Search This Blog

Monday, August 11, 2014

பொன்மொழிகள்



நீ பற்றற்றிரு; மற்றவை சேவை செய்யட்டும்; மூளையின் பகுதிகள் வேலை செய்யட்டும்; ஆனால் ஓர் அலைகூட மனத்தை வெல்ல இடம் கொடுக்காதே.ஓர் அன்னியன் போலவும் வழிப்போக்கன் போலவும் வேலை செய், ஆனால் உன்னைத் தளைகளுக்கு உள்ளாக்காதே. அது அஞ்சத்தக்கது. -சுவாமி விவேகானந்தர்

பந்தத்தின் காரணம்

பந்தத்திற்கு காரணம் காமம் மற்றும் பணத்தாசைதான், காமமும் பணத்தாசையுமே உலகியல். இவை இரண்டுமே நாம் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளன. -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

இறைவன்

இறைவனுக்கு அருவமும் உண்மை, அதுபோல் உருவமும் உண்மை; இதை நினைவில் வைத்திரு. ஆனால் உனக்கு எதில் நம்பிக்கையோ அதைப் பிடித்துக் கொள் -பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

தவம் என்பது என்ன?

இறைவனிடம் உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கையும் பக்தியும் அடைய வேண்டுமென்றால் நீ கடும் தவம் செய்ய வேண்டும். தவம் என்பது குறிக்கோளின்றி அங்குமிங்கும் அலைவதல்ல; நிலைதடுமாறாது. நாள் தவறாது செய்யப்படும் ஜபம், தியானம் மற்றும் புலனடக்கம் ஆகியவையே தவமாகும் -சுவாமி அபேதானந்தர்

உன் ஆன்மாவே உன் ஆசிரியர்

நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது. யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவைத் தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை -சுவாமி விவேகானந்தர்

ஆன்மாவே நாம்!

மரணமற்ற, சுதந்திரமான, இயல்பாகவே தூய்மையான ஆன்மாவே நாம். நாம் பாவம் செய்யமுடியுமா? முடியவே முடியாது. இத்தகைய நம்பிக்கைதான் வேண்டும். இத்தகைய நம்பிக்கையே நம்மை மனிதனாக்கும்; நம்மைத் தெய்வமாக்கும். -சுவாமி விவேகானந்தர்

கங்கை ஜாடியின் கதை

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர்.

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார். சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றினால் அழுத்தமாகக் கட்டியிருந்தார்; அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார்.

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள் பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment