Search This Blog

Thursday, May 10, 2012

பிரச்ன உபநிஷதம்-ஒரு கண்ணோட்டம்




வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழிந்தது. அதன் தவப் புதல்வர்களாகிய ரிஷிகள், இருளைக் கடந்து, பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை நான் அறிந்து கொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய; பந்தா வித்யதே யனாய-சுவேதாஸ்வர உபநிஷதம் 3.8), அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்(ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா-சுவேதாஸ்வதர உபநிஷதம் 2.5) என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்லாமல், பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவி அழைத்தனர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.
உலகிலேயே மிகப்பழைய நூல் இந்த சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்.... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம். வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்.... அவை கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அந்த விதிகளை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.
அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம்(யாக விவரங்கள்), ஆரண்யகம்(உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி)
உபநிஷதங்கள்: உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதக, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவற்றும் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார். 14 உபநிஷதங்களும் கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைத்துள்ளன.
வேதம்-உபநிஷதம்
ரிக்- ஐதரேய, கவுசீதகி
யஜுர்- ஈச, கட, தைத்திரீய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயண
சோம-கேன, சாந்தோக்ய
அதர்வண- ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய
பிரச்ன உபநிஷதம்
அதர்வண வேதத்தைச் சேர்ந்த உபநிஷதம் இது. ப்ரச்ன என்றால் கேள்வி. இந்த உலகம் எப்படி உண்டாயிற்று, உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, மனிதன் என்பவன் யார், கடவுள் யார், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பன போன்ற சில அடிப்படைக் கேள்விகளை நெஞ்சில் சுமந்துகொண்டு பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் 6 பேர் அறிவைத் தேடி புறப்படுகின்றனர். பிப்பலாத முனிவரைப்பற்றி கேள்விப்பட்டு அவரிடம் செல்கின்றனர். 6 பேரும் அவரிடம் கேட்கின்ற 6 கேள்விகளுக்கப் பதிலாக அமைந்திருப்பதால் இது ப்ரச்ன உபநிஷதம் எனப்படுகிறது. இந்த 6 கேள்விகளும் இதில் 6 அத்தியாயமாக அமைந்துள்ளன; மொத்தம் 63 மந்திரங்கள் உள்ளன.
மாண்டூக்ய உபநிஷதத்தில் பேசப்படுகின்ற விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகளை ஆராய்வதால், பிரச்ன உபநிஷதத்தை மாண்டூக்ய உபநிஷதத்தின் துணை உபநிஷதமாகக் கருதுவதும் உண்டு.
மையக் கரு: மனிதன், உலகம், இறைவன் என்ற முப்பொருள் உண்மைகளை உபநிதஷதங்கள் ஆராய்கின்றன. ஒவ்வோர் உபநிதஷதமும் தனக்கென்று ஒரு கோணத்தில் இந்த அடிப்படை உண்மைகளை அணுகுகின்றன. அறிவைத் தேடுகின்ற, 6 பேருடைய தேடலின் வெளிப்பாடாக பிரச்ன உபநிஷதம் இந்த உண்மைகளை ஆராய்கிறது. 6 பேர் கேட்ட 6 கேள்விகளும் இதோ
1. உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின?
2. மனிதனில் என்னென்ன சக்திகள் செயல்படுகின்றன?
3. அந்தச் சக்தி எப்படி செயல்படுகிறது?
4. மனிதன் தூங்கும்போது தூங்காமல் அவனில் விழித்திருப்பது யார்?
5. ஓங்கார தியானம் என்றால் என்ன?
6. ஆன்மா எங்கே இருக்கிறது?
உயிரினங்கள், மனிதன், ஆன்மீக சாதனை, ஆன்ம அனுபூதி என்று அறிவுத்தேடல் படிப்படியாக ஆன்மீகத்தேடலில் நிறைவுறுவதைப் பிரச்ன உபநிஷதத்தில் காண்கிறோம். அடிப்படை ஆற்றலான பிராணனைப்பற்றி இங்கே சிறப்பாக ஆராயப்படுகிறது.
வித்யைகள்: அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்றடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்த படியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிதஷங்களும் தங்களுக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகின்றன. இவை வித்யை எனப்படுகின்றன. வித்யைகள் எண்ணற்றவை. தற்போது சுமார் 35 வித்யைகள் மட்டுமே இந்த 14 முக்கிய உபநிஷதங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. காலங்கள் பல கடந்து விட்டதாலும், வேறு பல காரணங்களாலும் இந்த வித்யைகளின் செயல்முறையோ சரியான பொருளோ நமக்கு தெரியாமல் போய் விட்டது.
பிரச்ன உபநிஷதத்தில் பரமபுருஷ வித்யை கூறப்பட்டுள்ளது. 5:2-7இல் அமைந்துள்ளது. ஓங்கார தியானம் பற்றியது இது.
மொழிபெயர்ப்பு: ஸ்ரீசங்கரர் , ஸ்ரீமத்வர் போன்றோர் இந்த உபநிஷதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீசங்கரரின் விளக்கவுரைக்கு ஸ்ரீஆனந்தகிரியும், ஸ்ரீமத்வரின் விளக்கவுரைக்கு ஸ்ரீராகவேந்திர தீர்த்தரும் மேலும் தெளிவுரை எழுதியுள்ளனர். ஸ்ரீராமானுஜர் உபநிஷதங்களுக்கு விளக்கவுரை எழுதவில்லை. அவரது கருத்தைத் தழுவி ஸ்ரீரங்கராமானுஜர் விளக்கவுரை எழுதியுள்ளார்.
இந்த மொழிபெயர்ப்பு, பிரச்ன உபநிஷதத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன.
1. தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளவில்லை. இறைவன் என்ற மாபெரும் சக்தியுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.
ஒரு வார்த்தை: உபநிஷதங்களை நமக்கு அளித்த முனிவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தி எதையும் கூறாமல், எங்களுக்கு அதனை விளக்கிய மகான்கள் இவ்வாறு கூறினார்கள் (இதி சுச்ரும தீராணாம் யே நஸ்தத் விசசக்ஷிரே ஈசாவாஸ்ய உபநிஷதம் 10,13) என்றே குறிப்பிடுகிறார்கள். அதாவது, இந்த உண்மைகள் தங்கள் திறமையால் பெறப்பட்டவை அல்ல, மகான்களின் அருளால் கிடைத்தவை என்று அவர்கள் கூறுவதுபோல் உள்ளது இது.
நாம் எத்தகைய மனப்பாங்குடன் உபநிஷதங்களை அணுக வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. பிரார்த்தனைபூர்வமாக, உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று இறைவனை நோக்கி நாம் முன்னேறமுன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பெருளை ஆழமாகச் சிந்தித்து, சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும். பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.
சாந்தி மந்திரம்: எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல், அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.
உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.
பிரச்ன உபநிஷதத்திற்கான சாந்தி மந்திரம் இது.
ஓம் பத்ரம் கர்ணேபி ச்ருணுயாம தேவா
பத்ரம்பச்யேமாக்ஷபிர் யஜத்ரா
ஸ்திரைரங்கைஸ் துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி
வ்யசேம தேவஹிதம் யதாயு
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா
ஸ்வஸ்தி ந பூஷா விச்வ வேதா
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
தேவா-ஓ தேவர்களே! கர்ணேபி-காதுகளால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; ச்ருணுயாம-கேட்க வேண்டும்; யஜத்ரா-பூஜிக்கத் தகுந்தவர்களே; அக்ஷபி-கண்களால்; பத்ரம்-நல்ல விஷயங்களை; பச்யேம-காண வேண்டும்; ஸ்திரரங்கை-உறுதியான அங்கங்களுடன் கூடிய; தனூபி-உடலுடன்; யதாயு-ஆயுள் முழுவதும்; துஷ்ட்டுவாம்ஸ-உங்களைத் துதிக்க வேண்டும்; தேவ ஹிதம்-தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம்; வ்யசேம-வாழ வேண்டும்; வ்ருத்த ச்ரவா-பழம்புகழ்பெற்ற; இந்த்ர-இந்திரன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; விச்வ-தேவா-எல்லாம் அறிகின்ற; பூஷா-சூரியன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-மங்கலம் செய்யட்டும்; அரிஷ்ட்டநேமி-தீமையை அழிக்கின்ற; தார்க்ஷ்ய-கருடன்; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை செய்யட்டும்; ப்ருஹஸ்பதி-பிருகஸ்பதி; ந-நமக்கு; ஸ்வஸ்தி-நன்மை; ததாது-தரட்டும்!
தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும். பூஜிக்கத் தகுந்தவர்களே! கண்களால் நாங்கள் நல்ல விஷயங்களைக் காண வேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்த வண்ணம் வாழ வேண்டும்! பழம்புகழ் பெற்ற இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிகின்ற சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கின்ற கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிருகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்!
உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையில் தூண்டுகின்ற விஷயங்கள் ஆகிய இரண்டுமே மனிதனின் முன்னால் வருகின்றன; அறிவாளி இரண்டாம் வகையைத் தேர்ந்தெடுக்கிறான் என்று கட உபநிஷதம் கூறுகிறது. அவ்வாறு நல்லவற்றையும் உயர்ந்தவற்றையும் தேர்ந்தெடுப்பதற்கு நமது உடம்பிற்கும் புலன்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கும், அந்த முயற்சியில் தேவர்களின் துணையை நாடுவதற்குமான மந்திரம் இது.
தேவர்கள் யார்? அவர்களுக்கு நன்மை செய்வது என்பது என்ன?
சூரியன் உதிப்பது, கடலில் அலைகள் எழுவது, நட்சத்திர மண்டலங்கள் வானவெளியில் வலம் வருவது என்று இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் சக்தியின் வெளிப்பாட்டைக் காண்கிறோம். இந்தச் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவாக்கப்படுத்தினர் நமது முன்னோர், இந்திரன், வருணன், வாயு என்றெல்லாம் நமது வேதங்கள் கூறுகின்ற தேவர்கள் இத்தகைய இயற்கை ஆற்றலின் உருவகங்களே.
மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை ஆற்றல்களை வளம்பெறச் செய்ய வேண்டும், அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும், நாமும் வாழ்வோம்.
இந்தப் பரந்த கருத்துடன் உபநிஷதம் ஆரம்பிக்கிறது.
1.அறிவைத் தேடி

