ஆதிச்சநல்லூர் 'முதுமக்கள் தாழி' மீதான கிறக்கம் சொல்லில் முடியாதது. பெருங்கற்கால மக்கள், முட்டை வடிவிலான கருப்பை போன்ற இந்த ஈமத்தாழிகளில் தாம் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் பெண்ணின் கருப்பையிலேயே வந்து பிறப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அதன் வாய்ப்பகுதியில் இருக்கும் கயிறு போன்ற டிசைன், தாயுடன் சிசுவை இணைக்கும் தொப்புள் கொடியைக் குறிப்பிடுகின்றதாம். மனிதன் மண்ணில் விதைக்கப்படுவதாய்ச் சொல்லும் மானுடவியல் மரபு அறிவு. மண்ணில் மனிதனின் தொடர்ச்சிக்கு ஒரு கற்பனை ஊக்கியாய் இருக்கிறது, இத்தாழி.
தொல்லியல் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் - கோ.ஜெயக்குமார்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தமிழக வரலாற்றில் தனது தொல்லியல் முதன்மையால் இடம்பிடித்த ஊர். இவ்வூர் தாமிரபரணியாற்றின் தென்கரையில், திருநெல்வேலி திருச்செந்தூர்ச் சாலையில் திருவைகுண்டத்துக்கு முன்னர், பொன்னன் குறிச்சி பேருந்து நிறுத்தத்தையடுத்து அமைந்துள்ளது. இவ்வூருக்கு ஆதிச்சநல்லூர் என்ற பெயர் எப்போது எப்படி ஏற்பட்டதென உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆயினும், இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப்பெயர் உடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குதிரைமொழித்தேரி எள்ளுவிளையிலுள்ள கி.பி. 1639ஆம் ஆண்டுக் கல்வெட்டு, திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் மடத்து அச்சம்பாடு தேவபிச்சை நாடார் தோட்டத்திலுள்ள கி.பி. 1645ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஆகியவற்றில் ‘ஆதிச்ச நாடாவான்' என்ற பட்டப் பெயர் கொண்டோர் இடம்பெறுகின்றனர். குறிப்பாக, மடத்து அச்சம்பாடு கல்வெட்டின்மூலம் அச்சன்பாடு என்ற அவ்வூரைத் திருவைகுண்டம் கைலாசநாதர் கோயிலுக்கு மானியமாகக் கொடுத்தோருள் ஆதிச்ச நாடாவார்களும் அடங்குவர் எனத் தெரியவருகிறது. எனவே அவர்களுடைய பெயர்த் தொடர்பு இவ்வூருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. கடந்த 2004–ம் ஆண்டில் தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அனைத்து இந்தியா மற்றும் கிழக்காசிய மொழிகளின் எழுத்துகளுக்கு தமிழ் எழுத்து வடிவங்களே மூலமாக இருந்துள்ளது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்து ஏறத்தாழ 11 ஆண்டுகள் ஆகியும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இது குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவில்லை.
ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துகளுடன் கூடிய முதுமக்கள் தாழி ஆய்வுக்காக மைசூர் தொல்பொருள் மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு அது காணாமல் போய்விட்டதாகவும் தெரியவந்து உள்ளது.
No comments:
Post a Comment