My novel The Hour Past Midnight has won the Gender Studies Writing Award at Lewis & Clark College! At USA
அமெரிக்காவில்
லிவீஸ் அண்ட் கிளார்க் கல்லூரியின் பாலின கல்வி எழுத்துக்கான விருதை இரண்டாம் ஜாமங்களின் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வென்றிருக்கிறது. சல்மா
அமெரிக்காவில்
லிவீஸ் அண்ட் கிளார்க் கல்லூரியின் பாலின கல்வி எழுத்துக்கான விருதை இரண்டாம் ஜாமங்களின் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வென்றிருக்கிறது. சல்மா
"இஸ்லாமிய சமூகத்தைப்
பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம் வெளியாவதில்லை.
வெளிவந்தவையும் ஓர் ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை.
அவற்றில் இடம் பெறும் பெண்கள் மங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின்
இந்த நாவல் இஸ்லாமியப் பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு
குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ரகசியங்களையும் இச்சைகளையும் அவர்களுக்கு
விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும்
சுதந்திரத்தையும் காதலையும் காமத்தையும் பிறழ்வுகளையும் உடலியல்
துன்பங்களையும் சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில் பகிரங்கமாகவும்
பகிர்ந்து வைக்கிறது. பெண் தன்னைப் பெண்ணாக உணர்வது ஆண்கள்
அயர்ந்திருக்கும் இரண்டாம் ஜாமத்தில் என்று வெளிப்படுத்துகிறது. ஒருவகையில்
இந்தப் பெண் நோட்டம் ஆணைத் தொந்தரவு செய்யக்கூடியது. இந்தப் பார்வை
தமிழ்ப் படைப்பில் புதிது
காலங்காலமாக
பலவந்த அடையாள மறுப்புக்குள் வாழ நேர்ந்த இருப்புக்கள் மீதான புனைவுகள்
சமீப காலங்களில் கவனம் பெற்று வருவதை நாமறிவோம். தமிழ் இலக்கியச் சூழலில்
தலித்துகள் இதைப்பெருமளவு சாதித்துக் காட்டியுள்ளனர்.தலித்துக்கள் தவிர்ந்த
விளிம்பு நிலை மாந்தர்கள் குறித்த கதைகள் தமிழில் அரிது. விளிம்பு நிலை
மாந்தர்கள் என்ற வகைப் படுத்தலினுள் சற்றுப் பொருந்தும் மனனோயாளிகளின் கதை
பலவாறாகப் பேசப் பட்டிருப்பினும் (ஜெயகாந்தனின் ‘ரிஷி மூலம்‘ ‘நான்
ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்‘ க.ந.சுவின் பித்தப்பூ மேலும் பாதசாரி,
கோபிகிருஷ்ணனின் புனைவுகள்) நேர்மையான பதிவுகள் அல்ல. விடுபடல்களும்
பூடகப்படுத்தல்களும் அவற்றின் முக்கிய பண்புகள்.பின்நவீனத்துவத்தின் வருகை
பல வித புரிதல்களை எட்டவும் புதிய வாசல்களைத் திறக்கவும் உதவியிருக்கிறது.
80களில் இருந்தே பேசப்படும் பெண்ணியம் 90களின் மத்தியில் தீவிரம் பெறத்
துவங்கியது. மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தாராணி எனப் பல பெண்
கவிகள் பெண்ணியக்கவிதையை தீவிரமிக்க ஒரு போக்காக வளர்த்தெடுத்துள்ளனர்.
பெண்ணியக்கவிதைச் சூழல் வளமாயிருக்கும் அளவுக்கு நாவல் சிறுகதை போன்ற
இயங்கு தளங்கள் வளமாயில்லை. ராஜம் கிருஷ்ணன், அம்பை, வாஸந்தி, என முன்பு
இயங்கிய பெண்ணியப் புனைகதையாளர்கள் இத்தனை தீவிரமாக இருந்ததில்லை. சம
காலத்திலும் இத்தீவிரமற்ற புனைகதை மரபே முன்னெடுத்துச்
செல்லப்படுகிறது.தீவிரமற்ற/மரபை போட்டுடைக்கத் தயங்கும் இத்தகைய சூழலில்
வைத்தே சல்மாவின் பிரதியை நாம் அணுக வேண்டியிருக்கிறது.