S
அறிவு எனும் தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்காவிட்டால் உலகம் முழுவதுமே காரிருளில் மூழ்கியிருக்கும் (இதமந்தம் தமஸ க்ருத்ஸ்னம் ஜாயதே புவனத்ரயம்
யதி சப்தாஹ்வயம் ஜ்யோதிராஸம்ஸாரம் ந தீப்யதே தண்டி காவ்யாதர்சம், 1.4) என்கிறார் மகாகவியாகிய தண்டி. உலக அறிவாக இருந்தாலும் சரி, இறையறிவாக இருந்தாலும் சரி, அறிவைத் தேடுவதும், தேடுபவனுக்குத் துணை செய்வதும் அதாவது கற்பதும் கற்பிப்பதும் புராதன பாரதத்தில் ஒரு தவமாகவே போற்றப்பட்டது.
( ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி நாகோ மௌத்கல்ய
தத்தி தபஸ் தத்தி தப தைத்திரீய உபநிஷதம் 1:9)
அறிவைப் பெறுவதில் நாட்டம் உள்ளவர்கள், அறிவில் சிறந்த மேதையோ ஆன்ம ஞானியோ எங்காவது இருப்பதாகக் கேள்விப்பட்டால் எத்தனை சிரமங்களை மேற்கொண்டும், அவரை அணுகினர். அபூர்வமான சாஸ்திரங்களையோ புகழ்பெற்ற ஆசிரியரையோ தேடி நூற்றுக்கணக்கான மைல்தூரம் நடந்து செல்கின்றனர். வழியில் பிச்சையின்மூலம் கிடைப்பதுதான் சாப்பாடு. தங்கள் தலைமயிர் நரைத்து முதுமையின் குறைபாடுகள் ஏற்படும் வரையிலும், தங்கள் உடல் மற்றும் மன வலிமைகளை ஒன்றுபடுத்தி, தாங்கள் விரும்பியதைத் தொடர்ந்து கற்கின்றனர்.
அவ்வாறு 6 பேர் இறையறிவைத் தேடி, மேதையும் மகானுமாகிய பிப்பலாத முனிவரை அடைந்தார்கள். அவர்கள் குருவிடம பெற்ற பயிற்சியும் அவர்களது முதல் கேள்வியும் இந்த அத்தியாயத்தில் வருகின்றன.
அறிவைத் தேடிய ஆறு பேர்
1. ஓம் நம பரமாத்மனே ஹரி ஓம்
ஸுகேசா ச பாரத்வஜ சைப்யச்ச ஸத்யகாம
ஸெளர்யாயணீ ச கார்க்ய; கௌஸல்யச்ச ஆச்வலாயனோ
பார்கவோ வைதர்பி: கபந்தீ காத்யாயனஸ்தே ஹைதே ப்ரஹ்மபரா
ப்ரஹ்மநிஷ்ட்டா; பரம் ப்ரஹ்மான்வேஷமாணா ஏஷ ஹ வை
தத்ஸர்வம் வக்ஷ்யதீதி தே ஹ ஸமித்பாணயோ பகவந்தம் பிப்பலாதம் உபஸன்னா
பரமாத்மனே-பரம்பொருளுக்கு; நம-வணக்கம்; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனான; ஸுகேசா-சுகேசன்; சைப்ய-சிபியின் மகனான; ஸத்யகாம-சத்தியகாமன்; ஸெளர்யாயணீ-சூரியனின் பேரனான; கார்க்ய-கார்க்கியன்; ஆச்வலாயன-அச்வலரின் மகனான; கௌஸல்ய-கௌசல்யன்; வைதர்பி-விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த; பார்கவ-பார்க்கவன்; காத்யாயன-காத்யரின் மகனான; கபந்தீ-கபந்தி; தே ஹ-அவர்கள்; ப்ரஹ்மபரா-இறைவனை நாடுபவர்கள்; ப்ரஹ்மநிஷ்ட்டா-இறையுணர்வில் நிலைபெற்றவர்கள்; பரம் ப்ரஹ்ம-கடவுளை; அன்வேஷமாணா-தேடி; தே-அவர்கள்; ஏஷ ஹ வை-இவரே; தத்-அது; ஸர்வம்-முற்றிலும்; வக்ஷ்யதி-சொல்வார்; இதி-என்று; ஸமித் பாணயோ-கைகளில் விறகுடன்; பகவந்தம்-தெய்வ முனிவரான; பிப்பலாதம்-பிப்பலாதரை உபஸன்னா-அணுகினர்.
பொருள் : ஓம் பரம்பொருளுக்கு வணக்கம். ஹரி ஓம். பரத்வாஜரின் மகனான சுகேசன், சிபியின் மகனான சத்தியகாமன், சூரியனின் பேரனான கார்க்கியன், அச்வலரின் மகனான கௌசல்யன், விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன், காத்யரின் மகனான கபந்தி ஆகியோர் இறைவனை நாடுபவர்கள்; இறையுணர்வில் நிலைபெற்றவர்கள். அவர்கள் கடவுளைத் தேடினார்கள். தெய்வ முனிவரான பிப்பலாதர் கடவுளைப்பற்றி முற்றிலும் விளக்கக்கூடியவர் என்று அறிந்ததும் கையில் விறகுடன் அவரை அணுகினர்.
கேள்விகள் செய்தல் வேதகாலத்தில் மிக முக்கியமான வழிபாடாகவும் வாழ்க்கைமுறையாகவும் இருந்தது. வேள்விகள் செய்வதற்கு விறகு அவசியம்; அதுவும் குறிப்பிட்ட மரத்திலுள்ள விறகு, குறிப்பிட்ட வகையில் இருத்தல் அவசியம். அத்தகைய விறகை குருவிற்கு அளிப்பது உயர்ந்த காணிக்கையாகக் கருதப்பட்டது. எனவே இந்த மாணவர்கள் 6 பேரும் விறகைக் கொண்டு சென்றனர்.
அறிவைப் பெற தவம் தேவை
எந்தக் கல்வியைப் பெறுவதற்கும், அதற்குரிய மனநிலை இருப்பது அவசியம். அப்போது மட்டுமே அந்தக் கல்வி பயனுடையதாக அமையும். மாணவனின் மனநிலையைச் சோதித்து அறிந்தபிறகு பாடத்தைப் போதிப்பது வெற்றிகரமான கல்விக்கு வழிவகுக்கும். பிப்பலாத முனிவர் இந்த வழிமுறையைப் பின்பற்றினார். மாணவர்கள் தம்மை அணுகியதும் உடனடியாக அவர் எதையும் போதிக்கவில்லை. அவர்களின் தகுதியைச் சோதிப்பதற்காகவும், தகுந்த மனநிலையை அவர்களிடம் உருவாக்குவதற்காகவும் ஓராண்டு காலம் அவர்களைத் தவ வாழ்வில் ஈடுபடுமாறு கூறினார்.
2. தான் ஹ ஸ ரிஷிருவாச-பூய ஏவ தபஸா ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸ்யத யதாகாமம் ப்ரச்னான் ப்ருச்சத யதி விஜ்ஞாஸ்யாம; ஸர்வம் ஹ வோ வக்ஷ்யாம இதி
ஸ:ரிஷி-அந்த முனிவர்; தான்-அவர்களிடம்; உவாச ஹ-கூறினார்; பூய ஏவ-இன்னும்; ஸம்வத்ஸரம்-வருடம்; ஸம்வத்ஸ்யத-உரிய முறையில் வாழுங்கள்; தபஸா-தவத்துடனும்; ப்ரஹ்மசர்யேண-பிரம்மச்சரியத்துடனும்; ச்ரத்தயா-செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையுடனும்; யதாகாமம்-விரும்புவதுபோல்; ப்ரச்னான்-கேள்விகளை; ப்ருச்சத-கேளுங்கள்; விஜ்ஞாஸ்யாம: யதி-எங்களுக்குத் தெரியுமானால்; ஹ-நிச்சயமாக; ஸர்வம்-அனைத்தையும்; தெரியுமானால்; வ-உங்களுக்கு; வக்ஷ்யாம-சொல்கிறோம்; இதி-என்று.
பொருள் : பிப்பலாத முனிவர் அவர்களிடம், உரிய முறையில், இங்கே இன்னும் ஒரு வருடம் வாழுங்கள். குறிப்பாக, தவத்துடனும் பிரம்மச்சரியத்துடனும் செயல்பாட்டுன்கூடிய நம்பிக்கையுடனும் வாழுங்கள், அதன்பிறகு நீங்கள் விரும்புவதுபோல் கேள்விகளைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரியுமானால் நிச்சயமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறோம் என்று கூறினார்.
இன்னும் (பூய ஏவ) உரிய முறையில் வாழுங்கள்(ஸம்வத்ஸ்யத) என்ற இரண்டு வார்த்தைகளையும் ஸ்ரீசங்கரர் அழகாக விளக்குகிறார்.
கபந்தி முதலான அந்த மாணவர்கள் ஏற்கனவே ஆன்மீக சாதனைகளைச் செய்து, தவ வாழ்க்கை வாழ்ந்து, மனத்தைப் பக்குவப்படுத்தியவர்கள்தான். ஆனால் இங்கே, அதாவது குருவுடன் ஒரு வருடம் தங்கி, அவரது துணையுடன் சாதனைகளைச் செய்யுமாறு பிப்பலாத முனிவர் கூறுகிறார். (யத்யபி யூயம் பூர்வ தபஸ்வின ஏவ ததாபி இஹ... ஸம்வத்ஸ்யத ஸம்யக் குரு சுச்ரூஷாபரா ஸந்தோ வத்ஸ்யத)
உரிய முறையில் என்றால் குருவிற்குச் சேவை செய்து என்கிறார் ஸ்ரீசங்கரர். குருவிற்குச் செய்யும் சேவையை நமது சாஸ்திரங்கள் மிகவும் போற்றுகின்றன. குருவிற்குத் தொண்டு செய்வதால் பணிவு பிறக்கிறது. பணிவு மிக்க மனதில் இறையருள் நிறைகிறது.
பிப்பலாத முனிவரை ஓர் உயர்நிலை ஆசிரியராக இங்கே நாம் காண்கிறோம்.
1. பணிவு: பல நாடுகளில் தமது பெயர் பரவுகின்ற அளவிற்கு மகனாக இருந்தும், பிப்பலாத முனிவர், எனக்குத் தெரியுமானால் பதில் சொல்கிறேன் என்கிறார். இது அவரது அறிவீனத்தைக் காட்டவில்லை, மாறாக அவரது பணிவை உணர்த்துகிறது (அனுத்ததத்வ ப்ரதர்சனார்த்தோ யதி சப்த ந அஜ்ஞான ஸம்சயார்த்த) என்று அழகாக விளக்குகிறார் ஸ்ரீசங்கரர்.
2. மாணவனின் தகுதியை ஆராய்தல்: உரியவனுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும். ஆன்மீகத்தைத் தேடி வந்த ஆறுபேரும் உண்மையில் அதற்குத் தகுதியானவர்கள்தானா என்பதை அறிந்துகொள்வதற்காக அவர்களை ஒரு வருடம் அங்கே தங்குமாறு கூறுகிறார் பிப்பலாதர். அந்த நாட்களில் தவத்தையும் பிரம்மச்சரியத்தையும் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையுடன் கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்.
தவமும் பிரம்மச்சரியமும் இவற்றுக்கு அடிப்படையாக ஆழ்ந்த நம்பிக்கையும் உயர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். உண்மையான பிரம்மச்சரியமே ஒரு தவம்தான் என்கிறார் சுவாமி ரங்கநாதானந்தர்; பிரம்மச்சரியம் என்றால் புலக்கட்டுப்பாடு-எந்தப் புறக்காரணத்தாலும் திணிக்கப்பட்டதல்ல; சுயமாகவே ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடு. முக்கியமாக காமத்தைக் கட்டுப்படுத்துவது பிரம்மச்சரியம் ஆகும், பிரம்மச்சரியமே ஒரு தவம். சொல்லப்போனால், தவ வாழ்வின் மிக முக்கிய அடிப்படையே பிரம்மச்சரியம்தான். பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவத்தைக் கூறாத இந்திய சாஸ்திரமே இல்லை எனலாம் என்று எழுதுகிறார் அவர். சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளுக்குச் சென்றதும், அவர் அங்கே பெற்ற மாபெரும் வெற்றியும், உலகின் சிந்தனைப் போக்கிலேயே அவர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்ததும் வரலாற்று உண்மைகள். தமது வெற்றிகள் அனைத்திற்கும் காரணம் பிரம்மச்சரிய ஆற்றலே என்று குறிப்பிடுகிறார் அவர்.
சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது. அது இதுதான்-ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.
அறிவு, ஆன்மீகம் என்ற எதுவானாலும் உயர்நிலைத் தேடல்கள் அனைத்திற்கும் தவமும், பிரம்மச்சரியமும், இவை இரண்டும் உயர்ந்த பலனை அளிக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் அடிப்படையாக உள்ளன. எனவே அவற்றை ஒரு வருடம் கடைப்பிடிக்குமாறு உபதேசித்தார் பிப்பலாத முனிவர்.
உலகம் (3-16)
பிப்பலாத முனிவர் உபதேசித்ததுபோல் ஆறு மாணவர்களும் ஒரு வருடம் தவ வாழ்வில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை அணுகி முதல் கேள்வியைக் கேட்கின்றனர்.
ஆன்மீகத்தை நாடி ஆறு பேரும் புறப்பட்டிருந்தாலும் அவர்களின் பாதை படிப்படியாக அமைவதை இந்த உபநிஷதத்தில் காண்கிறோம். எதையும் விட்டுவிட்டோ, திடீரென்றோ தாவுகின்ற முயற்சி அவர்களிடம் காணப்படவில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற, நாம் வாழ்கின்ற உலகத்தைப் பற்றியதாக அவர்களது முதல் கேள்வி அமைந்துள்ளது.
எல்லாம் எங்கிருந்து வந்தன?
3. அத கபந்தீ காத்யாயன உபேத்ய பப்ரச்ச
பகவன் குதோ ஹ வா இமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி
அத-பிறகு; காத்யாயன: கபந்தீ-காத்யாயனரின் மகனான கபந்தி; உபேத்ய-அணுகி; பகவன்-தெய்வ முனிவரே; இமா-இந்த; ப்ரஜா-உயிரினங்கள்; குத: ஹவை-எங்கிருந்து; ப்ரஜாயந்தே-தோன்றின; இதி-என்று; பப்ரச்ச-கேட்டார்.
பொருள் : ஒரு வருடத் தவ வாழ்விற்கு பிறகு கபந்தி பிப்பலாத முனிவரை அணுகி அவரிடம், தெய்வ முனிவரே! இந்த உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? என்று கேட்டார்.
அடிப்படை: ஜடப்பொருளும் பிராணனும்
4. தஸ்மை ஸ ஹோவாச-ப்ரஜாகாமோ வை ப்ரஜாபதி: ஸ தபோ தப்யத ஸ தபஸ்தப்த்வா ஸ மிதுனமுத்பாதயதே
ரயிம் ச ப்ராணம் சேதி ஏதௌ மே பஹுதா ப்ரஜா கரிஷ்யத இதி
தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; ப்ரஜாகாம-உயிரினங்களைப் படைக்க விரும்பினார்; ஸ-அவர்; தப-தவத்தில்; அதப்யத-ஈடுபட்டார்; தப-தவத்தில்; அதப்த்வா-ஈடுபட்ட பிறகு; ஸ-அவர்; ரயிம் ச-ஆகாசத்தையும்; ப்ராணம் ச-பிராணனையும்; ஏதௌ-இவை இரண்டும்; மே-எனக்கு; பஹுதா-பல்வேறு; ப்ரஜா-உயிரினங்களை; கரிஷ்யதே-உற்பத்தி செய்யும்; இதி-என்று; மிதுனம்-ஜோடிகளை; உத்பாதயதே-படைத்தார்.
பொருள் : கபந்தியிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
உயிரினங்களைப் படைக்க விரும்பிய படைப்புக் கடவுள் தவத்தில் ஈடுபட்டார், அதன்பிறகு ஆகாசத்தையும் பிராணனையும் படைத்தார். இவை இரண்டும் சேர்ந்து பல்வேறு உயிரினங்களை எனக்காக உற்பத்தி செய்யும் என்று உணர்ந்திருந்தார் அவர்.
சுவாமி விவேகானந்தரின் விளக்கத்தைக் காண்போம்
இந்தியத் தத்துவ ஞானிகளின் கொள்கைப்படி பிரபஞ்சம் இரண்டு பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ஆகாசம். இது எங்கும் வியாபித்து அனைத்தையும் ஊடுருவியுள்ளது. உருவம் உள்ள அனைத்தும், சேர்க்கையால் விளைந்த அனைத்தும் ஆகாசத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன. ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருட்களாகவும், திடப் பொருட்களாகவும் ஆகியுள்ளது. சூரியனாக, சந்திரனாக, பூமியாக, நட்சத்திரங்களாக, வால் நட்சத்திரங்களாக ஆகியுள்ளதும் ஆகாசமே. மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் அனைத்தும், நாம் காண்கின்ற, நாம் உணர்கின்ற அனைத்தும், இருப்பவை அனைத்துமாக இருப்பதும் ஆகாசமே...
எந்தச் சக்தியால் இந்த ஆகாசம் பிரபஞ்சமாகிறது? பிராண சக்தியினால்.... இந்த பிராணனிலிருந்தே நாம் ஆற்றல் என்று அழைக்கின்ற, நாம் சக்தி என்று அழைக்கின்ற அனைத்தும் வெளிப்படுகின்றன. புவியீர்ப்பாக, காந்த சக்தியாக வெளிப்படுவது பிராணனே. உடல் இயக்கங்களாக, நாடி ஓட்டங்களாக, எண்ணச் சக்தியாக வெளிப்படுவதும் பிராணனே. எண்ணம் முதல் மிகச் சாதாரண சக்திவரை எல்லாம் பிராணனின் வெளிப்பாடுகளே.
சுவாமிஜி ஜடப்பொருளை ஆகாசம் என்றும், ஆற்றலை பிராணன் என்றும் குறிப்பிடுகிறார்; இயக்கம், அதிர்வு, எண்ணம் என்று நாம் அறியும் சக்திகள் எல்லாம் பிராணனுடைய பல்வேறு நிலைகள். உருவம், தடை என்று நாம் அறியும் ஜடப்பொருள் எல்லாம் ஆகாசத்தின் வேறு நிலைகள்.
சூரியனே பிராணன் 5-8
5. ஆதித்யோ ஹ வை ப்ராணோ ரயிரேவ சந்த்ரமா ரயிர்வா ஏதத் ஸர்வம் யம்மூர்த்தம் சாமூர்த்தம் ச தஸ்மான்மூர்த்திரேவ ரயி
ஆதித்ய: ஹ வை-சூரியன்; ப்ராண-ஆற்றல்; சந்த்ரமா-சந்திரன்; ரயி: ஏவ-ஜடப்பொருளே; யத்-எது; மூர்த்தம் ச-தூலப் பொருட்கள்; அமூர்த்தம் ச-நுண் பொருட்கள்; ஏதத்-இந்த; ஸர்வம்-அனைத்தும்; ரயி: வை-ஜடப் பொருளே; தஸ்மாத்-எனவே; மூர்த்தி-பொருட்கள் ரயி: ஏவ-ஜடப்பொருளே.
பொருள் : சூரியன் ஆற்றல், சந்திரன் ஜடப்பொருள். தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாவும் இந்த உலகில் உள்ள அனைத்தும் ஜடப்பொருளே. எனவே பொருள் என்றால் அது ஜடப்பொருளே.
சூரியனும் சந்திரனும் இங்கே உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளன. சந்திரனுக்கென்று ஒளி கிடையாது. சூரியனின் ஒளியைப் பெற்று அது பிரதிபலிக்கிறது. சந்திரன் மட்டும் இருந்தால் ஒளியில்லை. அது வெறும் ஜடப்பொருளே. சூரியனாகிய ஆற்றல் அதில் புகும்போது சந்திரன் ஒளி வீசுகிறது அதாவது செயல்படுகிறது.
உலகிலுள்ள தூல மற்றும் நுண்பொருட்கள் அனைத்தும் ஜடப்பொருளே. அதில் பிராணன் செயல்படும்போது மட்டுமே செயல் நிகழ்கிறது. இவ்வாறு உலகம் அனைத்தும் ஆகாசம், பிராணன் என்ற அடிப்படைப் பொருட்களின் விளைவாக உள்ளது.
6. அதாதித்ய உதயன் யத் ப்ராசீம் திசம் ப்ரவிசதி தேன ப்ராச்யான் ப்ராணான் ரச்மிஷு ஸன்னிதத்தே
யத்தக்ஷிணாம் யத்ப்ரதீசீம் யதுதீசீம் யததே யதூர்த்வம் யதந்தரா திசோ யத்ஸர்வம் ப்ரகாசயதி தேன ஸர்வான் ப்ராணான் ரச்மிஷு ஸன்னிதத்தே
அத-இப்போது; ஆதித்ய-சூரியன்; உதயன்-உதித்து; யத்-எப்போது; ப்ராசீம் திசம்-கிழக்குத் திசையில்; ப்ரவிசதி-பரவுகிறது; தேன-அதனால்; ப்ராச்யான்-கிழக்கிலுள்ள; ப்ராணான்-பிராணன்களை; ரச்மிஷு-கதிர்களில்; ஸன்னிதத்தே-வழங்குகிறது; யத்-எப்போது; தக்ஷிணாம்-தெற்கில்; ப்ரதீசீம்-மேற்கில்; உதீசீம்-வடக்கில்; அத-கீழே; ஊர்த்தவம்-மேலே; அந்தராதிச-அந்தரப் பகுதிகளை; ஸர்வம்-அனைத்தையும்; ப்ரகாசயதி-ஒளிரச் செய்கிறது; தேன-அதனால்; ஸர்வான்-எல்லா; ப்ராணான்-பிராணன்களையும்; ரச்மிஷு-கதிர்களில்; ஸன்னிதத்தே-வழங்குகிறது.
பொருள் : சூரியன் உதித்து, ஒளி கிழக்குத் திசையில் பரவும்போது, அவன் தன் கதிர்களால் கிழக்கில் பிராணனை வழங்குகிறான். அதுபோலவே தெற்கு, மேற்கு, வடக்கு, கீழே, மேலே மற்றும் அந்தரப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் ஒளி பரவும்போது, அந்தந்தப் பகுதிகளுக்கு, தன் கதிர்களால் பிராணனை வழங்குகிறான்.
ஓர் அழகிய காலைக் காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறார் பிப்பலாத முனிவர். கிழக்கில் சூரியன் உதிக்கிறது. அதன் பொன்னிறக் கதிர்கள் திசைகள் தோறும் பரவுகின்றன. பரவுகின்ற திசையெல்லாம் பிராணனை வழங்குகிறான் கதிரவன்.
கதிரவன் பிராணனுக்குத் தலைவனாக, பிராணனை வழங்குபவனாகக் கொள்ளப்படுகிறான். பிராணன் என்றால் சக்தி, ஆற்றல். வாழ்க்கைக்கான ஆற்றலை அளிப்பவன் சூரியன். தூங்கிக் கிடக்கின்ற உயிரினங்கள் அவனது ஸ்பரிசத்தால் எப்படி எழுந்து புத்துணர்ச்சியுடன் செயல்படுகின்றன என்பது நமது அன்றாட அனுபவம். தாவரங்கள்கூட இதற்கு விதி விலக்கு அல்ல. எனவே இங்கு சூரியன் போற்றப்படுகிறான்.
7. ஸ ஏஷ வைச்வானரோ விச்வரூப: ப்ராணோ க்னிருதயதே
ததேதத் ரிசாப்யுக்தம்
ஸ-அவன்; ஏஷ-இந்த; வைச்வானர-வைசுவானரன்; விச்வரூப-விசுவரூபன்; ப்ராண-பிராணன்; அக்னி-நெருப்பு; உதயதே-உதிக்கிறான்; தத்-அது; ஏதத்-இவ்வாறு; ரிசா-ரிக்வேத மந்திரத்தில்; அப்யுக்தம்-கூறப்பட்டுள்ளது.
பொருள் : வைசுவானரனும் விசுவரூபனும் பிராண சக்தியும் ஆகிய சூரியன் இவ்வாறு ஒரு நெருப்புப் பிழம்புபோல் உதிக்கிறான். ரிக்வேத மந்திரத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வைசுவானரன்: வைசுவானரன் என்றால் அனைத்து உயிர்களின் தொகுதியாக உள்ளவன். அனைத்து உயிர்களும் இயங்குவதற்கான ஆற்றலை அளிப்பதால் சூரியன் அனைத்து உயிர்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.
விசுவரூபன் : அனைத்து உருவங்களின் வடிவாக உள்ளவன். சூரிய ஒளி இருப்பதாலேயே உருவங்களைப் பார்க்க முடிகிறது. சூரியனின்றி எந்த உருவத்தையும் நம்மால் பார்க்க முடியாது. எனவே சூரியன் அனைத்து உருவங்களின் வடிவாகப் போற்றப்படுகிறான்.
பிராண சக்தி: ஜடப்பொருள், பிராணன் ஆகிய இரண்டையும் அடிப்படையாக உடையது படைப்பு. இங்கே பிராணனின் தூல வடிவாகச் சூரியன் போற்றப்படுகிறான். இவ்வாறு உலகிற்கே, உலக வாழ்க்கைக்கே ஆதாரமான சூரியன் ஒரு நெருப்புப் பிழம்புபோல் கிழக்கில் உதிப்பதாக உதயகால அழகை, அதன் உண்மைப்பொருள் விளக்கத்துடன் படம் பிடித்துக் காட்டுகிறார் முனிவர்.
ஆன்மீக உயர்வுக்கும் அறிவின் ஒளிக்கும் இணையாக உபநிஷத முனிவர்களிடம் நாம் காண்பது அவர்களின் பணிவு மற்றும் தங்கள் முன்னோர்களாகிய ரிஷிகளிடம் அவர்கள் கொண்டிருந்த பக்தி, உபநிஷத உண்மைகளை அறிந்தவர்களாக இருந்தும், அந்த உண்மைகளை உலகிற்குச் சொல்கின்ற பெருமையை முன்னோர்களுக்குக் கொடுக்கவே அவர்கள் விரும்பினர். பிப்பலாதரும் சூரியன் உலகிற்கே ஆதாரமானவன் என்று கூறிவிட்டு, அது தமது கண்டுபிடிப்பு அல்ல, ஏற்கனவே ரிக்வேதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பெருமையை ரிக்வேத முனிவருக்கு அளிக்கிறார். ரிக்வேத பகுதி அடுத்த மந்திரமாக வருகிறது.
8. விச்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம் ஜ்யோதிரேகம் தபந்தம்
ஸஹஸ்ர ரச்மி; சததா வர்த்தமான ப்ராண ப்ரஜானாமுதயத்யேஷ ஸூர்ய
விச்வரூபம்-அனைத்து உருவினன்; ஹரிணம்-கதிர்கள் நிறைந்தவன்; ஜாதவேதஸம்-அனைத்தும் அறிந்தவன்; பராயணம்-அனைத்து உயிர்களின் ஆதாரம்; ஏகம்-ஒன்றேயான; ஜ்யோதி-ஒளிப்பொருள்; தபந்தம்-வெப்பத்தைக் கொடுப்பவன்; ஸஹஸ்ர ரச்மி-ஆயிரம் கதிர்களுடன்; சததா வர்த்தமான-நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறான்; ப்ரஜானாம்-உயிர்களின்; ப்ராண-பிராணன்; உதயதி-உதிக்கிறான்; ஏஷ-இந்த; ஸூர்ய-சூரியன்.
பொருள் : சூரியன் அனைத்து உருவினன், கதிர்கள் நிறைந்தவன், அனைத்தும் அறிந்தவன், அனைத்து உயிர்களின் ஆதாரம், ஒன்றேயான ஒளிப்பொருள், வெப்பத்தைக் கொடுப்பவன், உயிர்களின் பிராணனாகிய அந்தச் சூரியன், இதோ, ஆயிரம் கதிர்களுடன் உதிக்கிறான்; நூற்றுக்கணக்கான வழிகளில் செயல்படுகிறான்.
இரண்டு வழிகள்: 9-10
ஆகாசத்தையும் பிராணனையும் படைத்து, அவை மூலமாக உயிரினங்களைப் படைத்தார் கடவுள். மனிதனைப் படைத்த அவர் அவன் வாழ இரண்டு வழிகளை வகுத்தார்.
9. ஸம்வத்ஸரோ வை ப்ரஜாபதி தஸ்யாயனே தக்ஷிணம் சோத்தரம் ச
தத்யே ஹ வை ததிஷ்ட்டாபூர்த்தே க்ருதமித்யுபாஸதே தே சாந்த்ரமஸமேவ லோகமபிஜயந்தே த ஏவ புனராவர்த்தந்தே
தஸ்மாதேத ரிஷய ப்ரஜாகாமா தக்ஷிணம் ப்ரதிபத்யந்தே
ஏஷ ஹ வை ரயிர்ய பித்ருயாண
ஸம்வத்ஸர: வை-வருடமே; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; தஸ்யா-அவருக்கு தக்ஷிணம் ச-தட்சிணாயனம்; உத்தரம் ச-உத்தராயணம்; அயனே-இரண்டு பாதைகள்; தத்யே ஹ வை-இங்கு யார்; இஷ்ட்டா பூர்த்தே-யாகங்களும் நற்பணியும்; க்ருதம்-மேலானவை; இதி-என்று; உபாஸதே-செய்கிறார்களோ; தே-அவர்கள்; சாந்த்ரமஸம் லோகம் ஏவ-சந்திரலோகத்தையே; அபிஜயந்தே-அடைகிறார்கள்; தே ஏவ-அவர்கள்; புன-மீண்டும்; ஆவர்த்தந்தே-பிறக்கிறார்கள்; தஸ்மாத்-எனவே; ஏதே-இந்த; ரிஷய-சான்றோர்கள்; ப்ரஜாகாமா-சந்ததியை நாடுபவர்கள்; தக்ஷிணம்-தட்சிணாயனத்தை; ப்ரதிபத்யந்தே-அடைகிறார்கள்; ய-எது; பித்ருயாண-பித்ருயானமோ; ஏஷ ஹ வை-அதுவே; ரயி-ஜடப்பொருள்.
பொருள் : வருடமே பிரஜாபதி. அவருக்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு பாதைகள் உள்ளன. யாகங்களும் நற்பணிகளுமே மேலானவை என்று கருதி அவற்றைச் செய்பவர்கள் சந்திர லோகத்தை அடைகிறார்கள். அவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள். எனவே சந்ததியை நாடுகின்ற சான்றோர்கள் தட்சிணாயனத்தின் வழியாகச் செல்கிறார்கள்.
10. அதோத்தரேண தபஸா ப்ரஹ்மசர்யேண ச்ரத்தயா வித்யயா ஆத்மானம் அன்விஷ்ய ஆதித்யம் அபிஜயந்தே
ஏதத் வை ப்ராணானாம் ஆயதனம் ஏதத் அம்ருதம் அபயம் ஏதத் பராயணம் ஏதஸ்மான்ன புனராவரத்தந்த இத்யேஷ நிரோத
ததேஷ ச்லோக
அத-மேலும்; தபஸா-தவத்தால்; ப்ரஹ்மசர்யேண-பிரம்மச்சரியத்தால்; ச்ரத்தயா-செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையால்; வித்யயா-தியானத்தால்; ஆத்மானம்-ஆன்மாவை; அன்விஷ்ய-தேடி; ஆதித்யம்-சூர்யப்பாதையை; அபிஜயந்தே-அடைகின்றனர்; ஏதத் வை-இதுவே; ப்ராணானாம்-ஆற்றல்களின்; ஆயதனம்-உறைவிடம்; அம்ருதம்-அழிவற்றது; அபயம்-பயமற்றது; பராயணம்-லட்சியம்; ஏதஸ்மாத்-இதிலிருந்து; புன: ந ஆவர்த்தந்தே-மீண்டும் பிறப்பதில்லை; ஏஷ-இது; நிரோத: இதி-அடைய முடியாதது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-சுலோகம் உள்ளது.
பொருள் : ஆன்மாவைத் தேடுபவர்கள் தவம், பிரம்மச்சரியம், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை, தியானம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அவர்கள் சூரியப் பாதையை அடைகின்றனர். இந்தப் பாதை ஆற்றல்களின் உறைவிடம், அழிவற்றது, பயமற்றது. இந்தப் பாதையே லட்சியம். இந்தப் பாதை வழியாகச் செல்பவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. ஆன்மாவைத் தேடாதவர்கள் இந்தப் பாதையை அடைவதில்லை.
பிரஜாபதி படைப்புக் கடவுள். இங்கே படைப்பிற்கு உருவமாகச் சொல்லப்பட்டிருக்கிறார். வருடம் என்று குறிப்பிடப்படுவது காலம்(9). படைப்பு என்பது காலமே என்ற கருத்து இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. அனைத்தும் காலத்தில் தோன்றி காலத்திலேயே மறைகின்றன. காலம் என்ற மாபெரும் எந்திரத்தின் ஆற்றல் மகத்தானது; தன் சுழற்சியில் எத்தனை எத்தனையோ மாற்றங்களை உருவாக்க வல்லது, அதாவது, வாழ்க்கை என்பதே காலத்திற்குள் அடங்கியுள்ளது. அதனால்தான், காலம் தன்னை ஏதோ சாதாரணமான, எந்தச் சக்தியும் இல்லாத ஒன்றுபோல் தன்னைக் காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது தான் ஒரு வாள்போல், ஒரு கணம்கூட இடையீடின்றி மனித வாழ்வை அறுத்துக்கொண்டிருக்கிறது (நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் திருக்குறள், 34.4) என்ற வியந்து நிற்கிறார் தெய்வப் புலவர்.
கால வடிவான கடவுள், மனிதன் வாழ இரண்டு வழிகளை வகுத்தார். ஒன்று சாதாரண வழி, மற்றொன்று உயர் வழி.
இன்பத்தை நாடுபவர்கள் சாதாரண வழியில் செல்கிறார்கள். பல வழிகளில் இன்பத்தைத் தேடுகிறார்கள். யாகங்கள். நற்பணிகள் போன்றவைமூலம் புண்ணியம் தேடுகிறார்கள். சொர்க்கங்களுக்குச் செல்கிறார்கள், சுகபோகங்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்கிறார்கள். கூடவே துக்கத்தையும் அனுபவிக்கிறார்கள். ஆனால் எதற்கும் முடிவு இருக்கத்தானே வேண்டும்! அவை முடிந்ததும் கீழே வருகிறார்கள், மனிதர்களாகப் பிறக்கிறார்கள், இன்னும் கீழான பிறவியை அடைகிறார்கள் என்று விளக்குகிறார் சுவாமி விவேகானந்தர். இது சாதாரண வழி, தட்சிணாயனம்.
உத்தராயணம் என்பது உயர்வழி. இனி பிறவிகள் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அழிகின்ற உடலின்பங்களை விட்டு, தவம் போன்றவற்றைக் கடைப்பிடித்து, உடலுள் உறையும் ஆன்மாவைத் தேடுகிறார்கள்.
சூரியனும் காலமும் : 11-12
சூரியன் எவ்வாறு உலக வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கிறான் என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன. சூரியனே பிராணன் (5). எனவே பிராண சக்தி வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
11. பஞ்சபாதம் பிதரம் த்வாதசாக்ருதிம் திவ ஆஹு பரே அர்த்தே புரீஷிணம்
அதேமே உ பரே விசக்ஷணம் ஸப்தசக்ரே ஷடர ஆஹுரர்ப்பிதமிதி
பஞ்சபாதம்-ஐந்து பாதங்கள் உடையவன்; பிதரம்-தந்தை; த்வாதச ஆக்ருதிம்-பன்னிரண்டு உருவங்கள் உடையவன்; அர்த்தே பரே திவே-மேற்பகுதியிலிருந்து; புரீஷிணம்-மழை பொழிபவன். ஆஹு-சொலகிறார்கள்; அத-மேலும்; விசக்ஷணம்-அனைத்தும் அறிபவன்; ஸப்த சக்ரே-ஏழு சக்கரங்களுடன்; ஷடரே-ஆறு ஆரங்களுடன்; அர்ப்பிதம்-இருப்பவன்; இதி-என்று; அன்யே இமே பரே-வேறு சிலர்; ஆஹு-சொல்கிறார்கள்.
பொருள் : சூரியன் ஐந்து பாதங்கள் உடையவன், தந்தை, பன்னிரண்டு உருவங்கள் உடையவன், மேற்பகுதியிலிருந்து மழை பொழிபவன் என்று சிலர் கூறுகிறார்கள். அவன் அனைத்தும் அறிபவன், ஏழு சக்கரங்களுடனும் ஆறு ஆரங்களுடனும் கூடிய தேரில் இருப்பவன் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
ஐந்து பாதங்கள்: பாதங்கள் பருவங்களைக் குறிக்கின்றன. பருவங்கள் ஆறு. அவை சிசிரம்(பின்பனிக்காலம்) வசந்தம், கிரீஷ்மம்( கோடைக் காலம்), வர்ஷம் (மழைக் காலம்), சரத்(இலையுதிர் காலம்), ஹேமந்தம் அல்லது ஹிமம்(முன்பனிக்காலம்). இங்கே, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் ஒன்றாகக் கொள்ளப்பட்டு ஐந்து பருவங்கள் என்று கூறப்படுகிறது.
பருவங்கள் மாறுவதற்கு சூரியனே காரணமாக இருக்கிறான். எனவே ஐந்து பருவங்கள் உடையவனாக அவன் கருதப்படுகிறான்.
தந்தை: அனைத்து உயிர்களும் வளர்வதற்குச் சூரியனே காரணமாக இருக்கிறான். அதனால் தந்தை.
பன்னிரு உருவங்கள் உடையவன்: பன்னிரு உருவங்கள் என்றால் பன்னிரு மாதங்கள். மாதங்கள் சூரியனை மையமாகக்கொண்டே கணக்கிடப்படுகின்றன. எனவே சூரியன் பன்னிரு உருவங்கள் உடையவனாகக் கூறப்படுகிறான்.
ஏழு சக்கரங்கள்: சூரியன் சஞ்சரிக்கின்ற தேரில் ஏழு சக்கரங்கள் உள்ளன. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் அவன் பயணிப்பதாகவும் கூறப்படுவதுண்டு. சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதை இது சுட்டிக்காட்டுவதாகவும் கொள்ளலாம்.
ஆறு ஆரங்கள்: ஆறு பருவங்கள்.
சூரியன் காலத்திற்குத் தலைவனாக, காலத்தை இயக்குபவனாக இருக்கிறான் என்பது இந்த மந்திரத்தின் பொருள் ஆகும். சூரியனைப் பிராணனுக்கு உருவகமாக 5-இல் கண்டோம். எனவே பிராண சக்தியே காலத்தையும், அதன்மூலம் வாழ்க்கையையும் இயக்குகிறது என்பது இந்த மந்திரத்திலிருந்து நாம் பெறும் கருத்தாகும்.
இதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது (1.10) என்று கூறி பிப்பலாத முனிவர் இந்த மந்திரத்தை மேற்கோள் காட்டுகிறார். இந்த மந்திரம் ரிக்வேதம் 1:164.12-இல் வருகிறது.
12. மாஸோ வை ப்ரஜாபதிஸ்தஸ்ய க்ருஷ்ணபக்ஷ ஏவ ரயி சுக்ல ப்ராணஸ்தஸ்மாதேத ரிஷய இஷ்ட்டம் குர்வந்தீதர இதரஸ்மின்
மாஸ: வை-மாதமே; ப்ரஜாபதிம்-படைப்புக் கடவுள்; தஸ்ய-அவரது; க்ருஷ்ணபக்ஷ-தேய்பிறைக் காலம்; ரயி: ஏவ-ஜடப்பொருள்; சுக்ல-வளர்பிறை காலம்; ப்ராண-பிராணன்; தஸ்மாத்-எனவே; ஏத-இந்த; ரிஷய-முனிவர்கள்; சுக்லே-வளர்பிறையில்; இஷ்ட்டம்-யாகங்களை; குர்வந்தி-செய்கிறார்கள்; இதரே-மற்றவர்கள்; இதரஸ்மின்-மற்ற காலத்தில்.
பொருள் : மாதமே படைப்புக் கடவுள், அவரது தேய்பிறைக் காலம் ஜடப்பொருள்; வளர்பிறைக் காலம் பிராணன். எனவே முனிவர்கள் யாகங்களை வளர்பிறைக் காலத்தில் செய்கிறார்கள்; மற்றவர்கள் தேய்பிறைக் காலத்தில் செய்கிறார்கள்.
முப்பது நாட்கள் கொண்டது ஒரு மாதம். இதில் அமாவாசைக்கு மறுநாள் (பிரதமை) முதல் பவுர்ணமி வரை உள்ள 15 நாட்கள் வளர்பிறைக் காலம். பவுர்ணமிக்கு மறுநாள் முதல் அமாவாசை வரையுள்ள 15 நாட்கள் தேய்பிறைக் காலம்.
வளர்பிறைக் காலத்தைப் பிராணன் என்றும் தேய்பிறைக் காலத்தை ஜடம் என்றும் மந்திரம் கூறுகிறது. வளர்பிறைக்காலம் என்பது 10 இல் நாம் கண்ட உயர் வழி. தேய்பிறைக் காலம் என்பது 9-இல் கண்ட சாதாரண வழி. வளர்பிறைக் காலத்தில், அதாவது உயர்வழியை நாடி செய்யப்படுகின்ற யாகங்கள் ஆன்மீக பலனைத் தருகின்றன. தேய்பிறைக் காலத்தில், அதாவது சாதாரண வழியை நாடி செய்யப்படுபவை உலகியல் பலனைத் தருகின்றன.
இதன் பொருள் என்ன?
யாகங்களைச் சாதாரண வழிக்காகவும் செய்யலாம். உயர்வழிக்காகவும் செய்யலாம், பிள்ளைவரம், செல்வம் போன்றவற்றிற்காக யாகம் செய்தால் அது அந்தப் பலன்களைத் தரும். உலகியல் ஆசைகள் இல்லாமல், ஆன்மீக நோக்கங்களுக்காக யாகங்களைச் செய்யும்போது அவை ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகின்றன.
இல்லற நெறி : 13-16
உயர் வழியை நாடுபவர்கள் ஆன்ம அனுபூதி பெறுகிறார்கள். அப்படியானால், சாதாரண வழியைத் தேர்ந்தெடுத்து இல்லற வாழ்வில் ஈடுபடுபவர்கள் உலகியலிலே உழல வேண்டியதுதானா? இல்லை. அவர்களும் நெறியாள வாழ்க்கை வாழ்வதன்மூலம் ஆன்மீக முன்னேற்றம் காணலாம் என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
13. அஹோராத்ரோ வை ப்ரஜாபதிஸ்யாஹரேவ ப்ராணோ ராத்ரிரேவ ரயி
ப்ராணம் வா ஏதே ப்ரஸ்கந்தந்தி யே திவா ரத்யா ஸம்யுஜ்யந்தே ப்ரஹ்மசர்யமேவ தத்யத்ராத்ரௌ ரத்யா ஸம்யுஜ்யந்தே
அஹோராத்ரோ: வை-பகலும் இரவும்; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; தஸ்ய-அவரது; அஹ ஏவ-பகலே; ப்ராண-பிராணன்; ராத்ரி: ஏவ-இரவே; ரயி-ஜடம்; யே-யார்; திவா-பகலில்; ரத்யா-உடலுறவில்; ஸம்யுஜ்யந்தே-ஈடுபடுகிறார்களோ; ஏதே-அவர்கள்; ப்ராணம்-பிராணனை; ப்ரஸ்கந்தந்தி வை-வீணாக்கவே செய்கிறார்கள்; யத் ராத்ரௌ-எப்போது இரவில்; ரத்யா-உடலுறவில்; ஸம்யுஜ்யந்தே-ஈடுபடுகிறார்களோ; தத்-அது; ப்ரஹ்மசர்யம் ஏவ-பிரம்மச்சரியமே.
பொருள் : பகலும் இரவுமே படைப்புக் கடவுள். இதில் பகலே பிராணன், இரவே ஜடம். யார் பகலில் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் பிராணனை வீணாக்குகிறார்கள். இரவில் உடலுறவு கொள்வது பிரம்மச்சரியமே.
பிரம்மச்சரியமே என்று கூறியதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். பிரம்மச்சரியம் என்பது உடலுறவை முற்றிலுமாகத் தவிர்ப்பது ஆகும். ஒருவன் தன் மனைவியுடன் மட்டுமே, அதிலும் இரவில் மட்டுமே உறவுகொள்ள வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகக் கூறப்பட்ட புகழ்மொழியே இது என்கிறார் அவர். (யத் ராத்ரௌ ஸம்யுஜ்யந்தே ரத்யா ரிதௌ ப்ரஹ்மசர்யம் ஏவ தத் இதி ப்ரசஸ்தத்வாத் ராத்ரௌ பார்யாகமனம் கர்த்தவ்யம் இதி)
14. அன்னம் வை ப்ரஜாபதிஸ்ததோ ஹ வை தத்ரேதஸ் தஸ்மாதிமா ப்ரஜா ப்ரஜாயந்த இதி
அன்னம் வை-உணவே; ப்ரஜாபதி-படைப்புக் கடவுள்; தத: ஹ வை-அதிலிருந்தே; தத்-அந்த; ரேதஸ்-விந்து; தஸ்மாத்-அதிலிருந்து; இமா-இந்த ப்ரஜா-உயிரினங்கள்; ப்ரஜாயந்தே இதி-தோன்றுகின்றன.
பொருள் : உணவே படைப்புக் கடவுள். உணவிலிருந்தே விந்து உண்டாகிறது. அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன.
உண்ணும் உணவிலிருந்தே ரத்தம், தசை, எலும்பு என்று உடம்பிலுள்ள அனைத்தும் உற்பத்தியாகின்றன. அவ்வாறு ஆணின் உடம்பில் உருவாகின்ற ஒன்றே விந்து; இது பெண்ணிடம் வைக்கப்படும்போது உயிர் தோன்றுகிறது. இவ்வாறு உயிரினங்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் அடிப்படையாக இருப்பதால் உணவு படைப்புக் கடவுளாகப் போற்றப்படுகிறது.
15. தத் யே ஹ வை தத் ப்ரஜாபதிவ்ரதம் சரந்தி தே மிதுனமுத்பாதயந்தே
தேஷாமேவைஷ ப்ரஹ்மலோகோ யேஷாம் தபோ ப்ரஹ்மசர்யம் யேஷு ஸத்யம் ப்ரதிஷ்ட்டிதம்
தத்-இவ்வாறு; யே-யார்; தத்-அந்த; ப்ரஜாபதி வ்ரதம்-படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை; சரந்தி ஹ வை-கடைப்பிக்கிறார்களோ; தே-அவர்கள்; மிதுனம்-ஜோடியை; உத்பாதயந்தே-உருவாக்குகிறார்கள்; யேஷாம்-யாரிடம்; தப-தவம்; ஹ்மசர்யம்-பிரம்மச்சரியம்; யேஷு-யாரிடம்; ஸத்யம்-உண்மை; ப்ரதிஷ்ட்டிதம்-நிலைபெற்றுள்ளதோ; தேஷாம் ஏவ-அவர்களுக்கு மட்டுமே; ஏஷ-இந்த; ப்ரஹ்மலோக-இறையுலகம்.
பொருள் : படைப்புக் கடவுள் உருவாக்கிய நியதியை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்கள் ஜோடியை உருவாக்குகிறார்கள். யாரிடம் தவமும் பிரம்மச்சரியமும் உள்ளதோ, யாரிடம் உண்மை நிலைபெற்றுள்ளதோ அவர்களுக்கு மட்டுமே இறையுலகம் வாய்க்கிறது.
இல்லறத்தாரும் ஒழுக்க நெறியை அடிப்படையாகக் கொண்ட வாழ்வை வாழ வேண்டும் என்பதை 13-15 மந்திரங்கள் வற்புறுத்துகின்றன. இந்த உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது படைப்புக் கடவுளின் திட்டம். அதற்கு இனப்பெருக்கம் அவசியம். சந்ததிச் சங்கிலியை வெட்டாதீர்கள் (ப்ரஜாதந்தும் மா வ்யவச்சேத்ஸீ தைத்திரீய உபநிஷதம், 1.11.1) என்று தைத்திரீய உபநிஷதம் ஆணையிடுகிறது. அதற்கு ஆணும் பெண்ணும் இணைய வேண்டியது அவசியம் ஆண்-பெண் உறவை இந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும் என்பது உபநிஷதங்களின் உபதேசமாக உள்ளது. அதாவது, ஆணும் பெண்ணும் இணைவது என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமே, உலகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று படைப்புக் கடவுள் வகுத்த நியதியைக் கடைப்பிடிப்பதற்காக மட்டுமே, அதற்குமேல் வேறு எந்த முக்கியத்துவமும் அதற்கு இல்லை.
இவ்வாறு நியதிக்காக மட்டும் இணைய வேண்டும் என்பது இல்லறத்தாரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜோடி என்று இந்த மந்திரம் குறிப்பிடுகின்ற ஆண், பெண் குழந்தைகளை உருவாக்கலாம். ஆனால் இதனால் இறை யுலகத்தைப் பெற முடியாது.
இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெற வேண்டுமானால், ஆன்மீக உயர்வு பெற வேண்டுமானால் நெறியான வாழ்க்கை வாழ வேண்டும், தவம், பிரம்மச்சரியம், உண்மை போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
எனவே இல்லறத்தாரும் இறையுலகத்தைப் பெறலாம், ஆன்ம முன்னேற்றம் காணலாம், அதற்கு நெறியான வாழ்வு அவசியம் என்பதை இந்த மந்திரம் வலியுறுத்துகிறது.
16. தேஷாமஸெள விரஜோ ப்ரஹ்மலோகோ ந யேஷு ஜிஹ்மமன்ருதம் ந மாயா சேதி
தேஷாம்-அவர்களுக்கே; விரஜ-புனிதமான; அஸெள-அந்த; ப்ரஹ்மலோக-இறையுலகம்; யேஷு-யாரிடம்; ஜிஹ்மம்-சூது; அன்ருதம்-பொய்; மாயா-வஞ்சனை; ந-இல்லை; ச இதி-இவ்வாறு.
பொருள் : ஒழுக்கநெறியுடன் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான அந்த இறையுலகம் வாய்க்கிறது. சூதும் பொய்யும் வஞ்சனையும் நிறைந்தவர்களுக்கு அந்த உலகம் கிடையாது.
இவ்வாறு இந்தப் பகுதி நிறைவுறுகிறது.
இதி ப்ரச்னோபநிஷதி ப்ரதம ப்ரச்ன
இவ்வாறு பிரச்ன உபநிஷதத்தின் முதற்பகுதி நிறைவுறுகிறது.
2. பிராண சக்தியின் மகிமை

ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் முதலில் படைக்கப்பட்டன 1:4. அனைத்துப் பொருட்களாவும் ஆகியிருப்பது ஆகாசம். ஆகாசத்தைப் பொருட்களாக ஆக்கியதும், அவற்றை இயக்குவதும் பிராணன். புறத்தில் காணும் இயற்கையும், அதுபோலவே உடல், மன இயக்கங்களும் அனைத்தும் பிராண சக்தியின் மகிமையே, பிராண சக்தியின் மகிமை பல்வேறு விதமாக இங்கே கூறப்படுகிறது.
நாம் யாரைச் சார்ந்தவர்கள்?
1. அத ஹைனம் பார்க்கவோ வைதர்பி பப்ரச்ச
பகவன் கத்யேவ தேவா ப்ரஜாம் விதாரயந்தே? கதர ஏதத் ப்ரகாசயந்தே?
க புனரேஷாம் வரிஷ்ட்ட இதி

அத ஹ-அடுத்ததாக; வைதர்பி-விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த; பார்கவ-பார்க்கவன்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ப்ரஜாம்-ஒருவனை; கதி ஏவ-எத்தனை; தேவா-தேவர்கள்; விதாரயந்தே-தாங்குகின்றனர். கதரே-அவர்களில் யார்; ஏதத்-இதனை; ப்ரகாசயந்தே-இயக்குகின்றனர்; புன-மேலும்; ஏஷாம்-இவர்களில்; க-யார்; வரிஷ்ட்ட-முக்கியமானவர்; இதி-என்று.
பொருள் : அடுத்ததாக விதர்ப்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:  தெய்வ முனிவரே! ஒருவனை எத்தனை தேவர்கள் தாங்குகின்றனர்? அவர்களில் யார்யார் இவற்றை இயக்குகின்றனர்? இவர்களில் யார் முக்கியமானவர்?
மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் தனி மனிதர்கள் என்று தோன்றலாம். ஆனால் சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, நமது வாழ்க்கை எத்தனையோ புற, அக சக்திகளுடன் பிணைந்துள்ளது தெரியவரும். கண், காது போன்ற புலன்களாலும் மனத்தாலும் நாம் அனுபவங்களைப் பெறுகிறோம். இந்தப் புலன்கள் மட்டுமே நமக்கு அனுபவங்களைத் தந்துவிட முடியுமா? முடியாது. நமது பங்குடன் இயற்கையின் பங்கும் சேர்ந்தால் தான் நாம் எந்த அனுபவத்தையும் பெற முடியும்.
உதாரணமாக, கண்களை எடுத்துக் கொள்வோம். நாம் உண்கின்ற உணவிலிருந்து பெறப்படுகின்ற பிராண சக்தியால் கண்கள் பார்ப்பதற்கான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அதேவேளையில் சூரிய சக்தியாலோ மின்சாரத்தாலோ அங்கே ஒளியும் இருக்க வேண்டும். இரண்டும் சேரும்போது மட்டுமே நம்மால் பார்க்க முடியும். இவ்வாறே ஒவ்வொரு புலனும். அக சக்தியும் இணையும்போது மட்டுமே நமது அனுபவம் முழுமை பெறுகிறது.
காண்கின்ற புற உலகை இயக்குகின்ற தூல சக்திகளாயினும் சரி, காணாத அக உலகை இயக்குகின்ற சூட்சம சக்திகளாயினும் சரி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாகக் கண்டனர் உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும் பிரபஞ்சத்தில் ஒன்றையும் மனிதனில் ஒன்றையும் இயக்குவதாகக் கொள்ளப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அபிமானி தேவதை அர்யமான்(3:8 விளக்கவுரையும் காண்க)
இவ்வாறு எத்தனை தேவர்கள் அல்லது தேவதைகள் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறார்கள், யார் முக்கியமானவர் என்பது கேள்வி.
நமது வாழ்க்கைக்கு ஆதாரமானவர்கள் : கதை 2-4
பார்க்கவனின் கேள்விக்கான விடையை ஒரு கதைபோல் தருகிறார் பிப்பலாத முனிவர்.
2. தஸ்மை ஸ ஹோவாச ஆகாசோ ஹ வா ஏஷ தேவோ வாயுரக்னிராப ப்ருதிவீ வாங்மனச்சக்ஷú; ச்ரோத்ரம் ச
தே ப்ரகாச்யாபிவதந்தி வயமேதத் பாணமவஷ்ட்டப்ய விதாரயாம

தஸ்மை-அவரிடம்; ஸ-பிப்பலாதர்; உவாச ஹ-கூறினார்; ஏஷ-இந்த; தேவ-தேவர்; ஆகாச-ஆகாசம்; வாயு-காற்று; அக்னி-நெருப்பு; ஆப-தண்ணீர்; ப்ருதிவீ-பூமி; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-பார்வை; ச்ரோத்ரம்-கேட்கும் தன்மை; தே-அவை; ப்ரகாச்ய-இயக்கி; அபிவதந்தி-கூறின; வயம்-நாங்கள்; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாம-தாங்குகிறோம்.
பொருள் : பிப்பலாத முனிவர் பார்க்கவனிடம் கூறினார்: ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் தன்மை ஆகியவையே அந்த தேவர்கள். அவர்களே மனிதனை இயக்குகிறார்கள். ஒருமுறை இந்த தேவ சக்திகள், நாங்கள்தான் இந்த உடம்பை ஒருங்கிணைத்துத் தாங்குகிறோம் என்று கூறின.
மனித வாழ்விற்கு ஆதாரமான 9 தேவ சக்திகளை இங்கே பிப்பலாத முனிவர் குறிப்பிடுகிறார். ஆகாசம் அல்லது வெளி முதல் பூமி வரையுள்ள முதல் ஐந்து சக்திகளும் தூலமானவை. இவற்றால் நம் உடம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. பேச்சு, மனம் போன்ற நான்கும் நுண் சக்திகள். இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கையை இயக்குகின்றன என்கிறார் முனிவர்.
இந்த 9 சக்திகளும் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளன என்பதை விளக்குவதற்கு இரண்டு வார்த்தைகளை இந்த மந்திரத்தில் காண்கிறோம். ஒன்று, ஒருங்கிணைத்தல்(அவஷ்ட்டப்ய); மற்றது இயக்குதல் (விதாரயாம) நூலில் கோர்க்கப்பட்ட முத்துக்கள், நூல் இல்லாவிட்டால் எப்படி சிதறிப்போகுமோ அப்படி இந்தச் சக்திகள் இல்லாவிட்டால் நமது உடம்பும் சிதறிப்போகும். உண்மையில் இந்தச் சக்திகள்தான் நமது உடம்பை ஒருங்கிணைத்து வைத்திருக்கின்றன. இது இந்த தேவ சக்திகளின் முதற்பணி. இரண்டாவதாக, நமது உடம்பை இயக்குவதும் இந்த தேவ சக்திகளே.
பார்க்கவனின் கேள்விக்கான விடையின் முதற்படி இது. தாம் கூறியதை விளக்குவதற்காக இந்தக் கருத்தை ஒரு கதையாகத் தொடர்கிறார் பிப்பலாத முனிவர்.
3. தான் வரிஷ்ட்ட ப்ராண உவாச
மா மோஹமாபத்யத அஹமேவைதத் பஞ்சதாத்மானம் ப்ரவிபஜ்யைதத் பாணம்
அவஷ்ட்டப்ய விதாரயாமீதி தேச்ரத்ததானா பபூவு

