Search This Blog

Monday, May 28, 2012

பிரம்மா...!






மழை இன்னும் விட்டபாடில்லை. காலையிலிருந்து நச நசத்துக் கொண்டிருக்கும் மழையை பலர் குறை சொல்லி நகர்ந்து கொண்டிருந்ததை ஜன்னலிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நானும் வெளியில் செல்ல வேண்டும். மழை நின்றவுடன் செல்லலாம் என்று காத்திருந்தேன். மழை கோட்டை போட்டுக் கொண்டு வண்டி ஒட்டி செல்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது, ஏனென்றால் மழை நின்று மத்தியானமே வெயிள் சுளீரென்று அடிக்கும் போது கோட்டை கழட்டி வண்டியின் பின்னால் சுமந்து செல்ல ஒரு மாதிரி இருக்கும்.

டைரக்டர் இளைய நிலவன் சாரே எனக்கு நேற்று போன் போட்டு வந்து கதை சொல் என்று சொல்லியிருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் கதைகளை சுமந்து கொண்டு நான் ஏறாத படி இல்லை. கதை பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பும் போது ஏற்படும் வலியை விட அதே கதையை உல்டா செய்து திரைப்படமாக்கி சில இயக்குனர்கள் வெற்றி பெறும் போது ஏற்படும் வலி இயலாமையிலிருந்து வெடித்து சிதறுவது.

நமது சமூகத்தின் பிரச்சினை என்ன தெரியுமா? பணம் இருப்பவனும், புகழ் இருப்பவனும் எதைச் செய்தாலும் அதை அவர்களின் சொந்த சரக்காகவே நாம் கருதி விடுவதுதான். எனக்கு தெரிந்து ஒரு பிரபல இசையமைப்பாளருக்கு அவரின் உதவியாளரே மெட்டுக்களை போட்டுக் கொடுப்பதாகவும் அவர் பெயர் வெளியில் அதிகம் வராமல் இவரின் புகழ் அழுந்திப்பிடித்து வைத்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் ஒருவர் காதில் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன்.

திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் என்று எல்லோரும் சொல்வார்கள். அதிர்ஷ்டம் என்பதற்கு பல அர்த்தங்கள் இங்கே இருக்கின்றன, அதைப் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தால் சினிமா துணை நடிகைகளின் வாழ்க்கையில் ஆரம்பித்து டாஸ்மார்க் பின்புறம் இருக்கும் கீற்றுக் கொட்டகையில் முட்டை மசாலா வாங்கிக் கொடுப்பது வரை நாம் பேச வேண்டி வரும்.

கதை எழுத புத்தி தேவையில்லை என்று என்னுடைய ஆதர்சன எழுத்தாளர் அடிக்கடி கூறுவார். கதை எழுத அனுபவமும் புறத்தில் நிகழ்பவற்றை தாக்கத்தோடு உள்வாங்கிக் கொள்ளும் தன்மையும் இருந்தால் போதும்....; இந்த 35 வயது எனை மென்று தின்று விடமால் இன்னமும் அசை போட்டுக் கொண்டிருப்பதால் அனுபவங்களைக் கோர்க்க முடிகிறது என்னால். பெரும்பாலும் அனுபவம் என்பது எனக்கு வலி என்றே உரக்க வாழ்க்கைச் சொல்லி கொடுத்து இருக்கிறது.

நெருக்கமாய் காதலித்தவள் நிஜமாய் வேறு ஒருவனை கைப் பிடித்துப் போன போது அதை அவள் வாழ்க்கை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தாள். உருகி, உருகி காதலித்தவளை உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தவளை, கேசம் கோதி கன்னம் கடித்தவளை, வாழ்க்கை பணம், வசதி, உத்தியோகம் என்று பிரித்துப் போட்ட அன்று இரவு தனித்து நான் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தேன். ஒரு குவார்ட்டருக்கும் மேலாக ராயல் சேலஞ்சை நான் காலி செய்திருந்தும் அவளின் இன்னொருத்தனோடான முதல் இரவு எனக்கு கொடுத்த வலியை காகிதத்தில் கதையாகத்தான் நான் எழுத முடிந்தது.

