஒற்றுமை இருக்கிறது என்பதை ஏதோ சில காலத்திற்கு முன்புதான் விஞ்ஞானம் கண்டுபிடித்தது.வெப்பம்,காந்தம்,மின்சாரம் என்ற வேறுபட்ட ஆற்றல்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே என்றும்,இவை அனைத்தையும் அந்த அடிப்படை சக்திகளாக மாற்ற முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த அடிப்படை சக்தியை எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம்,ஆனால் இந்தக் கருத்து நமது சம்ஹிதைகளிலேயே சொல்லப்பட்டுவிட்டது.இந்த உலகில் காணப்படும் ஈர்ப்பாற்றல்,விலக்கும் ஆற்றல்,மின்சாரம் உட்பட அனைத்தும் பிராணன் என்னும் அடிப்படை சக்தியிலிருந்தே பிறக்கின்றன
பிராணன் என்றால் என்ன?பிராணன் என்பது ஸ்பந்தனம்,அதிர்வு.(பிராணன் என்றால் மூச்சு அல்ல)இந்த பிரபஞ்சம் எல்லாம் ஒடுங்கி முன்பிருந்ததைப்போல் ஆகும் போது இந்த அளவற்ற ஆற்றல் என்ன ஆகிறது?அது அழிந்துவிடுகிறதென்றா நினைக்கிறீர்கள்?இல்லை,அழிவதில்லை.அவை அழிந்துவிட்டால் அடுத்த அலை எங்கிருந்து தோன்ற முடியும்?இயக்கம் என்பது அலைகளைப்போல் எழுவதும் விழுவதுமாக அல்லவா உள்ளது.
இனி இந்த பிரபஞ்சம் வெளிப்படுவதைக் குறிக்கின்ற சிருஷ்டி என்பதை கவனிக்கவேண்டும்.இதன் பொருள் கிரியேஷன் என்பதல்ல.இதற்கு இணையான ஆங்கில வார்த்தையில்லை,தோற்றத்திற்கு வருதல் என்று சொல்லலாம்.ஒரு கல்பத்தின் முடிவில் எல்லாம் நுண்மையாகி,மேலும் நுண்மையாகி சிருஷ்டிக்கு முன்பிருந்த நிலையை அடைகின்றன,மறுபடியும் வெளிப்பட தயாராக அந்த நிலையிலே அமைதியாக இருக்கின்றன.மீண்டும் அதிலிருந்து வெளிப்படுவதே சிருஷ்டி அல்லது தோற்றத்திற்கு வருதல்.அந்த அமைதிநிலையில் எல்லா ஆற்றல்களும் என்னவாகின்றன? அவைகள் பிராணனில் ஒடுங்கிவிடுகின்றன.இந்த பிராணன் ஏறக்கறைய இயக்கமற்றதாகிவிடுகிறது.முற்றிலுமாக இயக்கமற்று விடுவதில்லை.இதைத்தான் வேத ஸுக்தம்.ஆனீதவாதம்(ரிக்வேதம் 10.129முதல்322)அது அதிர்வுகளின்றி அதிர்ந்தது என்று கூறுகின்றன.
ஜடம் என்று நாம் அழைக்கின்ற பொருள் என்னவாகிறது?ஜடத்திலெல்லாம் சக்திகள் வியாபித்திருக்கின்றன என்பது உங்ளுக்கு தெரியும்..இந்த ஜடம் ஆகாசத்தில் ஒடுங்குகிறது.(ஆகாசம் என்பது வானம் அல்ல).ஆகாசத்தை ஈதர் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.ஆகாசமே ஜடத்தின் மூலநிலை.சக்தியின் மூலநிலை பிராணன் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த பிராணனின் இயக்கத்தால் ஆகாசம் அதிர்கிறது.அடுத்து சிருஷ்டி ஆரம்பிக்கும் போது இந்த அதிர்வு விரைவாகிறது.அப்போது ஆகாசம் அலையாகத் திரண்டடித்து,சூரியர்கள் சந்திரர்கள் என்றேல்லாம் நாம் அழைக்கின்ற இந்த உருவங்கள் ஆகின்றன.
யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம்..(கடோபநிடதம்2.3.2)இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் பிராணனின் அதிர்வால் தோற்றத்திற்கு வருகின்றன.
பிராணன் ஆகாசத்திற்குக் கொடுக்கும் அடிகளின் பலனாக வாயு அல்லது அதிர்வுகள் உண்டாகின்றன.இந்த அதிர்வுகளின் வேகத்தால் ஏற்படும் உராய்வினால் வெப்பம் அல்லது தேஜஸ் தோன்றுகிறது.இந்த வெப்பம் திரவமாகிறது,இதுவே அப்பு அல்லது நீர்,பின்னர் இந்த திரவம் திடன்கிறது.ஆகாசமும் அதிர்வும் இருந்தது,பின்னர் வெப்பம் வந்தது,பின்னர் அது திடபொருளாகி,தூலப்பொருளாகச்சுருங்கியது,ஒடுங்கும் போது துாலத்திலிருந்து தொடங்கி இதே முறையில் பின்னோக்கி செல்கிறது.இப்படியே பிரபஞ்சம் தோன்றித்தோன்றி ஒடுங்கிய வண்ணம் இருக்கிறது.
ஆகாசத்தின் துணையின்றி பிராணன் மட்டும் தனித்து இயங்க முடியாது.அதிர்வு,எண்ணம்,இயக்கம் என்று நாம் அறியும் சக்திகள் அனைத்தும் பிராணனுடைய பல்வேறு நிலைகள்.உருவங்கள் அனைத்தும் ஆகாசத்தின் பல்வேறு நிலைகள்.ஆதாரப்பொருள் இன்றி பிராணனால் தனித்து இயங்க முடியாது.ஆகாசமே அதன் ஆதாரப்பொருள்.ஜடம் இல்லாத சக்தியையோ,சக்தி இல்லாத ஜடத்தையோ இந்த பிரபஞ்சத்தில் இல்லை இரண்டும்இணைந்திருக்கின்றன.
தூலப்பொருட்கள் ஒவ்வொன்றும் தன்மாத்திரைகள் எனப்படும் நுண் அணுக்களால் ஆனது.ஒரு பூவிலிருந்து மணம் என் மூக்கிற்கு வருகிறது.மலர் அங்கே இருக்கிறது மலரிலிருந்து ஏதோ ஒன்று என் மூக்கை வந்தடைகிறது இதுதான் தன்மாத்திரை எனப்படும்.பஞ்சபூதங்கள் அனைத்தும் இதே போல் தன்மாத்திரைகளால் ஆக்கப்பட்டது.தன்மாத்திரைகளை இன்னும் நுட்பமான அணுக்களாக பிரிக்கலாம்.தன்மாத்திரைகளிலிருந்து தான் நாம் காண்கின்ற உணர்கின்ற பொருட்களான நிலம் நீர் போன்றவை படைக்கப்பட்டுள்ளன.இது உங்கள் மனத்தில் நன்றான பதியவேண்டும்.
இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் சூட்சுமத்திலிருந்துதான் ஸ்தூலம் பிறக்கிறது.ஸ்தூலமாகிய ஜடம் தான் கடைசியில் தோன்றுகிறது.ஆற்றலில் ஒருமை உள்ளது.அது பிராணன்.ஜடத்தில் ஒருமை உள்ளது அது ஆகாசம்.இனி இவை இரண்டிற்கும் அடிப்படையாக ஏதாவது ஒருமை இருக்கிறதா?இவற்றை சேர்த்து ஒன்றாக்க முடியுமா?தற்கால விஞ்ஞானத்தில் இந்த கேள்விக்கு பதில் இல்லை.இதற்கு பதில் காணும் ஆற்றலை அவை இன்னும் பெறவில்லை.அந்த ஆற்றலை பெற வேண்டுமானால்,பழைய கருத்துக்களாகிய பிராணன்,ஆகாசம் போன்றவற்றை அவை இப்போதுதான் கண்டுபிடித்து வருகின்றன.
பிராணனுக்கும் ஆகாசத்திற்கும் மேலே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்று முன் மனத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment