வழியனுப்புதலும் விடைபெறுதலும் அத்தனை எளிதானதா மேலும் இவை இரண்டும் ஒன்றா என்ற கேள்வி இன்று காலையிலேயே மனதுக்குள் வளையமிடத் தொடங்கிவிட்டது. இந்தக் கேள்வியின் தொடக்கபுள்ளி எங்கிருந்து தொடங்கியது என யோசிக்கிறேன். அண்மையில் நண்பர் ஒருவரின் பிள்ளைப்பேற்றினைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனை கத்தோலிக்கக் சகோதரிகளினால் நடத்தப்படுகிறது. அந்த வளாகத்தினுள் மிகச்சிறிய தேவாலயம் உள்ளது. அந்த மருத்துவமனையில் நிகழ்கிற ஒவ்வொரு குழந்தைப் பிறப்புக்குப் பிறகும் தாயையும் குழந்தையும் தேவாலயத்தில் வைத்து ஜெபம் செய்து வாழ்த்தி வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையைப் பார்க்க நான் சென்றிருந்த சமயம் தாயும் குழந்தையும் ஆசீர்வாதமாக இருக்க ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு புதிய உயிரை இந்த உலகில் வாழ்வதற்காக வழியனுப்பி வைக்கிற சகோதரியின் முகத்திலிருந்த மகிழ்வும் அவர்களிடம் விடைபெறுகிற இளம்தாயின் முகத்திலிருந்த உடல்நோவு கடந்த பரவசமும் சற்றுத்தள்ளி பார்வையாளராக நின்றிருக்கும் என்னிடமும் இயல்பாக வந்துசேர்ந்தது. அவர்கள் கிளம்பிச் சென்றபின்பு என்னுடைய வாகனத்தின் வருகைக்காகக் காத்திருந்தேன். அப்போது மருத்துவமனையின் தீவிர நோயாளிகள் பிரிவில் சற்றுமுன்பாக ஒருபாட்டியம்மா இறந்து போயிருப்பார் போல, அவரது உடலை தூய வெள்ளைத் துணியில் சுற்றி, குழந்தையை வழியனுப்பி வைத்த அதே சகோதரி மரித்த பெண்ணின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்து வழியனுப்பிக் கொண்டிருந்தார். முந்தின வழியனுப்புதலின் மகிழ்வு கரைந்த அந்த சகோதரியின் முகத்திலிருந்து எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத ஏதோ ஒன்று எனக்குள் பல்வேறு நினைவுகள் கிளர்ந்தெழச் செய்தது.
பிறப்புக்கும் மரணத்திற்கும் இடையே எத்தனை விதமான வழியனுப்புதல்களையும் விடைபெறுதல்களையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். முதல்முறையாக குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும்பொழுது அந்த அம்மாவும் கையசைத்து விடைபெறும் குழந்தையும் மனத்தில் எப்பொழுதும் நீங்காத காட்சி. இதே போல மகளைத் திருமணம் செய்து வழியனுப்பும் தகப்பனுக்கும் மகளுக்கும் இடையே கண்களால் நிகழ்கிற ஒரு விடைபெறுதல் ஒருபோதும் மறக்க இயலாத காட்சி. சமீபத்தில் என்னுடைய நெருங்கிய உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். நிச்சயம் செய்யும் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்பு ஒரு அறையில் அந்த மணப்பெண்ணும் அவருடைய அம்மாவும் எதிரெதிரே அமர்ந்திருக்க பக்கவாட்டில் நானும் மாப்பிள்ளைப் பையனுடைய அம்மாவும் அமர்ந்து, திருமண வீட்டிற்கே உண்டான கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தோம். சிறிதுநேர உரையாடலுக்குப் பின்பு பெண்ணின் அம்மா நிலைத்தப் பார்வையுடன் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். வேறுபக்கம் திரும்பிப் பேசிக்கொண்டிருந்த அந்த மணப்பெண்ணும் அம்மாவின் பார்வை ஏற்படுத்திய ஏதோ ஒரு உணர்வினால் உந்தப்பட்டுத் திரும்பியவர் ஒரு நிமிடத்திற்கும் குறையாமல் அம்மாவின் கண்களுக்குள் உறைந்திருந்தார். அங்கே அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் “என்ன அம்மாவும் மகளும் கண்ணாலேயே பேசிக்கிட்றீங்க” எனக் கேட்டபின்பே அவர்கள் இருவரும் இயல்புக்கு மீண்டார்கள். அதுவரையில் தன்மகளை தன்னுடைய மகளாக மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டிருந்த அம்மாவுக்கு வேறு ஒருவீட்டிற்கு தன்மகளை முழுமையாக கையளித்து விடை தருவதன் துயரம் அங்கே தோன்றி மறைந்ததாகவே இன்றுவரையில் அந்தக் காட்சி எனக்குள் பதிந்திருக்கிறது. பொதுவாகவே விடைபெறுவது என்பது துயர் என்கிற அடிச்சரடு கொண்டே நெய்யப்படுகிறது.