தான்-அவற்றில்; வரிஷ்ட்ட-முக்கியமான; ப்ராண-பிராணன்; உவாச-கூறியது; மோஹம்-குழப்பத்தில்; மா ஆபத்யத-ஆழ்ந்து போகாதீர்கள்; அஹம் ஏவ-நானே; ஆத்மானம்-என்னை; பஞ்சதா-ஐந்தாக; ப்ரவிபஜ்ய-பகுத்துக் கொண்டு; ஏதத்-இந்த; பாணம்-உடம்பை; அவஷ்ட்டப்ய-ஒருங்கிணைத்து; விதாரயாமி-தாங்குகிறேன்; இதி-என்று; தே-அவை; அச்ரத்ததானா;பபூவு-நம்பவில்லை.
பொருள் : தேவ சக்திகள் கூறியதை கேட்ட முக்கியப் பிராணன் அவற்றிடம், குழம்பாதீர்கள். என்னை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, இந்த உடம்பை ஒருங்கிணைத்து இயக்குவது நானே, என்று கூறியது. ஆனால் பிராணனின் பேச்சை அந்த தேவ சக்திகள் நம்பவில்லை.
மின்சாரத்தால் விளக்குகள் எரிவதைக் காண்கிறோம்; விசிறிகள் சுழல்வதைக் காண்கிறோம்; இன்னும் பல இயக்கங்களைக் காண்கிறோம். ஆனால் மின்சாரத்தை நாம் காண்பதில்லை. அதுபோல் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ இயக்கங்களைக் காண்கிறோம். பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிரினங்கள் தோன்றுகின்றன, மறைகின்றன, தீ எரிகிறது, தண்ணீர் ஓடுகிறது, சூரியன் உதிக்கிறது. இவ்வாறு எத்தனையோ செயல்களைக் காண்கிறோம். இதற்குக் காரணமான சக்தியை நாம் காண்பதில்லை. அதுவே பிராண சக்தி. இந்தப் பிராண சக்தியே நம்முள் நமது உடம்பையும் மனத்தையும் இயக்குகின்ற பிராணனாகச் செயல்படுகிறது. பிராணனின் செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு ஐந்து விதமாகப் பிரிக்கப்படுகிறது.(இது 3:4-10-இல் விரிவாக விளக்கப்படுகிறது).
உடம்பு, மனம் ஆகியவற்றின் இயக்கங்களுக்குக் காரணமாக இருப்பது, இன்னும் சொல்லப் போனால், இயக்கங்கள் அனைத்திற்கும் வேண்டிய ஆற்றலை அளிப்பது பிராணன். எனவேதான், தானே அனைத்தையும் இயக்குவதாக இங்கே பிராணன் கூறுகிறது.
4. ஸோபிமானாதூர்த்வமுத்க்ரமத இவ தஸ்மினுத்க்ராமதி அதேதரே
ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே ஸர்வ ஏவ ப்ராதிஷ்ட்டந்தே
தத்யதா மக்ஷிகா மதுகர ராஜானமுத்க்ராமந்தம் ஸர்வ ஏவோத்க்ராமந்தே தஸ்மின்ச்ச ப்ரதிஷ்ட்டமானே
ஸர்வா ப்ராதிஷ்ட்டந்த ஏவம் வாங்மனச் சக்ஷúச்ரோத்ரம் ச தே ப்ரீதா ப்ராணம் ஸ்துன்வந்தி

ஸ-அது; அபிமானாத்-பெருமையுடன்; ஊர்த்வம்-மேலே; உத்க்ரமதே இவ-வெளியேறுவதுபோல்; தஸ்மின்-அது; உத்க்ரமதி அத-வெளியேறிய உடனே; இதரே-மற்ற; ஸர்வே ஏவ-அனைத்தும்; உத்க்ராமந்தே-வெளியேறின; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-நிலைபெற்றதும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-நிலைபெற்றன; தத் யதா-எப்படி; மதுகர ராஜானம்-அரச தேனீ; உத்க்ரமாந்தம்-வெளியேறியதும்; ஸர்வே ஏவ-வெளியேறுகின்றனவோ; தஸ்மின் ச-அது; ப்ரதிஷ்ட்டமானே-அமர்ந்ததும்; ஸர்வே ஏவ-அனைத்தும்; ப்ராதிஷ்ட்டந்தே-அமர்கின்றனவோ; ஏவம்-அதுபோல்; வாக்-பேச்சு; மன-மனம்; சக்ஷú-கண்; ச்ரோத்ரம் ச-காது; தே-அவை; ப்ரீதா-மகிழ்ச்சியுடன்; ப்ராணம்-பிராணனை; ஸ்துன்வந்தி-துதித்தன.
பொருள் : பிராணன் தன் பெருமையை விளக்குவதற்காக வெளியேறுவதுபோல் காட்டியது. அது வெளியேறியதும் மற்ற புலன்கள் அனைத்தும் செயலிழந்து விட்டன. அது நிலைபெற்றதும் அனைத்தும் செயல் படத் தொடங்கின. அரச தேனீ வெளியேறினால் மற்ற தேனீக்கள் அனைத்தும் எப்படி அதைத் தொடர்ந்து வெளியேறுகின்றனவோ, அது அமர்ந்தால் எப்படி அனைத்தும் அமர்கின்றனவோ அப்படி இது நிகழ்ந்தது. உடனே பேச்சு, மனம், கண், காது போன்ற மற்ற புலன்கள் மகிழ்ச்சியுடன் பிராணனைத் துதித்தன.
பல வடிவங்களில், பல நிறங்களில் பல்புகள் எரிகின்றன; மின்விசிறிகள் சுழல்கின்றன; குளிர்பதனப் பெட்டி குளிரச் செய்கிறது; மின் அடுப்பு வெப்பத்தைத் தருகிறது. ஆனால் இவை அனைத்தும் மின்சாரம் இருக்கும் வரைதான். மின்சாரம் விடைபெற்றால் இவை அனைத்தின் இயக்கங்களும் நின்றுவிடும். அதுபோலவே பிராண சக்தி இருக்கும் வரை மட்டுமே கண்களும், காதுகளும் மற்ற புலன்களும் அனைத்தும் வேலை செய்யும். பிராணன் விடைபெற்றால் அனைத்தின் இயக்கமும் நின்றுவிடும். மரணவேளையில் நிகழ்வது இதுவே. பிராணன் வெளியேறிய பின் உடம்பு கட்டைபோல் ஆகிவிடுகிறது. எனவே நான், நீ என்று போட்டியிட்ட புலன்கள், பிராணன் வெளியேறினால் தங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டன; அதன் மகிமையைத் துதிக்கலாயின.
பிராணனின் மகிமை : 5-13
புலன்கள் பிராணனைத் துதிப்பது போல், தொடரும் 9 மந்திரங்கள் பிராணனின் மகிமையைக் கூறுகின்றன.
5. ஏ÷ஷாக்னிஸ்தபத்யேஷ ஸூர்ய ஏஷ பர்ஜன்யோ மகவானேஷ வாயு
ஏஷ ப்ருதிவீ ரயிர்தேவ ஸதசச்சாம்ருதம் ச யத்

ஏஷ-இது; அக்னி-நெருப்பு; தபதி-எரிகிறது; ஸூர்ய-சூரியன்; பர்ஜன்ய-மேகம்; மகவான்-இந்திரன்; வாயு-காற்று; ப்ருதிவீ-பூமி; ரயி-ஜடப்பொருள்; தேவ:- தேவ சக்தி; ஸத்-தூலப் பொருட்கள்; அஸத்-நுண் பொருட்கள்; யத் ச-எது; அம்ருதம்-அமுதம்.
பொருள் : பிராணனே நெருப்பாக எரிகிறது. சூரியன், மேகம், இந்திரன், வாயு, காற்று, பூமி, ஜடப்பொருள் ஆகிய அனைத்துமாக விளங்குவது பிராணனே. அந்த தேவ சக்தியே தூலப் பொருட்களாகவும் நுண் பொருட்களாகவும் அமுதமாகவும் விளங்குகிறது.
சூரியன், மேகம் என்று இங்கே கூறப்பட்டுள்ள அனைத்தும் இயற்கை சக்திகளின் வடிவம். அந்த சக்திகள் இயக்குவதற்குக் காரணமான பிராணன் விளங்குகிறது. அதையே இந்த மந்திரம் விளக்குகிறது. அமுதம் என்றால் தேவர்கள் நிலைபெறக் காரணமானது (தேவானாம் ஸ்திதி காரணம்) என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். தேவர்கள் என்பவர்கள் இயற்கை சக்திகள். அவை இயங்க வேண்டுமானால் பிராணன் வேண்டும். அதனால்தான் இங்கே பிராணன் அமுதம் என்று கூறப்பட்டுள்ளது.
6. அரா இவ ராநாபௌ ப்ராணே ஸர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
ரிசோ யஜூம்ஷி ஸாமானி யஜ்ஞ க்ஷத்ரம் ப்ரஹ்ம ச

ரத நாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா இவ-ஆரக்கால்கள் கூடுவதுபோல்; ப்ராணே-பிராணனில்; ஸர்வம்-அனைத்தும்; ப்ரதிஷ்ட்டிதம்-நிலைபெற்றுள்ளன; ரிச-ரிக் வேதம்; யஜூம்ஷி-யஜுர் வேதம்; ஸாமானி-சாம வேதம்; யஜ்ஞ-வேள்வி; க்ஷத்ரம்-வீரம்; ப்ரஹ்ம ச-அறிவு.
பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், வேள்வி, வீரம், அறிவு என்று அனைத்தும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.
வேதங்களைப் படிக்க வேண்டுமானாலும் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் பிராணன் வேண்டும். பிராண சக்தி இல்லாமல் வேதங்களை ஓத முடியாது,
வேள்வி என்பது இறைவனுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான ஒரு வழி, அதாவது இறைநெறி. இறைநெறியில் செல்ல வேண்டுமானால் அதற்கும் பிராணன் வேண்டும். வீரம் உடம்பின் ஆற்றல், அறிவு மனத்தின் ஆற்றல். உடம்பு, மனம் இரண்டையும் இயக்குவது பிராணன். எனவே வீரமும் அறிவும் பிராணனில் நிலைபெற்றுள்ளன.

7. ப்ரஜாபதிச்சரஸி கர்ப்பே த்வமேவ ப்ரதிஜாயஸே
துப்யம் ப்ராண ப்ரஜாஸ்த்விமா பலிம் ஹரந்தி ய ப்ராணை ப்ரதிதிஷ்ட்டஸி

கர்ப்பே-கருவில்; ப்ரஜாபதி-உயிராக; சரஸி-இயங்குவது; த்வம் ஏவ-நீயே; ப்ரதிஜாயஸே-பெற்றோரின் பிரதிபிம்பமாக பிறப்பது; ப்ராண-பிராணனே; இமா-இந்த; ப்ரஜா; து-உயிரினங்கள்; பலிம்-ஆஹுதிகளை; துப்யம்-உனக்கு; ஹரந்தி-கொண்டுவருகின்றன; ய-யார்; ப்ராணை-புலன்களுடன்; ப்ரதிதிஷ்ட்டஸி-நிலை பெற்றுள்ளாய்.
பொருள் : பிராணனே! கருவில் உயிராக இயங்குவது நீயே. பெற்றோரின் பிரதிபிம்பமாகப் பிள்ளை வடிவில் பிறப்பதும் நீயே. உயிரினங்கள்(புலன்களின் மூலம்) உனக்கு ஆஹுதிகளைக் கொண்டு வருகின்றன. புலன்களில் நிலைபெற்றுள்ளதும் நீயே.
பிராண சக்தியே அனைத்திற்கும் ஆதாரம் என்பது மீண்டும் இங்கே வலியுறுத்தப்படுகிறது. ஆணில் விந்துவாகவும் பெண்ணில் கருவாகவும் இருப்பது பிராணனே. பெற்றோருடைய சாயலில் பிள்ளையாகப் பிறப்பதும் பிராணனே. உடம்பில் உயிராக இருந்து உலகை அனுபவிப்பதும் பிராணனே. பிராணன் உலகை அனுபவிப்பதற்குப் புலன்கள் அனுபவங்களைக் கொண்டு வருகின்றன. அந்தப் புலன்களை இயக்குவதும் பிராணனே.
8. தேவானாமஸி வஹ்னிதம பித்ரூணாம் ப்ரதமா ஸ்வதா
ரிஷீணாம் சரிதம் ஸத்யமதர்வாங்கிரஸாமஸி

தேவானாம்-தேவர்களுக்கு; வஹ்னிதம-மிகச் சிறந்த தூதன்; அஸி-இருக்கிறாய்; பித்ரூணாம்-இறந்த முன்னோர்களுக்கு; ப்ரதமா-முதல்; ஸ்வதா-உணவாக; அதர்வாங்கிரஸாம் ரிஷீணாம்-அதர்வாங்கிரஸ முனிவர்களில்; ஸத்யம்-உண்மையான; சரிதம்-முயற்சியாக; அஸி-இருக்கிறாய்.
பொருள் : பிராணனே! தேவர்களுக்கு மிகச்சிறந்த தூதனாகவும், இறந்த முன்னோர்களுக்கு முதல் உணவாகவும், அதர்வாங்கிரஸ முனிவர்களில் உண்மையான முயற்சியாகவும் நீயே இருக்கிறாய்.
யாக அக்கினியில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களை உரிய தேவர்களிடம் சேர்ப்பிக்கின்ற புரோகிதனாக அக்கினி தேவன் கருதப்படுகிறான் (அக்னிம் ஈளே புரோஹிதம்-ரிக் வேதம்) அக்கினிக்கு ஆற்றலை அளிப்பது பிராணன் (5). எனவே  ஆஹுதிப் பொருட்களைக் கொண்டு செல்கின்ற தூதனாக பிராணன் இங்கே கூறப்படுகிறது.
இறந்த முன்னோர்களை உத்தேசித்துப் செய்யப்படுகின்ற நாந்தீமுகம் என்ற கிரியை இங்கே கூறப்படுகிறது. இந்தக் கிரியை தேவர்களுக்குச் செய்யப்படுகின்ற கிரியைகளுக்கும் முன்பாகச் செய்யப்படுகிறது. தேவர்களுக்கு ஆஹுதி அளிக்கும்போது ஸ்வாஹா என்ற மந்திரம் பயன்படுவது போல், இறந்த முன்னோர்களுக்கு ஸ்வதா என்ற மந்திரம் பயன்படுகிறது. ஸ்வதா மந்திரத்தை உச்சரித்துச் செய்யப்படுகின்ற முதல் கிரியையான நாந்தீமுகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆஹுதிப் பொருட்களாக இப்பது பிராணன்; அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் பிராணனே.
அங்கிரஸ பரம்பரையில் வந்தவர்கள் அதர்வாங்கிரஸ முனிவர்கள். இறைநெறியை நாடுபவர்களுக்கு ஓர் உதாரணமாக இவர்கள் இங்கே குறிப்பிடப்படுகிறார்கள். இறை நெறியை நாடுபவர்களிடம் ஆற்றலாகத் திகழ்வது பிராணனே.
9. இந்த்ரஸ்த்வம் ப்ராண தேஜஸா ருத்ரோஸி பரிரஃக்ஷிதா
த்வமந்தரி÷க்ஷ சரஸி ஸூர்யஸ்த்வம் ஜ்யோதிஷாம் பதி

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; இந்த்ர-இந்திரன்; தேஜஸா-வலிமையால்; ருத்ர; அஸி-ருத்திரனாக இருக்கிறாய்; பரிரக்ஷிதா-எல்லா திசைகளிலும் காப்பவன்; அந்தரி÷க்ஷ-ஆகாசத்தில்; ஸூர்ய-சூரியன்; சரஸி-சஞ்சரிக்கிறாய்; ஜ்யோதிஷாம்-ஒளிகளின்; பதி-தலைவன்.
பொருள் : பிராணனே! நீயே இந்திரன். வலிமையால் நீ ருத்திரனாக இருக்கிறாய். எல்லா திசைகளிலும் காப்பவனாக இருப்பவன் நீயே. ஆகாசத்தில் சூரியனாக நீ சஞ்சரிக்கிறாய். ஒளிகளின் தலைவனும் நீயே.
பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற முத்தொழில்களைப்பற்றி இங்கே கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகியவையே அந்த மூன்று தொழில்கள். இந்த மந்திரத்தில் இந்திரன் என்று கூறப்பட்டது பிரம்ம தேவனைக் குறிக்கிறது. படைப்புத் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவாகவும், காக்கும் கடவுளான விஷ்ணுவாகவும், அனைத்தையும் ஒடுக்குகின்ற கடவுளான ருத்திரனாகவும் இருப்பது பிராணனே. அதாவது பிராண சக்தியாலேயே அவர்கள் இந்தத் தொழிலைச் செய்கின்றனர்.
உலகின் இயக்கத்திற்கான பிராண சக்தியை அளிப்பது சூரியன். அந்தச் சூரியன் முதலான ஒளிப் பொருட்கள் அனைத்திற்கும் தலைவனாக, அதாவது அவற்றிற்கு ஆற்றலை அளிப்பவனாக இருப்பது பிராணனே.

10. யதா த்வமபிவர்ஷஸ்யதேமா ப்ராண தே ப்ரஜா
ஆனந்தரூபாஸ்திஷ்ட்டந்தி காமாயான்னம் பவிஷ்யதீதி

ப்ராண-பிராணனே; யதா-எப்போது; த்வம்-நீ அபிவர்ஷஸி-மழையாகப் பொழிகிறாயோ; அத-பிறகு; இமா-இந்த; தே-உனது; ப்ரஜா-உயிரினங்கள்; ஆனந்தரூபா-மகிழ்ச்சியுடன்; திஷ்ட்டந்தி-இருக்கின்றன; காமாய-வேண்டிய அளவு; அன்னம்-உணவு; பவிஷ்யதி-கிடைக்கும்; இதி-என்று.
பொருள் : பிராணனே! நீ மழையாகப் பொழியும்போது, இனி வேண்டிய அளவு உணவு கிடைக்கும் என்று உயிரினங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன.
வாழ்க்கைக்கு ஆதாரம் உணவு. உணவுக்கு ஆதாரம் மழை. அந்த மழையாகப் பொழிந்து உயிரினங்களின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது பிராணன்.
11. வ்ராத்யஸ்த்வம் ப்ராணைகர்ஷிரத்தா விச்வஸ்ய ஸத்பதி
வயமாத்யஸ்ய தாதார பிதா த்வம் மாதரிச்வன

ப்ராண-பிராணனே; த்வம்-நீ; வ்ராத்ய-தூய்மைப் படுத்தப்படாதவன்; ஏகர்ஷி-ஏகர்ஷி யாகமாக; அத்தா-உண்பவன்; விச்வஸ்ய-உலகின்; ஸத்பதி-அனைத்திற்கும் தலைவன்; வயம்-நாங்கள்; ஆத்யஸ்ய-உண்ணும் உனக்கு; தாதார-தருபவர்கள்; மாதரிச்வன-காற்றின்; பிதா-தந்தை; த்வம்-நீ.
பொருள் : பிராணனே! நீ தூய்மைப் படுத்தப்படாதவன். ஏகர்ஷி யாகமாக இருந்து, ஆஹுதிப் பொருட்களை உண்பவன் நீ. உலகிலுள்ள அனைத்திற்கும் தலைவன் நீ. ஆஹுதிப் பொருட்களை உண்ணும் உனக்கு அவற்றைத் தருபவர்கள் நாங்கள். காற்றின் தந்தையாக இருப்பதும் நீயே.
தாயின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை சில சடங்குகள் மூலமும் மந்திரங்களின் மூலமும் தூய்மைப்படுத்தபட வேண்டும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன. பிராணன் இறைவனிலிருந்து முதலில் தோன்றிய ஒன்று (1:4). தனக்கு முன்பு தோன்றிய யாரும் இல்லாததால், அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப்படுத்த யாரும் இல்லை. அதனால் பிராணன் தூய்மைப் படுத்தப்படவில்லை. பிராணன் இறைவனிலிருந்து தோன்றியது. எனவே அது இயல்பாகவே தூய்மையானது, அதனைச் சடங்குகள் மூலம் தூய்மைப் படுத்தத் தேவையில்லை என்பதுதான் இங்கே வஞ்சப் புகழ்ச்சியாக தூய்மைப் படுத்தப்படாதவன் என்று கூறப்பட்டுள்ளது.
ஏகர்ஷி யாகம் என்பது அதர்வண வேதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்கின்ற ஒன்றாகும். அது மிகவும் பிரபலமாக இருந்தது என்பதால் இங்கே அது குறப்பிடப்பட்டுள்ளது. படைப்புக் கிரமத்தில் காற்று ஆகாசத்திலிருந்து தோன்றியது. இங்கே பிராணன் ஆகாசத்துடன் ஒன்றுபடுத்தப் பட்டு, காற்றின் தந்தையாகக் கூறப்பட்டுள்ளது.
12. யா தே தனூர்வாசி ப்ரதிஷ்ட்டிதா யா ச்ரோத்ரே யா ச சக்ஷஷி
யா ச மனஸி ஸந்ததா சிவாம் தாம் குரு மோத்க்ரமீ

யா-எந்த; தே-உனது; தனூ-அம்சம்; வாசி-பேச்சில்; ச்ரோத்ரே-கேட்பதில்; சக்ஷஷி-பார்ப்பதில்; ப்ரதிஷ்ட்டிதா-உள்ளதோ; மனஸி-மனத்தில்; ஸந்ததா-வியாபித்துள்ளதோ; தாம்-அவற்றை; சிவாம்-அமைதியுடன்; குரு-இருக்கச் செய்; உத்க்ரமீ; மா-கிளம்பிவிடாதே.
பொருள் : பிராணனே! பேசுவதிலும் கேட்பதிலும் பார்ப்பதிலும் உனது எந்த அம்சங்கள் உள்ளனவோ, மனத்தில் உனது எந்த அம்சம் வியாபித்துள்ளதோ அவற்றை அமைதியுடன் இருக்கச் செய், கிளம்பி விடாதே.
நமது செயல்கள் அனைத்திற்கும்-அவை உடம்பின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி, மனத்தின் செயல்பாடுகளாக இருந்தாலும் சரி-தேவையான ஆற்றலை அளிப்பது பிராணன். ஆனால் ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணனே செல்ல வேண்டும். உதாரணமாக, பார்ப்பதைவிட பேசுவதற்கு அதிகமான பிராண சக்தி வேண்டும். எனவே பேச்சிற்கு அதிகப் பிராணன் செல்ல வேண்டும். சில வேளைகளில் உங்கள் உடலில் பிராணன் ஒரு பகுதியில் அதிகமாகவோ குறைவாகவோ செல்கிறது. அப்போது சமநிலை குலைகிறது. சமநிலை குலையும்போது. நோய் என்று நாம் அழைக்கின்ற ஒன்று உண்டாகிறது. என்கிறார் சுவாமி விவேகானந்தர். அத்தகைய ஒரு நிலை வராமல் இருக்கட்டும் என்று இந்த மந்திரம் பிரார்த்திக்கிறது.
பிராணன் புலன்களுக்குச் செல்ல வேண்டும், அமைதியாகச் செல்ல வேண்டும். அதாவது ஒவ்வொரு புலனுக்கும் அதற்குத் தேவையான அளவு பிராணன் செல்ல வேண்டும். பிராணன் கிளம்பிவிட்டால், அதாவது செல்லாமல் இருந்துவிட்டால் புலன்கள் எதுவும் இயங்க முடியாது (4). அப்படியும் நிகழக் கூடாது என்று பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.
13. ப்ராணஸ்யேதம் வசே ஸர்வம் த்ரிதிவே யத் ப்ரதிஷ்ட்டிதம்
மாதேவ புத்ரான் ரக்ஷஸ்வ ஸ்ரீச்ச ப்ரஜ்ஞாம் ச விதேஹி ந இதி.

