நமது தமிழ் மருத்துவக் குறிப்புகள் பல செய்யுள் வடிவில் பலராலும் அறியப்படாமல் புதைந்து கிடக்கின்றன. தொழுநோய் அல்லது தோல்நோய் உள்ளவர்கள் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள "முசிறி'
என்ற சிற்றூரில் அமைந்துள்ள கோயில் குளத்தில் குளித்தால் அந்நோய் நீங்கிவிடும் என்கின்றனர்.
÷"சாக்கடல்' நீருக்கு (உப்புத்தன்மை அதிகமாக உள்ள கடல் நீர்) தொழுநோயைக் குணப்படுத்தும் மகத்துவம் உண்டு என்று கூறுவர். அதனால் அக்குளத்து நீரும் உப்புத்தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
÷இதன் உண்மையை அறிந்துகொள்வதற்காக அவ்வூருக்குச் சென்று, அங்குள்ள குளத்து நீரை அருந்தியபோது உப்புத்தன்மை இருப்பதாகத் தோன்றவில்லை; இனிமையுடையதாகவே இருந்தது. மேலும் அக்கோயிலில் பணி செய்யும் ஒருவரிடம் அக்கோயில் பற்றிய வரலாறு குறித்து கேட்டபோது, அவர் கூறிய வரலாறு இது:
÷"காஞ்சிபுரத்தில் சிற்றரசனாக இருந்தவன் முசுகுந்தன். அவனை ஏழரை நாட்டுச் சனி பிடித்துவிட்டது. தசரதன் வம்சத்தில் வந்த அவனுக்குத் தோல்நோயும் ஏற்பட்டுவிட, மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஒரு
சிலர் அவனிடம் இராமேசுவரம் கடலில் நீராடினால் நோய் நீங்கும் எனக் கூறியுள்ளனர். அவ்வரசனும் அமைச்சர் உள்ளிட்ட சிலரோடும் இராமேசுவரத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். பயணம் கிளம்பியவர்கள் வழியில் தண்ணீர் கிடைக்காமல் இன்னலுற்றுள்ளனர். இச்சிற்றரசன் சிவபக்தனாக இருந்ததால் அவனது நோயைக் குணப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தொழு நோய் கொண்ட ஒரு நாயுருக் கொண்டு அவனுடனேயே வந்துள்ளார்.
÷ நீரின்றித் தவித்த அவர்களுக்கு இக்குளத்து நீர் பெரிதும் மகிழ்ச்சியைத்தர, ஓரிரு நாள் இங்கு தங்கிச் செல்லலாம் என முடிவெடுத்துள்ளனர். அவர்களோடு வந்த நாய் நோயின் கடுமையைத் தாங்க முடியாமல் அக்குளத்து நீரில் குதித்து நீந்தியுள்ளது. அன்று மாலையே நாயின் உடலிலிருந்த நோயின் கடுமை சற்று தணிந்ததுபோல் அரசன் உள்ளிட்டோருக்குத் தெரிந்துள்ளது.
÷அவர்கள் தொடர்ந்து அந்த நாயைக் கவனித்துவர, ஒருவாரம் அக்குளத்தில் குளித்த நாய் முழுமையாகக் குணம் பெற்றுள்ளது. உடனே முசுகுந்தனும் அக்குளத்தில் குளித்து, நோய் நீங்கப் பெற்றுள்ளான். இவ்விடத்தில் ஏதோ "சக்தி' உள்ளது என அறிந்த அவன், சோழ மன்னனின் அனுமதியுடன் இக்கோயிலைக் கட்டியுள்ளான். தன்னோடு வந்தவர்களை அங்கேயே தங்கவைத்து, "முசிறி' என்ற இவ்வூரை உருவாக்கிவிட்டு காஞ்சிபுரம் திரும்பிச் சென்றுள்ளான். அப்பரம்பரையில் வந்தவர்களே "முசுகுந்த வேளாளர்' என அழைக்கப்படுகின்றனர். இது தொடர்பான செப்பேடுகள் முன்பு இக்கோயிலில் இருந்தன; தற்போது அவை எங்குள்ளன என்று தெரியவில்லை'' என்றார் அந்தப் பணியாளர். மேலும், முசுகுந்தன் நாயோடு வருவது போல் செதுக்கப்பட்டிருந்த சிலை ஒன்றையும் சுட்டிக் காட்டினார்.
÷அவரது வரலாற்றில் விடை கிடைக்காததால், அக்குளக்கரையில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி "இது என்ன மரம்?' என்றபோது, "இது அழிஞ்சில் மரம்'. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் அழிஞ்சில் மரக்காடுகள் இருந்தன' என்று கூறினார்.
÷பல்வேறு மரம் / செடிகளின் மருத்துவ குணத்தைக் குறிப்பிடும் நூலொன்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அந்நூலின் பெயர் "பதார்த்தகுண விளக்கம்' என்பதாகும். இந்நூல் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடாக வந்துள்ளது. மரம் / செடிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்தி, அந்தந்த மரம் / செடிகள் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் என்பவை செய்யுள்களாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில், அழிஞ்சில் மரத்து மருத்துவ குணங்கள் இரண்டு பாடல்களில் சுட்டப்பெற்றிருந்தன. அப்பாடல்கள் வருமாறு:
"அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்த்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சீழாங்
குட்டமெனு நோயகற்றும் உறுமருந் தெய்திடில
திட்டமென வறிந்து தேர்!'
"பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் கிரந்திரணம் சேர்நோய்க - ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தைசெய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம்.'
இவ்விரு பாடல்களும் அழிஞ்சில் மரம் தொழுநோய், தோல் நோய் ஆகிய இரண்டிற்கும் மருந்தாவதைக் குறிப்பிடுகின்றன. ஆக, முசுகுந்தன் இவ்வூருக்கு வந்த காலத்தில் அழிஞ்சில் மர இலைகள் குளத்து நீரில் உதிர்ந்து, அழுகிக் கிடந்து, அந்நீர் நோய் தீர்க்கும் மூலிகை நீராக மாறியிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
÷செய்யுள்களாக இருப்பவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறையினர் புறந்தள்ளுகின்றனர். ஆனால், இந்நூலில் உள்ள குறிப்புகளைக்கொண்டே பல்வேறு முனைவர்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு தமிழ் மருத்துவம் தொடர்பான அரிய தகவல்கள் இந்நூலில் பொதிந்து - மறைந்து கிடக்கின்றன.
-முனைவர் அ.செல்வராசு
No comments:
Post a Comment