எனக்கு பிடித்த ஓஷோ கதையை இங்கே பதிவிடுகிறேன்.
கடவுள் இந்த உலகத்தைப் படைத்துவிட்டு, இங்கேயே தங்கிவிட்டார்.
அப்பொழுது தான் அவர் செய்த தவறு அவருக்கே புரிந்தது . தினம் எதாவது புகார் கொடுக்க மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லை. சில பேர்கள் வந்து , என் பயிர் காய்கிறது . இன்று எனக்கு மழை தேவை. அடுத்து சிலர் வந்து இன்று மழை கூடாது. அது என் வேலையை பாதித்து விடும் .நான் களிமண் பானை செய்து சுடுகிறேன்.
இப்படி நிறைய புகார்கள் முரண்பாடாக வந்து கொண்டே இருந்தது.
கடவுள் கிட்டத்தட்ட பைத்திய நிலைக்கே சென்றுவிட்டார். அவருக்குச் சரியான தூக்கமும் இல்லை. எல்லாருடைய ஆசைகளையும், தேவைகளையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தது .
பிறகு ஒரு நாள், தன் மந்திரி சபையைக் கூட்டி, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்.
அதில் ஒரு சிலர், இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை . நீங்கள் இமயமலைக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வந்து யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்றார்கள்.
கடவுள் சிறிது யோசனை செய்து அது சரி வராது. எட்மண்ட் ஹில்லாரியும், டென்சிங்கும் அங்கு வர இருக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராக அங்கேயும் வர ஆரம்பித்து விடுவார்கள்.
வேறு யோசனை சொல்லவும் என்றார். அடுத்து ஒரு சிலர், சந்திரனுக்குச் செல்லலாமே? என்றார்கள். கடவுள் அதற்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆளைத் தயார் பண்ணிக் கொண்டிருகிறது என்றார்.
சரி எதாவது தொலைதூர நட்சத்திரத்திற்குச் செல்லலாம் என்றார்கள் மற்றும் சிலர்.
கடவுள் இதெல்லாம் நிரந்தர தீர்வு ஆகாது எனக்கு நிரந்தரமாக இந்த மனிதத் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றார்.
பிறகு , கடவுளுடைய பழைய வேலையாள் வந்து, மெல்ல அவர் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார் . உடனே கடவுள் முகம் மலர்ந்து, ரொம்ப சரி அப்படித்தான் செய்ய வேண்டும் என்று, ஆமோதித்தார் .
அந்தக் கிழவன் சொன்னது என்னவென்றால்,
மனிதனால் அடைய முடியாத இடம் ஒன்று இருக்கிறது. அது வேறு எங்கேயும் இல்லை. அவனுக்குள்ளேயே இருக்கிறது. அவனுக்குள் மறைந்து கொள்ளுங்கள் என்பதே. அதிலிருந்து கடவுள் அங்கேயேதான் மறைந்து கொண்டு இருக்கிறார். மனிதன் நினைக்காத இடம் அது தான்.
ஆகவே மிக அருகில் உள்ளதை, உங்கள் அகங்காரம் ஏறெடுத்தும் பார்க்காது. அதில் அதற்கு சுவாரசியமும் இல்லை . ஆகவேதான் நீங்கள் உண்மையை தவற விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் .
No comments:
Post a Comment