அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான். புத்தகத்தில் குனிந்திருந்த தன் நெற்றியில், அவள் விழிப்பார்வை பட்டுச் சுடுவது போல் அவனுக்கு உணர்வு தட்டியது.
அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். ஆனால், அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தன் பாட்டில் புத்தகத்தைப் பார்த்து கொப்பியில் ஏதோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அதே மேசையில் அவளைச் சுற்றி அவளுடைய தோழிகள் மூவர் அதேபோல் ஏதோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரும் அவனைக் கவனிக்கவே இல்லை.
அவனுக்கு அது சிறிது ஏமாற்றமாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்ததை எண்ணியபோது அவனுக்குச் சிறிது அவமானமாகவும் இருந்தது. அவன் மீண்டும் அந்த மாதப் பத்திரிகையில் தலை குனிந்தான்.
தான் அவளைப் பார்த்ததை மற்றவர்கள் பார்த்திருக்கக்கூடும் என்று திடீரென அவன் நினைத்தான். மற்றவர்கள் தன்னைப் பிழையாக நினைப்பதை அவன் விரும்பவில்லை. யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று அவன் தலை நிமிர்ந்து சுற்றவும் பார்த்தான். யாருமே அவனைக் கவனிக்கவில்லை. எல்லோரும் தம்பாட்டில் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் புரட்டிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருந்தனர். எங்கும் அமைதியாக இருந்தது. தாள் புரளும் ஓசையைவிட மற்றபடி அறை மௌனமாகவே இருந்தது. சற்றுத் தள்ளி மேசைத் தொங்கலில் இருந்த அந்தக்கண்ணாடி போட்ட மனிதன் இடைக்கிடை காலை இழுத்து நீட்டுவதால், செருப்பு தரையில் உராயும் ஓசை மெதுவாகக் கேட்டது. தூரத்தே கல்லடிப் பாலத்தின் ஊடாகப் பஸ் ஒன்று போவது சன்னலின் ஊடே தெரிந்தது. கீழே பரந்து கிடக்கும் வாவியிலிருந்து வரும் காற்று மேல் மாடியில் மிகவும் இதமாக வீசியது.
அவன் மேல்மாடிக்கு ஏறி வந்தபோதுதான் அவளைக் கண்டான். எழுதுவதை விட்டுவிட்டு அவள்தான் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் மட்டுமில்லை; மேல் மாடியில் இருந்த எல்லோரும்தான் அவனை ஒரு கணம்பார்த்தார்கள். பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் வாசிப்பில் கவனத்தைப் பதித்துக் கொண்டார்கள். எல்லோரும் அவனைப் பார்த்ததும் அவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவன் வாசிகசாலைக்குப் பொருத்தமில்லாத சப்பாத்தை அணிந்திருந்தான். சப்பாத்தின் அடிப்பகுதியில் அடித்திருந்த இரும்பு லாடங்கள் சீமேந்துத் தரையில் டொக்... டொக்... என்று சத்தம் எழுப்பின. வாசிகசாலையின் அமைதியில் அந்தச் சத்தம் மிகவும் பெரிதாகக் கேட்பதுபோல் இருந்தது.
அவன் மிக மெதுவாக நடந்துவந்தான். மேசையில் கிடந்த ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு தூண் ஓரத்தில் கிடந்த கதிரையில் உட்கார்ந்தான். அதுவரை அவள் அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் நடந்து வந்த மெதுமை அவளுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். பேனையின் மூடிப்பகுதி அவள் கன்னத்தில் பதிந்திருந்ததை அவன் கண்டான். அவள் இதழ்களில் ஒரு சிறிய நகை நெளிந்ததையும் அவன் கண்டான். பிறகு அவன் அந்தப் பத்திரிகையில் பார்வையைப் புதைத்துக் கொண்டான்.
அவளுடைய விழிகள் அவனைக் கவர்ந்தன. அவை மிகவும் அழகாக இருப்பதாக அவன் நினைத்தான். மீண்டும் ஒருமுறை அவளைப் பார்க்க வேண்டும் என்று அந்த நினைப்பு அவனைத் தூண்டியது. கையைத் தூக்கித் தலையின் முன் மயிரைத் தடவிவிட்டவாறே அவள்புறம் திரும்பிப் பார்த்தான். அவள் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருந்தாள். அந்த நாலுபேரிலும் அவள் மட்டும்தான் அழகாக இருப்பதாக அவன் நினைத்தான். பாடசாலை உடையில் அவள் அழகாகத்தான் இருந்தாள். பழுப்பு நிறமான வட்டமான முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.
அவனுக்குச் `சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்கள் உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப்பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சிகொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.
எனினும் இனி அவளைப் பார்க்கக்கூடாது என்று அவன் உறுதி கொண்டான். தான் பார்க்காவிட்டாலும் அவள் தன்னைப் பார்ப்பாள் என்ற எண்ணத்தில் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கையில் இருந்த தமிழ்ப் பத்திரிகையைப் போட்டுவிட்டு ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொண்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால், சாதாரணமாக வாசிக்க முடியும். வாசிப்பது அரைகுறையாக விளங்கும். ஆயினும் அவன் அதை வாசிக்கத் தொடங்கினான். அடிக்கடி வாசித்ததை நிறுத்தி வாசித்ததை ஆழ்ந்து சிந்திப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். எதையோ கண்டு மகிழ்ச்சியுற்றவன்போல முகத்தை மலர்ச்சி அடையச் செய்துகொண்டான்.
