Search This Blog

Tuesday, May 3, 2011

குறுந்தொகைக் கதைகள்-2

காதல் கடக்கும் நிலம்
-முனைவர். மா. தியாகராஜன்.
அந்தக் கிராமத்தின் அகன்ற தெரு ஒன்றில் அழகாய் அமைந்த ஒரு வீடு.

அவ்வீட்டைச் சுற்றிலும் உயரே எழுப்பப்பட்ட மதிற்சுவர்! யாரும் எளிதில் உள்ளே நுழையவோ, உள்ளிருந்து வெளியே செல்லவோ முடியாது. அந்த அளவுக்குப் பாதுகாப்பாய் அமைந்த வீடு! அவ்வீட்டின் ஓர் அறை.

அங்கே அன்னம் கவலை கவ்விய முகத்துடன் - கண்ணீர் வடியும் கண்களுடன் தரையிலே அமர்ந்து கன்னத்தில் கையை வைத்தபடி, குனிந்தபடி இருந்தாள். அருகில் தோழியும் அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.

நேரம் சிறிது நகர்ந்தது! தோழி கண்ணி அன்னத்தின் அருகே மெதுவாய் நகர்ந்து வந்தாள்; தோழி கண்ணியைப் பார்த்தாள்; உடனே குபுகுபுவெனக் கண்ணீர் கொட்டினாள்; தோழியின் தோளில் சாய்ந்து கொண்டாள்; தேம்பித் தேம்பி அழுதாள்.

அது கண்ட தோழி, அன்னத்தைத் தாங்கிக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்து, “அன்னமே! அழாதே! எல்லாம் விதியின் படியே நடக்கும். நம் கையில் எதுவும் இல்லை. வருந்தாதே! வருந்தி அழுவதால் வரப்போவது ஒன்றும் இல்லை. ஆனால் உன்னுடைய பண்புக்கும் உறுதிக்கும் நல்லதே நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் கொஞ்சம் பொறுமையாய் இரு!” என்று தேற்றினாள்.