சல்மா
ஏலவே தனது கவிதைத் தொகுப்புகள் மூலம் கவனம் பெற்றவர். ஆபாசம் என்று
முத்திரை குத்தப்பட்ட கவிதைகளுக்குச் சொந்தக்காரியான சல்மாவின் முதல் நாவல்
என்கிற வகையில் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்தது ‘இரண்டாம் ஜாமங்களின்
கதை’. நாவல் படிக்கக் கிடைப்பதற்கு முன்பாகவே அது குறித்து எழுந்த
சர்ச்சைகளையும் விவாதங்களையும் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இந் நாவல்
குறித்து எழுதப்பட்டு நான் படிக்க நேர்ந்த விமர்சனங்களில் பல நாவலின்
சூழல் சார் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சி செய்யும் அற்பத்தனங்களேயன்றி
வேறல்ல. இவற்றினது பின்னணியில் இருப்பது அசிங்கமான ஆணாதிக்க மனோபாவமேயன்றி
வேறில்லை. சல்மாவை அவதூறுகளினின்றும் விடுவிக்கும் நோக்கில் வெளிவந்த
தோப்பில் முஹமது மீரானின் விமர்சனம் கூட நாவலின் சூழல் சார் அர்த்தத்தை,
அதில் ஆண்கள் சித்தரிக்கப்படும் விதத்தைக் குறை கூறியிருந்தது. வாசிக்க
நேர்ந்த பதிவுகளிலேயெ மிகவும் அபத்தமானது ஜெயமோகன் உயிர்மையில் செய்திருந்த
இரண்டு பந்தி விமர்சனம்(?!) தான். ஜெயமோகன், இரண்டாம் ஜாமங்களின் கதை ஒரு
நாவலே அல்லவெனத் தீர்ப்பளித்திருந்தார். வரலாறற்ற ஒரு நாவல் ஐந்நூறு
பக்கங்களுக்கு மேல் நீளுவதும், ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி
வருவதும் தனக்குச் சலிப்பூட்டியதாகவும் அவர் மேலும் எழுதியிருந்தார். ஒரே
வட்டத்துக்குள் மட்டுமாகவே சுற்றி வரும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட
வரலாறை இக் கதை மாந்தர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து
கொள்ளா விடில் நாம் என்ன செய்யலாம். நாவல் பற்றிய அவரது கருத்துக்கள்
எவ்வளவு வன்முறையானவை ( கருத்தியல் ஆதிக்க நிறுவல் காரணமாக) என்பதை நாம்
ஏலவே அறிந்திருப்பதால் அவரது கருத்துக்களுக்கான எதிர்வினையை எழுதிச்
செல்வது தடைப்படுகிறது.
80களில்
தமிழ் நவீனத்துவத்தின் காலியான பக்கங்கள் பல நிரப்பப்பட்டன. விளிம்புநிலை
மனிதர்கள் குறித்த பல்வேறு கதையாடல்கள் நடந்தன. ஆனால், பெண்களுடைய
பக்கங்கள் முழுதாக எழுதப்படவில்லை. சல்மா தன் தரப்புக் குறித்து
மிகத்தெளிவாக இருந்ததாலோ என்னவோ யதார்த்த வகைப் புனைவை துணிச்சலுடன் எழுத
முடிந்திருக்கிறது.
பெண்ணிய
யதார்த்தவாத எழுத்துக்கள் ஆணாதிக்க சமூக அமைப்புகளின் கீழ் வாழும்
பெண்களின் அவலத்தைச் சித்தரிப்பவையாகவும் அவ்வமைப்புகளில் பெண்களின்
வகிபாகத்தை ஆராய்பவையாகவும் வெளிவருகின்றன.பொருத்தமற்ற சூழ்நிலைகளின் கீழ்
பெண்ணின் நிலையைச் சித்தரிக்கும் செயற்பாட்டிற்கமைவாக முஸ்லிம் சமூகத்தை –
தனக்குப் பரிச்சயமான ஒன்றை சல்மா தேர்ந்தெடுத்துள்ளமை புரிந்து
கொள்ளக்கூடியதே.
நாவலின்
முன்னுரையில் ரவிக்குமார் சொல்வது போலவே, இப்பிரதி மரபு சார்ந்த
வாசிப்பையே கோரி நிற்பதாயினும், நுண்ணுணர்வுடைய ஒரு வாசகர் பல்வகைப்பட்ட
வாசிப்புகளைச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியும்.
இந்
நாவல் இஸ்லாமியச் சமூகத்தைக் கதைக்களனாகக் கொண்டிருப்பினும் அச்சமூகம்
பற்றிய ஒரு நாவலாக/ஆவணமாக நான் இதை அணுகவில்லை.முஸ்லிம்களின் இறுக்கமான
சமூகக்கட்டமைப்பின் மீதான விமர்சனமாக இதை நோக்குவது தவறல்ல எனினும் இத்தகைய
அணுகுமுறை மிகக்குறுகலான ஒன்று. பிரதி சார்ந்து உருவாக்கப்படக்கூடிய
பல்வகைப் பட்ட வாசிப்புகளை இக்குறுகல்த்தன்மையுடைய அணுகுமுறை தடை செய்வதால்
‘இரண்டாம் ஜாமங்களின் கதையை வேறு வகையில் அணுக வேண்டிய தேவையுள்ளது.
