Search This Blog

Sunday, May 3, 2020

சூரியனை நேர்ந்து கொண்டிருப்பவள்


நான் எப்பொழுதும் காதலானவள்
இப்படித்தான் உணர்கிறேன்
வளர் இளம் பருவத்தில்
எத்தனை அன்பின் இடுகைகள்
அறிந்தும் அறியாமலும் வளர்ந்தேன்
வகுப்பறையில்
நண்பன் ஒருவன் மூங்கில் கழியினால்
அடிவாங்கிக்கொண்டிருக்கையில்
அதே செயலுக்காக
தப்பித்துக் கொண்டிருந்தேன்
தவறு செய்திருந்த போதும்
தண்டனைகளிருந்து
என்னைக் காக்க
ஓராயிரம் கண்களும்
ஓராயிரம் உதடுகளும் இருந்தன
சற்று வளர்ந்தேன்
இளமை
எனக்குப் பாதுகாப்பு வளையமாகவே
மாறியிருந்தது
இன்னும் வளர்ந்தேன்
வயது சுடர்கையில்
என்னைக் கைக்கொள்ள நினைத்தவர்
எத்தனை பேரென்று
நான் அறிந்திருக்கவில்லை
மென்காற்று வீசுகையில் மதர்த்தெழும்
என் அழகில் மயங்கிக் கிடந்த நான்
வானத்தையளக்கும் பறவையை
முற்றுமறிந்த கணத்தில்
பெண் என்பவள்
கையப்படுத்தப்படும் நிலம் அல்லவென
உணர்ந்து
நிமிர்ந்தேன்
நிலவு என் கைகளில்
என்னை வந்தடைந்த
நிலவை அணைத்தபடி
சூரியனை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறேன் .
Sakthi Jothi
" சொல் எனும் தானியம்" தொகுப்பிலிருந்து. 

No comments:

Post a Comment