ஒரு நாட்டில் ஒரு ராணுவ வீரன் இருந்தான். திறமையானவன். சண்டைகளில் பராக்கிரமசாலி. என்ன பிரச்சினையென்றால்
அவனுக்கு ஒவ்வொரு சண்டையும், ஒரு சாகச பயணமாக மட்டுமே தெரிந்தது. இந்த,
தேசப் பற்று, மானுட நேயம், தாய் நாடு என்றெல்லாம் ஜல்லியடிப்பார்களே, அது
போன்ற எந்த விஷயத்திற்கும் அவனிடம் மரியாதை இல்லை. தன்னையும் ஒரு
போர்க்கருவியாக மட்டுமே அவன் பார்க்கிறான். War machine. தனது தொழில்
உயிர்களை அழித்தல் என்றே அவன் நம்புகிறான். அழிப்பதெல்லாம் ஒரு தொழிலா
என்று நீங்கள் விசனப்பட்டால், அவன் சிரிப்பானா இருக்கும். அவன் தோற்றத்தில்
மிதமிஞ்சிய பெண் தன்மையும் (லிப்ஸ்டிக் உதடுகள்), செயலில் மித மிஞ்சிய ஆண்
தன்மையும் தெரிகிறது.
Ambivalence.
அவன் கலவையாக இருக்கிறான். Hybrid . ஐரோப்பிய வாழ்க்கை முறை, இந்திய
சடங்குகள், சக்ரா என்ற பிள்ளைவாள் அப்பா, அம்மாவின் மீன் குழம்பு, ஒரே
வீட்டிற்குள் ஆயிரம் தீவுகள்.
அவனது வாழ்க்கையில் ஒரு பெண்
எதிர்ப்படுகிறாள். நிறைய பெண்களை அவன் சந்தித்திருந்தாலும், இந்தப் பெண்
வேறு மாதிரி - மருத்துவர்; ஒரு விபத்தில் சாகக்கிடந்தவனுக்கு உயிர்
தந்தவள். ஏறக்குறைய இரண்டாவது தாய். (என்னுடைய முதல் patient அவன்!)
அநியாயத்திற்கு அவள் அழகாகவும் இருக்கிறாள்.
முதலில்
அவளிடமிருந்து விலகி ஓடிவிடவே விரும்புகிறான். தாய் மாதிரியானவள், காமம்
ததும்புகிறவள் - இந்த ஈடிப்பஸ் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவன் தயார் இல்லை.
Anti-oedipus. அவளோ அவனை விடமாட்டேன் என்கிறாள். துரத்துகிறாள்.
அவன் பிளவுண்டவன் Split போல இரண்டு மனசாக இருக்கிறான். அவள் வேண்டும்
என்றும் தோன்றுகிறது. மறுகணமே, அய்யய்யோ என்றும் தோன்றுகிறது. இதற்கு
அவனிடம் வரலாற்றுக் காரணங்கள் இருந்தன. அவன் தன் தந்தையை வெறுத்தான்.
அதனால் அவனுக்கு அம்மாவைப் பிடிக்கும். அதனால் பாரதியையும் பிடிக்கும்.
பாரதியும் Split தான். இரட்டை மனநிலையில் தான் இருந்தான். இந்தியப்
பாரம்பரியத்திற்கும் ஐரோப்பிய நவீனத்துவத்திற்குமிடையே நாயாய் உளன்றவன்.
அதாவது, ஈடிப்பஸ் சிக்கல் கொண்ட குடும்பத்திற்கும், கலை மனம் ததும்பும் தனி
மனித சுதந்திரத்திற்கும் இடையே சிக்கித் தவித்தவன்.
ராணுவ வீரன்
பயந்த சம்பவம் நடந்தே விடுகிறது. தாய் போன்ற அந்தப் பெண்ணுடன் சம்போகம்
கொள்கிறான். அவள் தாயும் ஆகிறாள். போதாக் குறைக்குப் பிறக்கப் போகும்
குழந்தைக்கு அவன் தந்தையாக வேண்டுமென்றும் கேட்கிறாள்.
அவன்
திரும்பவும் தெளிவாகச் சொல்கிறான் - அதற்கான ஆள் நான் இல்லை. என்னால் ஒரு
நல்ல தந்தையாக இருக்க முடியாது (அல்லது நல்ல தந்தை என்று உலகத்தில் எவரும்
இல்லை). அவளுக்கு இது விளங்குவது இல்லை.
திருமணம் செய்து
கொள்வதாகச் சொல்கிறான் பின் அதை மறந்து விட்டேன் என்கிறான்; தன்னால் நல்ல
தகப்பனாக இருக்க முடியாது என்று சொல்கிறான்; என்ன மனிதன் இவன் என்பது போல
பார்க்கிறாள். அல்லது இவன் மனிதன் தானா அல்லது வேறு எதுவுமா என்றும்
அவளுக்குச் சந்தேகம் வருகிறது. இதனால் அவனை விட்டுப் பிரிந்து சென்று
விடுகிறாள். அப்பொழுது அவள் வயிற்றில் குழந்தை இருக்கிறது. தான் ஒரு
மருத்துவர் என்பதால் தனக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியும் என்று
சொல்லிப் போகிறாள்.
தன்னாலொரு குடும்பஸ்தனாக வாழ முடியாது
என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே
அப்படித்தான். அவனை அவனுக்கு நன்றாகவே தெரியும். சுட்டுப் போட்டாலும்
அவனுக்கு அதெல்லாம் வராது. ஆனால், கதையில் அவனை நிஜமாகவே சுட்டுப்
போடுகிறார்கள். இந்த முறை சுட்டது பாகிஸ்தான் ராணுவம், கார்கில் போரில்.
பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் அவன் ராணுவத்தின் நிஜ முகத்தைப்
பார்க்கிறான். அவன் தந்தையை விடவும் கொடூரமானதாக இருக்கிறது.
எப்படியாவது தாய் நாட்டை அடைய வேண்டும் என்பது ஒரு வெறி போல அவனுக்குள்
ஊறுகிறது. Oedipul nationalism. தனக்கு உயிர் தந்த, தனது உயிரை
சுமந்திருந்த அந்தப் பெண்ணையே நினைத்துக் கொண்டிருக்கிறான். அவள்
தாய்நாட்டில் தான் எங்கேயோ இருக்கிறாள். அவளைத் தேடிப் போய் பார்க்க
வேண்டும் என்று தீர்மானம் செய்கிறான். ஆச்சரியப்படும் வகையில் இந்தத்
தப்பிச் செல்லும் பயணமும் அவனுக்கு சாகச பயணமாகவே தோன்றுகிறது.
தாய்நாட்டிற்குத் திரும்பியதும் அந்தத் தாய் போன்ற பெண்ணைத் தேடி
அலைகிறான். குற்றவுணர்வு அவனைக் கொல்கிறது. இறுதியில் அவளைச் சந்தித்தும்
விடுகிறான். ஆனால் அவள் தனியாக இல்லை.
அவனது சிறு மகளும் அங்கே
இருக்கிறாள். தன்னையும் மகளையும் அவனுக்குப் பிடிக்கிறதா என்று அவள்
பயந்ததாகச் சொல்கிறாள். அவர்களை அவன் அணைத்துக் கொண்டு அழுகிறான்.
Electra complex சாத்தியங்களோடு கதை முடிகிறது.
No comments:
Post a Comment