நாவல்
முழுவதுமே பெண்களால் உருவாகி இருக்கிறது.நாவலின் பெண்கள்–சல்மா கூறுவது
போலவே–சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்கும பொருந்தாத அளவுக்கு
யதார்த்தமானவர்கள்.சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் சட்டகத்துள்
மாத்திரமன்றி அறிவுஜீவிகளும் இலக்கியவாதிகளும் உருவாக்கிய சட்டகத்துள்ளும்
பொருதாத அளவு யதார்த்தத்துடன் இருப்பவர்கள் சல்மாவின் பெண்கள்.இந்த
யதார்த்தம் அனைத்துச் சட்டகங்களையும் சிதறடிக்கிறது. பென்களைப்பற்றி நாம்
கூறிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கற்பிதங்களையும் ஊதித் தள்ளியபடி
இயங்குகின்றன நாவலின் பெண் பாத்திரங்கள்.அவர்களுடைய தனிப்பட்ட உலகத்தின்
கதையாடல்கள் கிளுகிளுப்பை மீறிய துக்கத்தை உண்டுபண்ணுபவையாக உள்ளன.
அவர்களுடைய கேலிக்கும் கிண்டலுக்கும் சிரிப்புக்கும் பின்னாலிருப்பது
கசப்பும் வலியும் வேதனையும் என்பதை அறியும் போது இந்த நாவலை மலிவு ரகப்
போர்னொ எழுத்தென்று உளறுவதினின்றும் ஒருவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள
முடியும்.
சிரிப்பும்
கேலியும் அவர்க்ளின் துயரத்துக்கான முகமூடிகள் என்று கூறிவிட முடியாது.
அது அவர்களுடைய உண்மையான முகங்களில் ஒன்று.கசப்பும் வலியும் படிந்தது
மற்றைய முகம்.இவ்வாறு அவர்கட்குப் பல முகங்கள்.அவை ஒன்றுக்கொன்று சம்பந்
தமற்ற அளவுக்கு முரணுள்ளவை. அவர்களுடைய சொந்த முகம் எதுவாக இருக்கக்கூடும்?
அவற்றில் எதுவுமே இல்லை என்கிறது நாவல். சந்தோஷ முகமோ கவலையான முகமோ
எதுவாக இருந்தாலும் சரி – அது ஆணாதிக்க சமூக மதிப்பீடுகளால் அவற்றின்
நிர்ப்பந்தங்களால் உருவாக்கப்பட்டதே.
இந்
நாவல் குறித்து எழுதுகையில் தோப்பில் முஹமது மீரான் ‘பெண்களின் மனக்குகை
ஓவியங்கள்’ என்று குறிப்பிட்டார். அச் சொல் இந்த நாவலை மிகச் சரியாகவே
பிரதிநிதித்துவம் செய்கின்றது. நாவலெங்கும் ஓவியங்கள், ஈரவிறகுப் புகையின்
கரியைக் கண்ணீரில் குழைத்து அப்பெண்கள் வரைந்த ஓவியங்கள். கணங்களில்
அப்பெண்கள் உணரும் வியர்வையின் கசகசப்பும் வலியும் துயரமும் அவ்
ஓவியங்களின் இடுக்குகளில் படிந்துள்ளதை நாவல் அழகாகப் படம் பிடிக்கிறது.
சல்மா
நாவலில் தரப்பட்டிருப்பது பெண்களின் உறைந்த காலம் என்கிறார். தன் பெண்
பாத்திரங்களின் வலிமையை சல்மா உணராதிருப்பதையே இது காட்டுகிறது. பலவாறான
துயரங்களுக்குள்ளும் , சலிப்புகளுக்குள்ளும் வெறுமைக்கும் மத்தியில்
அப்பெண்களின் உலகம் மிக உயிர்ப்புடன் தளும்புகிறது. ஆண்கள் அஞ்சும்
அளவுக்கு அவர்கள் உயிர்ப்புடனிருக்கின்றனர். நபீசாவின் அழுகை அஜீஸையும்
பஷீரையும் அருட்டுகிறது.குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறது. அதுதான் பெண்கள்.
சல்மா தனது பெண்களின் வலிமையை மிகவும் குறைத்தே மதிப்பிடுவது நாவலின்
பெரும் பலவீனம்.
நாவலின்
மற்றுமொரு பெரும்பலவீனம் பெண்களின் அந்தரங்க உலகில் ஆண் செல்வாக்கை
மிகைப்படுத்தலாகும். சல்மாவின் மீது மாலதி மைத்ரி முன்வைக்கும்
குற்றச்சாட்டு நியாயமானது என்றே சில இடங்களில் தோன்றுகிறது. பல
சித்தரிப்புகள் ஆணிய மதிப்பீடுகள் சார்ந்தே எழுதப்பட்டுள்ளன. சல்மா தன்னைக்
கடந்து எழுத இயலாதவராகத் தொடர்ந்தும் இருப்பது வருத்தத்துக்குரியது.
மேலும்
சல்மாவுக்கு உடலின் தனிமொழியையும் அதன் அரசியலையும் எழுதுவதில்
தயக்கமிருப்பது புலப்படுகிறது.எவ் என்ஸ்லெர், எல்பிரைடே ஜெலினெக்
அளவுக்கெல்லாம் வேண்டாம். சுகிர்தாராணி அளவுக்குக் கூட உடலரசியலின்
தீவிரத்தை சல்மா வெளிப்படுத்தவில்லை.