த்ரிதிவே-மூன்று உலகங்களிலும்; யத்-எவை; ப்ரதிஷ்ட்டிதம்-உள்ளனவோ; இதம்-இந்த; ஸர்வம்-அனைத்தும்; ப்ரமணஸ்ய-பிராணனின்; வசே-கட்டுப்பாட்டில்; மாதா-தாய்; புத்ரான்-பிள்ளைகள்; இவ-போல்; ரக்ஷஸ்வ-காப்பாய்; ஸ்ரீ:ச-செல்வமும்; ப்ரஜ்ஞாம் ச-தெளிவான புத்தியும்; ந-எங்களுக்கு; விதேஹி-தருவாய்; இதி-என்று.
பொருள் : மூன்று உலகங்களிலும் எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் பிராணனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பிராணனே! ஒரு தாய் பிள்ளைகளைக் காப்பதுபோல் எங்களைக் காப்பாய். செல்வமும் தெளிவான புத்தியும் எங்களுக்குத் தருவாய்.
செல்வமும் இருந்தாலும் அதைக் காக்கவும், உரிய வழியில் செலவிடவும் தெளிந்த புத்தி வேண்டும். தெளிவான புத்தி இல்லாதவனின் செல்வம் அவனை அழிவுப்பாதையிலேயே செலுத்தும். எனவே செல்வத்தையும். கூடவே தெளிந்த புத்தியையும் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.
இதி ப்ரச்னோபநிஷதி த்விதீய: ப்ரச்ன:
3. பிராண சக்தியின் செயல்கள்

சென்ற அத்தியாயத்தில் பிராண சக்தியின் மகிமைபற்றி கண்டோம். இங்கே அதன் செயல் பாடுகளைப்பற்றி காண்கிறோம்.
பிராணன் எவ்வாறு செயல்படுகிறது? 1-2
1. அத ஹைனம் கௌஸல்யச்சாச்வலாயன பப்ரச்ச
பகவன் குத ஏஷ ப்ராணோ ஜாயதே கதமாயாத்யஸ்மின் சரீரே?
ஆத்மானம் வா ப்ரவிபஜ்ய கதம் ப்ராதிஷ்ட்டதே? கேனோத்க்ரமதே?
கதம் பாஹ்யமபிதத்தே? கதமத்யாத்மமிதி

அத ச ஹ-பிறகு; ஆச்வலாயன-அச்வலரின் மகனான; கௌஸல்ய-கௌசல்யன்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ஏஷ-இந்த; ப்ராண-பிராணன்; குத-எங்கிருந்து; ஜாயதே-பிறந்தது; கதம்-எப்படி; அஸ்மின்-இந்த; சரீரே-உடம்பில்; ஆயாதி-வருகிறது; ஆத்மானம்-தன்னை; ப்ரவிபஜ்ய-பகுத்துக்கொண்டு; கதம் வா-எப்படி; ப்ராதிஷ்ட்டதே-நிலைபெறுகிறது; கேன-எதனால்; உத்க்ரமதே-வெளியேறுகிறது. கதம்-எப்படி; பாஹ்யம்-புறவுலகை; அபிதத்தே-தாங்குகிறது; கதம்-எப்படி; அதயாத்மம்-அகவுலகை; இதி-என்று.
பொருள் : பிறகு அச்வலரின் மகனான கௌசல்யன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:
தெய்வத்திற்கு நிகரானவரே! இந்தப் பிராணன் எங்கிருந்து பிறந்தது? எப்படி இந்த உடம்பில் வருகிறது? தன்னைப் பகுத்துக்கொண்டு எப்படி உடம்பில் நிலைபெறுகிறது? எதனால் வெளியேறுகிறது? எப்படி புறவுலகைத் தாங்குகிறது? எப்படி அகவுலகைத் தாங்குகிறது?

2. தஸ்மை ஸ ஹோவாசாதிப்ரச்னான் ப்ருச்சஸி
ப்ரஹ்மிஷ்ட்டோஸீதி தஸ்மாத் தேஹம் ப்ரவீமி

தஸ்மை-அவரிடம்; ஸ-அவர்; உவாச ஹ-கூறினார்; அதிப்ரச்னான்-கடினமான கேள்விகளை; ப்ருச்சஸி-கேட்கிறாய்; ப்ரஹ்மிஷ்ட்ட-இறைநாட்டம் உடையவனாக; அஸி-இருக்கிறாய்; இதி-என்று; தஸ்மாத்-அதனால்; தே-உனக்கு; அஹம்-நான்; ப்ரவீமி-சொல்கிறேன்.
பொருள் : கடினமான கேள்விகளைக் கேட்கிறாய். ஆனாலும் நீ இறைநாட்டம் உடையவனாக இருப்பதால் நான் உனக்குப் பதில் சொல்கிறேன் என்று கவுசல்யனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்.
பிராணன் எங்கிருந்து தோன்றுகிறது?
3. ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே
யதைஷா புருஷே சாயா ஏதஸ்மின் ஏததாததம்
மனோக்ருதேனாயாதி அஸ்மின் சரீரே

ஆத்மன-ஆன்மாவிலிருந்து; ஏஷ-இந்த; ப்ராண-பிராணன்; ஜாயதே-தோன்றுகிறது; யதா-எப்படி; ஏஷா-இந்த: புருஷே-மனிதனில்; சாயா-நிழல்; ஏதஸ்மின்-இதில்; ஏதத்-இது; ஆததம்-பரவியுள்ளது; மனோக்ருதேன-மனத்தின் செயல்பாடுகளால்; அஸ்மின்-இந்த; சரீரே-உடம்பில்; ஆயாதி-வருகிறது.
பொருள் : பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது. மனிதனும் அவனது நிழலும்போல் ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனத்தின் செயல்பாடுகளால் அது இந்த உடம்பில் வருகிறது.
பிராணனின் இறைவனிலிருந்து தோன்றியதாக 1:4-இல் கண்டோம். எங்கும் நிறைந்த இறைவனே நம்மில் ஆன்மாவாக இருக்கிறார். எனவே பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றியது. ஆன்மாவிற்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பு என்ன? மனிதனும் அவனது நிழலும்போல் என்கிறது மந்திரம், நிழல், மனிதனிலிருந்தே உண்டாகிறது. நிழலுக்கென்று ஒரு தனி இருப்பு கிடையாது. அதேவேளையில் மனிதனிலிருந்து நிழலைப் பிரிக்கவும் முடியாது. அவ்வாறு பிராணனும் ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதது. பிராணன் எப்படி இந்த உடம்பில் வருகிறது? ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாததாக இருக்கின்ற பிராணனுக்கென்று ஒரு தனி வரவு கிடையாது. உடம்பில் ஆன்மா இருக்கிறது என்றால் பிராணனும் இருக்கிறது. எனவே இந்தக் கேள்வியின் பொருள் என்னவென்றால், பிராணன் எவ்வாறு இந்த உடம்பை உருவாக்குகிறது என்பதாகும்.
பிராணன் எவ்வாறு இந்த உடம்பை உருவாக்குகிறது?
மனத்தின் செயல்பாடுகளால், அதாவது, மனத்தின் ஆசைகள், எதிர்பார்ப்புகள், அனுபவங்கள் ஆகியவற்றின் தொகுதிகளுக்கு ஏற்ப பிராணன் உடம்பை உருவாக்கித் தருகிறது. அதுபோலவே, அந்த உடம்பைச் செயல்படுத்தவும் செய்கிறது. சுவாமி விவேகானந்தரின் விளக்கம் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனத்தில் ஒரு பதிவை உண்டாக்குகிறது. அதை சம்ஸ்கிருதத்தில் சம்ஸ்காரம் என்கிறார்கள்.... மரணத்திற்குப் பின், ஒரு மனிதன் போகும் இடத்திற்கு வழிகாட்டுவது, அவனது சம்ஸ்காரங்களின் கூட்டுப்பலனே. ஒருவன் இறக்கிறான். உடல் வீழ்ந்து பஞ்சபூதங்களுடன் கலந்துவிடுகிறது. அப்போது சம்ஸ்காரங்கள் அழிவதில்லை. அவை மனத்துடன் சேர்ந்திருக்கின்றன. மனம் மிக நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருப்பதால், அது அவ்வளவு விரைவில் அழிவதில்லை. ஏனென்றால் ஒரு பொருள் எவ்வளவு நுட்பமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நிலைத்ததாகவும் இருக்கிறது...
இந்த வேளையில் எனக்குத் தோன்றும் சிறந்த உதாரணம் சுழல்காற்றைப் பற்றியதுதான். பல திசைகளிலிருந்து வரும் பல காற்றோட்டங்கள் ஓரிடத்தில் சந்தித்து, ஒன்றுசேர்ந்து, சுழல ஆரம்பிக்கின்றன. அவ்வாறு சுழலும்போது காகிதம், வைக்கோல் போன்றவற்றைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு புழுதிப்புயலாக மாறுகின்றன. வேறோரிடத்தில் அவற்றை உதறிவிட்டு, வேறு பொருட்களை இழுத்துக் கொள்கின்றன. இவ்வாறே, தங்கள் வழியில் இருக்கும் பொருட்களைக்கொண்டு, பலவிதமான புழுதிப் படலங்களை உருவாக்கியவாறே செல்கின்றன.
அதைப் போலவே,சம்ஸ்கிருதத்தில் பிராணன் என்று சொல்லப்படும் சக்திகள் ஒன்றுசேர்ந்து ஜடப்பொருளிலிருந்து உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. பிறகு உடல் விழும்வரை சுழன்று செல்கின்றன. விழுந்ததும், மறுபடியும் வேறு பொருட்களிலிருந்து வேறு உடலையும் மனத்தையும் உருவாக்குகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் பயணம் செய்ய முடியாது. எனவே உடல் வீழ்ந்தவுடன் மனமாகிய பொருள் எஞ்சி நிற்கிறது. பிராணன் சம்ஸ்கார வடிவில் மனத்தின்மீது செயல்படுகிறது. பிறகு பிராணன் வேறோரிடத்திற்குப் போய் புதிய பொருட்களிலிருந்து புதிய உடலை உருவாக்கிக்கொண்டு மறுபடியும் இதேபோல் செயல்படுகிறது. இப்படியே, தன்னுடைய சக்தி முழுவதும் செலவழியும்வரை, இடத்திற்கு இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதன்பிறகுதான் அது கீழே விழுகிறது. அதன் செயலும் முடிகிறது.
பிராணனின் செயல்பாடுகள் (4-10)
4. யதா ஸம்ராடேவ அதிக்ருதான் வினியுங்க்தே
ஏதான் க்ராமானேதான் க்ராமான் அதிதிஷ்ட்டஸ்வேதி
ஏவமேவைஷ ப்ராண இதரான் ப்ராணன் ப்ருதக்ப்ருதகேவ ஸன்னிதத்தே

யதா-எப்படி; ஸம்ராட் ஏவ-மன்னனே; அதிக்ருதான்-அலுவலர்களை; வினியுங்க்தே-நியமிக்கிறானோ; ஏதான்-இந்த; க்ராமான்-கிராமங்களை; அதிதிஷ்ட்டஸ்வ-ஆளுங்கள்; இதி ஏவம்-என்று கூறுவதுபோல்; ஏஷ; ஏவ-இந்தப் பிராணன்; இதரான்-மற்ற; ப்ராணான்-பிராணன்களை; ப்ருதக் ப்ருதக் ஏவ-தனித்தனியாக; ஸன்னிதத்தே-நியமிக்கிறது.
பொருள் : எப்படி ஒரு மன்னன் அலுவலர்களை நியமித்து, இந்த இந்தக் கிராமங்களை ஆளுங்கள் என்று கூறுகிறானோ, அப்படி பிராணன் மற்றப் பிராணன்களைத் தனித்தனியாக நியமிக்கிறது.
இறைவனிலிருந்து முதலில் வெளிப்பட்ட, எங்கும் நிறைந்த, அனைத்தையும் இயக்குகின்ற சக்தியே பிராணன். இது நம்மிலும் அனைத்து செயல்பாடுகளையும் நிகழ்த்துகிறது. நம்மில் அனைத்தையும் செய்கின்ற நிலையில் அது முக்கியப் பிராணன் என்று பெயர் பெறுகிறது. வெவ்வேறு செயல்களைச் செய்கின்ற நிலையில், அது வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. முக்கியப் பிராணன் மன்னனுக்கும் மற்றப் பிராணங்கள் மன்னன் நியமிக்கின்ற அலுவலர்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டுள்ளது. தொடரும் மந்திரம் மற்ற பிராணன்களைப் பற்றி கூறுகிறது.
அபானன், சமானன்
5. பாயூபஸ்தே பானம் சக்ஷú ச்ரோத்ரே முகநாஸிகாப்யாம்
ப்ராண ஸ்வயம் ப்ராதிஷ்ட்டதே மத்யே து ஸமான
ஏஷ ஹ்யேதத்துதமன்னம் ஸமம் நயதி தஸ்மாதேதா
ஸப்தார்ச்சி÷ஷா பவந்தி

பாயு உபஸ்தே-கழிவுகளை வெளியேற்றுவதில்; அபானம்-அபானன்; சக்ஷú; ச்ரோத்ரே-கண்களிலும் காதுகளிலும்; முக நாஸிகாப்யாம்-வாயிலும் மூக்கிலும் ப்ராண-பிராணன்; ஸ்வயம்-தானே; ப்ராதிஷ்ட்டதே-நிலைபெறுகிறது; மத்யே து-நடுவில்; ஸமான-சமானன்; ஏஷ:ஹி-இதுவே; ஏதத்-இந்த; ஹுதம்-அர்ப்பிக்கப்பட்ட; அன்னம்-உணவை; ஸமம்-சமமாக; நயதி-கொண்டு செல்கிறது; தஸ்மாத்-அதிலிருந்து; ஏதா-இந்த; ஸப்த அர்ச்சிஷ-ஏழு சுவாலைகள்; பவந்தி-உண்டாகின்றன.
பொருள் : அபானன் கழிவுகளை வெளியேற்றுகிறது. கண், காது, வாய், மூக்கு, ஆகிய புலன்களில் பிராணன் தானே நிலைபெறுகிறது. உடம்பின் நடுப்பகுதியில் சமானன் செயல்படுகிறது; அர்ப்பிக்கப்பட்ட உணவை அதுவே மற்ற இடங்களுக்குச் சமமாகக் கொண்டு செல்கிறது. பிராணனிலிருந்து ஏழு சுவாலைகள் உண்டாகின்றன.
பிராணன் தன்னை ஐந்தாகப் பகுத்துக்கொண்டு செயல்படுவதாக ஏற்கனவே(2:4) கண்டோம். இங்கே அதன் செயல்பாடுகள் கூறப்படுகின்றன. முக்கியச் செயல்பாடுகளான பார்த்தல், கேட்டல், பேசுதல், மூச்சு விடுதல் போன்ற முக்கிய வேலைகளைப் பிராணன், முக்கியப் பிராணன் என்ற நிலையில், தானே செய்கிறது. அபானன் என்ற நிலையில் கழிவு உறுப்புகளையும் இனப் பெறுக்க உறுப்புகளையும் இயக்குகிறது.
சமானன் வயிற்றில் செயல்படுகிறது. நாம் உண்ட பொருட்களைச் சம அளவில் உடம்பின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்ற ஆற்றல் இதுவே. சம அளவில் என்றால், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான அளவு உணவை அளிக்கிறது என்று பொருள்.
அர்ப்பிக்கப்பட்ட (ஹுதம்) என்ற வார்த்தை கருத்தில் கொள்ளத்தக்கது. உண்பதை ஒரு வேள்வியாகக் காண்கிறது இந்து மதம். உணவைச் செரிப்பதற்கான அக்கினி வயிற்றில் உள்ளது. இந்த அக்கினியில் உணவு என்ற ஆஹுதிப் பொருள் அர்ப்பிக்கப்படுகிறது. உண்பதை இவ்வாறு ஒரு வேள்வியாகச் செய்யுமாறு இந்து மதம் வற்புறுத்துகிறது.
2 கண்கள், 2 காதுகள், 2 நாசித் துவாரங்கள், வாய் ஆகியவை 7 சுவாலைகள். வயிற்றில் உள்ள அக்கினியிலிருந்து எழும்புகின்ற சுவாலைகள் இவை. இந்த உறுப்புகள் ஏழும் தாங்கள் இயங்குவதற்கான ஆற்றலை வயிற்றிலுள்ள அக்கினியிலிருந்து பெறுகின்றன என்று பொருள். உணவு என்ற ஆஹுதிப் பொருளை அர்ப்பிக்கா விட்டால் உடம்பின் உறுப்புகள் செயல்பட முடியாது என்பது இங்கே உணர்த்தப்படுகிறது.
வியானன்
6. ஹ்ருதி ஹ்யேஷ ஆத்மா
அத்ரைதத் ஏகசதம் நாடீனாம் தாஸாம் சதம் சதமேகைகஸ்யாம்
த்வாஸப்ததிர் த்வாஸப்ததி ப்ரதிசாகா நாடீ
ஸஹஸ்ராணி பவந்த்யாஸு வ்யானச்சரதி

ஏஷ-இந்த; ஆத்மா-ஆன்மா; ஹ்ருதி ஹி-இதயத்தில்; ஆத்ர-இங்கே; ஏதத்-இந்த; ஏகசதம்-நூற்றொன்று; நாடீனாம்-நாடிகள்; தாஸாம்-அவற்றுள்; ஏகைகஸ்யாம்-ஒவ்வொன்றிலும்; சதம் சதம்-நூறு; ப்ரதிசாகா நாடீஸஹஸ்ராணி-ஆயிரம் கிளை நாடிகளில்; த்வாஸப்ததி: த்வாஸப்ததி-எழுபத்திரண்டு; பவந்தி-உள்ளன; ஆஸு-இவற்றில்; வ்யான-வியானன்; சரதி-சஞ்சரிக்கிறது.
பொருள் : ஆன்மா இதயத்தில் உள்ளது. இதயத்திலிருந்து 101 நாடிகள் புறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் 100 கிளை நாடிகள் உள்ளன. ஒவ்வொரு கிளை நாடிக்கும் 72,000 கிளை நாடிகள் உள்ளன. இந்த நாடிகள் அனைத்தின் வழியாகவும் வியானன் சஞ்சரிக்கிறது.
இதயம் என்பது பிராணனின் இருப்பிடம். உணர்ச்சிகள் செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை மூளை அனைத்துச் செயல்களின் மையமாக இருந்தாலும் நமது சாஸ்திரங்கள் இதயத்தையே மையமாகக் கொள்கின்றன. நான் என்று சொல்லும்போதும் சரி, ஆழ்ந்த மனக்கவலை, அளவற்ற சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போதும் சரி, இதயத்தில் கைவைத்தே நாம் பேசுவது இங்கு நினைவுகூரத் தக்கது. இந்த இதயம் நாம் அறிந்த பவுதீக இதயம் அல்ல. இது உணர்ச்சி இதயம்.
இந்த இதயத்திலிருந்து உடம்பு முழுவதுமாக ஆயிரக் கணக்கான நாடிகள் பரவியுள்ளன. இவற்றின்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன, அனுபவங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பணியைச் செய்வது வியானன்.
உதானன்
7. அதைகயோர்த்வ உதான புண்யேன புண்யம் லோகம் நயதி
பாபேன பாபமுபாப்யாமேவ மனுஷ்ய லோகம்

அத-இப்போது; ஊர்த்வ-மேலே செல்கின்ற; ஏகயா-ஒன்றின்மூலம்; உதான-உதானன்; புண்யேன-புண்ணியத்தால்; புண்ய லோகம்-புண்ணிய உலகங்களுக்கு; பாபேன-பாவத்தால்; பாபம்-பாவ உலகங்களுக்கு; நயதி-கொண்டு செல்கிறது. உபாப்யாம்-இரண்டின் சேர்க்கையால்; மனுஷ்ய லோகம் ஏவ-மானிட உலகமே.
பொருள் : அந்த நாடிகளுள், மேலே செல்கின்ற ஒன்றின் வழியாக உதானன் மனிதனைக் கொண்டு செல்கிறது. புண்ணியம் செய்தவர்களைப் புண்ணிய உலகங்களுக்கும், பாவம் செய்தவர்களைப் பாவ உலகங்களுக்கும், இரண்டையும் செய்தவர்களை மானிட உலகத்திற்கும் கொண்டு செல்வது அதுவே.
உச்சிமுதல் உள்ளங்கால் வரை பரவியிருப்பது உதானன். மரணத்திற்குப் பிறகு மனிதனின் உயிரைக் கொண்டு செல்வது இந்தப் பிராணனே. வாழும் காலத்தில் நல்லது செய்து அதிகமாகப் புண்ணியம் சம்பாதித்த ஒருவனை, சொர்க்கம் போன்ற புண்ணியம் உலகங்களுக்குக் கொண்டு செல்கிறது. தீமைகள் செய்து அதிகமாகப் பாவம் சம்பாதித்தவனை நரகம் போன்ற பாவ உலகங்களுக்குக் கொண்டு செல்கிறது. புண்ணியமும் பாவமும் சமமாக உள்ள ஒருவனை மனித உலகிலேயே பிறக்குமாறு செய்கிறது.
சுருங்கச் சொல்வதானால், மரணத்திற்குப் பிறகு மனிதனின் பயணத்திற்கு உதவுகின்ற ஆற்றல் உதானன். இந்தக் கருத்து 9-இல் தொடர்கிறது.
அபானன், சமானன், வியானன்.
8. ஆதித்யோ ஹ வை பாஹ்ய ப்ராண உதயத்யேஷ ஹ்யேனம் சாக்ஷஷம் ப்ராணம் அனுக்ருஹ்ணான
ப்ருதிவ்யாம் யா தேவதா ஸைஷா புருஷஸ்ய அபானம்
அவஷ்டப்யாந்தரா யதாகாச ஸ ஸமானோ வாயுர்வ்யான

ஆதித்ய ஹ வை-சூரியனே; பாஹ்ய; ப்ராண-புறப் பிராணன்; ஏஷ ஹி-இவனே; ஏனம்-இந்த; சாக்ஷúஷம்-கண்களில்; ப்ராணம்-பிராணனாக; அனுக்ருஹ்ணான-அருள்கூர்ந்து; உதயதி-எழுகிறான்; ப்ருதிவ்யாம்-பூமியில்; யா-எந்த; தேவதா-தேவதை; ஸா-அது; ஏஷா-இந்த; புருஷஸ்ய-மனிதனின்; அபானம்-அபானன்; அவஷ்ட்டப்ய -கட்டுப்படுத்தி; அந்தரா-இடைவெளியில்; யத்-எது; ஆகாசமாக; ஸ-அது; ஸமான-ஸமானன்; வாயு-காற்று; வ்யான-வியானன்.
பொருள் : சூரியனே புறப் பிராணன். அவனே அருள்கூர்ந்து கண்களில் பிராணனாக நிலவுகிறான். பூமியில் உள்ள தேவதை மனிதனினுள்ள அபானனைக் கட்டுப்படுத்துகிறது. இடைவெளியிலுள்ள ஆகாசமே சமானன். காற்றே வியானன்.
எங்கும் நிறைந்த பிராணனே மனிதனிலும் செயல்பட்டு, அவனது உடல் மற்றும் மன இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. பிராணனின் ஒவ்வொரு பிரிவும் இயற்கையில் ஒன்றையும், அதாவது புறப் பிரபஞ்சத்தில் ஒன்றையும் (2:1 விளக்கவுரையும் காண்க). மனிதன் தன்னிலுள்ள பிராணனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கு இதுவே நிரூபணமாகிறது. யோக நெறி இதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. பிராணன் புறத்தில் சூரியனையும், மனிதனில் கண்ணையும் கட்டுப்படுத்துகிறது.
அபானன் பூமியை அதன் இடத்தில் நிலைநிறுத்துகிறது. பூமியை அதன் இடத்தில் நிலைநிறுத்துகின்ற சக்தி புவியீர்ப்பு விசை என்று விஞ்ஞானம் கூறுகிறது. புவியீர்ப்பு விசைதான் அன்று அபானன் என்று கூறப்பட்டிருக்கலாம். அபானனே மனித உடம்பையும் நிலைநிறுத்துகிறது; அதாவது உடம்பு கீழே விழுந்துவிடாமலும், மேலே கிளம்பி விடாமலும் கட்டுப்படுத்துகிறது. ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள வெளியே சமானன். அதுவே மனிதனிலுள்ள அக வெளியாகவும் உள்ளது.
காற்றாகவும் இருப்பது வியானன். இந்த வியானன் பிரபஞ்சத்திலும் மனிதனிலும் பரவியுள்ளது.

