கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை சுட்டிக்காட்டுகிறார் பொறியாளர் கோமகன். (உள்படம்) மயன் குறியீடு.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான மயன் குறியீடு அதன் மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிய ராஜேந்திர சோழன், தஞ்சையைப் போலவே அதேசமயம் தமிழ் கட்டிடக்கலை மரபுப்படி கங்கை கொண்ட சோழபுரத்திலும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். வழக்கமாக கோயில்களில் நான்கு பக்க விமானம்தான் இருக்கும் ஆனால், இந்தக் கோயிலில் தமிழ் மரபுப்படி எட்டு பக்கங்களைக் கொண்ட விமானத்தை அமைத்தான் ராஜேந்திரன்.
கோயிலின் கிழக்கு பக்கம் உள்ள மகா துவாரத்தில் (பெரிய நுழைவு வாயில்) இரண்டு பக்கமும் இரண்டு தூண்கள் மட்டுமே நிற்கின்றன. முன்பு இதன் வழியாகத்தான் கோயிலின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும். தற்போது வழி அடைக்கப்பட்டுள்ள இந்த வாயிலின் படியில்தான் மயன் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆர்வலரும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான பொறியாளர் கோமகன், “துவாரகாபுரியை வடிவமைத்துக் கொடுத்த மயன்தான் நமக்கு ஆதி தச்சர். மயன் சாஸ்திரம்தான் நாம் பயன்படுத்தும் கட்டுமான சாஸ்திரம்.
பொதுவாக நாங்கள் ஒரு கட்டுமானத்தை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பு ஆதாரக் குறியீடு ஒன்றை ஏற்படுத்துவோம். ‘பெஞ்ச் மார்க்’ என்று சொல்லப்படும் அதுதான் மயன் குறியீடு. அந்த குறியீடுதான் ஒட்டுமொத்தக் கட்டுமானத்துக்கும் ஆதார அளவீடாக இருக்கும்.
கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை ஆதாரமாகக் கொண்டுதான் ஒட்டு மொத்த கோயிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மகா துவார படியானது இரண்டு கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு முனைகளிலும் மயன் குறியீடு உள்ளது. இந்தக் குறியீடுகள் இரண்டுக்கும் மையத்தை குறித்தால், கோயில் வாசலிலிருந்து உள்ளே உள்ள கர்ப்பகிரகம் வரை ஒரே நேர்கோட்டில் வருகிறது.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மயன் குறியீட்டின் மையத்தில் திசைமானியை வைத்தால், கோயில் மிகச் சரியாக கிழக்கு மேற்கில் அமைந்திருப்பதை துல்லியமாக காட்டுகிறது. கர்ப்பகிரகத்தில் மின்காந்த அலைகள் சமமாக இருக்க வேண்டும்.
இந்தக் கோயிலில் அதை மிகச் சரியாக அமைத்துள்ளனர். நாம் இப்போது பயன்படுத்தும் அளவீடுகள் மற்றும் காந்தப்புல கருவிகளைப் போல ஏதோ ஒரு கருவியையோ தொழில்நுட்பத்தையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளனர்’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
No comments:
Post a Comment