ஒரு கருத்தை நேரடியாகச் சொல்லும் ஆற்றல் வாய்ந்தது
உரைநடை. சாதாரண மொழி அறிவு உடையவர்க்கும் பயன்
அளிக்கும் இயல்பு கொண்டது. தொடக்கம், விளக்கம், நிறைவு
என்ற வரையறுத்த அமைப்பில் உருவாவது. உரைநடைக்கு
என்று தனி ஒரு வடிவ இலக்கணம் இல்லை; பத்தி அமைப்பு
உண்டு; பக்க அளவு உண்டு. எளிய தன்மையது. இதனால்,
பல்வேறு துறைகளில் உரைநடையைப் பயன்படுத்த முடிகின்றது.
பேச்சு வழக்குச் சொற்களுக்கும் உரைநடையில் இடம் உண்டு.
செறிவான இலக்கிய நடைச் சொற்களுக்கும் இடம் உண்டு.
சொல் சிக்கனம் வாய்ந்த அறிவியல் செய்திகளையும் உரைநடை
வழி வெளியிட முடியும். தமிழில் இத்தகு உரைநடையின்
தோற்றம் வளர்ச்சி பற்றி மேலும் அறிவோம்.
தமிழ் உரைநடை தொன்மை வாய்ந்தது. தமிழ் மொழியில்
எழுதப் பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்
உரைநடை தொடர்பான குறிப்பு இடம் பெற்று உள்ளது.
“உரை வகை நடையே நான்கு என மொழிபடும்” (பொருள் : 475 : 5)
என்பது தொல்காப்பியச் சூத்திரம். உரைநடை இலக்கியம்
நான்கு வகைப்படும் என்பது இதன் பொருள். என்றாலும்,
அந்தக் காலத்தைச் சேர்ந்த உரைநடை நூல்கள் இன்று
கிடைக்கப் பெறவில்லை. ஐரோப்பியர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு
வித்திட்டனர். படி நிலை வளர்ச்சியில் தமிழ் உரைநடை வளர்ந்து உள்ளது. தமிழ்
மொழியில் உரைநடை வளர்ந்தது ஒரு நிலை.
இன்றோ உரைநடையில்தான் தமிழே வளர்கின்றது. அந்த
அளவிற்கு உரை நடையின் தேவை அதிகரித்து உள்ளது.
சங்க இலக்கியங்கள் பிற்காலத்தில் தொகுக்கப் பெற்றன.
அத்தொகுப்பு நூல்களில் சிற்சில உரைக் குறிப்புகள் இடம்
பெற்றுள்ளன. பாடல்களின் கீழே திணை, துறை தொடர்பான
குறிப்புகள் உரை நடையில் எழுதப் பெற்று உள்ளன. பாடியவர்,
பாடப் பெற்றவர் பெயர், சூழல் தொடர்பான குறிப்புகளும்
உரைநடையில் எழுதப் பெற்று உள்ளன. இக் குறிப்புகள் யாப்பு
வடிவினவாக அமையவில்லை; இதுபோன்றே உரைநடைத்
தன்மைக்கு உரிய பேச்சு வடிவத்தையும் சார்ந்து இல்லை.
சான்றாக ஒன்றைக் காணலாம்:
திணை: வாகை துறை: அரச வாகை: இயன்மொழியுமாம்.
பாண்டியன் தலையாலங் கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனாற்
பிணியிருந்த யானைக் கட்சேய்
மாந்தரஞ்சேர லிரும்பொறை
வலிதிற் போய்க் கட்டி லெய்தினானைக்
குறுங்கோழியூர் கிழார் பாடியது
(புறநானூறு. 17)
இந்த நடை, சிலப்பதிகாரக் காலத்தில் மேலும் வளர்ந்து
உள்ளது. சிலப்பதிகாரம் செய்யுள் வடிவில் அமைந்தது.
அதில், செய்யுளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உரைநடையில்
சில குறிப்புகள் இடம் பெற்று உள்ளன. இதனால்,
சிலப்பதிகாரத்தை ‘உரை இடை இட்ட பாட்டுடைச்
செய்யுள்’ என்று குறிப்பதும் உண்டு. பாடல் வரிகளுக்கு
முன்பும் பின்பும் இடம் பெற்றுள்ள இந்த உரைநடைக்குச்
சான்று வருமாறு :
மணமதுரையோடரசு கேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங் கிழந்துபோந்த
கடுவினையேன் யானென்றாள்
என்றலு மிறைஞ்சியஞ்சி யிணைவளைக்கை யெதிர்கூப்பி
நின்ற வெல்லையுள் வானவரு நெடுமாரி மலர்பொழிந்து
குன்றவருங் கண்டு நிற்பக் கொழுநனொடு
கொண்டு போயினார்
இவள்போலு நங்குலக்கோ ரிருந்தெய்வ மில்லை யாதலின்
(வஞ்சிக் காண்டம், குன்றக் குரவை, உரைப்பாட்டு மடை)
இதுவரை தொடக்கக் காலத் தமிழ் உரைநடைக்குச்
சான்றுகள் இரண்டு வழங்கப் பெற்றன. இவற்றின்
அடிப்படையில் அக்காலத் தமிழ் உரைநடையின்
தன்மைகளாகக் கீழ் வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
• செய்யுள் ஓசையில் இருந்து விடுபட்டவை.
• தமக்கெனத் தனி ஒரு வடிவ வரையறை இல்லாதவை.
இதனால், வடிவ நிலையில் எந்த விதமான இலக்கண
வரையறைக்கும் உட்படாதவை.
• கூட்டுச் சொற்களால் ஆனவை.
• பேச்சு வழக்குச் சொற்கள் இல்லாதவை.
• இலக்கியம் கற்கத் துணை நிற்பவை.
உரையாசிரியர் கால உரைநடை
இலக்கியம், இலக்கணம், வைத்தியம், தத்துவம், சோதிடம்
என எல்லாமே செய்யுள் அல்லது சூத்திர வடிவில் எழுதப்
பெற்றன. இவற்றைக் கற்கும் அல்லது கற்பிக்கும் நோக்கில்
விளக்கங்கள் உரைக்கப்பட்டன. இந்த விளக்கங்கள்
உரைநடையில் அமைந்து இருந்தன. இவை தொடக்கக்
காலத்தில் எழுத்து வடிவில் ஏட்டுச் சுவடிகளில் எழுதப்
பெறவில்லை. தலைமுறை தலைமுறையாகக் ‘கேட்டு-சொல்லி’ச்
செவி வழியாகவே வந்தன.
இவ்வகை உரைநடை தமிழ்மொழியில் கி.பி. எட்டாம்
நூற்றாண்டு முதல்தான் சுவடிகளில் எழுதப் பெற்று உள்ளது.
சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள்,
தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் ஆகியவற்றுக்கு
உரிய உரைகள் கிடைத்துள்ளன.
தமிழ் மொழியில் முதன்முதலில் ஏட்டில் எழுதப் பெற்ற
முதல் உரை இறையனார் அகப்பொருள் உரை ஆகும்.
இறையனார் அகப்பொருள் என்னும் பொருள் இலக்கண
நூலுக்கு நக்கீரரால் சொல்லப்பட்டுப் பிற்காலத்தில் ஏட்டில்
எழுதப் பெற்ற உரைதான் இது. இந்த உரையின் ஒரு சிறு
பகுதி வருமாறு:
“சந்தனமும், சண்பகமும், தேமாவும், தீம்பலவும், ஆசினியும், அசோகமும்,
கோங்கும், வேங்கையும், குரவமும் விரிந்து, நாகமும், திலகமும், நறவும்,
நந்தியும், மாதவியும், மல்லிகையும், மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை
ஞாழலும்....... வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர்
வேங்கை கண்டாள்”
இந்த நடையில் ஓர் ஓசை ஒழுங்கு நிலவுகிறது. ஆனால்
இது செய்யுளுக்கு உரிய ஓசை அல்ல. இது செய்யுளுக்கு உரிய
சொற்களால் எழுதப் பெற்ற உரைநடைப் பகுதி. இதனால் ஓசை
ஒழுங்கு இயற்கையாக அமைந்து விட்டது. மேலும் இதில்
நீண்ட தொடர் அமைப்பைக் காண முடிகின்றது. இதே நூலில்
ஒரு பத்தியின் அளவு ஒரு பக்கத்திற்கு மலோகவும் அமைந்து
உள்ளது.