அனேகமாக ரயில் நிலையங்கள் என்றாலே கையசைத்து நிற்கும் ஒரு காட்சியை சட்டென உயிர்ப்பித்துவிடுகின்றன. ரயில் என்பது உறவுகளின் அடிப்படையான பிரிவிற்கும் இணைவிற்கும் குறியீடாகவே எப்பொழுதும் தோன்றுகிறது. யாராவது ஒருவர் அவருக்குப் பிரியமான யாருக்கோ கையசைத்து விடைதரும் பொழுது தன்னுடைய மனத்தையும் இணைத்தே அனுப்புகிறார். விடைபெற்றுச் செல்பவரும் தன்னுடைய மனத்தை அந்த ரயில் நிலையத்தில் விட்டுச் செல்கிறவராகவே இருக்கிறார். ஒரு பயணம் தொடங்குகிற இடத்தில் மட்டுமல்ல, பயணத்தின் இடைவழியில் நின்று செல்லும் பொழுது அந்த ரயிலில் பயணித்து நெடுந்தூரம் செல்கிற பிரியத்துக்குரிய ஒருவருக்காக தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பழங்களை கையில் வைத்து ஐந்து நிமிட சந்திப்புக்காகக் காத்திருப்பவர் பலர் உண்டு. அந்தக் குறுகிய நேரச் சந்திப்பிற்காக இவரும் கூட போக்குவரத்து நெரிசல் கடந்து நெடுந்தொலைவு பயணித்து வந்திருப்பார். நின்று செல்கிற அந்த ரயில் நகர்ந்து செல்கையில் அவர்கள் இருவரையுமே இடம்மாற்றிவிட்டே செல்கிறது. வழியனுப்புகிறவர் பயணிக்கிறவராகவும் விடைபெற்றவர் ரயிலடியில் காத்திருப்பவராகவும் இடம்மாற்றம் நிகழ்வது என்பது இம்மாதிரியான சந்தர்ப்பங்களை உயிர்ப்புடையதாக்குகிறது.
எஸ். தேன்மொழியின் கவிதை,
“மனம் ஒவ்வாதொரு
வழியனுப்புதலைத்
தந்துவிட்டு விரைகிறேன்
இன்னும் சிறிதுநேரம்
நின்றால்கூட
நம்வழிகள்
அடைபட்டுவிடும்
வாசிக்கமுடியா
ஒருகோடிக் கவிதையோடு
உணர்வின் சிலையென
நிற்கிறாய் அதே இடத்தில்
கடந்துபோகும் என் கண்கள்
வழியைப் பின்நோக்கி
உன்னிடத்தில் தேடுகின்றன
என் பயணத்தின்
தொடர்ச்சியான திரும்பலில்
காட்சி தந்த நீ
மறைந்துவிட்ட அந்த
முக்கியத் தருணத்தில்
என் வழிகள்
மனம் கனக்க
நீ நின்ற புள்ளியில்
திரும்ப வந்து
சுழித்துக்கொள்கின்றன.”
