Search This Blog

Tuesday, August 12, 2014

"அம்பட்டன்"

தாத்தா காலையிலேயே சவரப் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் . மயிர் சிரைத்தல் பரம்பரை தொழில் . அடுத்தவன் மயிரை பிடிங்கித்தான் பிழைக்க வேண்டி இருந்தது தாத்தாவுக்கு . ஆனால் அவருக்கு அதில் சலிப்போன்றும் இருந்ததாக எனக்குத்  தெரியவில்லை . 

ஊர் சோறு எடுக்கப் போகும்பொழுது எப்போதாவது என்னையும் உடன் கூட்டிப் போவார் . "அம்மா நான் பரேரி வந்திருக்கன் ..." என்று வாசலில் இருந்து குரல் கொடுப்பார் . ஒரு கிண்ணத்தில் சோறு குழம்பு என எல்லாம் போட்டு கொண்டு வந்து கொட்டுவார்கள் . வாசலில் இருந்தே வாங்கிக் கொள்ள வேண்டும் . தாத்தா இப்படி ஊர் சோறு எடுப்பதை அப்பா எத்தனையோ முறை வேண்டாம் என்ற பொழுதும் "போகலன்னா கோச்சிப்பாங்கடா ...அப்புறம் கூப்டு வேலையும் கொடுக்கமாட்டாங்க "

உன்ன யாரு இப்பவும் வேலை செய்ய சொல்றது ? 

அடப் போடா ...இந்தக் கட்ட சாகுற வரைக்கும் ஒழைக்கும் . நீ உன் பொண்டாட்டி புள்ளைங்கள பாரு . எனக்குத் தெரியும் என்ன எப்படி பாத்துக்குறதுன்னு ...

ஆனா எங்களுகிள்ள மானம் போகுது ...என்று அப்பா சொல்லவும் அன்று தாத்தாவுக்கு கோவம் வந்துவிட்டது ..

மானம் போகுதா ? இந்த அம்பட்டன் பொழப்பு செஞ்சித்தான் உங்களுக்கு கஞ்சி ஊத்துனேன் , படிக்க வச்சேன் , கல்யாணம் பண்ணி வச்சேன் . அப்போலாம் போகாத மானம் இப்ப போகுதா . 

அப்பாவும் கோவத்தோடு வெளியே கிளம்பி போய்விட்டார் . 

தாத்தாவுக்கு இப்படி இருக்கத்தான் பிடித்திருந்தது . தன்னை தீண்டத்தகாதவன் என்று பிறர் சொல்வது பற்றிய எந்த ஒரு புகாரும் அவருக்கு சமூகத்தின் மீது இருந்ததில்லை . பரேரி என்று அழைக்கப் படும்பொழுது அவர் முகத்தில் ஒரு சலனத்தையும் நான் கண்டதில்லை . "உமக்கு அம்பட்டன் கிறுக்குயா " என்று  யார் சொன்னாலும் எனக்கு வருகிற கோவம் கூட என் தாத்தாவுக்கு வந்ததில்லை . "பொழப்பத்த அம்பட்டன் பொண்டாட்டி தலய செரைச்சானாம் " என ரெட்டியார் வீட்டு சுப்பிரமணி என் தாத்தாவை வசைப் பாடும்போதும் "நாளைக்கு கண்டிப்பா வந்திடறேன் சாமி " என துண்டெடுத்து கக்கத்தில் வைத்து பணிந்தே பதில் சொல்லுவார் . என் வயது தான்  மணிகண்டனுக்கு . என் தாத்தாவை பெயர் சொல்லி கூப்பிட்டு "எங்க அய்யா உன்ன முகச்சவரம் செய்ய கூட்டிவர சொன்னாரு " என ஒருமையில் பேசினாலும் தாத்தா இதோ வந்திடறேன் என சவரப் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் .  இப்படியாக இருப்பது தான் நமக்கு விதிக்கப் பட்டிருக்கு என்பதை தாண்டி அதிகபட்சம் வேறொன்றை என் கேள்விகளுக்கு பதிலாக தாத்தா சொன்னதில்லை .

திருமணம் ஆன புதிதில் சட்டை போட்டு புது மனைவியோடு தெருவில் வந்த பொழுது உசந்த சாதி இளந்தாரிகள் ஆயாவின் கண்முன்னாலேயே தாத்தாவின் சட்டையை கழற்ற வைத்து அவமானப் படுத்திய நாளில் இருந்து சாகும் வரைக்கும் சட்டையே போட்டதில்லை . ஒரு வேட்டியும் துண்டுமே எப்போதும் அவருக்கான ஆடை .  ஏன் தாத்தாவுக்கு கோவமே வராதா இவர்கள் மீது என்ற என் கேள்வி விடயற்றே இருந்தது . 

ஏச்சுக்கும் பேச்சுக்கும் பணிந்து போவதும் , அதிகார சாட்டைக்கு குனிந்து போவதுமாக வாழ்ந்திருந்த தாத்தா என் ஒரு வீட்டில் இல்லை , எல்லா சேரிக்குள்ளும் எல்லா கீழைத்தெருக்களிலும் இருந்திருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொள்ள நான் கொஞ்சம் வயதில் வளரவேண்டி இருந்தது .

அப்பா சொல்லுவார் "பள்ளிக் கூடத்துல என்ன சாதின்னு யாராவது கேட்டா இசை வேளாளர்னு  சொல்லு ,அம்பட்டன்னு சொல்லி வைக்காத " . இசை வேளாளர் என அப்பாவின் சொல் படி யார் கேட்டாலும் சொல்லி வந்திருக்கிறேன் . என் தாத்தா மயிர் சிரைக்கிறவர் என நண்பர்களிடத்தில் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை . ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை , யார் கேட்டாலும் கணீர் குரலில் சொல்லிவிடுகிறேன் "நான் அம்பட்டன் " என்று . இது தான் என் சாதி என என்னை எந்தச் சமூகம் இழித்துப் பேசுமோ , அதே சாதியின் பெயரை பெருமையாக சொல்லிக் கொள்ள நான் எதற்கு வெட்கப் படவேண்டும் ? செய்யும் தொழில் வைத்து பட்டப் பெயர் சொல்லி பறையன் என்றும் அம்பட்டன் என்றும் சக்கிலியன் என்றும் ஏகாலி என்றும் பிரித்து வைக்கிற இவர்கள் அல்லவா வெட்கப்படவேண்டியவர்கள் . சில தேசங்களே ஒன்று சேர்ந்தாலும் , உடையவே உடையாது என நினைத்திருந்த பெர்லின் சுவர் உடைந்து தூள் தூளான போதும் எங்கள் நாட்டில் ஊரும் சேரியும் என்றைக்கும் ஒன்று சேரவே முடியாது என்றிருக்கையில் நான் ஏன் சாதிப் பெயரை பதுங்கிச் சொல்ல வேண்டும் ? உரக்கச் சொல்வேன் அம்பட்டன் என்று . நீ என்னை கீழ்மையானவனாக பார்க்கும் வரைக்கும் நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன் நான் முடிதிருத்தும் மகோன்னத மனிதர்களின் வழித் தோன்றல் என்று .

ஆமாம் என் தாத்தா பெயரை நான் சொல்லவே இல்லையே .....பெயர் சொல்லி என்ன ஆகப் போகிறது ? நீங்கள் என் தாத்தாவின் பெயரை "அம்பட்டன்" என்றே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . நான் அவரை அப்படியாகத் தான் பெருமையோடு நினைவு கூர்கிறேன் 
க.உதயகுமார்

No comments:

Post a Comment