Search This Blog

Saturday, December 31, 2011

கவிதைக் கலை



ஒரு கவிதை இருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல
மௌனமாய் பேச்சற்று

புராதனப் பதக்கங்கள்
கட்டைவிரலுக்குத் தட்டுப்படுவது போல்
பாசி வளர்ந்து படிந்தகைப்பகுதிகளால்
தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்போல
மௌனமாய் ஒரு கவிதை
வார்த்தையற்றிருக்க வேண்டும்

பறவைகளின் பறத்தல் போல
நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை
இயக்கமில்லாதிருக்க வேண்டும்

இரவு பின்னலிட்ட மரங்களை
குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக
நிலாவிடுவிப்பது போல

பனிக்காலத்து இலைகளின்
பின்புறமிருந்து நிலா
ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல
ஒரு கவிதை
காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்

நிலா உயர்வது போல்
ஒரு கவிதை சமானமாய் இருக்க வேண்டும்
நிஜத்திற்கு இணையாய் அல்ல
எல்லாத் துயரத்திற்கும்ஒரு வெற்று வாசலைப் போல

மேப்பிள் மர இலையைப் போல
காதலுக்கு தலைசாயும் புற்கள்
மற்றும்
கடலுக்கு மேலாக
இரணடு வெளிச்சங்களைப் போல
ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது

இருக்க வேண்டும்
கவிதையாக.-

---ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் [Archibald Macleish] (அமெரிக்கா)Archibald MacLeish 

No comments:

Post a Comment