கண்ணி! எப்படிப் என்னைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறாய்? எதைத்தான் நான் பொறுத்துக் கொள்வேன்?
பகல் பொழுதில் நம்முடைய தினைப்புனத்தில் தினந்தோறும் பாசத்திற்குரியவரைச் சந்தித்துப் பழகி வந்தேன் - இன்பமாக இருந்தது. அதைக் கண்டு கொண்ட நம் பெற்றோர் அதைத் தடுத்து விட்டார்கள். தினைப்புனத்திற்குச் செல்லக்கூடாது என்று தடை போட்டு விட்டார்கள்.
அதன் பிறகு இடையூறுகள் பலவற்றுக்கிடையே இரவு நேரங்களில் அவரைச் சந்தித்து இன்பம் கண்டு வந்தேன். அதையும் கண்டு கொண்ட பெற்றோர் அதற்கும் வேலியிட்டு விட்டார்கள் - வீட்டை விட்டு வெளியே செல்லவே கூடாது என்று தடை ஆணை பிறப்பித்து விட்டார்கள்.
அவரைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டனவே! என்னடி கண்ணி நான் செய்வேன்? எப்படியடி தோழி இத்துன்பத்தை நான் பொறுத்துக் கொள்வது? அவரைச் சந்திக்காமல் என்னால் இருக்கவே முடியவில்லை! வாழவே பிடிக்கவில்லை! இவ்வேதனையை எப்படித் தாங்கிக் கொள்வது?” என்று கூறிப் புலம்பியபடியே வாய்விட்டு அழுதாள்; முகத்தைத் தோழியின் தோளில் புதைத்தாள்; விம்மி விம்மி அரற்றினாள்.
சிறிது நேரம் சென்றது. தீடீரென்று நிமிர்ந்தாள்; கண்ணீரை முந்தானையால் துடைத்தாள்; தோழியைப் பார்த்தாள்:
“ஏண்டி கண்ணே! எனக்கொரு திட்டம் தோன்றுகிறது. அதன்படி செய்தால் என்ன?” என்றாள்.
“என்ன திட்டம்? என்ன அது? சொல்!” என்றாள் தோழி.
அன்னம் சுற்றும் முற்றும் பார்த்தாள்; கண்ணியின் காதருகே சென்றாள்; மெதுவாகப் பேசினாள்:
“நானும் அவரும் யாருக்கும் தெரியாமல் இந்த ஊரை விட்டே போய்விட்டால் என்ன? அப்பொழுது யாரும் தடுக்க முடியாது அல்லவா? எப்படி என் திட்டம்?” என்றாள்.
“என்னம்மா சிறு பிள்ளை போல் பேசுகிறாய்? காவலோ கடுமை! இங்கிருந்து எப்படித் தப்பித்துச் செல்வாய்? ஆபத்தான திட்டமாய் இருக்கிறதே! அதுவெல்லாம் வேண்டாம் அம்மா” என்றாள் கண்ணி.
“நான் எப்படியாவது தப்பி விடுகிறேன்! அவருடைய எண்ணத்தை மட்டும் நீ தெரிந்து வா முதலில். அவர் சரியென்று ஒப்புக் கொண்டால் நான் எப்படியும் தப்பி வெளியில் வந்துவிடுவேன். நீ போய் அவர் கருத்தைத் தெரிந்து வா!” என்று விரைவுபடுத்தினாள்.
கண்ணியும் வேறு வழியின்றி, அஞ்சி நடுங்கியபடியே எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தாள்.
கண்ணி நேரே வழக்கமாகப் பொன்னன் காத்திருக்கும் இடத்திற்கு வந்தாள்.
அங்கே பொன்னனும் அல்லல் உற்று, ஆற்றாது, அழுத கண்ணீருடன் வீற்றிருந்தான். கண்ணியைக் கண்டவுடன் ஏதேனும் நல்ல செய்தி கொண்டு வந்திருப்பாள் என்ற ஆவலில் விரைந்து எழுந்தான்.
“என்ன கண்ணி? அன்னம் எப்படி இருக்கிறாள்? என்ன சொன்னாள்? சொல்!” என்று வேகமாய்க் கேட்டான்.
“தலைவா! இனிமேலும் காவலைப் பொறுத்துக் கொள்ள முடியாது - இனியும் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று புலம்பிக் கொண்டே இருக்கின்றாள் அன்னம். எனவே, உங்களுடன் உடன்போக்கு மேற்கொள்ள விரும்புகின்றாள், தங்களுடன் சேர்ந்து வேறு ஊருக்குச் சென்றுவிடக் கருதுகின்றாள். தங்கள் எண்ணத்தை அறிந்து வரச் சொன்னாள்” என்றாள் கண்ணி.
அதைக்கேட்ட பொன்னன் அகம் மகிழ்ந்தான்:
“அப்படியா! அன்னம் சொன்னாளா? நல்லது! நல்லது! நன்று! மகிழ்ச்சி! அப்படியே செய்வோம்!” என்று வேகமாக அகம் விஞ்சிய மகிழ்ச்சியோடும் கூறினான்; குதித்தான் குதூகலத்தில்.
உடனே......?
திடீரென்று, எதையோ எண்ணிப் பார்த்தவன் போல், “ஆனால்...........!” என்று இழுத்துப் பேசினான்.
“என்ன... ஆனால்?” என்று கேட்டாள் கண்ணி.
“ஒன்றும் இல்லை! அப்படிப் போகும் பொழுது கடந்து போக வேண்டிய வழியைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அது தான் தயக்கம்!”
“என்ன? வழி எப்படிப்பட்டது?” - கண்ணி.
“பாலை நிலம்!” - பொன்னன்.
“எல்லார்க்கும் தெரிந்தது தானே!” - கண்ணி.
“எல்லார்க்கும் தெரிந்தது தான்! ஆனால் அதனைக் கடப்பது கடுமை அல்லவா?” - பொன்னன்.
“எப்படிக் கடுமையானது” - கண்ணி
“பாதையோ கடுமையானது; பயணமோ கொடுமையானது; வீசும் வெப்பமோ எரித்து விடுவது போல் இருக்கும்; தாகத்தைத் தணித்துக் கொள்ள தண்ணீரே கிடைக்காதே; நின்று இளைப்பாற நிழல் கூடக் கிடையாதே. அவ்வளவு கொடுமையானது. தலைவியோ மென்மையானவள். எப்படி அதைத் தாங்கிக் கொள்வாள்?” என்று வருத்தத்துடனும் அச்சத்துடனும் சொன்னான்.
தோழி, “அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்! அன்னம் கொண்டுள்ள உறுதிப்பாட்டினால் அவற்றை எல்லாம் தாங்கிக் கொள்வாள்.
உன்னோடு அவள் வந்தாலே பாலையும் அவளுக்குச் சோலையாகத் தோன்றும்.
குவளை மலர் நீரிலே வாழ்கிறது. ஆனால் அதன்மீது வெப்பம் மிகுந்த மேல் காற்று வீசுகிறது. அதனால் அந்த மலர் கருகியா விடுகிறது?
அவள் குவளை மலரைப் போன்றவள். நீரோ நீரைப் போன்றவர்; உங்களுடைய அன்பு என்னும் நீர் அவளுக்குக் கிடைத்து விட்டால் பாலை என்னும் வெளிவெப்பம் அவளை ஒன்றும் செய்யாது. அதை அவள் தாங்கிக் கொள்வாள். நீங்கள் செல்லப் போகும் பாலை நிலம் இடையில் தோன்றிய நிலம் - முதுவேனில் காலத்தில் வீசிய வெப்பத்தைத் தாங்க முடியாமல் முல்லை நிலம் பாலையாக மாறி உள்ளது. அந்நிலம் முல்லையாக இருந்த போது அங்கு முளைத்துக் கிளைத்துத் தழைத்துக் கிடந்த மூங்கில் மரங்கள் இப்பொழுது பசிய கிளைகளை இழந்து விட்டன; வற்றி உலர்ந்து போய் விட்டன; வரிசை வரிசையாய் நிற்கின்றன - கவனைப் போன்ற பூட்டுங்கயிற்றால பூட்டப்பட்ட எருதுகளைக் கொண்ட உப்பு வணிகர் வண்டிகளில் உள்ள குத்துக் கோல்களைப் போல் வரிசை வரிசையாய் நிற்கின்றன. வேறு உணவு எதுவும் அங்குக் கிடைக்காமையால் உலர்ந்து போன அந்த மூங்கில் கிளைகளையாவது ஒடித்து உண்ணலாமே என்ற ஆவலில் யானை ஒன்று வருகிறது.