உதானன்: மரணவேளையில்: 9-10
மரணத்திற்குப் பிறகு மனிதனின் பயணத்திற்கு உதவுவது உதானன் என்று 3:7 இல் கண்டோம். இங்கே அந்தக் கருத்து தொடர்கிறது. மரணவேளையில் என்ன நடக்கிறது என்பதும் இந்த இரண்டு மந்திரங்களில் கூறப்படுகிறது.
9. தேஜோ ஹ வா உதானஸ்தஸ்மாத் உபசாந்ததேஜா:
புனர்பவம் இந்த்ரியைர் மனஸி ஸம்பத்யமானை

தேஜ: ஹ வை-நெருப்பை; உதான-உதானன்; தஸ்மாத்-எனவே; உபசாந்த தேஜா-நெருப்பு அணையப் பெற்றவன்; இந்த்ரியை-புலன்கள்; மனஸி-மனத்தில்; ஸம்பத்யமானை-ஒடுங்கப் பெற்று; புனர்பவம்-மீண்டும் பிறக்கிறான்.
பொருள் : நெருப்பே உதானன். நெருப்பு அணையப் பெற்றவனின் புலன்கள் மனத்தில் ஒடுங்குகின்றன. அவன் மீண்டும் பிறக்கிறான்.
புறத்தில் நெருப்பாக இருக்கின்ற உதானன் மனிதனில் சூடாக உள்ளது. உதானனாகிய சூடு உடம்பிலிருந்து விலகினால் அவன் இறந்துவிட்டான் என்பது பொருள். மரணத்திற்குப் பின்னர் உடல் குளிர்ந்துவிட்டது. உடல் விரைத்துவிட்டது என்று வழக்கத்திலும் சொல்லப்படுவதைக் காண்கிறோம். அவன் இறக்கிறான் என்பதே மீண்டும் பிறக்கிறான் என்று இங்கே கூறப்பட்டுள்ளது.
மரணத்தின் போது என்ன நடக்கிறது?
பேசும் சக்தி முதலில் விலகுகிறது; நாம் பார்க்கலாம், கேட்கலாம், ஆனால் பேச முடியாது. பிறகு ஒவ்வொரு புலனாக விடைபெறுகின்றன. அத்தனை புலன்களும் செயலிழந்த பின்னரும் மனம் விழித்திருக்கிறது. மனமும் விடை பெறும் போது நாம் உணர்வை இழக்கிறோம். அப்போதும் நாம் இறக்கவில்லை. ஏனெனில் உடம்பில் சூடு இருக்கும். அந்தச் சூடு விலகினால் அது மரணத்தின் அறிகுறி.
10. யச்சித்தஸ்தேனைஷ ப்ராணமாயாதி ப்ராணஸ்தேஜஸா யுக்த
ஸஹாத்மனா யதா ஸங்கல்பிதம் லோகம் நயதி

ய: சித்த-மனம்; தேன-அதனுடன்; ஏஷ-இவன்; ப்ராணம்-பிராணனை; ஆயாதி-அடைகிறான்; ப்ராண-பிராணன்; தேஜஸா யுக்த-உதானனுடன்; ஆத்மனா ஸஹ-அவனை; யதா-எப்படி; ஸங்கல்பிதம்-விரும்பிய; லோகம்-உலகிற்கு; நயதி-கொண்டு செல்கிறது.
பொருள் : இறுதிக்கணத்தில் மனத்தில் தோன்றிய எண்ணத்துடன் மனிதன் பிராணனை அடைகிறான். பிராணன் உதானனின் துணையுடன் அவனை அவன் விரும்பிய உலகிற்குக் கொண்டு செல்கிறது.
ஒருவனின் மரணவேளையில் முதலில் புலன்கள் செயலிழக்கின்றன. அவனது மனத்தில் எவ்வளவோ ஆசைகள் இருக்கலாம், ஆனால் புலன்கள் செயலற்று விட்டதால், அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வழியில்லை. எனவே நிறைவேறாத ஆசைகள் எதிர்பார்ப்புகள் போன்றவற்றின் தொகுதியான அந்த மனத்துடன் அவன் பிராணனை அடைகிறான். மரணத்திற்குப் பிறகு மனிதனின் பயணத்திற்குத் துணை செய்வது உதானன் என்று கண்டோம். பிராணன், உதானனின் துணையுடன் அவனை அவன் விரும்பிய உலகிற்குக் கொண்டு செல்கிறது.
விரும்பிய உலகம் என்பது எது?
மரணவேளையின் இறுதிக்கணத்தில் தோன்றுகின்ற எண்ணமே அவன் செல்ல வேண்டிய இடத்தை நிர்ணயிக்கிறது. இறுதிக் காலத்தில் எந்தப் பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகிறானோ, எப்போதும் அந்தப் பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகிறான் (கீதை 8:6) என்கிறது கீதை. வாழ்நாளில் அதிகமாக நினைத்தது இறுதிக்கணத்தில் நினைவுக்கு வருகிறது. இறுதிக்கணத்தில் நினைவில் எழுந்த ஒன்று அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.
பிராணனை உணர்வதன் பலன் : 11-12
11. ய ஏவம் வித்வான் ப்ராணம் வேத
ந ஹாஸ்ய ப்ரஜா ஹீயதேம்ருதோ பவதி ததேஷ ச்லோக

ய-யார்; வித்வான்-சிறப்பாக அறிந்தவன்; ப்ராணம்-பிராணனை; ஏவம்-இவ்வாறு; வேத-உணர்கிறானோ; அஸ்ய-அவனது; ப்ரஜா-சந்ததிச் சங்கிலி; ந ஹ ஹீயதே-ஒருபோதும் அழிவதில்லை; அம்ருத-அழியாதது; பவதி-ஆகிறது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-சுலோகம்.
பொருள் : பிராணனை இவ்வாறு சிறப்பாக உணர்ந்தவனின் சந்ததிச் சங்கிலி ஒருபோதும் அழிவதில்லை; அழியாமல் நிலைக்கிறது. அதுபற்றி கீழ்வரும் சுலோகமும் உள்ளது.
12. உத்பத்திமாயதிம் ஸ்தானம் விபுத்வம் சைவ பஞ்சதா
அத்யாத்மம் சைவ ப்ராணஸ்ய
விஜ்ஞாயாம்ருதமச்னுதே விஜ்ஞாயாம்ருதமச்னுத இதி

ப்ராணஸ்ய-பிராணனின்; உத்பத்திம்-தோற்றம்; ஆயதிம்-வருவது; ஸ்தானம்-இருப்பிடம்; பஞ்சதா ச-ஐந்து விதமான; விபுத்வம்-தலைமைச் செயல்கள்; ஏவ-மற்றும்; அத்யாத்மம்-தூல வெளிப்பாடு; விஜ்ஞாய-உணர்பவன்; அம்ருதம்-அழிவற்ற நிலையை; அச்னுதே-அடைகிறான்; இதி-என்று.
பொருள் : பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமைச் செயல்கள், தூல வெளிப்பாடு ஆகியவற்றை உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான், அழிவற்ற நிலையை அடைகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.
பிராணன் ஆன்மாவிலிருந்து தோன்றுகிறது; ஆசைகளுக்கு ஏற்ப அது ஓர் உடம்பைத் தோற்றுவித்துக் கொள்கிறது (3). தன்னைப் பலவாகப் பிரித்துக்கொண்டு உடம்பின் பல்வேறு பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்கிறது(5). ஒரு மன்னனைப் போல் புலன்களையும் மனத்தையும் இயக்குகிறது (4). உடம்பில் இவ்வாறு செயல்படுகின்ற அதே பிராணன்தான் தூல உலகில், அதாவது புற உலகில் சூரியனாகவும் மற்ற பிரபஞ்ச சக்திகளாகவும் செயல்படுகிறது. பிராணனைப் பற்றிய இந்த விஞ்ஞானத்தைப் புரிந்துகொண்டு அதனைச் செயல்படுத்தத் தெரிந்தவன் அழிவற்ற நிலையை அடைகிறான், அவனது சந்ததியும் ஓங்கி வளர்கிறது(11-12).
ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்திவிட்டால் உலகில் எந்தச் சக்திதான் அவனுடையது ஆகாது? அவன் சூரியனையும் நட்சத்திரக் கூட்டங்களையும் அவற்றின் இடத்திலிருந்து பெயர்த்துவிட முடியும். அணுவிலிருந்து மிகப்பெரிய சூரியர்கள்வரை இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவனால் அடக்கியாள முடியும். ஏனெனில் அவன் பிராணனைக் கட்டுப்படுத்துகிறான்.... அவனது ஆணைக்கு உட்படாத எதுவும் இயற்கையில் இருக்காது. தேவர்களாகட்டும், ஆவிகள் ஆகட்டும் அவன் அழைத்தால் வந்துவிடுவர். இயற்கையின் சக்திகள் அனைத்தும் அடிமைகள்போல் அவன் ஆணைக்குக் கீழ்ப்படியும்.... பிராணனை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள மனம் மற்றும் பவுதீக சக்திகள் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். பிராணனை வசப்படுத்துபவன் தனது மனத்தையும் மற்ற மனங்களையும் அடக்கி ஆளும் திறமை பெறுகிறான். அதேபோன்று பிராணனை வசப்படுத்துபவன் தனது உடலையும் வேறு எல்லா உடல்களையும் அடக்கி ஆள்கிறான் என்கிறார் சுவாமி விவேகானந்தர். இத்தனை பெரிய ஒரு ஆற்றலை வசப்படுத்தியவன் என்பதால்தான் அத்தகையவன் அழிவற்ற நிலையை அடைவதாக மந்திரம் கூறுகிறது.
இதி ப்ரச்னோபநிஷதி த்ருதீய: ப்ரச்ன:
4. மனிதனின் மூன்று நிலைகள்

உலகின் படைப்பு, மனித வாழ்க்கையில் இரண்டு வழிகள், இல்லறம், வாழ்க்கையைச் செயல்படுத்துகின்ற பிராண சக்தி ஆகியவற்றைப் படிப்படியாக இதுவரை மூன்று அத்தியாயங்களில் கண்டோம். இவை அனைத்திற்கும் களமான மனிதனைப்பற்றி ஆராய்கிறது இந்த அத்தியாயம்.
மனிதன் மூன்று நிலைகளில் மாறிமாறி சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான், விழித்திருக்கிறான், கனவு காண்கிறான், அல்லது ஆழ்ந்து தூங்குகிறான். இவை நனவு நிலை, கனவு நிலை, தூக்க நிலை எனப்படுகின்றன (மாண்டூக்ய உபநிஷதத்தின் மையக்கருவாக இந்த மூன்றுநிலை-ஆராய்ச்சி உள்ளது. அதன் 3-6, 9-11 மந்திரங்கள் இதுபற்றி கூறுகின்றன). இந்த நிலைகளில் என்ன நடக்கிறது, இந்த நிலைகள் எப்படி பிராணனால் கட்டுப்படுத்தப் படுகிறது போன்றவை இங்கே கூறப்படுகின்றன.
மூன்று நிலைகள் எவை?
1. அத ஹைனம் ஸெளர்யாயணீ கார்க்ய பப்ரச்ச
பகவன் ஏதஸ்மின் புருஷே கானி ஸ்வபந்தி? கான்யஸ்மின் ஜாக்ரதி?
கதர ஏஷ தேவ ஸ்வப்னான் பச்யதி? கஸ்யைதத் ஸுகம் பவதி?
கஸ்மின் நு ஸர்வே ஸம்ப்ரதிஷ்ட்டிதா பவந்தீதி

அத ஹ-பிறகு; ஸெளர்யாயணீ-சூரியனின் பேரனான; கார்க்ய-கார்க்கியன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; ஏதஸ்மின்-இந்த; புருஷே-மனிதனில்; கானி-எவை; ஸ்வபந்தி-தூங்குகின்றன; அஸ்மின்-அவனில்; கானி-எவை; ஜாக்ரதி-விழித்திருக்கிறது; ஸவப்னான்-கனவுகளை; பச்யதி-பார்க்கிறான்; ஏஷ-இந்த; தேவ-தேவன்; கதர-யார்; ஏதத்-இந்த; ஸுகம்-இன்பம்; கஸ்ய-யாருக்கு; பவதி-ஆகிறது; கஸ்மின் நு-எதில்; ஸர்வே-எல்லாம்; ஸம்ப்ரதிஷ்ட்டிதா பவந்தி-நிலைபெற்றுள்ளன; இதி-என்று.
பொருள் : பிறகு சூரியனின் பேரனான கார்க்கியன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்.
தெய்வ முனிவரே! மனிதனில் எவை தூங்குகின்றன? எவை விழித்திருக்கின்றன? கனவுகளைக் காண்கின்ற தேவன் யார்? இன்பத்தை அனுபவிப்பது யார்? எல்லாம் எதில் நிலைபெற்றுள்ளன?

இங்கே 5 கேள்விகள் கேட்கப்படுகின்றன: ஒருவன் தூங்கும்போது எந்தப் புலன்கள் உண்மையில் தூங்குகின்றன? அவன் விழித்திருக்கும்போது, உண்மையில் எந்தப் புலன்கள் விழித்திருக்கின்றன? எந்தப் புலன்கள் கனவுகளைக் காண்கின்றன? ஆழ்ந்த தூக்கத்தில் இன்பத்தை அனுபவிப்பது யார்? ஆழ்ந்த தூக்கத்தின்போது எதில் அனைத்து புலன்களும் ஒடுங்குகின்றன? 1,4,5 ஆம் கேள்விகள் தூக்க நிலை பற்றியவை. 2 ஆம் கேள்வி விழிப்பு அல்லது நனவு நிலைபற்றியது. 3-ஆம் கேள்வி கனவு நிலை பற்றியது.
தூக்க நிலை: 2-4
2. தஸ்மை ஸ ஹோவாச
யதா கார்க்ய மரீசயோர்க்கஸ்ய அஸ்தம் கச்சத ஸர்வா ஏதஸ்மின் தேஜோமண்டல ஏகீபவந்தி
தா புன புனருதயத ப்ரசரந்த்யேவம் ஹ வை தத் ஸர்வம் பரே தேவே மனஸ்யேகீபவதி
தேன தர்ஹ்யேஷ புரு÷ஷா ந ச்ருணோதி ந பச்யதி ந ஜிக்ரதி ந ரஸயதே
ந ஸ்ப்ருசதே நாபிவததே நாதத்தே நானந்தயதே ந விஸ்ருஜதே நேயாயதே ஸ்வபிதீத்யாசக்ஷதே

தஸ்மை-அவரிடம்; ஸ-அவர்; உவாச ஹ-கூறினார்; கார்க்ய-கார்க்கியா; யதா-எப்படி; அர்க்கஸ்ய-சூரியனின்; அஸ்தம் கச்சத-மறையும்போது; ஸர்வா-எல்லா; மரீசய-கிரணங்களும்; ஏதஸ்மின்-அந்த; தேஜோமண்டலே-ஒளித்திரளில்; ஏகீபவந்தி-ஒடுங்குகின்றன; புன-மீண்டும்; உதயத-உதிக்கும்போது; தா-அவை; புன-மீண்டும்; ப்ரசரந்தி-பரவுகிறது; ஏவம் ஹ வை-அப்படியே; தத்-அந்த; ஸர்வம்-அனைத்தும்; பரே தேவே-தலைமைப் புலனான; மனஸி-மனத்தில்; ஏகீபவதி-ஒடுங்குகின்றன; தேன-எனவே; தர்ஹி-பிறகு; ஏஷ-இந்த: புருஷ-மனிதன்; ந ச்ருணோதி-கேட்பதில்லை; ந பச்யதி-பார்ப்பதில்லை; ந ஜிக்ரதி-முகர்வதில்லை; ந ரஸயதே-சுவைப்பதில்லை; ந ஸ்ப்ருசதே-உணர்வதில்லை; ந அபிவததே-பேசுவதில்லை; ந ஆதத்தே-ஏற்பதில்லை; ந ஆனந்தயதே-மகிழ்வதில்லை; ந விஸ்ருஜதே-வெளிவிடுவதில்லை; ந இயாயதே-நகர்வதில்லை; ஸ்வபிதி-தூங்குகிறான்; இதி-என்று; ஆசக்ஷதே-கூறுகிறார்கள்.
பொருள் : கார்க்கியரிடம் பிப்பலாதர் கூறினார்; கார்க்கியா! சூரியன் மறையும்போது எல்லா கிரணங்களும் அதன் ஒளித்திரளில் ஒடுங்குகின்றன; உதிக்கும்போது எல்லா கிரணங்களும் மீண்டும் வெளியே பரவுகின்றன, அதுபோல் ஒருவன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் தலைமைப் புலனான மனத்தில் ஒடுங்குகின்றன. அப்போது அவன் கேட்பதில்லை, பார்ப்பதில்லை, முகர்வதில்லை, சுவைப்பதில்லை, உணர்வதில்லை,பேசுவதில்லை, ஏற்பதில்லை, மகிழ்வதில்லை, வெளிவிடுவதில்லை, நகர்வதில்லை, அப்போது இவன் தூங்குகின்றான் என்று கூறுகிறார்கள்.
விழித்திருக்கும்போது புலன்கள் செயல்படுகின்றன. சூரியனின் கிரணங்கள் பரவுவதுபோல் இந்தப் புலன்கள் புறவுலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களைக் கொண்டுவருகின்றன. சூரியன் மறையும்போது அதன் கிரணங்கள் ஒடுங்குகின்றன. அதுபோல் மனிதன் தூங்கும்போது அவனது புலன்கள் அனைத்தும் மனத்தில் ஒடுங்குகின்றன. புலன்கள் செயல்படாததால் அவனக்கு எந்தப் புற அனுபவமும் இல்லை.
3. ப்ராணாக்னய ஏவைதஸ்மின் புரே ஜாக்ரதி
கார்ஹபத்யோ ஹ வா ஏ÷ஷாபானோ வ்யானோ ன்வாஹார்யபசனோ
யத்கார்ஹ பத்யாத் ப்ரணீயதே ப்ரணயனாத் ஆஹவனீய ப்ராண

ப்ராணாக்னய-பிராண அக்கினிகள்; ஏவ-மட்டுமே; ஏதஸ்மின்-இந்த; புரே-நகரத்தில்; ஜாக்ரதி-விழித்திருக்கின்றன; கார்ஹபத்ய-கார்ஹபத்யம்; ஏஷ ஹ வை-இந்த; அபான-அபானன்; அன்வாஹார்யபசன-அன்வாஹார்யபசனம்; வ்யான-வியானன்; யத்-எது; கார்ஹபத்யாத்-கார்ஹபத்யத்திலிருந்து; ப்ரணீயதே-உருவாக்கப்பட்டது; ப்ராணயனாத்-உருவாக்கப்பட்டதால்; ஆஹவனீய-ஆஹவனீயம்; ப்ராண-பிராணன்.
பொருள் : தூங்கும்போது, இந்த உடம்பாகிய நகரத்தில் பிராண சக்திகளாகிய அக்கினிகள் மட்டுமே விழித்திருக்கின்றன. அபானனே கார்ஹபத்யம். வியானன் அன்வாஹார்யபசனம். கார்ஹபத்யத்திலிருந்து உருவாக்கப்பட்டது ஆஹவனீயம். எனவே பிராணனே ஆஹவனீயம்.
தூங்கும்போது எல்லாம் ஓய்ந்துவிடுகின்றனவா?
இல்லை.  நகரம் ஆழ்ந்து தூங்கும்போது தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அதுபோல் உடம்பு ஆழ்ந்து தூங்கும் போது பிராண சக்திகள் விழித்திருக்கின்றன; செயல்படுகின்றன. பிராண சக்திகளுக்குப் பல்வேறு அக்கினிகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. அக்கினிகள் என்பவை யாகங்கள். ஓர் இல்லறத்தான் பல யாகங்களைச் செய்ய வேண்டும். அவற்றுள் முக்கியமான ஒன்று அக்னிஹோத்ரம். இதைச் செய்வதற்கு மூன்று அக்கினிகள் வேண்டும். அவை கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி (இது அன்வாஹார்ய பசனம் என்றும் அழைக்கப்படுகிறது). யாகங்களைச் செய்கின்ற புரோகிதர் ஹோத்ரு எனப்படுகிறார். யாகங்களைச் செய்விப்பவன். அதாவது அந்த யாகம் யாருக்காகச் செய்யப்படுகிறதோ அவன், எஜமானன் எனப்படுகிறான். யாகத்தின்போது இவன் அமர்வதற்குத் தனி இடம் உள்ளது.
1. கார்ஹபத்ய அக்னி: இது எஜமானனுக்குப் பின்னால் வட்ட வடிவமான குண்டத்தில் தொடர்ந்து எரிகின்ற ஒன்று. மற்ற யாகங்களுக்கான அக்கினி இதிலிருந்தே எடுக்கப்படுகிறது. இது அபானனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அபானன் உடம்பின் பின்பகுதியில் செயல்படுகிறது.
2. அன்வாஹார்யபசனம்: தட்சிணாக்னி என்றும் இது அழைக்கப்படுகிறது. தட்சிணம் என்றால் வலது பக்கம். எஜமானனுக்கு வலது பக்கத்தில் (தென்புறம்) அரை வட்ட வடிவமான குண்டத்தில் இந்த அக்கினி எரிகிறது. இறந்த முன்னோர்களும் சாதாரண தேவதைகளும் இதில் வழிபடப்படுகிறார்கள். வியானன் இதயத்திற்கு வலது பக்க நாடியில் சஞ்சரிப்பதால் இது தட்சிணாக்னிக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
3. ஆஹவனீயம்: இது எஜமானனுக்கு முன்னால் சதுர வடிவமான குண்டத்தில் எரிகிறது. இதில் தேவர்கள் வழிபடப்படுகிறார்கள். இது கார்ஹபத்ய அக்னியிலிருந்து எடுக்கப்படுகிறது. தூக்கத்தின்போது பிராணன் அபானனிலிருந்தே பிரிந்தெழுந்து செயல்படுகிறது. அபானன் கார்ஹபத்ய அக்னிக்கு உவமையாகக் கூறப்பட்டது. பிராணன் ஆஹவனீய அக்னிக்கு உவமையாகக் கூறப்படுகிறது.
எப்படி இந்த யாகங்கள் ஓர் இல்லறத்தானின் வீட்டில் தொடர்ந்து செய்யப்படுகின்றனவோ, அப்படி பிராண சக்திகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. தூக்கத்தின்போது புலன்கள் ஓய்ந்துவிடுகின்றன. அதனால் புற அனுபவங்கள் நம்முள் வருவதில்லை. ஆனால் பிராண சக்திகள் ஓய்வதில்லை. இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்வற்றின் இயக்கம், உண்ட உணவு செரிப்பது, ரத்தம் தூய்மைப்படுத்தப்படுவது போன்ற வேலைகள் நாம் தூங்கும்போதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
4. யதுச்சவாஸ நி ச்வாஸெள ஏதாவாஹுதீ ஸமம் நயதீதி ஸஸமான
மனோ ஹ வாவ யஜமான இஷ்ட்ட ஃபலமேவ உதான ஸ
ஏனம் யஜமானம் அஹரஹர் ப்ரஹ்ம கமயதி

