Search This Blog

Thursday, May 10, 2012

ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து - ஆரிய-திராவிட ஆராய்ச்சி நூல் (நூல் அறிமுகம்)



      உலகில் இந்தியர்களுக்கு ஒப்பீட்டளவில் வரலாற்றுணர்வும், தொல்லியல், மானுடவியல் உணர்வும் குறைவு என்பதே நமக்கு கல்வியும், தத்துவ சிந்தனையும் பயிற்றுவித்த மேலைநாட்டு பாமரர்களின் கருத்து. ஆனால் ஆதிமனித இனமான தமிழர்கள் தங்கள் வரலாற்றை குரங்கிலிருந்து மனிதனாக பரிணமித்த காலந்தொட்டு தொடர்ந்து பாடியும், ஆடியும், எழுதியும் வந்திருக்கிறார்கள் என்பது மேலை அறிஞர்களே அறியாதது. தமிழர்கள் தங்களுக்கென குமரிக்கண்டம் என்னும் ஒரு கண்டத்தையே உருவாக்கி இன்னும் நினைவில் பேணி வருவதையும் அவர்கள் உணரவில்லை. பல்வேறு மனித இனம் இருப்பதையும், நாவலந்தீவில் அவைகள் வரலாறுணர்வோடு முரணியக்க ரீதியாக முரன்பட்டு வாழ்ந்ததையும் ஏராளமான முதற்சங்கப் பாடல்களின் வாயிலாக அறியலாம். ஆனால் வடக்கில் புதிய மனித இனங்கள் தோன்றி, வரலாற்றுணர்வு இன்றி தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, பின் வரலாற்றையே திருத்தி எழுதி, அதையே மதமாகவும் மாற்றிவிட்டனர். உதாரணமாக ராமாயணம், மகாபாரதம் போன்ற மத நூல்களில் ஆரிய-திராவிட இனவரைவியல் குறிப்புகள் ஏராளமாக உள்ளது. இதிகாசம் என்ற போர்வையில் அவை பதுக்கி வைத்திருக்கும் தீவிர இனவாதக் கருத்துக்கள் அதிதீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. குறிப்பாக ராமாயணம் என்னும் மத நூலில் ஆரியராமன் தெற்கு நோக்கி வரவர இங்கே மனிதர்களே இல்லை. குரங்குகளும், அரக்கர்களும் தான் இருந்தனர். அவர்களை அழித்து அவன் வடக்கு மீள்வதே ஆரியப் படையெடுப்பைப் போற்றுவது தான்.

     மதுரைக் காமராஜ் பல்கலைக்கழக திராவிட நாட்டாரியல் துறை முன்னாள் தலைவர் பேரா.முனைவர். அற்புதப் பாண்டியன் (எம்.ஏ.எம்.ஃபில், பி.எச்.டி, டிப்ளமோ இன் காந்தியன் தாட், டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன்) இது தொடர்பான நாட்டார் ஆய்வுகளில் முன்னோடி. கீழக்குயில்குடி, பன்னியான், செக்காணூரனி, செல்லம்பட்டி, பகுதிகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட திராவிட இன சாதியினரிடத்தில் புழங்கப்படும் நாட்டுப்புறப் பாடல்களில் இராமன் தென்னகம் நுழைந்து இராமேஸ்வரம், இலங்கை சென்று போர் நடத்தியது முதல், மீண்டும் அயோத்தி புறப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் தலைமுறைகளாகப் பாடப்படுவதை இருபதாண்டு காலம் தேடியலைந்து சேகரித்துள்ளார். அது ஐநூற்றிச் சொச்சம் பக்கங்கள் அளவுள்ள தனி நூலாகவும் அவரது மாணவர்கல் சிலருடைய முனைவர் ஆய்வேடுகளாகவும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக சங்ககாலத்துக்கும் முற்காலத்திய தமிழ்நடையில் அமைந்த "ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து" என்னும் புத்தகம் அவரது அயராத உழைப்பில் வெளிவந்தது (தமிழ் திராவிடர் பதிப்பகம், விளக்குத்தூண் சமீபம், கீழமாசி வீதி, மதுரை-9, போன் நிர்.- 0452-2735460). இந்தப் புத்தகம் என்பதுகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, தியாகராசர் கல்லூரி முதலியவற்றில் முதுகலை தமிழ் வகுப்பிற்கான பாடமாக இருந்தது. மதுரைக் கல்லூரியில் மட்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்து விட்டார்கள். அந்த பார்ப்பணச் சதியை எதிர்த்து மதுரைக் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