சல்மாவின்
நாவலை வாசித்துக் கொண்டு இருந்த நாட்களில் எரிக்கா ஜோங்கின் நாவலான ‘Of
Blessed Memory’ யினை வாசித்துக் கொண்டிருந்தேன் (இரண்டு
நாவல்களுக்குமிடையிலான ஒப்பீடு சமகால வாசிப்பினால் நேர்ந்தது, எவ்வித
அரசியலுமற்றது அத்துடன் இரண்டாம் ஜாமங்களின் கதையின் சூழல் சார்ந்த
முக்கியத்துவத்தை நிராகரிக்க முற்படாதது.)
இரண்டு
நாவல்களுமே ஒரு குறித்த சமூகத்தில் பெண்களின் வகிபாகத்தை ஆராய்பவை.
எரிக்காவின் நாவல் யூதக்குடும்பம் ஒன்றின் நூற்றாண்டு கால வரலாற்றை
அமெரிக்கப் பின்னணியில் சித்தரிக்கின்றது. கடிதங்கள், டயரிக்குறிப்புகள்
போன்றவற்றால் தொகுக்கப் பட்டிருக்கிறது கதை.
இக்கதையின்
பெண்களும் சல்மாவின் பெண்களைப் போலவே ஏமாற்றங்களையும் வலிகளையும்
எதிர்கொள்கின்றனர். இரண்டு நாவல்களிலும் புணர்வில் அதிருப்தி
பேசப்படுகின்றது ஜோங் எந்தவித மனத்தடைகளுமற்று அதிருப்தியின் கணங்களை
எழுதிச்செல்லும் நிலையில் சல்மா பல முக்கியமான தருணங்களை நாசூக்காகத்
தவிர்த்து விடுகிறார். ( உ+ம் – வஹிதா , சிக்கந்தர் உறவு )
இரண்டு
நாவல்களிலும் பெண்களே முக்கியப்படுத்தப்படுகின்றனர் (எரிக்காவின் நாவல்
அதன் முதற்பதிப்பின் போது ‘Inventing Memory : A novel of Mothers And
Daughters’ என்ற தலைப்பில் வெளியானது).. ஜோங்கின் கனவுலகு விஸ்தாரமானதாக
இருக்கிறது. நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒருத்தியான சலோமி
இப்படியெழுதிச் செல்கிறாள்:
My
cunt encompasses the universe. It is vast as the upper and lower
kingdoms and mythological as The land of Fuck. Yes, I say to Val, as he
watches me swallow all the pricks of history—-yes, my cunt contains
multitudes….it ruminates on the ravages of history, meditates on Maya,
contemplates Karma antagonizes Isis and Osiris, hugs Horus, undoes Diana
and her Dogs (or are they stags?). It reaches from St.Sulpice to
Broadway, from sunset Boulevard to the primal volcano——–yes it is the
cunt of creation……..
P.90. Of Blessed memory – Erica Jong
ஆணுடலை
நோக்கிய விழைவே இரண்டாம் ஜாமங்களின் கதையில் சித்தரிக்கப் படுகிறது.
அப்பெண்களின் நிராசைகள் அனைத்துமே ஆணுடலை நோக்கிய விளைவுகளை புனைவுகளாகவே
வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. முதியவளான நூரம்மா அவளுக்கு ஏற்புடைய
ஓர் கடந்த காலத்தை புனைந்து கொள்கிறாள். அவளுடைய கற்பனைக்கணவன் ‘பூப் போல
தூக்கி படுக்கைக்கி கொண்டு போயி அம்புட்டு ஆறுதலா கால் வலிக்காம கொள்ளாம’
உடலுறவை நிகழ்த்தும் ஒருவனாக இருக்கிறான். ஒருவேளை இவ்வாறு புனைவுகளில்
வாழ்வதே யதார்த்தமாகக் கூட இருக்கலாம். ஆனால் சல்மா அளிப்பது
யதார்த்தத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு அழுக்கு நீக்கம் செய்யப்பட்ட
ஒரு துண்டுதான்.
மீறல்களைச்
சித்தரிப்பதால் பிரதி கலகத் தன்மையுடனிருப்பதாகவும், அக் கலகத் தன்மை
அதிகாரத்துக்கெதிரான அமைப்பை நாவலுக்கு அளிப்பதாகவும் ஒத்துக்கொள்ளும்
ரவிக்குமார் மீறலை நிகழ்த்தியோர் சாகடிக்கப்படும் போது பதறுகிறார். நாவல்
மரபை வலியுறுத்தும் ஒன்றாக மாறும் அபாயமிருப்பதை சுட்டிக் குற்றங்
கூறுகிறார். மீறலின் மீது ரவிக்குமாருக்கு இருக்கும் தீராத வேட்கை
ரவிக்குமாரின் கண்களை மறைக்கிறது போலும்.