ஆனால், அதை ஒடிக்கக்
கூட அதற்கு வலிமை இல்லை. காரணம், நீண்ட நாள்களாக அப்பாலையில் உணவு எதுவும் கிடைக்காமையால் உடல் பலம் குன்றிப் போய்விட்டது - உலர்ந்த கிளைகளை எளிதாக உடைக்கலாம். ஆனால், அந்த யானையால் அதைக்கூட ஒடிக்க முடியவில்லை. அந்த அளவுக்குப் பல நாள் பட்டினி கிடந்தமையால் பலம் இழந்து நிற்கிறது. அவ்வளவு கொடுமையானதுதான் அந்தப் பாதை - அந்தப் பாலை. அதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் அந்தப் பாலையும், உன்னுடன் தலைவி வருவதால் அவளுக்கு இனிமையாகவே இருக்கும் - கொடுமையின் கடுமை கடுகளவும் அவளுக்குத் தோன்றாது.

உன்னுடைய பிரிவுதான் அவளுக்குப் பெருந்துன்பம். உன்னுடைய பிரிவைக் காட்டிலும் அப்பெருங்காடு சுடுமோ? சுடாது! எனவே, நீ அதைப் பற்றி நினைக்க வேண்டியது இல்லை
. நினைத்து வருந்த வேண்டியது இல்லை. அவற்றை எல்லாம் அவள் தாங்கிக் கொள்வாள்.

ஆகவே, உடனே அவளை உடன் அழைத்துக் கொண்டு எங்கேயாவது சென்று விடு! அதற்கான முயற்சியை உடனே மேற்கொள்வாயாக!” என்று தோழி வற்புறுத்தி, வலியுறுத்திக் கூறினாள்.
“நீர்கால் யாத்த நிரை இதழ்க்குவளை
கொடை ஒற்றினும் வாடா தாகும்;
கவணை அன்னபூட்டும் பொழுது அசா ஆ
உமன் எருத்து ஒழுகைத் தோடு
நிரைத்தன்ன
முளைசினை பிளக்கும் முன்பு
டூன்மையின், யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே”
(குறுந்தொகைப்பாடல்)

No comments:

Post a Comment