அனுபவங்கள், அனுபவங்களென்று வாழ்க்கை என்னை நிறைத்துப் போட்ட போதெல்லாம் நான் காகிதத்தை காதலிக்கத் தொடங்கினேன்....எழுத்துக்களை வார்த்தைகளாக்கி வலிகளை காகிதத்தில் பரப்பிப் போட்டேன். இது ஒரு பயிற்சி....பசியோடு இருக்கையில் பசிக்கு உணவு தேடமால் பசியை உற்று  நோக்கி குடலின் ஏற்ற இரக்கங்களை, அதில் சுரக்கும் அமிலங்கள் குடலை எரித்துப் போடுகையில் புத்தியில் நடக்கும் தடுமாற்றங்களை மெல்ல கண் மூடி அனுபவித்து நான் எழுத்தாக்கி இருக்கிறேன். 

திருமணமாகி ஐந்து வருடத்தில் கணவனை இழந்து விட்டதாலேயே விதவைப் பட்டத்தை அவள் கேட்காமலேயே அவளுக்கு கொடுத்த கதையை கீதா என்னிடம் கூறிய பொழுது சிகரட்டோடு சேர்த்து அவளது வாழ்க்கையையும் எனக்குள் உறிஞ்சிக் கொண்டேன். ஒரு மழைக்காய் ஒதுங்கி நின்ற பேருந்து நிலையத்தில் எதேச்சையாக அவளோடு ஆரம்பித்த பேச்சு அவள் வீட்டுக் கட்டிலில் என்னைக் கொண்டு போய் விட்டதில் முந்திக் கொண்டது காதலா? காமமா என்று எனக்கு இதுவரை சரியாய் சொல்ல முடியவில்லை...

காலை பத்து மணியிலிருந்து அவளோடு சுகித்து சுகித்து அவள் உடலின் வெம்மையை எனக்குள் வாங்கிக் கொண்டு தவணை முறையில் அவளை உச்சத்துக்கு தள்ளி அவள் துடித்ததை நான் ரசித்து ரசித்து வெடித்து சிதறுகையில் உள்ளுக்குள் இருந்த கதாசரிய புத்தி அந்த அனுபவத்தை அப்படியே கபளீகரம் செய்து கிரகித்துக் கொண்டது. சிறு பிள்ளையைப் போல அவளின் மார்பகம் பற்றி உறிஞ்சுகையில் எட்டு வயதில் இறந்து போன அம்மாவின் முகம் வந்ததை என்னால் மறுக்க முடியாது.

உடல் சோர்ந்து, மனம் நிறைந்து காமத்தில் இருவரும் கலைந்து கிடக்கையில் மெல்ல நகர்ந்து ஒரு சிகரட்டை உதட்டில் பொருத்தி அவளின் நிர்வாணத்தை கண்களால் அளவெடுத்து புத்தியால் மீண்டுமொரு முறை அவளை சுகித்துக் கொண்டிருக்கையில் மார்புகள் குலுங்க பதறி எழுந்து ஒரு கையால் பாவடையையும், ஜாக்கெட்டையும், சேலையையும் பற்றி இழுத்தபடி " மணி நாலாகப் போகுது பிள்ளை ஸ்கூல்ல இருந்து வந்துடும்..." என்று சொன்ன போது சுரீர் என்று வலித்ததை அவளிடம் சொல்லாமல்....அவளை இழுத்து முத்தமிட்டு என் அன்பை அவளது உதட்டுக்கு இடமாற்றினேன்.

எத்தனை முறை கூடினோமென்று கணக்கு வழக்கில்லாமல் அவளோடு படுத்து எழுந்து, திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்ட பொழுது அவள் வேண்டாம் என்று சொல்லி விட்டு, என் பெயர் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவள் என் பெயர் தெரியமாலேயே டேய் எழுத்தாளா என்று மட்டும் சொல்லியே அந்த இரண்டு மூன்று மாதங்களும் என்னோடு புணந்திருக்கிறாளென்று...

மீண்டும் வலித்தது.