பெண்கள் பெரும்பாலும் மனத்தினால் இயக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணை இந்தச் சமூகம் உடலாகப் பார்த்தாலும் அவள் தன்னளவில் உடலே அல்ல. அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே அலைந்துகொண்டிருப்பவளாக இருக்கிறாள். அவளுக்குத் தெரிகிறது, அவன் சூழலின் காரணமாகப் பிரிந்து செல்ல வேண்டியவன்தான் என, ஆனாலும் அவள் தடுமாறிக்கொண்டே இருக்கிறாள். பிரியத்தினால் கனிந்திருக்கும் மனத்திலிருந்து மனம் ஒப்புதலோடு ஒரு வழியனுப்புதலை ஒருபோதும் தந்துவிட இயலாது.
கழார்க்கீரன் எயிற்றியனார் என்கிற சங்கப்பெண்பாற்புலவர் ஒருபாடலில் தலைவி அவளுடைய மனம் உடன்பட்டு வழியனுப்பிவிட்டு அதன்பின்பு வருந்துவதாகச் சொல்கிறாள்.
“நாண்இல மன்றஎம் கண்ணே நாள்நேர்பு,
சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ
நுண் உறை அழிதுளி தலைஇய
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. “
தலைவன் பிரிந்து செல்லும் பொழுது அவனோடு உடன்பட்டு வழியனுப்புகிறாள் என்றபோதும் அவன் பிரிந்து சென்றபொழுது அழாத தலைவி வாடைக்காற்று வீசுகிற பருவம் தொடங்கியும் தலைவன் வராததால் அழுகிறாள். வாடைப்பருவம் எப்படித் தொடங்கியது என்றால், நுண்ணியதாக மழைத் துளியோடு கலந்து வாடைக்காற்று வீசுகிறது. இந்தக் குளிர்ந்த காற்றின் நீர்த்துளி பட்டு, சூல்கொண்ட பச்சைப்பாம்புபோலத் தோற்றம் கொண்ட கரும்பின் திரண்ட அரும்பு மலர்கிறது. சூல்கொண்ட காதல் மலரவேண்டிய இத்தகைய வாடைக்காலத்திலும் தலைவன் இன்னும் திரும்பி வராததால் என் கண்கள் தானாகவே கண்ணீர் வழிய அழும்படியாக நாணம் இல்லாதவையாக இருக்கின்றன எனத் தலைவி சொல்கிறாள். அவளுடைய ஆற்றாமை மிகுந்த உணர்ச்சியை அவள் கண்கள் மீது ஏற்றிச் சொல்கிறாள். குறிப்பிட்ட காலத்தில் திரும்பிவிடக்கூடும் என்கிற எண்ணத்தில் உடன்பட்டே தலைவனை வழியப்புகிறாள் அவள். அவனோ வாடைக்காலத்திலும் திரும்பவில்லை.
சொல்லிச்சென்ற காலத்தில் திரும்ப இயலாது போய்விடுகிறபொழுது தனித்திருக்கும் தலைவி தன்னுடைய தோழியை அவனிடம் தூது அனுப்புவாள். அப்படி தோழியையும் தூது அனுப்ப இயலாது போகும்பொழுது தென்றல், மயில், கிளி, அன்னம், புறா, மான், முகில் என அவளின் புழங்குவெளியில் காண்பவற்றைத் தூதாக அனுப்பி தன்னுடைய நிலையை அவனுக்குச் சொல்ல விழைகிறாள். தலைவன் வரவு நிகழாத வாடைக்காலத்துத் தனிமையில் தவித்திருக்கும் கழார்க்கீரன் எயிற்றியனாரின் தலைவி அந்த வாடைக்கற்றையே தூதாக அனுப்புகிறார். அவரின் அகநானூற்றுப் பாடல்,
“விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி
விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி ! புனற்கால்
அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே.”
