Search This Blog

Thursday, May 5, 2011

கீதை காட்டும் பாதை. -முனைவர். சி. சேதுராமன்.

கீதை காட்டும் பாதை.
-முனைவர். சி. சேதுராமன்.
பகவத்கீதை மகாபாரதத்தின் ஒரு கூறாக அமைந்துள்ளது. பாண்டவர் -கௌரவர்களிடையே மூண்ட பெரும் போர்க்களத்தின் நடுவில் இறைவன் கண்ணனால் அர்ஜுனனுக்கு எடுத்துரைக்கப்பட்ட நூல் பகவத்கீதையாகும். இம்மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்றும் கூறுவர். போர்க்களத்தினூடே மனதை ஒருநிலைப்படுத்தக் கூறப்பட்ட யோகமுறைகளே பகவத்கீதையாகும்.
பகவத்கீதையின் சிறப்பு
"அமிர்த சாத்திரம்" - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாத்திரமாகிய பகவத்கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும் இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச்சிலர் கருதுகின்றனர்.
இவ்வுலகில் அனைவரும் மன உளைச்சலுடன் வாழ்கின்றனர். அல்லது அச்சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மன உளைச்சல் பல்வேறு விதமான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடுகின்றது. மனிதன் இம்மன உளைச்சலால் பல துன்பங்களுக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் ஆளாகின்றான். இத்தகைய துன்பங்களில் இருந்து அவன் விடுபட்டு மன அமைதியுடன் வாழ வேண்டும். இத்தகைய மன அமைதியுடன் வாழும் வாழ்க்கையைப் பற்றியே பகவத்கீதை எடுத்துரைக்கின்றது.
உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன. உளத்திற்கு ஊறு நேரிட்டால் அது உடலைப் பாதிக்கின்றது. உளம் அமைதி அடைந்தால் உடல் நலம் பெறுகின்றது. அத்தகைய உள அமைதியை நல்கும் உன்னத நூலாகப் பகவத்கீதை இருக்கின்றது. போர்க்களம் என்பது இவ்வுலக வாழ்க்கை. அதில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகள் அனைத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகள். போராட்டம் நிறைந்த வாழ்வில் மனம் தடுமாற்றம் அடையாது வாழ்வதே உண்மையான வாழ்க்கை; அதுவே யோக வாழ்வு. இத்தகைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்று கூறும் வாழ்வியல் சாஸ்திரமாக பகவத்கீதை அமைந்திலங்குகிறது.
பகவத் கீதை தரும் யோகம் பற்றிய விளக்கம்
பகவத்கீதை மனம் இறைவனுடன் இணையும் வழியை எடுத்துரைக்கின்றது. இறைவனுடன் உயிரானது இணைகின்ற நெறிகளை யோகமாகக் கூறுகிறது. யோகமாவது சமத்துவம் ஆகும். இதனை,மத்வம் யோக உச்யதே என்று பகவத்கீதை மொழிகிறது. அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி என்பது இதன் நுவல் பொருளாகும்.
நீ ஒரு பொருளுடன் உறவாடும் போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.யோகத குரு கர்மாணி’’ என்று பகவத்கீதையில் கடவுள் கூறுகிறார்.யோகத்தில் நின்று தொழில்களைச் செய்” என்பது இதன் விளக்கமாகும்.
யோகநெறியில் வாழ்பவன் யோகி ஆவான். யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவு போல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கும் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதை காண்கிறான்.
பகவத் கீதை தர்ம சாத்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோட்ச சாஸ்திரம். மனிதன் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோட்ச மார்க்கத்துக்கு விரோதமென்று பலர் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத்தொழில் செய்’’, “தொழில் செய்’’ என்று போதிக்கின்றார். இதனால், அதனை வெறுமனே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.
இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது. பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு.சம்சயாத்மா விநச்யதி”, “ஐயமுற்றோன் அழிவான்என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.
ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக.” இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிட வேண்டும். இந்த விஷயத்தைப் பகவத்கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீண்டும் மீண்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக் கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.
நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையும் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும் தீராத சயரோகத்தில் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையும் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் சயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. சயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும் அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாக்கிக் கொண்டு, சயரோகி என்று தனக்கொரு பட்டம் சூட்டிக்கொண்டு வருந்திு மடிவது போல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளிவிடுவான்.
ஞானயோகம்
ஞானக் நிர்வ கர்மாணி பமத் குருதே” - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது. கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அக வாயிலாவேனும் புற வாயிலாலேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோமாதலின். ஆனால், அதிலிருந்து இது ஞான சாத்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது. ‘‘முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே,தமாத் யுத்ய வ பாரத-ஆதலால், பாரதா, போர் செய், என்ற பல்லவி வந்து கொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் மறுக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதனை, இங்கு மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது நலம் பயப்பதாகும்.
துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன்- ஜீவாத்மா. கிருஷ்ணன் பரமாத்மா. இதுவே உண்மை. இங்ஙனம் வாழ்க்கையை நலமுடன் அனைவரும் மேற்கொள்ளக் குறியீடுகளைக் கொண்டு இறைவன் கிருஷ்ணன் விளக்கிச் செல்கிறார்.
கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்;
நீ வாயு; நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்” (கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )
கண்ணன் சொல்லுகிறான்;
 “மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)
நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’’ - (கீதை 10- ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)
எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும், கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள். கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாத்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ள இயலும்.
இயற்கை விதிப்படி வாழ்வதே யோகம்
கடவுளை வழிபாடு செய்வது எங்ஙனமென்பதை, கிருஷ்ணன் சொல்லுகிறார்
நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)
எந்த உயிரகளுக்கும் துன்பம் செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த உயிரையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த உயிரையுங் கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருதத்தகார். மாமிச உணவை உண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.அரிம் பரமோ தர்ம’’ -கொல்லாமையே முக்கிய தர்மம் என்பது. ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர்common sense என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும். சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் மனிதர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில்,நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும் என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.
நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கை இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது. நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் .ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துக் கொண்டுமிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக் கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.
கர்ம யோகம்
கீதையிலே பகவான் சொல்லுகிறான் -அர்ச்ஜுனா! மூன்றுலகங்களிலும் இனிச் செய்யவேண்டியதென மிஞ்சி நிற்கும் செய்கையொன்றும் எனக்குக் கிடையாது, அடையத் தக்கது, ஆனால், என்னால் அடையப் படாதது, எனவொரு பேதமில்லை எனினும், நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன்ஏனெனில், கடவுள் சொல்லுகிறான் -நான் தொழில் செய்யாது வாளா இருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும் என் வழியையே பின்பற்றும். அதனால், இந்த உலகத்துக்கு அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரண பூதனாகும்படி நேரும். அது நேராதபடி நான் எப்போதும் தொழில் செய்து கொண்டேயிருக்கிறேன்’’ என்று கூறுகிறார். செயல் செய்வதே யோகமாகும். அது கர்ம யோகமாகும். கர்மயோகம் செய்பவன் கர்ம யோகியாவான். கடவுளும் கர்ம யோகியாவர்.