ரவிக்குமார்
நாவலின் பலவீனங்களாகச் சுட்டும் இவ் அம்சங்களை நான் பலமான கூறுகளாகவே
பார்க்கிறேன். முலையைத் திருகியெறிந்தே மதுரையை எரிக்க வேண்டியிருந்த
நுண்ணரசியல் இங்கு கிடையாது. சல்மா காட்டும் ஆணாதிக்க மரபின் பிடி அவ்வளவு
கொடூரமாக இருக்கிறது என்பதே யதார்த்தம். அதிகார மரபை மீறுவோர் அம் மரபின்
நெகிழ்ச்சியற்ற நிலவுகை உள்ளவரை நாவல் கூறும் விளைவுகளையே எதிர்கொள்ள
வேண்டியிருக்கும். இப் பயங்கரத்தை உள்ளபடியே கூறுவதன் மூலம் தான்
அடக்குமுறை மரபின் சமநிலைத் தோற்றப் பாடுகளைச் சிறப்பாகச் சிதைக்க
முடியும்.
ரவிக்குமார்
மரபுமீறலை சல்மா கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சல்மாவின்
எதிர்பார்ப்பும் ஏறத்தாழ அதே. ஆயினும் யதார்த்தத்தை முற்றிலும்
புறக்கணித்து அலட்சியப்படுத்தி புனைவினூடு தன்னையும் தன் விடுதலையையும்
கண்டடைதல் என்பது ரவிக்குமாரின் நிலைப்பாடாகவும்; யதார்த்தத்தின்
அபத்தத்தையும் அதனுள் வேறு தெரிவுகளேதுமற்று வாழ வேண்டியிருப்பதன் பயங்கர
அவலத்தைப் பேசுதலின் மூலம் விடுதலை பெறுவது சல்மாவின் நிலைப்பாடாகவும்
இருக்கிறது. எந்த நிலைப்பாடு சரியென்பதல்ல இங்கு முக்கியம். தமது
குறிக்கோள்களை இக்கோட்பாடுகளின் மூலம் எவ்வளவு தூரம் அவர்களால்
எட்டமுடிகிறது என்பதே முக்கியமானது.
நாவல்
காட்டும் முதற் காதலின் சித்திரம் அளப்பரியது. ராபியா - அஹமதுவின் சிறு
சிறு சண்டைகள் உடல்உள ரீதியான உந்துதல்கள் என்பன அத்தனை அழகாக
கதையோட்டத்துடன் இணைகின்றன.
ஜெயமோகனின்
காடு நாவல் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பாக
வெளிவந் திருதது. அந் நாவல் முதற்காதலின் தருணத்தை யாரும் சித்தரிக்காத
விதத்தில் கையாள்வதாக தூக்கிப் பிடிக்கப் பட்டது. ஜெயமோகனின் படைப்புகள்
சொற்களின் காடுகளாக அறியப்படுபவை. பலவற்றில் அவர் கட்டிக் கொள்ள முனையும்
அறிவுஜீவித்தனம் அனைத்தையும் கெடுத்து விடுகிறது. மேலும் காடு கிரிதரனுக்கு
பதினெட்டு வயதிற்குப் பின்னரே முதற்காதல் வருகிறது! (சட்ட ரீதியான
வயதெல்லையினைக் கருத்தில் கொண்டு?!) இதுவே அதன் அபத்தத்தைக் கூறிவிடுகிறது.
(On a porno website : ALL OF THE MODELS EXHIBITED HERE ARE ABOVE 18 )
சல்மாவுக்கு
மேற்கூறிய வகைப்பட்ட விபத்துக்கள் எதுவும் நிகழவில்லை.ராபியா – அஹமது உறவு
நாவலின் பிற அம்சங்களைப் போலவே யதார்த்தமானது.மேலும் அதைக் கையாளுவதில்
சல்மாவுக்கு எந்த மனத்தடைகளும் இல்லை. புகை படிந்த புராதன ஓவியம் போன்ற
முதற்காதலின் தர்க்கத்தை அதன் தர்க்கமின்மையை சல்மாவால் மிக இயல்பாக
எழுதிச் செல்ல முடிகிறது.மேலும் சல்மா, ஜெயமோகனைப் போல் முதற்காதலின்
தீவிரத்தை ஒருசில நிமிடங்களுக்குள் குறுக்கவில்லை. மாறாக அக் காதலின்
தீவிரம் நாவல் முழுவதும் பரவியிருக்கிறது.
மொழியைக்
கையாளுவதில் சல்மவுக்கு இருக்கும் திறமை பல இடங்களில் புலப்படுகிறது.
ராபியாவின் சிந்தனை ஓட்டங்கள், பிர்தவ்ஸ்ஸின் மரணம் சித்தரிக்கப் படும்
விதம் , சிவாவின் உடலுக்கான பிர்தவ்ஸின் மனவிழைவு, பிர்தவ்ஸ் சிவா
கூடுமிடங்கள், இவையனைத்தும் சல்மாவின் மொழித்திறமைக்கு சிறந்த
எடுத்துக்காட்டுக்கள் .இவற்றில் இழையோடும் துயரார்ந்த கவித்துவ சோகம்
வாசகனை அலைக்கழிக்கக் கூடியது. இது வாசகனை நாவலின் பாத்திரங்களுடன் தன்னை
இடங் கண்டு கொள்ளுமாறு தூண்டுகின்றது.