தலைவனின் வருகை இன்மையால் இறப்பதற்கு ஒப்பான துன்பத்துடன் தலைவி இருக்கிறாள். தலைவனை நினைத்து மெலிந்து கையில் உள்ள சில வளையல்களும் நெகிழ்ந்து விழ , அவனுடைய வரவினை விரும்புகிற மனத்துடன் இரக்கங்கொள்ளத்தக்க வகையில் இருக்கிறாள். பலவகைப்பட்ட மலர்களும் குழைய வானத்தில் முழங்கி, குளிர்ந்த மேகம் மழைபொழிந்து தணிந்த கூதிர்காலத்தின் கடைசி நாளில் தலைவியின் நெஞ்சத்தில் துன்பம் ஏற்படும்படியாக அவளைத் தனியாக விட்டுச் சென்றிருக்கிறான். இவள் இரங்குதலுக்கு உரியவள் என்று கருதாமல், களிரானது நீரை முகந்து சொரிவதுபோல, இடமெங்கும் மறைந்து போவது போல பனித்துளி விழ, தாமரை மலரும் கரிந்து போகிறது. இப்படிப்பட்ட முன்பனிக்காலத்துப் பாதி இரவில் குன்றுகளையும் நெகிழ்விப்பதுபோன்ற வாடைக்காற்றே நீ என் ஒருத்தியை மட்டும் வருத்துகிற குறிக்கோளுடன் வந்தாயோ எனக் கேட்கிறாள் தலைவி. ஓடும் புனல், கால்வாய்களிடத்திலே உள்ள மண்மேடுகளைக் கரைந்து நுண்மணலாக்குவது போல நெஞ்சம் நெகிழ்ந்து இளகிட கொடியவரான தலைவன் இருக்கும் திக்கில் நீ செல்வாயாக, அவ்வாறு நீ சென்றால் பொருள்தேடும் வேட்கை கொண்டு என்னை மறந்திருக்கும் என்னுடைய தலைவர் என்னை நினைவுகொள்ளக்கூடும் என வாடைக்கற்றைத் தூதாக அனுப்புகிறாள் தலைவி.
பெரும்பாலும் உடன் வாழுகிற மனிதர்களையும், மொழியையும் தூதாக அனுப்புகிற செயல் ஆணுக்கே கைக்கூடி வந்திருக்கிறது. ஆனால் பிரிவுகாலத்தில் பெண் சொற்களற்றுப் போகிறாள். ஆண்களைப்போல தன்னுடைய நிலையை அருகில் இருக்கும் மனிதரிடம் பகிர்ந்துகொள்ள அவளால் முடிவதில்லை. அதனால் வேறு எதன் வழியாகவாவது தன்னுடைய நிலையைச் சொல்லிவிடவும் பிரிந்திருக்கும் அவனைக் கூடியிருக்கவுமான மனத்துடன் இருக்கிறவளாகப் பெண் இருக்கிறாள்.
சிலபோது வேறு வேறு நிலப்பகுதியில் வாழநேரிடுகிற பிரியம் கொண்ட இருவர் முழுநிலா நாளில் தங்களை நிலவின் ஒளிவழியாகப் பரிமாறிக்கொள்வது இன்றும்கூட நிகழத்தான் செய்கிறது. என்றபோதிலும் சங்ககாலம்போலவோ பக்திஇலக்கியங்களின் காலம் போலவோ அல்லது சிற்றிலக்கியங்களின் காலம் போலவோ தூதுமொழியும் தூது இலக்கியமும் தனித்தனியாக இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி தூதினை வேறு ஒரு வடிவத்தில் செய்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு
கனிமொழி.ஜி. யின் கவிதை,
இன்னும் நீ தொடர்பெல்லைக்கு
வெளியில் தான் இருக்கிறாய் .
நீ தந்த குளிரும் வெம்மையும்,
வெம்மையும் குளிருமாய் மாறிவிட்டன…
சொற்களால் நமக்கான கூடு முடைந்தவன் நீ
எங்கே உறங்குகிறாய் …
சொல்வாயா…
நீயிருப்பது எந்த நிலம்
அங்கே இப்போது என்ன பருவம்
இக்கணம் என்ன பொழுது
பெரும்பயணம் செய்துவரும்
நீள அலகுடைய பறவைகள்
அங்கே வருமில்லையா
என்னைக்கடந்து செல்லும்
எல்லா நதிகளிலும் பூக்களைத் தூவுகிறேன்
எப்படியும் அலைசலிக்கும்
மணல்வெளிதானே உன் இருப்பிடம்
அலைக்கற்றையின் சூட்டில்
இன்னுமின்னும் பொறிக்கின்றன
வெண்மையான கால்களுடன்
நிறைய புறாக்குஞ்சுகள் .