யத்-எப்படி; உச்ச்வாஸ நி ச்வாஸெள-உள்மூச்சும் வெளிமூச்சும்; ஏதௌ-இரண்டும்; ஆஹுதீ-இரண்டு ஆஹுதிகள்; ஸமம்-சமமாக; நயதி-நடத்துகிறது; இதி-என்று; ஸ-அது; ஸமான-சமானன்; மன-மனம்; யஜமான ஹ வாவ-எஜமானனே; இஷ்ட்ட ஃபலம் ஏவ-நாடிய பலனே; உதான-உதானன்; ஸ-அது ஏனம்-இந்த; யஜமானம்-எஜமானனை; அஹ; அஹ-நாள்தோறும்; ப்ரஹ்ம-இறைவனிடம்; கயமதி-சேர்ப்பிக்கிறது.
பொருள் : உள்மூச்சு, வெளிமூச்சு ஆகிய இரண்டு ஆஹுதிகளையும் சமமாக நடத்துவதால் அந்தப் பிராண சக்தி சமானன் எனப்படுகிறது. மனமே எஜமானன். யாகத்தின் மூலம் நாடிய பலனே உதானன். ஏனெனில் உதானனே இந்த எஜமானனை நாள்தோறும் இறைவனிடம் சேர்ப்பிக்கிறது.
தூக்க நிலைக்கும் யாகத்திற்குமான ஒப்புமை இங்கே தொடர்கிறது.
1. ஹோத்ரு: யாகத்தைச் செய்கின்ற புரோகிதர் ஹோத்ரு எனப்படுகிறார். யாகத்தின் முழுப் பொறுப்பும் அவருடையதே. யாக அக்னியில் சமர்ப்பிக்கப்படுகின்ற தானியம், நெய் முதலான ஆஹுதிகளை வகைப்படுத்திக் கண்காணிப்பது அவரது முக்கிய வேலை. இவர் சமானனுக்கு உவமையாகக் கூறப்படுகிறார்.
யாகத்தின் முழுப்பொறுப்பும் ஹோத்ருவைச் சேர்ந்தது. அதுபோல், தூக்க வேளையில் நமது உடல்-மன இயக்கங்களைக் கண்காணிப்பது சமானன். உள்மூச்சும் வெளிமூச்சும் இரண்டு ஆஹுதிகள். இவற்றை சமச்சீராக இயங்கச் செய்வது சமானன். 
2. எஜமானன்: மனம் எஜமானனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எஜமானன் சொர்க்க போகம், பிள்ளை வரம் போன்றவற்றிற்காக ஹோத்ருவின் மூலம் யாகம் செய்கிறான். அதுபோல் மனமும் இறைவனுக்காக, இறைவனை நாடி சமானனின்மூலம் உடல்-மன இயக்கங்களைச் சீராக வைத்து வாழ்க்கை என்னும் யாகத்தை நடத்துகிறது.
3. யாக பலன்: சொர்க்க போகம், பிள்ளை வரம் போன்ற பலவகை இன்பங்கள் யாகங்களின் பலன்களாகக் கிடைக்கின்றன. யாக பலன்கள் உதானனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன. ஏனெனில் உதானனே இந்த எஜமானனை நாள்தோறும் இறைவனிடம் சேர்ப்பிக்கிறது என்கிறது மந்தரம்?
எப்படி?
மனிதன் மூன்று நிலைகளில் சஞ்சரிப்பவன். இறைவன் இந்த மூன்றுநிலைகளுக்கும் அப்பாற்பட்டவர். இது நான்காம் நிலை. இது பிரபஞ்ச உணர்வு கடந்த, அமைதிமயமான, மங்கலமான, இரண்டற்ற(ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே-மாண்டூக்ய உபநிஷதம்,7) நிலையாகும். இதுவே இறைநிலை. ஆழ்ந்த தூக்கம் இறைநிலைக்கு முந்திய நிலையாக இருப்பதால் கலப்பற்ற ஆனந்தத்தின் சாயலை அதில் நாம் தூக்கத்தின்போது உணர முடிகிறது. எத்தனை இன்பங்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் விட்டு விட்டு தூக்கத்தை நாடுவதே மனித இயல்பாக உள்ளது. ஏனெனில் அங்கு மட்டுமே புற உலகக் கலப்பற்ற இறை யானந்தத்தின் சாயலை அனுபவிக்க முடிகிறது, தினமும் தூங்கும்போது மனத்தை இந்த இடத்திற்கு எடுத்துச் செல்வது உதானன். இறையானந்தத்தின் சாயல் என்ற பலனை நமக்குத் தருவதால் உதானன் யாக பலனுக்கு உவமையாகக் கூறப்படுகிறது.
கனவு நிலை
அடுத்து கனவுநிலை விளக்கப்படுகிறது. கனவுகளைக் காண்கின்ற தேவன் யார்(4:1) என்ற கேள்விக்கு விடையாக இந்த மந்திரம் அமைகிறது.
5. அத்ரைஷ தேவ: ஸ்வப்னே மஹிமானமனுபவதி
யத் த்ருஷ்ட்டம் த்ருஷ்ட்டமனுபச்யதி ச்ருதம் ச்ருதமேவார்த்தம்
அனுச்ருணோதி தேசதிகந்தரைச்ச ப்ரத்யனுபூதம் புன: புன ப்ரத்யனுபவதி;
த்ருஷ்ட்டம் சாத்ருஷ்ட்டம் ச ச்ருதம் சாச்ருதம் சானுபூதம்
சானனுபூதம் ச ஸச்சாஸச்ச ஸர்வம் பச்யதி ஸர்வ பச்யதி

ஏஷ-இந்த; தேவ-தேவன்; அத்ர-இங்கே; ஸ்வப்னே-கனவு; மஹிமானம்-மகிமையை; அனுபவதி-அனுபவிக்கிறான்; யத்-எது; த்ருஷ்ட்டம் த்ருஷ்ட்டம்-கண்டவற்றை; அனுபச்யதி-மீண்டும் காண்கிறான்; ச்ருத்ம் ச்ருதம் ஏவ அர்த்தம்-கேட்டவற்றை; அனுச்ருணோதி-மீண்டும் கேட்கிறான்; தேச திக் அந்தரை:ச-பல்வேறு இடங்களிலும் திசைகளிலும்; ப்ரத்யனுபூதம்-அனுபவித்தவற்றை; புன: புன=மீண்டும்மீண்டும்; ப்ரத்யனுபவதி-அனுபவிக்கிறான்; த்ருஷ்ட்டம்-கண்டவை; அத்ருஷ்ட்டம் ச-காணாதவை; ச்ருதம்-கேட்டவை; அச்ருதம் ச-கேட்காதவை; அனுபூதம்-அனுபவித்தவை; ந அனுபூதம் ச-அனுபவிக்காதவை; ஸத்-உண்மையானவை; அஸத் ச-உண்மையற்றவை; ஸர்வம்-அனைத்தையும்; பச்யதி-காண்கிறான்; ஸர்வ-அனைத்தும்; பச்யதி-காண்கிறான்.
பொருள் : இந்த தேவன் கனவுநிலையில் தன் மகிமையைத் தானே அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் கண்டவற்றை மீண்டும் காண்கிறான்; கேட்டவற்றை மீண்டும் கேட்கிறான்; பல்வேறு இடங்களிலும் திசைகளிலும் அனுபவித்தவற்றை மீண்டும்மீண்டும் அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் கண்டவை, காணாதவை, கேட்டவை, கேட்காதவை, அனுபவித்தவை, அனுபவிக்காதவை, உண்மையானவை, உண்மையற்றவை என்று அனைத்துமாக தானே ஆகி கனவுநிலையில் அனைத்தையும் அனுபவிக்கிறான்.
மனம் இங்கு ஒரு தேவனாகக் கூறப்பட்டுள்ளது. மனத்தின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. விழிப்பு நிலையில் கண்டு, கேட்டு, அனுபவித்த அனைத்தும் பதிவுகளாக ஆழ்மனத்தில் சேகரிக்கப்படுகின்றன. கனவில், மனமே இவை அனைத்துமாக ஆகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது. விழிப்பு நிலை அனுபவங்கள் அப்படியே கனவில் மீண்டும் நிகழும் என்ற நியதி கிடையாது. விழிப்பு நிலையில் பசுவைக் கண்டிருக்கிறோம், பாடல்களைக் கேட்டிருக்கிறோம். கனவில், இவை இரண்டும் இணையலாம். அதாவது,பசு பாடுவதாகக் கனவு வரலாம். ஒரு பசு பாடுவது விழிப்பு நிலையில் காணாதது, கேட்காதது, அனுபவிக்காதது, உண்மையற்றது. இதையே இந்த மந்திரம் தெரிவிக்கிறது.
கனவில் காண்கின்ற மனிதர்களோ மிருகங்களோ எதுவும் உண்மையில் அங்கே இல்லை. அவை எங்கிருந்து வந்தன? மனத்திலிருந்தே. அதாவது, விழிப்பு நிலையில் அனுபவித்த அனைத்துமாக மனமே ஆகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது. இதையே பிருஹதாரண்யக உபநிஷதம், அங்கே தேரில்லை, இழுக்க மிருகங்கள் இல்லை, சாலைகள் இல்லை, அங்கே இன்பம் இல்லை, களிப்பு இல்லை, ஆனந்தம் இல்லை. அங்கே குளம் இல்லை, ஏரி இல்லை, நதிகளும் இல்லை. அவன் அனைத்தையும் உருவாக்குகிறான். ஏனெனில் அவனே அனைத்தையும் உருவாக்கு பவன் (ந தத்ர ரதா ந ரதயோகா ந பந்தானோ பவந்தி, அத ரதான் ரதயோகான் பத: ஸ்ருஜதே; ந தத்ர ஆனந்தா முத; ப்ரமுதோ பவந்தி, அத ஆனந்தான் முத; ப்ரமுத; ஸ்ருஜதே; ந தத்ர வேசாந்தா புஷ்கரிண்ய; ஸ்ரவந்த்யோ பவந்தி, அத வேசாந்தான் புஷ்கரிணீ ஸ்ரவந்தீ: ஸ்ருஜதே ஸ ஹி கர்த்தா பிருஹதாரண்யக உபநிஷதம், 4:3.10) என்று விளக்குகிறது.
தூக்க நிலை: 6
ஆழ்ந்த தூக்கத்தில் இன்பத்தை அனுபவிப்பது யார் (4:1) என்ற கேள்விக்கு விடையாக இந்த மந்திரம் அமைகிறது.
6. ஸ யதா தேஜஸாபிபூதோ பவதி அத்ரைஷ தேவ
ஸ்வப்னான் ந பச்யத்யத ததைதஸ்மின் சரீரே ஏதத்ஸுகம் பவதி

ஸ-அவன்; தேஜஸா-ஒளியால்; அபிபூத-பவதி-ஆக்கிரமிக்கப் படும்போது; அத்ர-இங்கே; ஏஷ-இந்த; தேவ-தேவன்; ஸ்வப்னான்-கனவுகளை; ந பச்யதி-காண்பதில்லை; அத-பிறகு; ததா-அப்போது; ஏதஸ்மின்-இந்த; சரீரே-உடம்பில்; ஏதத்-இந்த; ஸுகம்-இன்பம்; பவதி-உண்டாகிறது.
பொருள் : ஒளியால் ஆக்கிரமிக்கப்படும்போது அந்த தேவன் கனவுகளைக் காண்பதில்லை. அப்போது உடம்பு இந்த இன்பத்தை அனுபவிக்கிறது.
ஆழ்ந்த தூக்க நிலை விளக்கப்படுகிறது. இங்கே விழிப்பும் இல்லை, கனவும் இல்லை. விழித்திருக்காவிட்டாலும், கனவு காணாவிட்டாலும் அந்த ஆழ்ந்த தூக்க நிலையை நாம் அனுபவிக்கிறோம். ஏனெனில் தூங்கி எழுந்த பிறகு நேற்று நன்றாகத் தூங்கினேன் மிகவும் ஆன்நதமாக இருந்தது என்று கூறுகிறோம். இந்த இன்பத்தை அனுபவிப்பது யார் என்பது கேள்வி. ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற தேவன் என்கிறது மந்திரம். தேவன் என்பது மனம். அதாவது ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனம் இந்த இன்பத்தை அனுபவிக்கிறது.
ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனம் என்பது என்ன?
மாண்டூக்ய உபநிஷதம் தூக்க நிலையப்பற்றி கூறுவதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். தூக்க நிலைக்கு 4 முக்கிய அடையாளங்களை அது கூறுகிறது; அனுபவங்கள் எதுவும் இல்லை, உணர்வு திரண்டு ஒரு திரளாக உள்ளது; அதனால் இது விழிப்பு மற்றும் கனவு நிலை உணர்வுகளின் வாசலாக உள்ளது. ஆனந்தமயமாக, ஆனந்தத்தை அனுபவிப்பதாக உள்ளது. விளக்கமாகக் காண்போம்( ஸுஷுப்தஸ்தான ஏகீபூத ப்ரஜ்ஞானகன ஏவானந்தமயோ ஹ்யானந்தபுக் கசகதாமுக மாண்டூக்ய உபநிஷதம், 5)
1. இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. கண், காது போன்ற நமது புலன்கள், உணர்வுமனம், ஆழ்மனம் அனைத்தும் ஓய்வில் ஆழ்ந்துவிடுவதால் இங்கே புறவுலக அனுபவங்களும் இல்லை; மனவுலக அனுபவங்களும் அதாவது கனவும் இல்லை.
2. புறவுலகம், மனவுலகம் என்று எந்த உலகத்தின் அனுபவங்களும் இல்லாமல் மனம், ஆழ்மனம், புத்தி, சித்தம் ஆகியவை ஒடுங்கி இருக்கின்றன. எங்கே? நான்-உணர்வில். அனைத்தும் நான்-உணர்வில் ஒடுங்கிவிட்டதால் தனியான அனுபவங்கள் எதுவும் இல்லை. அதனால் இது அனைத்தும் திரண்ட நிலையாகக் கூறப்படுகிறது.
3. தூங்கும்போது, மனம், ஆழ்மனம் ஆகியவை ஒடுங்கிவிட்டாலும் நான்-உணர்வு விழித்திருக்கிறது. பத்து பேர் தூங்குகின்ற இடத்தில் ராமா என்று கூப்பிடும்போது, ராமன் சட்டென்று விழிப்பது இந்த நான்-உணர்வு விழித்திருப்பதன் காரணமாகத்தான்.
இவ்வாறு நான்-உணர்வில் ஒடுங்கியிருக்கின்ற மனம் வெளிப்படும் போது முதல் நிலையில் கனவும், மேலும் புறநிலையில் வரும்போது விழிப்பு நிலையும் அனுபவிக்கப்படுகின்றன. அதனால்தான் இது மற்ற இரண்டு நிலைகளின் வாசல் என்று கூறப்பட்டது.
4. ஆழ்ந்த தூக்க நிலையிலுள்ள ஒரே அனுபவம் ஆன்ந்தம். அதனால்தான் தூங்கி எழுந்ததும் நான் ஆனந்த மாகத் தூங்கினேன் என்று நம்மால் கூற முடிகிறது.
இங்கே, பிரச்ன உபநிஷத மந்திரத்தில் 2-ஆவது விளக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதாவது, மனம் ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பது மனம் உணர்வுத் திரளில் ஒடுங்குவதைக் குறிக்கிறது.
ஆன்மா: 7-9
அனைத்திற்கும் ஆதாரமாக ஆன்மா உள்ளது என்பதை இந்த மந்திரங்கள் கூறுகின்றன.
7. ஸ யதா ஸோம்ய வயாம்ஸி வாஸோவ்ருக்ஷம்
ஸம்ப்ரதிஷ்ட்டந்தே ஏவம் ஹ வை தத் ஸர்வம் பர ஆத்மனி ஸம்ப்ரதிஷ்ட்டதே

ஸ-அது; யதா-எப்படி; ஸோம்ய-இனியவனே; வயாம்ஸி-பறவைகள்; வாஸோவ்ருக்ஷம்-வாழும் மரத்தை; ஸம்ப்ரதிஷ்ட்டந்தே-நாடுகின்றன; ஏவம் ஹ வை-அது போல்; தத் ஸர்வம்-அவை அனைத்தும்; பரே-மேலான; ஆத்மனி-ஆன்மாவில்; ஸம்ப்ரதிஷ்ட்டதே-ஒடுங்குகின்றன.
பொருள் : இனியவனே! பறவைகள் தாங்கள் வாழும் மரத்தை நாடுவதுபோல் அவை அனைத்தும் மேலான ஆன்மாவில் ஒடுங்குகின்றன.
பகலில் இரை தேடச் சென்ற பறவைகள் மாலை வேளையாகும்போது, தங்கள் கூடுகள் அமைந்துள்ள மரத்தை நாடுகின்றன; அதில் தங்குகின்றன. அதுபோல் புறவுலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களைக் கொண்டுவருகின்ற புலன்கள் போன்ற அனைத்தும் தூக்கத்தின்போது நான்-உணர்வில் ஒடுங்குகின்றன. நான்-உணர்வில் ஒடுங்குவதுபற்றி முந்தின மந்திரம் கூறிய 2-ஆம் அடையாளத்தில் கண்டோம்.
அந்த நான்-உணர்வு உட்பட அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்குகின்றன என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது.
8. ப்ருதிவீ ச ப்ருதிவீமாத்ரா சாபச்சாபோமாத்ரா ச
தேஜச்ச தேஜோமாத்ரா ச வாயுச்ச வாயுமாத்ரா ச
ஆகாசச்சாகாசமாத்ரா ச  சக்ஷúச்ச த்ரஷ்ட்டவ்யம் ச ச்ரோத்ரம் ச ச்ரோதவ்யம் ச க்ராணம் ச க்ராதவ்யம் ச ரஸச்ச ரஸயிதவ்யம் ச
த்வக்ச ஸ்பர்சயிதவ்யம் ச வாக்ச வக்தவ்யம் ச ஹஸ்தௌ சாதாதவ்யம் சோபஸ்தச்ச ஆனந்தயிதவ்யம் ச பாயுச்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ ச கந்தவ்யம் ச
மனச்ச மந்தவ்யம் ச புத்திச்ச போத்தவ்யம் சாஹங்காரச்ச அஹம்கர்த்தவ்யம் ச சித்தம்
ச சேதயிதவ்யம் ச தேஜச்ச வித்யோதயிதவ்யம் ச ப்ராணச்ச விதாரயிதவ்யம் ச

ப்ருதிவீ-பூமி; ப்ருதிவீ மாத்ரா-பூமியின் நுண்பகுதி; ஆப-தண்ணீர்; ஆபோமாத்ரா-தண்ணீரின் நுண்பகுதி; தேஜ-ஒளி; தேஜோ மாத்ரா-ஒளியின் நுண்பகுதி; வாயு-காற்று; வாயு மாத்ரா-காற்றின் நுண்பகுதி; ஆகாச-வெளி; ஆகாச மாத்ரா-வெளியின் நுண்பகுதி; சக்ஷú-கண்; த்ரஷ்ட்டவ்யம்-பார்க்கப்படுவது; ச்ரோத்ரம்-காது; ச்ரோதவ்யம்-கேட்கப்படுவது; க்ராணம்-மூக்கு; க்ராதவ்யம்-முகரப்படுவது; ரஸ-சுவை; ரஸியிதவ்யம்-சுவைக்கப்படுவது; த்வக்-தோல்; ஸ்பர்சயிதவ்யம்-தொடப்படுவது; வாக்-பேச்சு;வக்தவ்யம்-பேசப்படுவது; ஹஸ்தௌ-இரண்டு கைகள்; ஆதாதவ்யம்-எடுக்கப்படுவது; உபஸ்த-குறி; ஆனந்தயிதவ்யம்-இன்பத்தை அனுபவிப்பது; பாயு-குதம்; விஸர்ஜயிதவ்யம்-விடப்படுவது; பாதௌ-இரண்டு கால்கள்; கந்தவ்யம்-நடப்பது; மன-மனம்; மந்தவ்யம்-நினைக்கப்படுவது; புத்தி-அறிவு; போத்தவ்யம்-அறியப்படுவது; அஹங்காரம்-நான் உணர்வு; அஹம் கர்த்தவ்யம்-நான் என்று உணர்வது; சித்தம்-நினைவு; சேதயிதவ்யம்-நினைவுகூர்ந்து; தேஜ-ஒளி; வித்யோதயிதவ்யம்-விளக்கப்படுவது; ப்ராண-பிராணன்; விதாரயிதவ்யம்-ஒருங்கிணைக்கப்படுவது.
பொருள் : பூமி, பூமியின் நுண்பகுதி; தண்ணீர், தண்ணீரின் நுண்பகுதி; ஒளி, ஒளியின் நுண்பகுதி; காற்று, காற்றின் நுண்பகுதி; வெளி, வெளியின் நுண்பகுதி; கண், பார்க்கப்படுவது; காது, கேட்கப்படுவது; மூக்கு, முகரப்படுவது; சுவை, சுவைக்கப்படுவது; தோல், தொடப்படுவது; பேச்சு, பேசப்படுவது; கைகள், எடுக்கப்படுவது; குறி, இன்பத்தை அனுபவிப்பது; குதம், விடப்படுவது; கால்கள், நடப்பது; மனம், நினைக்கப்படுவது; அறிவு, அறியப்படுவது. நான்-உணர்வு, நான் என்று உணர்வது; நினைவு, நினைவுகூர்ந்து; ஒளி, அந்த ஒளியினால் விளக்கப்படுவது; பிராணன், ஒருங்கிணைக்கப்படுவது என்று அனைத்தும் ஆன்மாவிலேயே ஒடுங்குகின்றன.
நிலம், நீர், காற்று, நெருப்பு, வெளி ஆகிய 5 அடிப்படை மூலங்களால் (பஞ்ச பூதங்களால்) ஆனது உடம்பு. அதில் அந்த அடிப்படை மூலங்களில் தூலப் பதிகளும் உள்ளன, நுண்பகுதிகளும் உள்ளன. இவற்றுடன் பொறிகள், புலன்கள், அனுபவங்கள், அனுபவங்களுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு பரிமாணங்கள், நான்-உணர்வு, உடம்பு-மனச் சேர்க்கையை ஒருங்கிணைத்து வைத்திருக்கிருக்கின்ற பிராணன் என்று அனைத்தும் ஆன்மாவில் ஒடுங்குகின்றன.
9. ஏஷ ஹி த்ரஷ்ட்டா ஸ்ப்ரஷ்ட்டா ச்ரோதா க்ராதா ரஸயிதா மந்தா போத்தா கர்த்தா
விஜ்ஞானாத்மா புருஷ ஸ பரேக்ஷரே ஆத்மனி ஸம்ப்ரதிஷ்ட்டதே