* சிறு சிறு பத்திகள்
இது போன்ற பெரிய அளவினதாக அமையும் பத்தி
அமைப்பு, காலப் போக்கில் மாற்றம் பெற்று உள்ளது.
இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு 11 ஆம் நூற்றாண்டில்
உரை எழுதி உள்ளார். அந்த உரையில் சிறு சிறு பத்திகள்தாம்
மிகுதியாக உள்ளன. சான்று ஒன்று வருமாறு:
இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ
வெனின், சார்பின் தோற்றத்து
எழுத்துக்களிற் குற்றியலிகரத்தின்
ஒரு மொழிக் குற்றியலிகரத்திற்கு
இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று
(தொல்.எழுத்.2:34. உரை)
இதே உரைப்போக்கு 13 ஆம் நூற்றாண்டு வரை
தொடர்கின்றது. 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்
நச்சினார்க்கினியர். இவர் எழுதி உள்ள உரையிலும் நீண்ட
தொடர்கள் இடம் பெற்று உள்ளன. கூட்டுச் சொற்கள் இடம்
பெற்று உள்ளன. பேச்சு வழக்குச் சொற்கள் தவிர்க்கப் பெற்று
உள்ளன. சான்று ஒன்று வருமாறு :
ஆய்தமென்ற ஓசைதான் ‘அடுப்புக்
கூட்டுப் போல’ மூன்று
புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு
ஆய்தமென்ற முப்பாற் புள்ளியு’
மென்றார். அதனை இக்காலத்தார் நடுவு
வாங்கியிட்டெழுதுப.
இதற்கு வடிவு கூறினார், ஏனையொற்றுக்கள்
போல உயிரேறாது
ஓசைவிகாரமாய் நிற்பதொன்றாகலின்....
(தொல்.எழு.நூன்மரபு: 2, உரை)
*வினாவிடை முறை
செய்யுள் அல்லது சூத்திர வடிவ நூல்களுக்கு உரைகள்
வினாவிடை முறையில் எழுதப் பெற்று உள்ளன. விளக்கம்
தரும் முறையில் வினா கேட்கப் பெறுகின்றது. அதன் பின்னர்
அதற்கு உரிய விடை அளிக்கப் பெறுகின்றது. இந்தச் சூழலில்
நீண்ட தொடர்கள் தவிர்க்கப் பெற்று உள்ளன. சிறு சிறு
தொடர்கள் பயன்படுத்தப் பெற்று உள்ளன. என்றாலும் கூட்டுச்
சொற்களையும், இலக்கிய வழக்குச் சொற்களையும்
பயன்படுத்தும் முறையே தொடர்ந்து உள்ளது. சான்று ஒன்று
வருமாறு:
நண்டிற்கு மூக்குண்டோவெனில், அஃது ஆசிரியன்
கூறலான் உண்டென்பது பெற்றாம்
(தொல்:பொருள்:மரபியல்:31, உரை)
கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த
பேராசிரியரின் உரை இது
* மணிப்பிரவாள நடை
மணி தமிழ்ச் சொல்லைக் குறிக்கும். பிரவாளம்
வடமொழிச் சொல்லைக் குறிக்கும். பிரவாளம் என்றால்
பவளம்/பவழம் என்பது பொருள். மணியும் பவளமும் கலந்து
தொடுக்கப் பெற்ற மாலை அழகாக அமையும். அதுபோலத்
தமிழுடன் வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து உரை
எழுதுவது அழகாகக் கருதப் பெற்றது. தமிழில் வைணவ பக்தி
இலக்கியங்களுக்கு இவ்வகை உரைநடையில் தான் உரைகள்
எழுதப் பெற்றன. சான்றாகத் திருவாய்மொழி ஈட்டு உரையில்
ஒரு பகுதியைப் பாருங்கள்:
மாசு உண்ணாச் சுடர் உடம்பாய் -
ஹேயப் பிரத்யநீகமாய்ச் சுத்த
சத்துவமாகையாலே நிரவதிக
பேரொளி உருவமான திவ்விய
விக்கிரகத்தை யுடையையாய்
(திருவாய்மொழி:பாட்டு 230, உரை)
No comments:
Post a Comment