உன் சொற்களற்ற இந்த அலைவெளியில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்கான ஒரு ஸ்மைலியும்
ஒரு சிவந்த இதயத்தையும்
என் அலைபேசியில்
இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது.
************************************************************************************************************************
கழார்க்கீரன் எயிற்றியனார்:
எயிற்றியனார் என்கிற இயற்பெயர் கொண்ட இவர் கழார் ஊரைச் சேர்ந்தவர். இந்த ஊர் சோழ நாட்டில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கீரன் என்பவரின் துணைவியாகவோ மகளாகவோ இருக்கலாம் என்று ஒரு குறிப்பு உள்ளது. “வில்போல் சோழர் கழாஅர்”(நற் : 281) என்கிற இவரின் வரிகளினால் இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகிறது.
பாலைத் திணையைப் பாடுவதில் தனித் தனித்தன்மையுடையவர் இவர். பாலைப்புனைவுக்கு இவர் மேற்கொண்டவை மருதநிலமும் வாடைக்காலமும். பொதுவாக தலைவன் செல்லும் வழியைப் பாடுகிற வழக்கம் உள்ள பெண்பாற்புலவர்களின் கூற்றுக்களில் இவர் தனித்து தலைவியின் வாடைக்காலத்துத் தனிமை உணர்ச்சியை ஆறு பாடல்களில் பாடியுள்ளார். அதனால் வாடை பாடிய புலவர் எனச் சொல்லலாம்.
அகநானூறு: 163, 217,235,294 குறுந்தொகை: 35, 261 நற்றிணை: 281,312 மொத்தம்: 8
************************************************************************************************************************
தூதுச்செய்தி:
• தொல்காப்பியத்தில் தூது செல்பவர்களை வாயில்கள் என்பர்.
• ஓதல், பகை, தூது இவை பிரிவே( அகத்திணை:27)
• அகப்பொருள் நிலையில் மட்டுமல்லாமல் புறப்பொருள் நிலையிலும் தூது வழக்கம். அதியமான் அரசனுக்காக ஔவையார் தொண்டைமான் அரசனிடம் தூது சென்றது.
• திருக்குறளில் தூது தனி அதிகாரம்(681-690)
• பக்தி இலக்கியங்களில் திருமுறைகளில், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் தலைவனாகிய இறைவனிடம் அன்பு கொண்ட தலைவி தூது அனுப்புவது போல பாடல்கள்.
• தமிழின் முதல் தூது நூல் 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய “நெஞ்சுவிடு தூது”.
• சிற்றிலக்கிய காலத்தில் 300 வகையான தூது நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
• அனைத்துத் தூது நூல்களும் “தூது” என்கிற சொல்லை இறுதியில் கொண்டிருக்கும், சோமசுந்தர பாரதியார் மட்டும் மேகம்விடு தூது என்கிற பொருள்படும்படியாக “மாரிவாயில்” என்று பெயர் வைத்திருப்பார்.
• இத்தனை வகையான இலக்கிய வகைமைகள் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது சங்கஇலக்கியப் பாடல்கள்.
• காப்பியங்களில்: கம்பராமாயணத்தில் அனுமன் தூது, சீவகசிந்தாமணியில் சீவகனிடம் குணமாலை கிளியைத் தூது அனுப்புதல்.
• மகாபாரதத்தில்: ஸ்ரீ கிருஷ்ணர் தூது – விதுரர் வீட்டில் தங்கியதால் துரியோதனருக்குச் சார்பாக விதுரரை வில் எடுக்கவிடாமல் செய்தது பாரதப்போரின் முக்கிய நிகழ்வு.