புதிதாக வந்த இனமக்களை தமிழர்கள் "ஆரு இவிய?" என்று வியந்து கேட்டதே 'ஆரிவிய' என்று மறுவிப் பின்னர் "ஆரிய" என்ற சொல்லாகி அதுவே அந்தப் புதிய இனத்தாரின் பெயராக வழங்கிற்று என்று தமிழ் மொழியியலாளர்கள் கருதுகின்றனர். "ஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து" நூலில் மிகநுட்பமான, இது வரை வெளிவராத மறைக்கப்பட்ட பல வரலாற்றுத் தகவல்கள் தமிழ்ச்சமூகத்தின் முன் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆரியனான ராமன் போர் முடிந்து சீதையை மீட்டதும், கிட்கிந்தையிலிருந்து பிடித்து வரப்பட்ட வானரங்களை அம்போ என்று விட்டுச் சென்றதும், அவை பின்னர் தென்மேற்கு நோக்கி நகர்ந்து அடர்ந்த பசுமையான மேற்கு மலைத்தொடர்களின் அடிவார ஊர்களில் குடியேற ஆரம்பித்தன, பின்னர் அவை மெல்லப் பரிணாமத்தில் வளர்ந்து ஆதிக்கப் போர்ச் சாதியாயின. ராமனின் படை நாயகர்களாக இருந்த அந்த சாதி நாயர் என்றழைக்கப்பட்டது. அப்பகுதியில் மொந்தன் வாழைச் சாகுபடியில் ஒரு புது புரட்சியையே உருவாக்கிய இனம் அவர்கள். உலகத்திற்கே முதல்முறையாக வாழைப்பழத்தின் பல பிரயோகங்களைக் கற்றுத் தந்தவர்களும் அவர்களே. இன்றும் "குலேரம் வாலி நாயர் பேரவை" என்ற சங்கம் இருப்பதும், அவர்களிடம் ராமனின் படை நாயகர்கள் என்பதற்கான  ஆதாரமாக செப்புப் பட்டையம் இருப்பதும் பேரா.அற்புதப் பாண்டியன் வெளியிட்டுள்ளார். ஜெ கூட (ஜெயலலிதா இல்லை,  ஜெயமோகன்) இதுபற்றி விரிவாகவே எழுதியுள்ளார்.

     எஞ்சிய மீதிப் பழங்குடிகள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்கி பரிணாம வளர்ச்சியில் தங்கள் குரங்கு, அரக்க குனத்தை விட்டு திருந்தி வாழ ஆரம்பித்தனர். கடலைத் தாண்டிய அவர்கள் "தாண்டியர்" என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி "பாண்டியர்" என்றாயிற்று என்றும் பேரா. அற்புதப் பாண்டியன் ஆய்வு முடிவில் தெரிவிக்கிறார். அவர்களே பின்னர் பலநூறாண்டுகள் கழித்து மகாபாரத காலத்தில் ராமனின் வம்சத்தில் வந்த கிருஷ்ணன் என்னும் கறுப்பு ஆரியனை (இது ஆரிய திராவிடக் கலப்பின் அடையாளம் என்கிறார் பேரா. பாண்டியன்) போரில் ஆதரித்து வெற்றி தேடித் தந்தனர். கிருஷ்ணனின் சொந்த ஊரான மதுரா வை மீட்டுத் தந்தனர். அதுவே "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" என்ற பெயர்வரக் காரணமாயிற்று. சுந்தர என்ற சொல் ராமாயன காலத்திலும் ஆதிமந்தி இனத்தாரைக் குறிக்கும் சொல்லாக விளங்கியதை, இராமாயணத்தில் 'சுந்தரகாண்டம்' என்னும் பகுதியின் சிறப்பால் அறியலாம் என்று மேலதிகத் தகவல் கொடுக்கிறார் பேரா. அற்புதப் பாண்டியன். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் மீண்டும் பாண்டியர்களிடம் ஆரிய நாகரிகம் புகுத்தப்பட்டது. இன்னும் மேற்குமலைகளில் வசிக்கும் ஆதிமந்திவமிசத்தார் கிழக்கில் இருந்து வருபவர்களை பாண்டி என்றழைப்பதையும் பேரா.அற்புதப் பாண்டியன் சுட்டிக் காட்டுகிறார். 

கல்யாணமாகி ஹனிமூனுக்கு (தேனிலவு) காட்டுக்கு வந்த இடத்தில் மனைவியத் தொலைத்த ராமன் பார்ப்பவர்களிடமெல்லாம் 'ஹனிமூன் ஹனிமூன்' என்று புலம்ப அது ஆதிமந்திவமிசத்தாரால் ஹனுமான் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஹனிமூன் என்ற ஆங்கிலச் சொல்லின் வேர் செந்தமிழில் இருந்து சென்றதும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் ராமாயணம் போன்ற மதநூல்களில் மறைக்கப்பட்ட பரிணாம, வரலாற்று, ஆரிய-திராவிட போர்த் தகவல்கள் இருக்கின்றன என்பதை வெள்ளிடைமலையாக வெளிச்சம் போட்டு தமிழ்கூறும் நல்லுலகின் முன்பு காட்டியது பேரா.முனைவர்.அற்புதப் பாண்டியனின் ஆய்வு முடிவுகள். ஆனால் வழக்கம் போல ஆரியச் சதியில் அவரின் ஆய்வு முடிவுகள் பரிகசித்து ஒதுக்கப்பட்டதால் தமிழ் அன்னையின் துயரக் கண்ணீர் தான் மிச்சம்.

