கவிஞர் வாலி
(இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிறப்பும் வளர்ப்பும்
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருப்பராய்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.
வாலி இறப்பு
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.
வாலி பெயர்க்காரணம்
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.
எழுதிய நூல்கள்
சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இவற்றையும் பார்க்கவும்
1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.
தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!
குறிப்பிடத்தக்க பாடல்களில் சில
பாடல் | படம் | வருடம் |
---|---|---|
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " | ஆயிரத்தில் ஒருவன் | 1968 |
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " | தீர்க்க சுமங்கலி | 1974 |
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " | இரு மலர்கள் | 1967 |
நான் ஆணையிட்டால் | எங்க வீட்டு பிள்ளை | (1965) |
காற்று வாங்க போனேன் - | கலங்கரை விளக்கம் | (1965) |
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- | சந்திரோதயம் | (1966) |
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - | எதிர்நீச்சல் | (1968) |
இறைவா உன் மாளிகையில்- | ஒளிவிளக்கு | (1968) |
அந்த நாள் ஞாபகம் - | உயர்ந்த மனிதன் | (1968) |
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- | இருகோடுகள் | (1969) |
ஆண்டுக்கு தேதி | சுபதினம் | (1969) |
மதுரையில் பறந்த மீன்கொடியை- | பூவா தலையா | (1969) |
விருதுகள்
- பத்மஸ்ரீ விருது-2007
- 1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.
- 1970 – எங்கள் தங்கம்
- 1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
- 1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
- 1990 – கேளடி கண்மணி
- 2008 – தசாவதாரம்
No comments:
Post a Comment