உறவுக்கு உணர்ச்சிதான் தேவையாயிருந்திருக்கிறது. பெயரும் ஊரும் தேவைப்பட்டிருக்கவில்லை. சுயநலமாய் ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் இருக்கப்பிடித்து வைத்துக் கொண்டு தனது தேவைகளை உடலாலும், பொருளாலும் தீர்த்துக் கொள்ள பெயர், சாதி, மதம், ஊர், உத்தியோகம் எல்லாம் தேவைப்படுகிறது. இங்கே எனக்கும் கீதாவுக்கும் அப்படியான ஒரு தேவைகளுமே இருந்திருக்கவில்லை....பல நேரம் அவள் எனக்கு உடல் பசியை மட்டுமின்றி வயிற்றுப் பசியையும் போக்கியிருக்கிறால். சில நேரம் அவளுக்கு நானும் உதவி இருக்கிறேன்....

பரஸ்பரம் அன்பு செலுத்துவதில் நான் ஆர்வமாயிருந்தேன். அவள் அன்பைப் பெறுவதில் மும்முரமாய் இருந்தாள். அவள் எங்கு வேலை செய்கிறாள், எங்கு போகிறாள் வருகிறாள் என்று கூட எனக்கு கேட்க தோன்றவில்லை. அந்த அடை மழையில் பேருந்து நிறுத்ததில் வந்து ஒதுங்கியதுப் போலவே அவளோடான உறவும் அமைந்து போனது. ஏன் பேருந்து நிறுத்ததிற்கு வந்தாய் என்று நான் கேட்பது எவ்வளவு அபத்தமோ? எங்கிருந்து வருகிறாய் என்று கேட்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ? அவ்வளவு அபத்தம்...அவளிடம் நானும், என்னிடம் அவளும் ரிஷி நதி மூலங்களை கேட்டறிவது....

உலகின் மைய அச்சு காமம். காமத்தை மையமாக வைத்தே இந்த உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.  இனப்பெருக்கம் அதாவது பல்கிப் பெருகுதல் என்பதே இந்த பிரபஞ்சத்தின் மூலப் பிடிப்பு....இதை யாரும் மறுக்கவே முடியாது. முழுதாய் நிறைவு பெறும் வரையில் காமம் ஒரு மனிதனை விடவே விடாது. பிறப்பிலேயே காமம் என்ற ஒன்று ஒரு மனிதனுக்குப் புத்தியில் கழிக்கப்பட்ட ஒன்றாய் இருக்குமெனில் அவன் காமத்தின் அருகே வராமேலேயே போக சாத்தியங்கள் உண்டு. அப்படி இல்லையென்றால் காமம் ஒவ்வொரு மனிதனையும் அழுந்தப் பிடித்து வைத்துக் கொள்ளும் என்பதில் மாற்றமே இல்லை. ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் ஈர்ப்பது இயற்கையின் விதி....இதன் மையம் காமம் .

ஒரு நாள் கதை சொல்லப் போன இடத்தில் இயக்குனரும் தயாரிப்பாளரும் நான் உணர்வாய் ஆக்கி வைத்திருந்த படைப்பை ஏளனம் செய்து சிரித்து விட்டு என்னை கதை எழுதுவதற்கு பதிலாக கையேந்தி பவனில் போய் தட்டு, டம்ளர் கழுவி பிழைத்துக் கொள் என்று எக்களித்து சிரித்து, அவர்களின் போதையில் என்னை ஊறுகாயாய் ஆக்கிய போது நான் எனக்கு போதையை ஊறுகாயாய் ஆக்கிக் கொள்ள ராவாய் ஒரு குவார்ட்டரை தொண்டை அறுக்க, நெஞ்சு அறுக்க உள்ளுக்குள் ஊற்றி கொண்டு, ஒரு ஊறுகாய் பாக்கெட்டை வாங்கி கடித்துக் கொண்டு கீதாவின் வீட்டுக் கதவை தட்டிய இரவு பதினொரு மணியில் போதை தெளியும் வரை கதவு திறக்கப்படாமல் இருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து சப்தம் கேட்டு வந்த ஒரு கேரளத்து சேட்டன் கீதா வீட்டை காலி செய்து சென்று விட்டதை சொல்லி விட்டு....படாரென்று கதவை அடைத்து விட்டான். அவனுக்கு என்ன அவசரமோ....?!!!!!