என்றாலும், `சே இது பெரிய கேவலம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சாதாரணமாக இருக்க முனைந்தான். காற்சட்டைப் பையில் இருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தையும் கழுத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டான். பிறகு பத்திரிகையை வேகமாகப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்க்க முனைந்தான்.
ஆயினும், மனம் அலைபாய்ந்தது. அவள் இதற்கிடையில் தன்னைப் பார்த்திருக்கலாம் என்று அவன் கற்பனை பண்ணினான். இப்பொழுது அவள் என்ன செய்கிறாள்? உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா? என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. என்றாலும் அவன் பார்க்கவில்லை. தான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பாள் என்று அவன் எண்ணினான். அது தனது ஆண்மைக்குப் பெரிய அவமானம் என்றும் அவன் கருதினான்.
அவள் யாராக இருக்கக்கூடும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. பள்ளி மாணவி என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. பள்ளி விட்டதும் புத்தகக் கட்டோடு வந்து ஏதோ குறிப்பு எடுக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஒருவேளை அவள், `அட்வான்ஸ் லெவல்’ படிக்கக்கூடும்; எங்கே படிக்கிறாளோ? வின்சன்தானே பக்கத்தில் இருக்கிறது. அங்கேதான் படிக்கக்கூடும் என்றெல்லாம் யோசித்தவாறே ஜன்னலூடு பார்வையைச் செலுத்தினான்.
பாலத்தின் ஊடாக ஒரு வைக்கோல் லொறி மெதுவாகப் போய்க்கொண்டிருக்கிறது. சன்னல் நிலைப்படியில் ஒரு அடைக்கலக் குருவி வந்து நின்று `கீச்’ என்று இருமுறை கத்தியது. பிறகு எங்கோ வெளியே பறந்து சென்றது.
பக்கவாட்டில் கதிரைகள் இழுபடும் சத்தம் கேட்டது. அவர்கள் போவதற்காக எழுந்துவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அவளைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினான். செருப்புச் சத்தங்கள் மெதுவாக ஒவ்வொரு அடியாகக் கேட்டன. தான் பார்ப்பதனாலோ பார்க்காமல் விடுவதனாலோ தனக்கோ அவளுக்கோ என்ன வந்துவிடப் போகின்றது என்று அவன் நினைத்தான். இது தனது பலஹீனம்தான் என்று யோசித்தபோது அவளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.
அவள் கீழே குனிந்துகொண்டு ஒவ்வொரு அடியாக இறங்கிச் சென்றாள். கீழே செருப்புகளின் ஓசை கேட்டு மறைந்தது. அவனுக்கு நெஞ்சில் சிறிது உறுத்தலாகவும் பாரமாகவும் இருந்தது. இது வெறும் அர்த்தமில்லாத உணர்ச்சி என்று அவன் நினைத்தாலும், அது அப்படித்தான் இருந்தது. அவள் பின்னலைத் தள்ளிவிடுவதற்காக நிமிர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வாங்காது அவளுடைய கண்களை உற்றுப் பார்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான். தான் பார்த்திருந்தால் அவளும் கண் கொடுத்திருக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அவளுடைய பொழுபொழுப்பான கன்னங்களும் ஈரமான உதடும் எண்ணெய் பூசாத கூந்தலும் அவன் கண்ணுக்குள் நின்றன.
அவள் இருந்த கதிரையை வெறித்துப் பார்த்தான். இப்போது யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவள் பார்க்கும் இடத்தில் அந்தப் பெண்கள் இல்லை. கதிரைகள் காலியாகத்தான் இருந்தன. எழுந்து அவள் பின்னாலேயே சென்று பார்ப்போமா என்று யோசித்தான். கூடவே, உடனே சென்றான். நான் அந்தப் பெட்டைகளைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் பின்னால் எழுந்து செல்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.
அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஓப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திரும்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளிவாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்துபோக விரும்பவில்லை. இப்போது போனால், `தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.
வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.
பொது நூல் நிலையம்
மட்டக் களப்பு.
திறந்திருக்கும் நேரம்....
மூடும் நேரம்.......
என்று ஒவ்வொன்றாக வாசித்தான். அது அலுத்தபின் வெறுமையாகக் கிடந்த கோட்டடியையும் தூரத்தெரிந்த கச்சேரி மதிலையும் நகரசபைக் கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். விளையாட்டு மைதானத்தில் ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளும் தோழிகளும் தபால் கந்தோரடியால் நடந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிறிது தூரம் நடந்து பள்ளிவாசலடிக்கு வந்தான். அவர்கள் நெடுக நடந்து கொண்டிருந்தார்கள்.
`நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தான். ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். இவளுகளப் பாத்தாத்தான் என்ன? பாக்காட்டித்தான் எனக்கென்ன? என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.
`சே! எப்பவும் இப்பிடித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.
நன்றி : அன்று தேர்ந்த சிறுகதைகள் 1917_1981 ஓரியன்ட் லாங்மன் வெளியீடு
No comments:
Post a Comment