இப்பண்பே, சல்மாவை தமிழின் சமகாலப் பெண் புனைகதையாளர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது
முன்னுரையில்
ரவிக்குமார் சொல்வது போலவே இந் நாவலில் வில்லன்களோ கதானாயகர்களோ இல்லை.
அவ்வகையில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்ட பிரதியாக இது உள்ளது.
பெண்
சிருஷ்டியின், அன்பின், தாய்மையின் ஊற்றாக இருக்கிறாள். தாய்மை (ஆண்மைய
நோக்கிலான அர்த்ததில் அல்ல) அவளின் கொண்டாட்டத்துக்குரிய அம்சமாக
இருக்கிறது. அக் குணாதிசயம் சல்மாவிடமும் இருப்பதால் இந்த ஜனநாயகப் பண்பு
அவரிடமும் இயல்பாகவே வந்து சேர்கிறது.தனது அடக்குமுறையாளனான ஆணைக் கூட அவர்
பரிதாபத்துடனேயே சித்தரிக்கிறார்.நீண்ட கால மரபின் கைதி என்ற நோக்கில் ஆணை
அணுகுவது ஆறுதலளிக்கிறது.அவனை நோக்கி வெறுப்பினை உமிழ்வதற்குப் பதிலாக
அவனுடைய சிக்கலுற்ற மன உலகின் தருணங்கள் மீது அனாயசமாக வெளிச்சம் போட்ட படி
சல்மா எழுதிச் செல்வது பாராட்டத்தக்கது.
“அழுகையினூடே
அவள் வாய் எதையோ முணுமுணுக்க அவனது கைலிக்குள்ளேயே அமுங்கிக்கொண்டிருந்தன
வார்த்தைகள்.ஏதோ சில வார்த்தைகளை தெடர்ந்து ஒப்பிப்பது போல் தொடர்ந்து
முனகிக்கொண்டிருந்தாள்.அது பிரார்த்தனையைப் போலிருந்தது. அது அவனை இன்னும்
உடல் கூசச்செய்தது.அவ் வார்த்தைகள் என்னவென கூர்ந்து கேட்க தனக்குச்
சக்தியில்லை என்று உணர்ந்தான்.அதனாலேயே இன்னும் கூட தன் கால்களை இறுக்கி
அவளது வார்த்தைகளை உடைக்குள்ளாகப் புதைத்தான்…………………. அவன் திடுமென அவளை
தன்னிடமிருந்து பிடித்து இழுத்து விலக்கினான்.அவனது ஆவேசத்தினால் பயந்து
எழுந்து அமர்ந்து அவனை உற்றுப்பார்த்தவளிடம் தயக்கமேயின்றிச் சொன்னான்:
“ச்சீ நீயெல்லாம் ஒரு பொம்பளையா? என் நிலமையை கொஞ்சமாச்சும் புரிய
வேண்டாம்?’’
அவனது
வார்த்தைகள் அவளை மட்டுமன்றி அவனையுமே அதிரச்செய்திருக்க வேண்டும்.மறுபடி
யோசிக்க முயன்றான்.தான் என்ன வார்த்தைகளால் திட்டினோம் என்று.அவை
நினைவுக்கு வந்த பொழுது அவன் அதை ஒப்புக்கொள்ள ரொம்பவே தயங்கினான்.”
பக். 381, இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா
முஸ்லிம்
சமூகத்தின் இறுக்கமான தளைகள் மீதான விமர்சனமாகவும் இப்பிரதியை
வாசிக்கலாம். நாவலின் பெண்கள் எதிர்கொள்ளும் துயரார்ந்த முடிவுகளுக்குக்
காரணம் மதமே. மனம் கலாச்சாரத்தின் விளைபொருள் தான் என்பது தெளிவாகிவிட்ட
ஒன்று. கலாச்சாரத்தின் வழி வ்ந்த பெண்மனம் உடலுடன் மிக மோசமாக
முரண்படுகிறது. தமது நிர்வாணத்தையே சகிக்க முடியாத அவலத்துக்குள் அவர்கள்
தள்ளப்பட்டுள்ளனர். கலாச்சாரத்தின் வழி வந்த ஆண்மனமும் இவ்வாறான சிக்கல்களை
எதிர்கொள்கின்றது. மதம் காற்றைப் போல எங்கணும் பரவி ஒரு மோப்ப நாயைப் போல்
கண்காணித்துக்கொண்டே இருக்கிறது.குற்றம் குற்ற உணர்வு தண்டனை என
அனைத்தினதும் மூலகாரணியாக மதம் மறைந்து நிற்கிறது.