அன்றை என் இரவு தெருவோரத்தில் உடல் பசியோடும் வயிற்றுப் பசியோடும் தகித்துக் கிடந்தது எனக்கு பக்கத்தில் படுத்த்துக் கிடந்த தெரு சொறி நாயைப் போல! வயிற்றுப் பசி உடல் பசியை தின்று போட்டது....! சிகரட்டை இழுத்து இழுத்து நுரையீரல் நிக்கோடின் துகள்களால் நிரம்பிப் போய் மூளை வரண்டு, சுய நினைவை பறித்துக் கொள்ள எப்போது என்ன எனக்கு ஆனது என்று தெரியாமல் மறு நாள் எட்டு மணி சுரீர் வெயிலில் ஒரு போலிஸ்காரனின் லத்தி என் முதுகில் தட்டிய போது விழித்தேன்.....

எவ்வளவு நிகழ்வுகள்....எவ்வளவு வலிகள்....!

அந்த படத்திற்கு என் கதை ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் தேர்வாகி இயக்குனர் எனக்கு முன் பணம் கொடுத்த போது கூட எனக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையே இல்லை. அந்தப் படம் வெற்றிப் படமானபோது  லேசாய் எனக்குள் துளிர் விட்ட நம்பிக்கை பல படங்களுக்கு கதை கேட்டு இயக்குனர்கள் என்னை அணுகத் தொடங்கியபோது கொஞ்சம் வேர் விட்டு வளரத் தொடங்கியது. இரண்டு மூன்று படங்களுக்கு  என் கதைகள் வொர்க் அவுட் ஆகி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்  இந்த நேரத்தில் தான் இளைய நிலவன் சார் என்னை வரச்சொல்லி இருக்கிறார் அவரின் படத்திற்காக...

சூட்டோடு சூட்டாக என் அனுபவங்களை சிறு கதை தொகுப்புகளாக்கி காசு பார்க்க ஒரு பதிப்பகம் முன் வந்தது. கீதாவோடோன என் நாட்களையும் சேர்த்து " மழையில் நனைத்த உறவுகள் " என்று ஒரு புத்தகம் போட்டு விற்று தீர்ந்து போக மீண்டும்....மறு பதிப்பு செய்யப் போவதாய் அந்த பதிப்பக ஆசிரியார் கூறினார். வாழ்க்கையில் வெற்றியை நாம் ஒரு வெறிநாயாஇ போல துரத்திக் கொண்டு ஓடும் போது அது நம்மை திரும்பிப் பார்ப்பதேதே இல்லை. ஏதோ ஒரு கணத்தில் ஓடிய நாய் நம்மை திரும்ப துரத்துவது போல வெற்றியும் நம்மை எதேச்சையாக துரத்த ஆரம்பிக்கிறது....

வாழ்க்கையில் புத்திசாலிகள் ஒரு போதும் கதை எழுத வருவதில்லை. வலிகள் நிறைந்தவனே படைக்கிறான்.  வலிக்கும் இரணங்களோடு வாழப் பழக்கப்பட்டவன் மற்றவர்களின் வலியையும் தனது வலியாக்கிக் கொள்கிறேன். அந்த உணர்தலில் ஒரு படைப்பாளி காக்கையாகவும், குருவியாகவும், நாயாகவும், குடிகாரனாகவும், ஞானியாகவும், இன்னும் எல்லாவுமாகவும் நின்று படைப்பதை சர்வ சாதரணமாகச் செய்கிறான்.


அவனே பிரம்மா...!

மழை சுத்தமாக நின்று போக....நான் வீட்டை பூட்டி விட்டு பைக் ஸ்டாண்ட் எடுத்து விட்டு கிக்கரை உதைந்தேன்.....! மனதின் ஓரத்தில் கீதா வலியாய் நின்று கொண்டிருந்தாள்....அவளை எப்படியாவது மீண்டும் சந்தித்து என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும்.....மனம் ஆக்ரோஷித்தது கைக்கு பரவி ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.......


தேவா. சு

No comments:

Post a Comment