Search This Blog

Wednesday, March 27, 2013

தேநீர்

தேநீர் – ஒரு சுவையான பானம்!
தேநீர் என்பது இயற்கை பானம். அதை வெந்நீரில் போட்டு வடிக்கட்டி குடிப்பதே சிறந்த முறை. இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட்கள் தேநீரில் உள்ள சத்துக்களை முறித்துவிடும். எந்த வகை டீத்தூளாக இருந்தாலும், தண்ணீரில் டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடக் கூடாது. மாறாக, டீத்தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில், நன்கு கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு - மூன்று நிமிடங்களில் டீத்தூளின் சாறு அனைத்தும் வெந்நீரில் கலந்துவிடும். அந்த நீரை அப்படியே அருந்தலாம்'' என்கிறார் தொட்டபெட்டா டீ ஃபேக்டரியின் பொது மேலாளர் வரதராஜன்.

டீயில் ஆறு விதமான பாலிபீனால்கள் உள்ளன. மேலும் காஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற அல்கலாய்டுகள் உள்ளன. இவை மனித உடலுக்கு புத்துணர்வைத் தருபவை. சிகரெட் புகைப்பதால் உடலில் படியும் நிகோடின் அளவை தியோபுரோமின் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இதில் அதிக அளவில் உள்ளன. இது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பை குறைத்து உடலினை சமச்சீராக பராமரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. எபிகேலோ கேட்சின் என்ற பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. பாலிபீனால்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கின்றன. மேலும் மூளையில் ஆல்ஃபா அலைகளைத் தூண்டி மனதுக்கு அமைதி தருகின்றன. இவை தவிர டீயில் வைட்டமின் பி, சி, ஈ, கே; பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. கலோரி இதில் துளியும் இல்லை. அனைத்துச் சத்துக்களும் க்ரீன் டீயில் அதிகபட்ச அளவிலும் டஸ்ட் டீயில் குறைந்தபட்ச அளவிலும் உள்ளன.

சில்வர் டிப்ஸ் டீ


இந்த வகை டீ தயாரிக்க தேயிலையின் மொக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தேயிலையின் மொக்குகள் வெண்மையாக வெள்ளி நிறத்தில் இருப்பதால் இதற்கு சில்வர் டிப்ஸ் டீ என்று பெயர் வந்துள்ளது. க்ரீன் டீக்கு அடுத்தபடியாக இதில் தேயிலையின் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இதன் சுவை அதிகம்.

டஸ்ட் டீ


பெரும்பாலானவர்கள் அருந்தும் டீ. துளிர், மொக்குகள் தவிர்த்து ஏனைய இலைகளைப் பறித்து இயந்திரத்தின் உதவியுடன் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. முழுமையாக ஆக்சிடேஷன் செய்வார்கள் (சுமார் ஒன்றரை மணி நேரம்). இதனால் பச்சை நிறத்தில் இருக்கும் தேயிலை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். இதில் சுவையைவிட திடம் அதிகமாக இருக்கும். காஃபின் அதிக அளவில் இருக்கும். இதனால் இந்த டீ குடித்ததும் புத்துணர்வு தூண்டப்படும். மற்ற டீத்தூள் வகைகளைவிட இதில் ஊட்டச்சத்துக்கள் குறைவே.

க்ரீன் டீ


தேயிலைச் செடியின் முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும் பறிக்கப்பட்டு, தயாரிக்கப்படும் டீத்தூள் இது. தேயிலையில் இருக்கும் பெரும்பாலானச் சத்துக்கள் இதில் அப்படியே இருக்கின்றன. சுவையைப் பொறுத்தவரை மற்ற டீ வகைகளைப் போல அல்லாமல் சற்று துவர்ப்பாக இருக்கும். அதனால்தான், இந்த டீத்தூளைக் கொண்டு டீ தயாரிக்கும்போது எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளும்படிப் பரிந்துரைக்கிறார்கள்.

லெமன் டீ


லெமன் டீ ஒரு இயற்கையான கிருமிநாசினி. க்ரீன் டீயுடன் எலுமிச்சை சேர்வதால் தேயிலையின் பயன்களுடன் எலுமிச்சையின் நற்பயன்களையும் இது தருகிறது. உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் புத்துணர்வை இந்த டீ தருகிறது. செரிமானத்துக்கு உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் லெமன் டீ அளிக்கிறது.

ஓலாங் டீ


'ஓலாங்’ என்றால் சீன மொழியில் 'கருப்பு ட்ராகன்’ என்று பொருள். க்ரீன் டீ போன்று இரண்டு துளிர் இலைகள் மற்றும் அதனுடன் சேர்ந்த மொக்கு ஆகியவற்றைப் பறித்து பதமாக காயவைக்கப்படும் டீத்தூள் இது. கைகளால் நசுக்கித் தயாரிக்கப்படுவது என்பதால் இதன் விலை அதிகம். மேலே சொன்ன டீத்தூள் வகைகளைப் போல அல்லாது குளிர்ந்த காற்று மற்றும் வெப்பக் காற்றை மாற்றி மாற்றிக் கொடுத்து பதப்படுத்தும் ஆக்சிடேஷன் முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படுகிறது. எனினும், இதில் பதப்படுத்தப்படும் நேரம் குறைவு (அதிகபட்சம் 20 நிமிடங்கள்). க்ரீன் டீயைவிட இதில் சத்துக்கள் சற்று குறைவுதான்.

இஞ்சி டீ


தேநீருடன் இஞ்சி சேரும்போது இஞ்சியின் பலன்களும் அப்படியே கிடைக்கின்றன. ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றை இஞ்சி டீ பருகுவதால் தவிர்க்கலாம். உணவு செரிமானத்துக்கும் இது உதவுகிறது. மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கத்துக்கும் நிவாரணம் தரும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். சர்க்கரைக்குப் பதிலாக, இஞ்சியைத் தேனில் ஊற வைத்துப் பயன்படுத்தினால் கூடுதல் சுவை கிடைக்கும்.

No comments:

Post a Comment