நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே,
- எம்பிரான் திருஞானசம்பந்தர் தேவாரம் ( முதல் திருமுறை )
நவகிரகங்களின் கடமையில் ஆண்டவனும் குறுக்கே நிற்க முடியாது என்பது பல அன்பர்களின் கருத்தாக இருக்கிறது. நான் பெரிதும் பின்பற்றக்கூடிய, மதிக்கக்கூடிய வலைப்பதிவான வகுப்பறையில், வாத்தியார் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவார், நம் கர்மவினைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது. வரும் ஏற்றத்தாழ்வுகளை, இன்பதுன்பங்களை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இறைவன் அதில் தலையிட மாட்டார். இறைவழிபாடு நமக்கு தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும். அவ்வளவுதான்.
ஜனரஞ்சக மொழியில் சொன்னால்:
HE WILL GIVE ONLY STANDING POWER TO US…
எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் நடக்கும்.
என்பது நமது வாத்தியார் அடிக்கடி சொல்லும் கருத்து. இதில் யாரும் சந்தேகம் கொள்ளவே தேவையில்லை அடியவனும் இந்த கருத்திற்கு உடன்படுகின்றேன். ஏன் என்று சொன்னால் நாம் அனுபவிக்கும் வினைகள் (நல்வினை மற்றும் தீவினை) இரண்டுமே நாமே செய்ததுதானே? எனவே அதிலிருந்து தப்பிக்க முடியாது? வினை விதைத்தவன் வினை அறுத்துத்தான் ஆகவேண்டும்.
சும்மா தனு வருமோ? சும்மா பிணி வருமோ?
சும்மா வருமோ சுக துக்கம்?
நம்மால் முன் செய்தவினைக்கு ஈடாம் சிவனருள்
செய்விப்பது என்றால் எய்தவனை நாடி இரு.....என்பது சிவபோக சாரம் பாடல்.
நாம் செய்யும் நல்வினைகளோ அல்லது தீவினைகளோ நம்மை எப்படி வந்தடைகின்றன?
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் - என்பது சிலப்பதிகாரம்
பல் ஆவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய் நாடிக் கோடலைத் தொல்லைப்
பழவினையும் அன்னதகைத்தே, தற்செய்த
கிழவனை நாடிக் கொளற்கு…என்பது நாலடியார்,
கன்றானது தாயை நாடுவது போல – வினையானது செய்தவனை நாடும் என்பது சமணர் கொள்கை, ஆனால் இந்த இரண்டையும் தவறு என சுட்டி சமணர்களுடைய இந்த கொள்கையை நமது சைவ சமயம் ஒப்புக் கொள்வதில்லை. நாலடியார் பாடலில் வந்த கன்று உயிர்ப் பொருள் ஆனால் வினையோ ஜடம், ஆக நாலடியார் பாடலில் உள்ள நீதி தவறு என்பதை எளிமையாக விளங்கிக் கொள்ளலாம்,
ஆம். வினையும் ஜடம் - வினைப்பயனும் ஜடம்
நாம் ஒரு கல்லை எடுத்து நாய்மீது விட்டெறிகிறோம் என்றால், அது வினை என்றும், நாய்மீது கல்லை விட்டடெறிந்ததால் நம்மைவந்து சேரும்.பாவம்-வினைப்பயன் என்றும் கருதப்படும், இப்போது நாம் செய்தது தவறு என அறிந்துகொண்டு கல் தானகவே நம்மை மீண்டு வந்து தாக்குமா? அல்லது அந்த தீவினைப் பயன், இவன் தீயவன் என தானே நம்மை வந்து அடையுமா?அடையாது. வினையும் ஜடம்-வினைப்பயனும் ஜடம் என்பதால், நாம் செய்யும் வினைகளுக்கான பயன்களை இறைவன் கணக்கு எழுதிக் கொள்வான்,
தொழுது தூமலர் தூவி துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கி புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
என்பது திருநாவுக்கரசு சுவாமிகளின் திருவாக்கு,
கணக்கெழுதிக் கொண்ட இறைவன் ஆன்மாவின் நிலைக்கேற்ப அவற்றை ஊட்டுவான் ...
ஆன்மா செய்த நல்வினையை பின்னரும் ஆன்மா செய்த தீவினையை முன்னரும் அல்லது நல்வினையை முன்னரும் தீவினையை பின்னரும் என ஊட்டுவான். அது இறைவனுடைய விருப்பம், அதெல்லாம் அவன் இஷ்டம்.