ஏஷ ஹி-அதுவே; த்ரஷ்ட்டா-காண்பது; ஸ்ப்ரஷ்ட்டா-தொடு உணர்ச்சியை அறிவது; ச்ரோதா-கேட்பது; க்ராதா-முகர்வது; ரஸியிதா-சுவைப்பது; மந்தா-நினைப்பது; போத்தா-அறிவது; கர்த்தா-செய்வது; விஜ்ஞானாத்மா புருஷ-உணர்வது; ஸ-அது; பரே-மேலான; அக்ஷரே-அழிவற்ற; ஆத்மனி-ஆன்மாவில்; ஸம்ப்ரதிஷ்ட்டதே-நிலைபெற்றுள்ளது.
பொருள் : காண்பது, தொடு உணர்ச்சியை அறிவது, கேட்பது, முகர்வது, சுவைப்பது, நினைப்பது, உணர்வது, செய்வது அனைத்திற்கும் நான்-உணர்வே ஆதாரம். தூக்க நிலையை அனுபவிக்கின்ற அந்த நான்-உணர்வு மேலான, அழிவற்ற ஆன்மாவில் நிலைபெற்றுள்ளது.
ஆன்ம அனுபூதி : 10-11
அனைத்திற்கும் ஆதாரமான ஆன்மாவை அனுபூதியில் அறிவதுபற்றி இந்த இரண்டு மந்திரங்களும் கூறுகின்றன.
10. பரமேவாக்ஷரம் ப்ரதிபத்யதே ஸ யோ ஹ வை ததச்சாயம்
அசரீரம் அலோகஹிதம் சுப்ரமக்ஷரம் வேதயதே யஸ்து ஸோம்ய ஸ
ஸர்வஜ்ஞ ஸர்வோ பவதி ததேஷ ச்லோக

பரம்-மேலானது; அக்ஷரம்-அழிவற்றது; அச்சாயம்-நிழலற்றது; அசரீரம்-உடம்பற்றது; அலோஹிதம்-நிறமற்றது; சுப்ரம்-தூய்மையானது; அக்ஷரம்-அழிவற்றது; ய: ஹ வை-யார்; வேதயதே-அனுபூதியில் உணர்கிறானோ; ஸ ஏவ-அவன் மட்டுமே; ப்ரதிபத்யதே-அடைகிறான்; ஸோம்ய-இனியவனே; ஸ து-அவன்; ஸர்வஜ்ஞ-அனைத்தையும் அறிபவன்; ஸர்வ-அனைத்தும்; பவதி-ஆகிறான்; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-சுலோகம்.
பொருள் : இனியவனே! மேலான, அழிவற்ற, நிழலற்ற, உடம்பற்ற, நிறமற்ற, தூய்மையான அந்த ஆன்மாவை யார் அனுபூதியில் உணர்கிறானோ அவன் மட்டுமே ஆன்மாவை அடைகிறான். அவன் அனைத்தையும் அறிபவனாக, அனைத்துமாக ஆகிறான். இதுபற்றி கீழ்வரும் மந்திரமும் உள்ளது.
11. விஜ்ஞானாத்மா ஸஹ தேவைச்ச ஸர்வை
ப்ராணா பூதானி ஸம்ப்ரதிஷ்ட்டந்தி யத்ர
ததக்ஷரம் வேதயதே யஸ்து ஸோம்ய
ஸ ஸர்வஜ்ஞ ஸர்வமேவ ஆவிவேசேதி

விஜ்ஞானாத்மா ஸஹ-நான் உணர்வுடன்; தேவை-புலன்கள்; ஸர்வை-அனைத்தும்; ப்ராணா-பிராணன்கள்; பூதானி-அடிப்படை மூலங்கள்; யத்ர-எங்கே; ஸம்ப்ரதிஷ்ட்டந்தி-நிலைபெற்றுள்ளனவோ; தத்-அந்த; அக்ஷரம்-அழிவற்ற பொருளை; ய-யார்; வேதயதே-அனுபூதியில் உணர்கிறானோ; ஸ து-அவனே; ஸர்வஜ்ஞ=-அனைத்தையும் அறிபவன்; ஸர்வம் ஏவ-அனைத்தும் ஆவிவேச-வியாபிக்கிறான்; இதி-என்று.
பொருள் : நான்-உணர்வு, புலன்கள், பிராணன்கள், அடிப்படை மூலங்கள் ஆகிய அனைத்தும் எங்கே நிலைபெற்றுள்ளனவோ அந்த அழிவற்ற ஆன்மாவை அனுபூதியில் உணர்பவன் அனைத்தையும் அறிபவன் ஆகிறான்; அனைத்திலும் வியாபிக்கிறான்.
இதி ப்ரச்னோபநிஷதி சதுர்த்த: ப்ரச்ன:
6. ஆன்ம அனுபூதி

அறிவைத் தேடி புறப்பட்ட 6 சாதகர்கள் பிப்பலாத முனிவரிடம் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த விடைகளுமே இந்த உபநிஷதம், முதலில் (1-3 அத்தியாயங்கள்) உலகம். அடுத்தது(4) மனிதன், அடுத்து(5) ஓங்கார சாதனை என்று அவர்களின் கேள்விகள் படிப்படியாக அமைந்துள்ளது.
இந்த 6-ஆம் அத்தியாயம் ஆன்ம அனுபூதி பற்றி கூறுகிறது.
பதினாறு பகுதிகள் உடைய நபர்: 1-4
1. அத ஹைனம் ஸுகேசா பாரத்வாஜ பப்ரச்ச
பகவன் ஹிரண்யநாப கௌஸல்யோ ராஜபுத்ரோ மாமுபேத்யைதம்
ப்ரச்னமப்ருச்சத ÷ஷாடசகலம் பாரத்வாஜ புருஷம் வேத்த? தமஹம்
குமாரமப்ருவம் நாஹமிமம் வேத யத்யஹமிமமவேதிஷம் கதம் தே
நாவக்ஷ்யமிதி ஸமூலோ வா ஏஷ பரிசுஷ்யதி யோன்ருதமபிவததி
தஸ்மாத் நார்ஹாம்யன்ருதம் வக்தும் ஸ தூஷ்ணீம் ரதமாருஹ்ய
ப்ரவவ்ராஜ தம் த்வா ப்ருச்சாமி க்வாஸெள புருஷ இதி

அத-பிறகு; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனான; ஸுகேசா-ஸுகேசன்; ஏனம்-அவரிடம்; பப்ரச்ச ஹ-கேட்டார்; பகவன்-தெய்வ முனிவரே; கௌஸல்ய-கோசல நாட்டின்; ராஜபுத்ர-இளவரசனான; ஹிரண்யநாப-ஹிரண்யநாபன்; மாம்-என்னை; உபேத்ய-அணுகி; ஏதம்-இந்த; ப்ரச்னம்-கேள்வியை; அப்ருச்சத-கேட்டார்; பாரத்வாஜ-பரத்வாஜரின் மகனே; ÷ஷாடச கலம்-பதினாறு பகுதிகள் உள்ள. புருஷம்-நபரை; வேத்த-தெரியுமா; அஹம்-நான்; தம்-அந்த; குமாரம்-இளவரசனிடம்; அப்ருவம்-சொன்னேன்; இமம்-இது; ந வேத-தெரியாது; யதி அவேதிஷம்-தெரிந்திருந்தால்; தே-உங்களுக்கு; கதம்-எப்படி; ந அவக்ஷ்யம்-சொல்லாமல் இருப்பேன்; ய-யார்; அன்ருதம்-பொய்யை; அபிவததி-சொல்கிறானோ; ஏஷ-அவன்; ஸமூவ-வேருடன்; பரிசுஷ்யதி வை-அழிந்தே போகிறான்; தஸ்மாத்-எனவே; அன்ருதம்-பொய்யை; வக்தும்-சொல்வதற்கு; ந அர்ஹாமி-துணிவு இல்லை; ஸ-அவர்; தூஷ்ணீம்-அமைதியாக; ரதம்-தேரில்; ஆருஹ்ய-ஏறி; ப்ரவவ்ராஜ-போய்விட்டார்; தம்-அதனை; த்வா-உங்களிடம்; ப்ருச்சாமி-கேட்கிறேன்; அஸெள-இந்த; புருஷ-நபர்; க்வ-எங்கே; இதி-என்று.
பொருள் : பிறகு பரத்வாஜரின் மகனான ஸுகேசன் பிப்பலாத முனிவரிடம் கேட்டார்:
தெய்வ முனிவரே! கோசல நாட்டு இளவரசனான ஹிரண்யநாபன் என்னிடம் பரத்வாஜரின் மகனே! பதினாறு பகுதிகள் உடைய நபரை உமக்குத் தெரியுமா? என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு நான் அவரிடம் தெரியாது. தெரிந்திருந்தால் உங்களிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை என்று கூறினேன். இதைக் கேட்டதும் அவர் அமைதியாகத் தேரில் ஏறிப் போய்விட்டார். அந்த நபர் எங்கே இருக்கிறார்? என்ற அந்தக் கேள்வியை இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்.

2. தஸ்மை ஸ ஹோவாச இஹைவாந்த சரீரே ஸோம்ய
ஸ புரு÷ஷா யஸ்யின்னேதா ÷ஷாடசகலா ப்ரபவந்தீதி

தஸ்மை-அவரிடம்; ஸ-முனிவர்; உவாச ஹ-கூறினார்; ஸோம்ய-இனியவனே; ஸ-புருஷ-அந்த நபர்; இஹ-இங்கே; அந்த; சரீரே-உடம்பினுள்; யஸ்மின்-யாரிடம்; ஏதா-இந்த; ÷ஷாடச கலா-பதினாறு பகுதிகள்; ப்ரபவந்தி-தோன்றுகின்றன; இதி-என்று.
பொருள் : ஸுகேசனிடம் பிப்பலாத முனிவர் கூறினார்:
இனியவனே! அந்த நபர் ஆன்மா, ஆன்மா இங்கே உடம்பின் உள்ளேயே உள்ளது. அதனிடமிருந்தே பதினாறு பகுதிகள் தோன்றுகின்றன.

பதினாறு பகுதிகள் என்பவை படைப்பின் பதினாறு அம்சங்கள் ஆகும். இது 4-இல் விளக்கப்படுகிறது.
3. ஸ ஈக்ஷõம்சக்ரே கஸ்மின் அஹமுத்க்ராந்த உத்க்ராந்தே
பவிஷ்யாமி கஸ்மின் வா ப்ரதிஷ்ட்டிதே ப்ரதிஷ்ட்டாஸ்யாமீதி

ஸ-ஆன்மா; ஈஷாம்சக்ரே-சிந்தித்தது; கஸ்மின்-யார்; உத்க்ராந்தே-வெளியேறுவதால்; அஹம்-நான் உத்க்ராந்த-வெளியேறியவனாக; பவிஷ்யாமி-ஆவேன்; கஸ்மின்-யார்; ப்ரதிஷ்ட்டிதே-நிலைபெறுவதால்; ப்ரதிஷ்ட்டாஸ்யாமி-நிலைபெறுவேன்; இதி-என்று.
பொருள் : யார் வெளியேறுவதால் நான் வெளியேறியவனாக ஆவேன்? யார் நிலைபெறுவதால் நான் நிலைபெறுவேன்? என்று ஆன்மா சிந்தித்தது.
ஒருவர் இறந்துவிட்டார் என்று எப்போதும் முடிவு செய்யப்படுகிறது? புலன்களோ மனமோ செயல் இழப்பதால் ஒருவர் மரணமடைவதில்லை. பிராணன் வெளியேறும் போதே ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார். அந்தப் பிராணன் எங்கிருந்து வந்தது என்று சிந்தனை அடுத்த மந்திரத்தில் தொடர்கிறது.
4. ஸ ப்ராணமஸ்ருஜத ப்ராணாச்சரத்தாம் கம்
வாயுர்ஜ்யோதிராப ப்ருதிவீந்த்ரீயம் மன: அன்னமன்னாத்வீர்யம்
தபோ மந்த்ரா கர்மலோகா லோகேஷு ச நாம ச

ஸ-அது; ப்ராணம்-பிராணனை; அஸ்ருஜத-படைத்தது; ப்ராணாத்-பிராணனிலிருந்து; ச்ரத்தாம்-புத்தி; கம்-ஆகாசம்; வாயு-காற்று; ஜ்யோதி-நெருப்பு; ஆப-நீர்; ப்ருதிவீ-பூமி; இந்த்ரியம்-புலன்கள்; மன-மனம்; அன்னம்-உணவு; அன்னாத்-உணவிலிருந்து; வீர்யம்-ஆற்றல்; தப-தவம்; மந்த்ரா-மந்திரங்கள்; கர்ம-கிரியைகள்; லோகா-உலகங்கள்; லோகேஷு-உலகில்; நாம ச-பெயர்கள்.
பொருள் : ஆன்மா பிராணனைப் படைத்தது. பிராணனிலிருந்து புத்தி, ஆகாசம், காற்று, நெருப்பு, நீர், பூமி, புலன்கள், மனம், உணவு ஆகியவை தோன்றின. உணவிலிருந்து ஆற்றல், தவம், மந்திரங்கள், கிரியைகள், உலகங்கள் எல்லாம் தோன்றின. உலகங்களில் பெயர்கள் படைக்கப்பட்டன.
பதினாறு பகுதிகள் உடையதாகக் கூறப்பட்ட அந்த ஆன்மாவே பிராணனைப் படைத்தது. உடம்பும் மனமும் எவற்றால் ஆக்கப்பட்டனவோ அந்தத் தூல, நுண் அம்சங்கள் பிராணனிலிருந்து தோன்றின. இந்தப் பதினாறு அம்சங்களும் ஆன்மாவின் பதினாறு பகுதிகள் என்று கூறப்பட்டன.
ஆன்ம அனுபூதி
5. ஸ யதேமா நத்ய ஸ்யந்தமானா; ஸமுத்ராயணா
ஸமுத்ரம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யதே தாஸாம் நாமரூபே
ஸமுத்ர இத்யேவம் ப்ரோச்யதே ஏவமேவாஸ்ய பரித்ரஷ்ட்டரிமா
÷ஷாடசகலா புநுஷாயணா புருஷம் ப்ராப்யாஸ்தம் கச்சந்தி பித்யேதே
தாஸாம் நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே
ஸ ஏ÷ஷா கலோ ம்ருதோ பவதி ததேஷ ச்லோக

ஸ-அந்த; யதா-எப்படி; இமா; இந்த; நத்ய-நதிகள்; ஸமுத்ராயணா-கடலை நோக்கி; ஸ்யந்தமானா; ஓடி; ஸமுத்ரம்-கடலை; ப்ராப்ய-அடைந்ததும்; அஸ்தம் கச்சந்தி-மறைகின்றன; தாஸாம்-அவற்றின்; நாமரூபே-பெயரும் வடிவங்களும்; பித்யதே-அழிந்துவிடுகின்றன; ஸமுத்ர-கடல்; இதி ஏவம்-என்றே; ப்ரோச்யதே-அழைக்கப்படுகிறது; ஏவம் ஏவ-அதுபோலவே; அஸ்ய-இந்த; பரித்ரஷ்ட்ட-பிராணன்; இமா-இந்த; ÷ஷாடசகலா-பதினாறு பகுதிகள்; புருஷாயணா-ஆன்மாவை நாவி; புருஷம்-ஆன்மாவை; ப்ராப்ய-அடைந்து; அஸ்தம் கச்சந்தி-மறைகின்றன; தாஸாம்-அவற்றின்; நாமரூபே-பெயரும் வடிவங்களும்; பித்யதே-அழிந்துவிடுகின்றன; புருஷ-ஆன்மா; இதி ஏவம்-என்றே; ப்ரோச்யதே-அழைக்கப்படுகிறது; ஸ-ஆன்மா; ஏஷ-இந்த; அகல-பகுதிகள் அற்றதாக; அம்ருத-மரணமற்றதாக; பவதி-ஆகிறது; தத்-அதுபற்றி; ஏஷ-இந்த; ச்லோக-மந்திரம்.
பொருள் : நதிகள் கடலை நோக்கி ஓடுகின்றன. கடலை அடைந்ததும் அதில் கலந்து மறைகின்றன; அவற்றின் நாமரூபங்கள் அழிந்துவிடுகின்றன. அதன்பிறகு எல்லாம் கடல் என்றே அழைக்கப்படுகிறது. அது போலவே (ஆன்ம அனுபூதிக்கு பிறகு) பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும் ஆன்மாவை நாடி, ஆன்மாவை அடைந்து அதில் மறைந்துவிடுகின்றன. அவற்றின் பெயரும் வடிவங்களும் அழிந்து விடுகின்றன. அனைத்தும் ஆன்மா என்றே அழைக்கப்படுகிறது. பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக ஆன்மா திகழ்கிறது. கீழ்வரும் மந்திரம் அதுபற்றி கூறுகிறது.
பரித்ரஷ்ட்டா என்றால் அனைத்தையும் காண்பவன் என்று பொருள். அனைத்தையும் இயக்குபவன் என்று கொள்ளப்பட்டு இங்கே பிராணன் என்ற பொருள் தரப்படுகிறது. ஆன்மாவிலிருந்தே பிராணன் முதலிய பதினாறு பகுதிகளும் தோன்றுகின்றன. ஒரு மனிதனின் உடம்பும் மனமும் அமைய இவை காரணமாக அமைகின்றன. இந்தப் பதினாறு பகுதிகளிலிருந்தும் உருவாகின்ற ஒன்றையே நாம் மனிதன் அல்லது தனிநபர் என்கிறோம். இந்த மனிதன் உண்மையை உணர்ந்து ஆன்மாவை நாடி, ஆன்ம அனுபூதி பெறும்போது இந்தத் தனித்துவம் மறைந்துவிடுகிறது. உடம்பு, மனம், பிராணன் என்ற பெயர்களும் வடிவங்களும் எல்லாம் மறைகின்றன. நதிகள் கடலில் கலப்பதுபோல் தனிநபர் சம்பந்தப்பட்ட அனைத்தும் ஆன்மாவில் கரைகின்றன.
தோன்றியதற்கே மரணம் வாய்க்கிறது. பதினாறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட தனிநபர் மரணமடைகிறார். ஆன்மா பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக என்றும்போல் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி பற்றிய ஒரு சித்திரம் இது.
ஆன்மாவை அறிந்து மரணத்தை வெல்லுங்கள்: 6-7
6 சீடர்களும் கேட்ட கேள்விகளுக்குரிய பதில்களைக் கூறியபிறகு. எனக்கு இவ்வளவே தெரியும். தெரிந்ததை உங்களுக்குக் கூறினேன் என்று பணிவுடன் தெரிவித்து, அவர்களைப் பிப்பலாத முனிவர் வாழ்த்துவதுபோல் இந்த மந்திரங்கள் அமைகின்றன.
6. ஆரா இவ ரதநாபௌ கலா யஸ்மின் ப்ரதிஷ்ட்டிதா
தம் வேத்யம் புருஷம் வேத யதா மா வோ ம்ருத்யு பரிவ்யதா இதி

ரதநாபௌ-தேர்ச்சக்கரத்தின் அச்சில்; அரா-ஆரக்கால்கள்; இவ-போல்; யஸ்மின்-யாரில்; கலா-பகுதிகள்; ப்ரதிஷ்ட்டிதா-நிலைபெற்றுள்ளனவோ; வேத்யம்-அறிவதற்குரிய; தம்-அந்த; புருஷம்-ஆன்மாவை; வேத-அறியுங்கள்; யதா-எப்படி; வ-உங்களை; ம்ருத்யு-மரணம்; மா பரிவ்யதா-தீண்டாமல்; இதி-என்று.
பொருள் : தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவது போல், யாரில் பதினாறு பகுதிகள் நிலைபெற்றுள்ளனவோ, அறிவதற்குரிய அந்த ஆன்மாவை அறியுங்கள். அதன்மூலம் மரணம் உங்களைத் தீண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
7. தான் ஹோவாச ஏதாவதேவாஹமேதத் பரம்
ப்ரஹ்ம வேத நாத பரமஸ்தீதி

தான்-அவர்களிடம்; உவாச ஹ-கூறினார்; அஹம்-நான்; ஏதத்-இந்த; பரம்-மேலான; ப்ரஹம்-ஆன்மா; வேத-அறிந்தது; ஏதாவத்-இவ்வளவே; அத பரம்-இதற்கு மேலாக; ந அஸ்தி-இல்லை; இதி-என்று.
பொருள் : கடைசியாக பிப்பலாத முனிவர் அந்தச் சீடர்களிடம், மேலான ஆன்மாவைப்பற்றி எனக்குத் தெரிந்தது இவ்வளவே. இதற்கு மேலாக எதுவும் இல்லை என்று கூறினார்.
சீடர்கள் நன்றி கூறுதல்
8. தே தமர்ச்சயந்தஸ்த்வம் ஹி ந பிதா யோ ஸ்மாகமவித்யாயா
பரம் பாரம் தாரயஸீதி நம பரமரிஷிப்யோ நம பரமரிஷிப்ய

தே-அவர்கள்; தம்-முனிவரை; அர்ச்சயந்த-வழிபட்டு; த்வம் ஹி-நீரே; ந-எங்கள்; பிதா-தந்தை; ய-யார்; அஸ்மாகம்-எங்களை; அவித்யாயா-அறியாமைக் கடலின்; பரம்-மேலான; பாரம்-கரைக்கு; தாரயஸி-கூட்டிச் சென்றீர் ; பரமரிஷிப்ய-தெய்வ முனிவர்களுக்கு; நம-வணக்கம்.
பொருள் : அந்தச் சீடர்கள் ஆறு பேரும் பிப்பலாத முனிவரை வழிபட்டு கூறினர்:
நீரே எங்கள் தந்தை. அறியாமைக் கடலின் மேலான மறுகரைக்கு எங்களைக் கூட்டிச் சென்றவர் நீரே. உமக்கும் உம்மைப் போன்ற தெய்வ முனிவர்களுக்கும் எங்கள் வணக்கம். தெய்வ முனிவர்களுக்கும் எங்கள் வணக்கம்.

ஆன்ம அனுபூதி பெற்று, அதன்மூலம் மரணத்தை வெல்வதற்கு வழிகாட்டிய குருவாகிய பிப்பலாத முனிவரையும், ஆன்மீக வாழ்க்கையை நாடுகின்ற அனைவருக்கும் அருள் புரியக் காத்திருக்கும் மற்ற மகான்களையும் வணங்கி ஆறு சீடர்களும் விடைபெறுகின்றனர். இவ்வாறு இந்த உபநிஷதம் நிறைவுறுகிறது.
இதி ப்ரச்னோபநிஷதி ஷஷ்ட்ட: ப்ரச்ன:
பிரச்ன உபநிஷதம் நிறைவுபெறுகிறது.
(நன்றி: ராமகிருஷ்ண மடம், )www.dinamalar.com.

No comments:

Post a Comment