கடவுள் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருக்கிறான். அவன் அண்டகோடிகளைப் படைத்த வண்ணமாகவும் காத்த வண்ணமாகவும் அழித்த வண்ணமாகவும் இருக்கிறான். இத்தனை வேலையும் ஒரு சோம்பேறிக் கடவுள் செய்ய முடியுமா? கடவுள் கர்ம யோகிகளிலே சிறந்தவன். அவன் ஜீவாத்மாவுக்கும் இடைவிடாத தொழிலை விதித்திருக்கிறான்; சம்சாரத்தை விதித்திருக்கிறான்; குடும்பத்தை விதித்திருக்கிறான்; மனைவி மக்களை விதித்திருக்கிறான்; சுற்றத்தாரையும் அயலாரையும் விதித்திருக்கிறான். நாட்டில் மனிதர் கூட்டுறவைத் துறந்து ஒருவன் காட்டுக்குச் சென்ற மாத்திரத்திலே அங்கு அவனுக்கு உயிர்க் கூட்டத்தின் சூழல் இல்லாமற் போய்விட மாட்டாது.
எண்ணற்ற விலங்குகளும், பறவைகளும், ஊர்வனவுமாகிய உயிர்களும், மரம், செடி, கொடிகளாகிய உயிர்ப் பொருள்களும் அவனைச் சூழ்ந்து நிற்கின்றன. சூழ மிருகங்களை வைத்துக் கொண்டு, அவற்றுடன் விவகரித்தல் மனிதக் கூட்டத்தினரிடையே இருந்து அதனுடன் விவகரிப்பதைக் காட்டிலும் எளிதென்றேனும் கவலைக் குறைவுக்கு இடமாவதென்றேனும் கருதுவோன் தவறாக யோசனை எண்ணுகிறான். மனிதர் எத்தனை கொடியோராயினும், மூடராயினும், புலி, கரடி, ஓநாய் நரிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் அவர்களிடையே வாழ்வதும் ஒருவனுக்கு அதிக நன்மை பயக்கத் தக்கது என்பதில் ஐயமில்லை. ஆனால்,கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழும் காடும் நன்றே’’ என்று முன்னோர் குறிப்பிட்டபடி, கடும்புலி வாழும் காட்டைக் காட்டிலும் நாட்டை ஒருவனுக்கு அதிகமாக நடமாக்கூடிய மனிதரும் இருக்கக் கூடுமென்பது மெய்யே. ஆனால் இந்நிலையைப் பொது விதியாகக் கருதலாகாது.
பெண்டு பிள்ளைகளைத் துறந்துவிட்ட மாத்திரத்திலேயே ஒருவன் முக்திக்குத் தகுதியுடையவனாக மாட்டான். இஃதே பகவத்கீதையில் உபதேசிக்கிற கொள்கை. பெண்டு பிள்ளைகளையும் சுற்றத்தாரையும் இனத்தாரையும் நாட்டாரையும் துறந்து செல்பவன் கடவுளுடைய இயற்கை விதிகளைத் துறந்து செல்கிறான். மனித சமூக வாழ்க்கையைத் துறந்து செல்வோன் வலிமையில்லாமையால் அங்ஙனம் செய்கிறான். குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான்.
பாவம் புண்ணியம்
தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத் தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செயல் புண்ணியச் செயல் எனப்படும். ஒருவனுக்கு மனைத் துறவைக் காட்டிலும் அதிகத் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை வேறொன்றுமில்லை.
இல்லாளகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை ஸ்ரீ கற்புடைய மனைவியுடன் காதலுற்று, அறம் பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலையன்று. வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச் சிகரத்தையடுத்ததொரு முழையிலே கடவுளைக் காணமாட்டான். கடவுள் எங்கிருக்கிறார்? எங்கும் இருக்கிறார். மலைச் சிகரத்திலே மாத்திரமா இருக்கிறார்? வீட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்.அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ எங்கும் 'ஏன்? ஏன்?' என்ற தென்னே பராபரமே?” என்று தாயுமானவர் பாடியுள்ளார்.
இவ்வுலகத்தில் மனிதர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று கருதலாம். இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து உயிர் வாழ வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. நனவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.
உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் - கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லாப் பெரியவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள். இந்த மகத்தான உண்மையையே கீதை உபதேசிக்கிறது.
கீதை கூறக்கூடிய யோகம் மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்குரிய வாழ்வியல் யோகமாகும். இயற்கை விதியை மீறாது தனது கடமைகளைச் செய்து, அனைத்துயிர்கள் மீதும் அன்பு செலுத்தி வாழ்பவன் யோகியாவான். அவன் கர்மங்களைச் செய்கின்ற போது கர்மாயோகி என்றழைக்கப்படுகின்றான். கடமையாகிய யோகத்தைச் செய்து கீதை காட்டிய வழியில் வாழ்ந்தால் யோகநிலையில் உயர்நிலையை மனிதன் அடைவது திண்ணம். கடமையைச் செய்வோம்! யோக நெறி வாழ்வோம்.

No comments:

Post a Comment