இக்கருத்தை, வாரியார் சுவாமிகள் அழகாக சொல்வார் ,,,
எல்லா பழத்துக்கும் கொட்டையை உள்ளே வெச்சான், முந்திரிக்கு மட்டும் வெளியே வெச்சான் யாராவது போய் இறைவனை ஏன் இப்படி செஞ்சேனுகேட்க முடியுமா? என கேள்வி கேட்டு சபையை அதிர வைப்பார்,
ஆக வினைப்பயனை முன்பின் கொடுப்பது அவனுடைய விருப்பம் என்றாலும் அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. எந்த வினைப் பயனை எப்போது ஊட்டினால் ஆன்மா பக்குவப்படுமோ? அந்த வினைப் பயனை அப்போது ஊட்டுவது என இறைவன் ஒரு கணக்கு வைத்திருக்கிறான். ஆக வினைகள் (நல்வினை+தீவினை) என்பன ஜடம், எனவே அதை எடுத்து ஊட்டுவதற்கு இறைவன் என்ற ஒருவன் தேவை,,
இதை நமது சைவ சித்தாந்தம், செய்வினை, செய்வான், அதன் பயன், கொடுப்பான் - என நான்காக சொல்கிறது, இக்கருத்தை நமது தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில்,
செய்வினையும் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக் கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லை என
உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்தார்,
என்று சாக்கிய நாயனார் புராணத்தில் குறிப்பிடுகிறார்,
ஆக வினையை எடுத்து ஊட்டுபவன் இறைவனே என்பது பெறப்படும், சரி நாம் செய்யும் நல் வினைகளோ அல்லது தீவினைகளோ அது எப்படி இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன?
உயிர்களாகிய நாம் செய்யும் வினைப்பயன்கள் இறைவனால் மூன்று வழிகளில் ஊட்டப் படுகின்றன,
௧. ஆதி தைவிகம்
௨, ஆதி பௌதிகம்
௩, ஆதி ஆன்மிகம்…..என அவை மூவகைப்படும்,
௧. ஆதி தைவிகம்
அன்னையின் கருப்பையில் இருக்கும்போது ஏற்படும் வருத்தம், பிறப்பு - இறப்பு வேதனைகள், இயமன் தண்டனை-நரக வேதனை முதலியவற்றால் பெறப்படும் துன்பம் ஆதி தைவிகம் எனப்படும்,
௨, ஆதி பௌதிகம்
பஞ்ச பூதங்களால் வருவது, (குளிரில் நடுங்குதல், வெப்பத்தால் வதங்குதல்,காற்று, இடி, மின்னல்) சுவர் விழுவது, கல் விழுவது, மண்ணில் புதைவதுமுதலியவற்றால் பெறப்படும் துன்பம் ஆதி பௌதிகம் எனப்படும்,
௩, ஆதி ஆன்மிகம்
உயிர்களால் (ஒரு உயிரால் மற்றொரு உயிருக்கு) வரும் துன்பம்
உடல் நோயால், மன நிம்மதியின்மையால், பொறாமையினால், வஞ்சகம்,செருக்கினால்
முதலியவற்றால் பெறப்படும் துன்பம் ஆதி ஆன்மிகம் எனப்படும்,
இவற்றில் நவகிரகங்களால் ஊட்டப்படும் வினை - ஆதி தைவிகம் என்னும் வகையை சார்ந்தது எனக்கொள்ளலாம். (இக்கருத்தில் தவறிருக்கும் பட்சத்தில் அன்பர்கள் குறிப்பிடலாம்)
ஆக இறைவன், உயிர்களின் வினைப் பயன்களுக்கு ஏற்ப ஊட்டும் வினைகளை அவனது ஆணையின் வண்ணம் கொண்டு வந்து சேர்க்கும் பணியாட்களே நவகிரகங்கள் ஆக, எல்லாம் வல்ல இறைவன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனது பணியாட்களாகிய நவகோள்களின் வேலையில் குறுக்கிடமாட்டார் என்பதை ஒப்புக்கொள்வோம்.
ஆனால் பரம்பொருளாகிய இறைவன், தன்னை சரணடைந்த ஒருவருக்காக தனது பணியாட்களின் வேலையில் குறுக்கிடமாட்டார் அல்லது குறுக்கிடமுடியாது என்று சொன்னால், அது இந்த உலகத்தை மட்டுமல்லாது அண்ட சராசரங்களையும் படைத்தும், காத்தும், மறைத்தும்,அழித்தும், அருளவும் வல்ல இறைவனுடைய முழுமுதல் தன்மையை குறைத்து மதிப்பிடுவதாக தோன்றும். நவகிரகங்களின் கடமையில் ஆண்டவன் குறுக்கே நிற்க முடியாது முதலில் இந்த தொடரே தவறு. தனது பணியாட்களின் வேலையில் முதலாளி தலையிடுவது குறுக்கீடு அல்ல, அது முதலாளியின் அதிகாரம்
நவகோள்களின் கடமையில் இறைவன் குறுக்கிட வேண்டிய அவசியமே கிடையாது. ஏன் என்று சொன்னால் இறைவன் என்ன சொல்கிறானோ அதை மட்டுமே அவைகள் செய்ய வேண்டுமே தவிர-செய்ய முடியுமே தவிர,நவகோள்கள்-தானாக, தன்னிச்சையாக எதையும் செய்யக் கூடாது, செய்ய முடியாது.