பஞ்சாயத்தில்
வைத்து நூரம்மா கலாச்சாரக் காவலர்களால் ‘விசாரிக்கப்படும்’ விதம்
அச்சந்தருவதாய் இருக்கிறது. மதம் அனுமதிக்கும் இத்தகைய வன்முறைகளை விடவும்
கொடுமை என்னவெனில் மனிதாய மதிப்பீடுகளை சிதைக்கும் ஒன்றாக அது மாறி
விடுவதுதான்.
மனோரதிய
வழக்குகள் பெண்ணை அன்பின் உறைவிடமாக சித்தரிப்பதுண்டு. அவர்களிடமிருந்தே
அன்பு பறித்தெடுக்கப்படுகிறது மதத்தால். இதற்கு நாவலெங்கும் உதாரணங்கள்.
(மைமூன், பிர்தவ்ஸ் ஆகியோரின் தாய்மார்கள் தம் மகள்களின் உயிரை விட ஊரும்
பள்ளிவாசலும் தமக்கு வழங்கக்கூடிய தண்டனை மீதான அச்சத்தாலேயே
அலைக்கழிக்கப்படுகின்றனர். அதிலும் பிர்தவ்ஸின் தாயார் பிர்தவ்ஸ் மீது
மரணத்தை வலிந்து திணிப்பவளாக மாறிவிடுவதன் பின்னிருக்கும் சமூக
நிர்ப்பந்தம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
நாவலில்
அடிப்படை வாதிகளின் இரண்டக நிலை சுலைமானின் செயற்பாடுகளின் மூலம்
நிரூபணமாகிறது. மரபைக் காத்தல், நெறிக்குப் பூணிப்புடன் இருத்தல் என்பதை
வலியுறுத்தியவாறேயிருக்கும் அவனுக்கு மும்தாஜுடன் இணைந்து நீலப்படங்கள்
பார்ப்பதில் எந்த வித மனத்தடைகளும் இல்லை. காஸெட்டுக்களை அவன் வெளிநாட்டில்
இருந்து தருவித்திருக்கிறான்.அடிப்படைவாதம் இத்தகைய நபர்களாலேயே
நிரம்பியிருக்கிறது.கலாச்சாரம் என்பது நாலு சுவர்களுக்கு
வெளியிலிருப்பதுதான் என்கிற கூற்று இவர்களைப் பொறுத்தவரை மிக வெளிப்படையான
உண்மை.நமது கலாச்சாரக் காவலர்களின் உள்ளாடைகளுக்குள் ஒளிந்திருந்து பார்க்க
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவாறேயிருக்கிறது சல்மாவின் பிரதி.
இறுக்கமான
கட்டுக்களால் அமைந்த சமூகமொன்றில் மீறல்கள் அந்தரங்கமான கிளுகிளுப்பை
உண்டுபண்ணுவதை நாவல் பதிவு செய்கிறது. சிக்கந்தர் முஸ்லிமாகவே
அறியப்பட்டாலும் மரபுகளின் படி நடப்பவனாக இருந்தாலும் நபீசாவின் பேச்சு
அவனுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. தன் மனைவியும் குடும்பமும் ஒழுங்காக
இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்களுக்கு ஒழுக்க விதிகளை மீறிய
பெண்களும் கதைகளும் கிளர்ச்சியை உண்டுபண்ணுவது ஆராய்வுக்குரிய விடயம்.
*
இஸ்லாமியச்
சட்டங்கள் நாகரீகமடைந்த ஒரு சமூகத்திற்கு முற்றிலும் புறம்பானவை.
ஷரியத்தின் ஆண்-லிங்க மையவாதம் அம்பலமாகிப் போன ஒன்று. குரானைத் தூக்கிப்
பிடிக்கும் மத அடிப்படை வாதிகள் இஸ்லாமிய மார்க்கம் மீதான களங்கத்தை
அதிகப்படுத்தியவாறேயிருக்கின்றனர். தனிமைப்படுத்திக்கொள்பவர்களாக இன்னமும்
இஸ்லாமியர்கள் இருந்து வருவது வருத்தத்துக்குரியது.
பல
இஸ்லாமிய மார்க்கவாதிகள் (மதவாதிகள் அல்ல) மற்றும் அறிவுஜீவிகள்
இஸ்லாமோபோபியா என்ற இந்நிலைக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்கள்.
