Search This Blog

Thursday, April 14, 2016

தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
-- பாவேந்தர் பாரதிதாசன்
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
அறுபது ஆண்டு கதை
"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "விய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன'. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
"அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல் நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள. இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்' என்று விளக்கம் தந்தார்.
இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலிலியாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ் புத்தாண்டு
பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.
தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். "வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்' என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற் போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு-அதாவது 24 மணித்தியாலங்களோடு- அச்சொட்டாகப் பொருந்து கின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும்.
""கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே'' (தொல்காப்பியம்)
தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
1. இளவேனில்- (தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங் களுக்குரியது)
3. கார் - (வைகாசி ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி (புரட்டாசி ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)
இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழர் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்தனர், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துகளாகும்.!
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்
ஏதொ கலைஞர் மாற்றிவிட்டார் என்பது போன்ற பிம்பம் இங்கு உள்ளதால் பலர் அதை ஏற்றுகொள்ள மறுகின்றனர் ஆனால் உண்மையில் 1920 களில் தமிழ் அறிஞர்கள் கூடி தமிழ் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது தான் தை புத்தாண்டு....நம் தேசிய தலைவர் மேதகுவே பிரபாகரனும் 1990 களின் பிற்பாடு தையை தான் புத்தாண்டாக ஈழத்தில் அறிவித்தார் என்பதையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும்...
ஆங்கில புத்தாண்டை போல் இதையும் ஒரு நிகழ்வாக ஏற்றுகொள்ளலாமே அன்றி இதை தமிழர் புத்தாண்டு என்பது ஏற்புடையது அல்ல...

No comments:

Post a Comment