முனைவர்.பேரா. அற்புதப் பாண்டியனின் மின்னஞ்சல் முகவரி wonder.paniyan@tamil.mku.in . பழகுவதற்கு எளிய, இனிய மனிதர். ஆனால் வெளியுலகிற்கு தெரியாமல் மறக்கடிக்கப்பட்டவர் இந்த மாமேதை. பேரா.முனைவர் அற்புதப் பாண்டியன் என்றொருவர் இருக்கிறார் என்பதே கற்பனை என்று இன்று தமிழ்த் திராவிடர்களே நினைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய உட்கருத்து என்னவென்றால், முனைவர்.பேரா.அற்புதப் பாண்டியன் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேட்பதே ஆரியச் சதிதான். 

முனைவர்.பேரா.அற்புதப் பாண்டியன் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுநனவிலி. அவரை அவ்வளவு எளிதில் மறக்கடிக்க முடியாது. அவர் திராவிடப் பாரம்பரியத்தின் ஆதார ஆற்றல். அவரை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அவரை ஒருவரிலிருந்து இன்னொருவராக மாற்றவே முடியும். ஏதாவது ஒரு பெயரில் அவர் தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பார்.

மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் அவரின் ஆய்வுப் பணிக்கு ஓய்வு கொடுத்தாலும், அவர் தமிழுக்கு ஓய்வுகொடுப்பதாக இல்லை. மதுரை இறையியல் கல்லூரியின் மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவே குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடித் தடுப்புகளுக்கு உள்ளே அமர்ந்து, வராக அவதாரம் போல் தமிழ் இலக்கியங்களையும், குறிப்பாக இந்துமத நூல்களையும் குவித்து மூக்கால் கிண்டிப், பிதுக்கி எடுத்து ஆய்வுக் கட்டுரைகளாக அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.

தற்போது அவருடைய மகள் செல்வி. அற்புதசுகம், Ph.D in Applied Linguistics (U of C, USA) தாய்த்தமிழகம் மீண்டுவந்து நாற்பத்தி ஐந்து நாட்கள் தான் ஆகிறது, தோள்ப்பையில் கட்டியுள்ள விமான பாதுகாப்பு சோதனை அட்டை கூட இன்னும் பிரிக்கப்படவில்லை. தந்தையுடன் பஞ்சு பொதியப்பட்ட சுழல் நாற்காலியில் உட்கார்ந்து தன் அதிநவீன மடிக்கணினியைத் திறந்து ஆய்வுப் புயலைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டார். "நான் கொண்டு சங்க வயது சிம்மாசனத் தமிழை பின்னால் வருவேன் மதுரைக்கு" (I will get the Sangam age throne of Tamil, back to Madurai!) என்று சபதம் செய்துள்ளார்.

செல்வி.அற்புதசுகம் Ph.D (USA) வின் ஆய்வுப் பொருள், "தற்காலத் தமிழ் விடுகதைகளில் திராவிட உள்குறியீட்டுச் சிந்தனைகள்" என்பதாகும். ஒரே ஒரு ஆய்வுமுடிவை மட்டும் இந்தக் கட்டுரைக்காகச் சொன்னார்.

 "கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன். அது யார்?" என்ற விடுகதைக்கு "பூட்டு" என்று குழந்தைகள் கூட பதில் சொல்லும். இதன் பின்னால் உள்ள குறியீட்டு அர்த்தத்தை ஆய்வு செய்தால், "கருப்புச் சட்டை அணிந்தவரான தந்தை ஈ.வே.ரா பெரியார், திராவிடத் தமிழனின் இன, மானம் காத்த காவல்காரன். இரும்புப் பூட்டுப் போல உறுதியானவர்" என்கிற திராவிடத் தமிழ்ச் சிந்தனை உள்ளுறையாக இருப்பதை அறியலாம் என்று செல்வி.அற்புதசுகம் Ph.D (USA) தெளிவு படுத்துகிறார்.

கூடியவிரைவில் மதுரை தமுக்கம் மைதானத்தை மையமாக வைத்து, தமிழ்ச்சூழலில் ஒரு பூமிக்குலுக்கம் வரவிருப்பதாக பஞ்சுபொதிந்த சுழல் நாற்காலியில் சுழன்று கொண்டே, அசல் பெப்பே ஜீன்ஸ் கால்சராயை இறுக்கியபடி வசீகரப்புண்ணகை செய்தார்.

தொடர்புகொள்ள: Dr.Arputhasukam, Ph.D (USA),
                               Rolling chair in Contemporary Tamil Conundrum, 
                               Tamilnadu Theological Seminary, 
                               Arasaradi, Madurai - 625 010. 
                               email: wonder.sukam@theology.com



- பிரகாஷ் சங்கரன்

No comments:

Post a Comment