பின்நவீனத்துவ இஸ்லாம், இஸ்லாமியப் பெண்ணியம் எனப்பல கருத்தாக்கங்களை
அவர்கள் முன்வைத்து பேசியும் எழுதியும் வருவது ஆரோக்கியமான மாற்றத்துக்கு
அறிகுறி. மேலும் அரேபிய இலக்கியங்கள் சமீப காலமாக கவனத்துக்குள்ளாவதைச்
சுட்டலாம். தஸ்லிமா நஸ்றீன் பிரச்சனை எழுப்பிய நவீனத்துவ விவாதங்களை நினைவு
கூரல் இங்கு பொருத்தமானது. மதவன்முறைக்கு எதிராக எழுந்த அவரது குரல்
‘கடாசி எறியுங்கள்’ என்ற கோஷமாக எஞ்சியது. அக்கோஷத்தின் அடிப்படை
கலாச்சாரத்தின் வழிசமைந்த மனத்தின் உள்ளீடுகளைப் புரிந்து கொள்ள மறுக்கும்
வன்முறையே என்பது புரிந்து போய்விட்ட நிலையில் வேறு திசைகளில் நகர வேண்டிய
தேவை உணரப்பட வேண்டும். பாத்திமா மெர்னிஸ்ஸி போன்ற முஸ்லிம் பெண்ணியர்கள்
கூறுவது போல இஸ்லாமின் பிரதிநிதிகளாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அடிப்படை
வாதிகளும் அவர்களிற்கு செவிசாய்ப்பதன் மூலம் அங்கீகரிக்கும் மேற்குலகுமே
பிரச்சனைகளுக்குக் காரணம்.
தமிழ்ச்சூழலில்
இவைகுறித்து பெரிய விவாதங்கள் எழுந்ததில்லை. தோப்பில் முஹம்மது மீரான்,
நாஹூர் ரூமி போன்றோரின் புனைவுகள் முஸ்லிம்களைச் சரியாகவே பிரதினிதித்துவம்
செய்தாலும் விவாதங்களுக்கு வழிசமைத்த பிரதிகள் என அவற்றைக் கூற முடியாது.
மேலும் பூடகப்படுத்தப்பட்டிருந்த பெண்களின் உலகை அவர்கள் போதியளவு
கவனப்படுத்தவில்லை.
தற்போது
தமிழகச் சூழலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்துவோராக
எச்.ஜி.ரசூலும் முஜீப் ரஹ்மானும் உள்ளனர். இலங்கையில் முஸ்லிம்கள்
இலக்கியப் புலத்தில் கணிசமான பங்களிப்பை செய்துள்ள போதும் அவர்களின்
பங்களிப்புகள் குறித்த தீவிரமான அலசல்கள் நிகழுவதில்லை. அப்படைப்புகளின்
சமூக-விமர்சன அரசியற் கூறுகளற்ற தன்மையை யாரும் விமர்சிப்பதாகத்
தெரியவில்லை. முஸ்லிம் தேசியவாதத்துக்குள் தம்மைக் குறுக்கிக் கொள்வதற்காக
முனையும் அவர்கள் தமிழ் தேசியவாதத்தின் சிதைவுகளில் இருந்து எதையும்
கற்றுக்கொள்ளவில்லை. நம் சூழல் சார்ந்த வாசிப்பு சல்மாவின் பிரதிக்கு
மிகப்பெரிய முக்கியத்துவத்தை அளித்துள்ளது.
சல்மா
தனது வெற்றியை இட்டு திருப்தியடைந்து விடக்கூடாது. முஸ்லிம் சமூகத்தில்
பெண்களின் வகிபாகம் நாவலில் சொல்லப்படுமளவுக்கு சிக்கலற்றதாக இல்லை.
ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த குறுக்குமறுக்குத் தன்மையுள்ள உலகம் அது.
‘விஷ்ணுபுரம்’ எவ்வளவு தீவிரத்துடன் வாழ்வின் இடுக்குகளினுள் சென்றுவந்ததோ
அத்தகைய தீவிரத்துடன் தனது அடுத்த பிரதியில் சல்மா வெளிப்படுவார் என
நம்பலாம்.
காலச்சுவடு
செய்நேர்த்தியுடன் நாவலைப் பதிப்பித்திருக்கிறது. மிகப்பொருத்தமான
அட்டைப்படத்துடன் சிறந்த வடிவமைப்புடன் வெளியிட்ட காலச்சுவடு ரவிக்குமாரின்
முன்னுரையை சேர்த்துக்கொண்ட விதத்தில் தவறிவிட்டது. முன்னுரை
இணைக்கப்பட்டிருக்கும் விதம் மரபார்ந்த வாசகனை முற்கற்பிதங்களுடனான
வாசிப்பிற்கே இட்டுச்செல்லும். அடுத்தடுத்த பதிப்புகளில் ரவிக்குமாரின்
முன்னுரையையும் ‘மௌனத்தைப் பேசுதலையும்’ பின்ணிணைப்புகளாக வெளியிடுவது
சிறந்தது.
இறுதியாக
ஒன்று. இப்பிரதியை முன்னிட்டு எழுந்த அனைத்து எதிர்வினைகளும் சல்மாவைப்
புகழ்வதையோ அல்லது தூற்றுவதையோ அல்லது பாரட்டி ஊக்கப்படுத்துவதையோ தான்
செய்துள்ளன. ஆனால் இப்பிரதி கோரி நிற்பது இத்தகைய எதிர்வினைகளையல்ல.
விடுதலைக்கான வழிமுறைகளை கண்டடைவதற்கான விவாதங்களையே இந்நாவல் கோரி
நிற்கிறது.
இரண்டாம் ஜாமங்களின் கதை
சல்மா
காலச்சுவடு 2004
No comments:
Post a Comment