Search This Blog

Wednesday, August 6, 2014

வந்துவிடு ஹைக்கூவே !!!

கவிஞர்களின்
சோம்பலுக்கு
பிறந்திருக்கலாம்
ஹைக்கூ.. ..!

வெட்டியமரத்தோடு
கொண்டுபோனார்கள்
நிழலையும் சேர்த்து.
-காவனூர். ந. சீனிவாசன்

கடலில் கால் நனைத்தேன்
கண் முன் விரிந்தது
வானம்.
-முனைவர் எ.மு. ராஜன், புதுச்சேரி

இறந்த பல்லி
ஊர்ந்து செல்கிறது
எறும்புகளின் கால்களால்.
*
கி.சார்லஸ்

கண் வழி புகும்
ஈக்கள்; அமைதியாய்
காவல்பொம்மை

பயமுறுத்தக் காட்டினேன் 
அய்யனார் அரிவாளை
பிடிங்கி விளையாடியது குழந்தை

ம.ரமேஷ்
முடிந்திருந்த விசேஷம்
நிலவினை அள்ளி
பாத்திரம் துலக்கும் மனைவி.
*
கி.சார்லஸ்
பள்ளம் காட்டி
மிரட்டுகிறது
மலையுச்சி.
-காவனூர் ந.சீனிவாசன்
வற்றிய நதிக்கரையில்
துள்ளிக் குதித்தது
மணல் லாரியிலிருந்து நீர்.
●வாலிதாசன்.
ஈச்ச மரத்திலிருந்து
விழுகின்றன; யாரோ
எப்போதோ எரிந்த கற்கள்

பிச்சைப்பாத்திரம் 
பளபளப்பாய் இருந்தது
பெளர்ணமி நிலவு

நடக்காததையெல்லாம்
நடப்பதாய்ச் சொல்லும் கிளி
தலையாட்டிக் கொண்டு நான்

ஒட்டடை பிடித்திருக்கும்
கோவில் மணி; ஒலிக்கும்
சுருதி சுத்தமாய்

சவ வீட்டின் முன்
பிடித்துவிளையாடும் சிறுவர்கள்
உதிரும் ஆலம் இலைகள்

மார்கழிப் பனி
நடுநடுங்கி ஒலிக்கிறது
கீறள் விழுந்த திருப்பாவை

கழுவி துடைத்த வீடு
தூசிகள் எழும்பும்
கூரையினுள் நுழையும் ஒளி

கோடைகால இறுதி
கிணற்றுப் பாறை இடுக்கில்
கூடு கட்டும் குருவி
ம.ரமேஷ்
அடகுவைத்த மோதிரத்தின் 
அடையாள அச்சு
விரலில் குளிர்கிறது
● 
ரயிலில் 
கோடிகளை விற்றுக் கொண்டிருந்த
முதியவரின் சட்டைக் கிழிசல்

புகையும் சிகரெட்
ஊர்ந்து செல்லும் கடிகார முள்
தனிமை

குறித் தவறாமல்
புறப்பட்டு விட்ட அம்பு
பறக்க எத்தனிக்கும் பறவை

வற்றிய குளம்
வந்து வந்து போகும்
மீன் கொத்தி !

கிளி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !

சர்க்கஸ் கோமாளியின் மனைவி
கடைசி வரிசையில்.
நிறைய விழிநீர்.
● நா. விச்வநாதன் ● முள்ளில் அமரும் பனித்துளி

என் பார்வையை
இழுத்துச் செல்கிறது
சுவரேறும் கட்டெறும்பு

ஈரக் கல்லறை,
எல்லோரும் கலைந்தபின்
தனியே ஒரு நாய்!

No comments:

Post a Comment