செய்நன்றி கொல்லலாமா?
சேவக்ராம் என்று ஒரு சாது இருந்தார். அவர் ஒரு வடமொழி வல்லுநர். ஒரு நாள் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவரிடம் ஆயிரக்கணக்கில் தங்கக் காசுகள் இருந்தன. இருந்தாலும் அவரைப் பார்த்துக் கொள்ள ஒருவருமில்லை. எனவே அவர் துயரம் தாங்காது அழ ஆரம்பித்து விட்டார். வேங்கடாத்ரி என்னும் திருப்பதியிலிருந்து சேதுபந்தனம் எனப்படும் இராமேஸ்வரம் வரை பாதயாத்திரை சென்று கொண்டிருந்த நீல்கண்ட்வர்ணி வழியில் சேவக்ராமின் இந்த அவல நிலையை காண நேரிட்டது. அவர் சேவக்ராமிடம் சென்று “வருந்தாதீர்கள், நான் உங்களுக்கு வேண்டியதை செய்கிறேன்” என்று ஆறுதலாகக் கூறினார்.
அவ்வாறே தினமும் நீல்கண்ட் சேவக்ராமிற்காக வாழை இலைகளை கொண்டு படுக்கைகள் தயாரித்தார். சேவக்ராம் மலஜலம் கழித்து வீணாக்கிய துணிமணிகளைத் துவைத்துச் சுத்தம் செய்தார். அவருக்கு வேண்டிய சாப்பாட்டினைத் தயாரித்துக் கொடுத்தார். ஆனால் நீல்கண்ட் தனக்கு வேண்டிய உணவினை, தானே பிச்சை எடுப்பதன் மூலம் பெற்றுத் தயாரித்துக் கொண்டார். பல நேரங்களில் அவருக்கு பிச்சையாக எதுவும் கிடைக்காது. அப்போதெல்லாம் பட்டினியாகயிருந்து விடுவார். இவையெல்லாம் தெரிந்தும் சேவக்ராம் நீல்கண்டிற்குச் சாப்பிடுவதற்கு கொஞ்சம்கூட பணம் தரவில்லை, தன்கூட சாப்பிடுவதற்கும் அழைக்கவுமில்லை.
இவ்விதமாக நீல்கண்ட் சேவக்ராமிற்கு முன்போல நலம்பெற பணிவிடை செய்து வந்தார். நாளடைவில் சேவக்ராம் 750 கிராம் நெய் சாப்பிடுமளவிற்கு தேறியிருந்தார். ஆனால் அவர் 20 கிலோ எடையுள்ள சாமான்களை நீல்கண்டை தூக்கிவரச் செய்வார். அவருக்கு நீல்கண்ட் பற்றி அக்கறை எதுவுமில்லை. அவரது பெயர் தான் சேவக்ராம் தவிர, மற்றவர்களைத்தான் அவர் தனது பணியாளர்களாக்கிக் கொண்டார். நீல்கண்ட் மனதில் இந்த சேவக்ராம் நன்றி கெட்டவரென்று கருத்து தோன்றியது. உடனே அவரை விட்டுட்டு நீல்கண்ட்வர்ணி வெளியே வந்துவிட்டார்.
அதுதான் நீல்கண்ட்வர்ணிஸா அவர் சுயநலம் சிறிதுகூட இல்லாது அனைவருக்கும் அன்புடன் தொண்டாற்றினார். அவர் தன்னுடைய தேகநலத்துக்குகூட ஒன்றும் செய்து கொண்டதில்லை. மற்றவர்களுக்கு அன்புடன் தொண்டு செய்வது போதுமென்று வாழ்ந்தார். இந்த விலை மதிக்க முடியாத அரிய மனிதப்பிறவி அடைந்ததில் நாம் மிகவும் பேறுபெற்றவர்கள், நமக்கு இறைவன் அளித்துள்ள இத்தனை அரிய பேறுகளுக்கெல்லாம், இறைவனுக்கு நன்றி காட்டாமலும், சத்சங்க் என்ற கூட்டுவழிபாடு செய்யாது இருந்தாலும், நாமும் சேவக்ராம் போல செய்நன்றி கொன்றவர்களாவோம்.
-துளசிதாஸ் எஸ் ராஜகோபாலின் அருள்வாழ்வு மணிமாலையிலிருந்து
தொகுத்து வழங்கியவர்: சந்தியா கிரிதர்.
தொகுத்து வழங்கியவர்: சந்தியா கிரிதர்.