HE WILL GIVE ONLY STANDING POWER TO US என்பதன் பொருள் என்ன ?
நவகோள்கள் நமக்கு ஏற்படுத்தும் துன்பத்தை தாக்குப் பிடிக்கும்சக்தியை இறைவன் கொடுப்பான் என்பது தானே? இக்கருத்திலேயே நவகோள்களின் ( வலிமை ) செயல் முடிந்துவிட்டது என்பது விளங்கவில்லையா ?
நவகோள்கள் நமக்கு செய்யும் துன்பத்தை நாம் தாங்கிக் கொள்கிறோம் என்றால், நவகோள் களின் வேலை அங்கே முழுமையாக எடுபடவில்லைஎன்பது தானே பொருள் ? நாம் இறையருளால் நவகோள்களை வென்று கொண்டிருக்கிறோம் என்பது தானே பொருள்.
அதனால் அல்லவா ?
நாள் என் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோள் என் செயும் கொடும் கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
என்று அருணகிரிநாதர் (கந்தரலங்காரத்தில்) குறிப்பிடுகிறார். அதாவது இறைவனை சரணடைந்தால் நவகோள்களை மட்டுமல்ல அந்த எமதர்மரையே வெற்றி கொள்ளலாம் என்பதே அருளார்களுடைய துணிவு.
மார்க்கண்டேயர் வரலாறு நமக்குத் தெரியாததா ?
அங்கும்கூட, இறைவன் எமனுடைய பணியில் குறுக்கிடவில்லை என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இறைவனையே நம்பி சரணடையக்கூடிய அடியார்களது உயிரை எடுக்கும் அதிகாரம் எமதர்மனுக்கு கிடையாது. அது சிவகணங்களுக்கே உரியது. ஆக ஒரு சிவனடியாரின் உயிர் விசயத்தில்சாதாரண மானிடவர்க்கத்தாரின் உயிர் எடுக்கும் அதிகாரம் படைத்த எமதர்மன் குறுக்கிட்ட மையாலேயே இறைவன் அவனை தண்டித்தார். .
இங்கு குறுக்கிட்டது எமதர்மனே தவிர சிவமல்ல. அசுத்த மாயையில் உள்ள,காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்னும் வித்தியா தத்துவங்களுக்கு கட்டுப்பட்ட ஆன்ம வர்க்கத்தினரது உயிரை எடுக்கும் அதிகாரம் மட்டுமே எமதர்மருக்கு உண்டு.
ஆனால் மார்க்கண்டேயன் இறைவனை நம்பி சிவபூசை செய்து கொண்டிருந்த போது எமதர்மன் வந்து பாசக் கயிற்றினை வீசினான். இது தவறு. இது அதிகார துஷ்பிரயோகம். ஏன் எனில், ஒரு உயிர் சிவபூசை செய்து கொண்டிருக்கும் போது அது அசுத்த மாயையை கடந்து-சுத்த மாயையில் நிற்கும் என்பது சைவ சித்தாந்தம். எனவே அசுத்த மாயையில் பணியாற்றும் தகுதி மட்டுமே படைத்தஎமதர்மன் சுத்த மாயையையில் பணியாற்ற முற்பட்டது அவனது குறுக்கீடே தவிர, இறைவன் எமதர்மனுடைய பணியில் குறுக்கிடவில்லை என்பதை உணரவேண்டும். ஆக, தனது அதிகார எல்லைக்கு மீறி பணியாற்றிய பணியாளனை(எமதர்மனை) அதுதவறு என சொல்லி அவனது தவறுக்கு தண்டனை கொடுத்தார் முதலாளி (இறைவன்) என்பதே உண்மை. இறையடியார்களை தண்டிக்கும் அதிகாரம் நவகோள்களுக்கும் இல்லை. எமதர்மனுக்கும் இல்லை.இதை வலியுறுத்தி திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு பதிகமேபாடியருளியிருக்கிறார்...
அது 5 ஆம் திருமுறையில் - காலபாசத் திருக்குறுந்தொகை எனப்படும்.
திருநீறு பூசியவர்களுக்கு முன்னே கூட எமதூதர்கள் செல்லுவதற்கு அதிகாரம் கிடையாது எனக் குறிப்பிடுகிறார்.
இறை என் சொல் மறவேல் நமன்தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப் பெருமர்ன் தமர்
நறவம் நாறிய நன் நறுஞ் சாந்திலும்
நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே….என்கிறார்.
அதுமட்டுமல்ல அவனது அடியார்கள் இருக்கும் திசைப்பக்கம் கூட சென்றுவிடாதீர்கள் என எச்சரிக்கிறார்.
படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசன் அடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார் குழாம்
புடை புகாது நீர் போற்றியே போமினே
என்று எச்சரித்து, அதை மீறுவீர்களானால், இறைவன் உம்மை தண்டிப்பான் என,
அரக்கன் ஈர் ஐந்தலையும் ஓர் தாளினால்
நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
சுருக்கெனாது அங்குப் பேர்மின்கள் மற்று நீர்
சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே.
என்று அருளுவதால் அவரவருக்கு உள்ள அதிகார எல்லையிலே மட்டுமே அவரவர்கள் செயல்பட முடியும் என்பதை உணர வேண்டும்.ஆனால் இந்த எல்லை இறைவனுக்கு கிடையாது. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி அவன் போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன் அவன்எல்லாருக்கும் முடிவு கட்டுபவனாகிய சிவபரம்பொருளுக்கு முடிவு இல்லை ...
நூறு கோடி பிரமர்கள் நொந்தினர்
ஆறு கோடி நாரயணர் அங்ங்னே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறில்லாதவன் ஈசன் ஒருவனே……என்பார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
திருமால், பிரமன், உருத்திரன் முதலான தேவர்களே கைகட்டி இறைவனது ஆணைவழி நிற்க -இத்தேவர்களையெல்லாம் விட பல நூறு மடங்கு கீழே உள்ள
நவகோள்களின் பணியில் இறைவன் தலையிட முடியாது என்பது சரியல்ல ...
அப்படியானால் இறைவன் நவகோள்களை அதனுடைய வேலையை செய்ய விடமாட்டானா ?
என்றால் அப்படியில்லை. யாருக்காக எந்த சூழ்நிலையில் நவகோள்களை கட்டுப்படுத்துவான் என்ற ஒரு விதி உண்டு. தகுதியுடைய ஆன்மாக்களுக்காக (உயிர்களுக்காக) மட்டுமே இறைவன் நவகோள்களின் பணியை மாற்றி அமைப்பானே தவிர நம் போன்ற சாதாரண மானவர்களுக்காக அல்ல(கவனிக்க-மாற்றி அமைத்தலே தவிர குறுக்கீடு அல்ல) ஆக நாம் சொல்ல வேண்டியது என்னவெனில்..
நவகோள்களை வெல்ல முடியுமா ? எனில் முடியும்
அது இறைவனாலேயே முடியும். அது இறைவனாலே பக்தியில் சிறந்த தகுதியுடைய ஆன்மாக்களின் பொருட்டு நடக்கும் என சொல்ல வேண்டும். எனவே நவகோள்களை வெல்லவே முடியாது என்னும் கருத்துக்குப் பதிலாக, இறையடியார்களை தவிர்த்து அல்லது இறைவனை முழுமையாக சரணடைந்த வர்களை தவிர்த்து ஏனைய சாதாரணமாணவர்களால் நவகோள்களை வெல்ல முடியாது என்று சொல்லலாம்.
இறைவனை உண்மையாக சரணடைதல் என்றால் எப்படி?
திருவாசகமாகிய எட்டாம் திருமுறையில் எம்பிரான் மாணிக்கவாசகர் அதை சொல்லி யிருக்கிறார்,
அன்றே என்தன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அணையாய் என்னை
ஆட்கொண்ட போதே கொண்டிலையோ
இன்று ஓர் இடையூறு எனக்கு உண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே ? …..என்பார்.
ஆக இறைவனை சரணடைதல் என்பது, நமது உயிர், உடல், உடைமை ஆகிய அனைத்தையும் அவனது பொறுப்பு என ஒப்புவித்தல். ஆக யார் ஒருவர் எந்த சூழ்நிலையிலும் ( நன்மை அல்லது தீமை அனுபவிக்கும் சூழலிலும்) இறைவனே கதி என சரணடைந்து இருக்கிறார்களோ? அவர்களால் கோள்களை மட்டுமல்ல நாள்களையும் வெல்ல முடியும்... மற்றபடி நம்போன்றோர் கர்மவினைகளில் இருந்து தப்பிக்க முடியாது. வரும் ஏற்றத்தாழ்வுகளை, இன்ப துன்பங்களை நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இறைவன் அதில் தலையிட மாட்டார். இறைவழிபாடு நமக்கு தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுக்கும். அவ்வளவுதான்.
ஜனரஞ்சக மொழியில் சொன்னால்:
HE WILL GIVE ONLY STANDING POWER TO US
எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் நடக்கும்.
(இக்கட்டுரையை வாத்தியார் அவர்கள் வகுப்பறையில் வெளியிட வேண்டும் என் வேண்டுகோள் வைக்கிறேன்-அப்போது தான் இந்த செய்தி பலரையும் சென்றடையும்-நன்றி)
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment