Search This Blog

Saturday, December 31, 2011

சிலப்பதிபார அடைக்கலக் காதையில் இடம்பெற்றுள்ள தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள் - ஒரு பார்வை



முன்னுரை

இலக்கியங்கள் பல படைக்கப்பெற்றப் பிறகு இலக்கணம் தோன்றும். இது உலகப் பொது நியதி. காப்பியங்கள் பல தோன்றியப் பின்னரே காப்பிய நெறிகளை ஆராயும் இலக்கண நூல்கள் தோன்றின. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தை பனிரெண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தண்டியலங்காரத்தின் காப்பியப் பண்புகளைக் கொண்டு ஆராய்ந்து நோக்கிய இலக்கிய ஆய்வாளர்கள், தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் அப்பண்புகள் உள்ளன என உரைக்கின்றனர்.

தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள்

தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப் படுத்தி அவரால் எழுதப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்தியம்புகிறது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், காப்பியம் என இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித் தனியே எடுத்துரைக்கிறது.

பொதுவாக காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறு காப்பியம் என இருவகையாக ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுவர். அவற்றுள் பெருங்காப்பியத்தின் பண்புகளைத் தண்டியலங்கார நூற்பா பின்வருமாறு எடுத்துச் சொல்கிறது.


பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் ..........
(தண்டியலங்காரம், நூற்பா – 8 )

எனத் தொடங்கும் பெருங்காப்பிய இலக்கணத்தைத் தனது காப்பியத் திறன் என்ற நூலில் நான்காகப் பகுத்துக் கூறுகிறார் சோம. இளவரசு அவர்கள். அவை காப்பிய அமைப்பு, பொருள், வருணனை, நிகழ்ச்சி என வகைப் படுத்துகிறார்.

காப்பிய அமைப்பு
காவியத்தின் தொடக்கம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் என அமைதல் வேண்டும். சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பிரிவுகள் இருக்கவேண்டும். (பரிச்சேதம் எனும் பிரிவு தமிழில் இல்லை)
காப்பியப் பொருள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளும் அமையவேண்டும். இதில் ஒன்றோ பலவோ குறைந்தால் அது பெருங்காப்பியம் ஆகாது. அது சிறு காப்பியம் எனக் கருதப்படும். ஒப்பற்றத் தலைவன் ஒருவன் காப்பியத் தலைவனாக இருக்கவேண்டும்.

காப்பிய வருணனை
மலை, கடல், நாடு, நகர், அறுவகைப் பெரும் பொழுதுகள், அறுவகைச் சிறுபொழுதுகள், ஞாயிற்றின் தோற்றமும், திங்களின் தோற்றமும் வருணனைகளாக வருதல் வேண்டும்.

காப்பிய நிகழ்ச்சி
திருமணம், முடி சூட்டுதல், பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு, மக்கட் பேறு, ஊடல், கூடல், அமைச்சரோடு ஆலோசனை, தூது, வெளிநாட்டுப் பயணம், படையெடுத்துச் செல்லல், போர், வெற்றி போன்றவை காப்பிய நிகழ்ச்சிகள் எனத் தண்டியலங்காரம் கூறுகிறது. மேலும் எண்வகை சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்பும் அமைதல் வேண்டும் எனவும் குறிக்கிறது. ஆனால் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் போன்ற மக்கட் காப்பியங்களுக்கு இவை பொருந்தி வருமா என நோக்க வேண்டும் என்கிறார் சோம. இளவரசு.



சிலப்பதிகாரம்
தமிழ்ச் சோலையின் ஐம்பெரும் காப்பியங்களில் தலையாய நாடகக் காப்பியம் சிலப்பதிகாரம். சங்க இலக்கியங்களின் தாக்கங்களையும், பொதுமைப் பண்பு நலனையும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழின் சாரத்தையும் செழுமையுறக் கொண்டிருக்கும் சித்திரக்காவியம் சிலப்பதிகாரம்.

உலகமொழிகள் பலவற்றிலும் காப்பியங்கள் உண்டு. அவையாவும் பெரும்பாலும் மன்னர் குடும்பத்தினரையே தலைமக்களாய்க் கொண்டு படைக்கப்பட்டன. ஆனால் தமிழின் முதற்காப்பியமோ குடிமக்கள் காப்பியமாகத் திகழ்கின்றது. குடிமக்களில் ஒருவரான ஒரு பெண்ணிடம் நாடாளும் மன்னனன் தோற்றுப் போகிறான். முடி மன்னர்களுக்கு வரம் கொடுக்கும் பெண் தெய்வமாகக் குடிமகள் ஒருத்தி உயர்ந்து நிற்கிறாள் என்று காட்டும் சிலப்பதிகாரம் தனிச் சிறப்புமிக்கக் காப்பியமாகும்.

தமிழிலக்கியங்களில் தனித்துவமுடைய இக்காப்பியத்தைச் சேர நாட்டு சமணத் துறவியான இளங்கோவடிகள் இயற்றியுள்ளார். இச் சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலேயே புனையப் பெற்றதற்கான காரணமும், கதைச் சுருக்கமும் அமைந்துள்ள பதிகச் செய்யுளை முதலில் பெற்று, மங்கல வாழ்த்துப் பாடல் முதலிய பத்துக் காதைகளைக் கொண்ட புகார்க் காண்டமும், அடைக்கலக் காதை முதலிய பதின்மூன்று காதைகளைக் கொண்ட மதுரைக் காண்டமும், குன்றக் குரவை முதலிய ஏழு காண்டங்களைக் கொண்ட வஞ்சிக் காண்டமும் கொண்டு, மூன்று காண்டங்களையும், முப்பது காதைகளையும் உள்ளடக்கியுள்ளது. இக் காப்பியம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றது என ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

அடைக்கலக் காதை
மாதவியைப் பிரிந்த கோவலன், வாழ்வைத் தேடி கண்ணகியுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறான். கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் கவுந்தியடிகள் எனும் சமணத் துறவியைச் சந்திக்கின்றனர். மூவரும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். வழியில் மாடலன் மறையோனின் சந்திப்பு நிகழ்கிறது. அதன் பின் மதுரை எல்லையில் மாதரி என்னும் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருகின்றார் கவுந்தியடிகள்.

சிலப்பதிகாரத்தினை இளங்கோவடிகள் மூன்று காண்டங்களாகப் பிரித்திருந்தாலும், மதுரைக் காண்டமே சிலப்பதிகாரத்துக்கு உயிராக, கதையின் மையமாக அமைந்துள்ளது. இந்த மதுரைக் காண்டத்தில்தான் அடைக்கலக் காதையும் தன்னிகரில்லாத் தன்மையுடன் விளங்குகிறது.

அடைக்கலக் காதையில் பெருங்காப்பியப் பண்புகள்.
தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பியப் பண்புகள் சிலப்பதிகார அடைக்கலக் காதையில் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்படுவதைச் சான்றுகளுடன் இனி வரும் பகுதியில் காண்போம்.

வாழ்த்து
மதுரையில் தங்குவதற்கு இடம்பார்க்கச் சென்ற கோவலன் மதுரை நகரைச் சுற்றிப் பார்க்கிறான். பூம்புகார் நகரத்தில் காணாத அரிய காட்சிகளைக் காணுகிறான். கோவலன் மதுரை நகரின் சிறப்பை வாழ்த்துவதாக,
நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி.......
என அடைக்கலக்காதையின் முதற் பகுதியில் பாண்டிய மன்னர் சிறப்புகளையையும், மதுரையைப் பற்றியும் போற்றி வாழ்த்துகிறார் இளங்கோவடிகள். மதுரையை ஆண்ட பாண்டியர்கள் நல்லாட்சி செய்து வருவதால் பாண்டிய நாடு செங்கோலாலும், செல்வத்தாலும் சிறந்து விளங்குகிறது. மேலும் மதுரையைப் பற்றிக் கூறுகையில்,

பதி எழு அறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர்
மக்கள் மதுரையை விட்டு வெளியே குடிபோக நினைக்கவில்லை. பாண்டிய நகரையும் நாட்டையும் பெரிதும் போற்றி வாழ்ந்து வந்தனர் எனக் கோவலன் வாயிலாக குறிப்பிடுகிறார்.

பூம்புகாரைப் பற்றி இளங்கோவடிகள் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பிற் புகார்
புகார் என்ற சொல்லிற்கு,

பகைவர் வந்து புகார்.
வாழ வழி தேடி வேறு நாட்டிற்குச் சென்று புகார்.
பிற நாட்டிற் படையெடுத்துப் புகார்.
எனப் பல பொருள்படச் சன்றோர் நயம் கூறுவதுண்டு.

ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்காகப் பிற நாடு செல்வது அந்நாட்டிற்குச் சிறப்பில்லை. மதுரையும் அவ்வாறு பிற நாட்டிற்குத் தம் மக்கள் வாழ்வது கருதிச் செல்லாத சிறப்புடையது என்பதை அடைக்கலக் காதையின் முதற் பகுதியில் கோவலன் வாயிலாக விவரிக்கிறார் இளங்கோவடிகள்.

வருபொருள் உரைத்தல்
வருபொருள் உரைத்தல் என்பது அல்லது சொல்லப்படும் பொருளை உணர்த்துதல் என்பது காப்பியப் பண்புகளில் ஒன்றாக விளங்குகிறது. அடுத்து வரப்போகிறக் காதையில் கோவலனுக்கு ஏதோ தீயது நடக்கவிருக்கிறது என்பதை வைகறையில் அவன் கண்ட கனவை மாடல மறையோனிடம் கோவலன் கூறுவதாகக் கனாஉத்தி மூலம்,
கோவலன் கூறும்........கடிதீங்கு உறும் என... என்ற வரிகளின் வாயிலாக இளங்கோவடிகள் உணர்த்துகிறார்.

அடைக்கலக் காதையில் மாடலன் மறையோன் வாயிலாகக் கோவலனின் பெருமைகளைக் கூற வைத்திருப்பது காப்பிய உத்தியாகும். அடுத்து வரும் கொலைக்களக் காதையில் கோவலன் ஊழ்வினையின் காரணமாகக் கொலை செய்யப்படவிருப்பதால், இத்தகைய நன்மையைச் செய்தவன் இறக்கப்போகிறானே என்ற இரக்க உணர்வை நம்மிடையே ஏற்படுத்துகிறார் இளங்கோவடிகள் அடுத்து வரும் வரிகளின் மூலம்.
................................ இல்லோர் செம்மல்
இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல்...

தன்னிகர் இல்லாத்தலைவன்
ஒப்பற்றத் தலைவன் ஒருவன் காப்பியத் தலைவனாக இருத்தல் வேண்டும் என்ற பண்பிற்கேற்ப, கோவலனின் சிறப்புகளை இந்த அடைக்கலக் காதையில் மாடலன் மறையோன் மூலம் எடுத்தியம்புகிறார் இளங்கோவடிகள்.

ஞான நன்னெறி நல்வரம்பு ஆயோன்..........
கடக்களிறு அடக்கிய கருணை மறவ.

மதங்கொண்ட யானை மறையோன் ஒருவரைத் தாக்கிய போது, கோவலன் யானை மீதேறி அவனை விடுவித்து, யானையை அடக்கி வீர மறவனாக வெற்றி வாகை சூடினான் என மாடலன் மறையோன் வாயிலாகக் கூற வைத்திருக்கிறார் காப்பிய ஆசிரியர்.

பிள்ளை நகுலம் பெரும்பிறிது ஆக.....
நல்வழிப் படுத்த செல்லாச் செலவு.

கணவனால் ஒதுக்கப்பட்ட பார்ப்பனியின் பாவ புண்ணியங்களைப் போக்கி, அவள் துன்பத்தை நீக்கி, அவளை அவள் கணவனுடன் சேர்த்து வைத்து, அவர்களின் இல்வாழ்வுக்கு கைப்பொருள் தந்து உதவுகின்றான் செல்லாச் செல்வன் கோவலன்.

பத்தினி ஒருத்தி படிற்றுஉரை எய்த
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்

ஒருவன் பத்தினி பெண் மீது வேண்டுமென்றே பழி சுமத்தி பொய் சொன்னதால் பூதம் அவன் உயிரைப் பறிக்க வந்த போது, அவன் தாயின் அலறல் கேட்டு வந்த கோவலன், ‘என்னுயிர் எடுத்து இவனுயிர் விட்டு விடு’ என்கிறான். அதற்குப் பூதம், ‘தீய உயிரை விட்டு விட்டு நல்லுயிர் எடுப்பது அறமாகாது’ என்று மறுத்துவிட்டது. மகனை இழந்து வருந்திய தாய்க்கும் சுற்றத்தாருக்கும், அவர்கள் தொடர்புடைய உறவினர்களுக்கும், தன் உறவினர்களுக்கு உதவுவது போல் உதவி, பல்லாண்டுகளாகப் பாதுகாத்து வந்தான் இல்லோர் செம்மல் கோவலன்.

மாடலன் மறையோன் வாயிலாகக் கோவலனின் வீரம், கொடை மனம், இரக்கக் குணம், அற உணர்வு என அவனின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இளங்கோவடிகள் மேலும் கோவலனை கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என புகழுரைத்து அடைக்கலக் காதையின் தன்னிகர் இல்லாத் தலைவனாகச் சித்தரிக்கின்றார்.

தன்னிகர் இல்லாத் தலைவி
சிலப்பதிகாரத்தின் தலைமைப்பாத்திரங்களில் மிகுதியாகப் பங்கு கொள்வது கண்ணகியின் பாத்திரமே.

மண்மகள் மீது நடந்தேயறியாத இவளது ‘வண்ணச்சீரடி’ கல்லம் முள்ளும் நீரும் கடந்து செல்கிறது.

யாருக்காக?
அவளுக்காகவா?
இல்லை.
கணவனின் வாழ்வு மலர வேண்டுமென்பதற்காக மட்டுமே.
நடந்தே அறியாதவள். இவ்வளவு தொலைவு நடந்து வந்த பிறகும் அவள் வருத்தப்படுகிறாளாம்.
அவளின் துயரத்திற்காகவா?
இல்லை.
கணவன் படும் துயரத்திற்காக.

கடுங்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு
நடுங்கு துயர் எய்தி நாப்புலர வாடித்
தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி..

கண்ணகி படும் துயரை இவ்வாறு ஒரு பெண்ணே வெளிப்படுத்தியிருப்பது அவளின் சிறப்பை உணரவைக்கிறது.

வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு

என்பது அடிகள் வாக்கு.

கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்

எனத் துறவியான கவுந்தியடிகளைச் சொல்ல வைத்துள்ளார் இளங்கோவடிகள்.
அருகனைத் தவிர மற்றவர்களைப் போற்றாத கவுந்தியடிகளே கண்ணகியைப் போற்றுவது கண்ணகியை அடைக்கலக் காதையிலும் தன்னிகர் இல்லாத் தலைவியாகச் சித்தரிக்கிறது.

மக்கட்பேறு
மாடலன் மறையோன் கோவலனிடம் மாதவிக்குக் குழந்தையாக மணிமேகலை பிறத்தலும், அக்குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடைபெறுதலும் எனக் கூறுவது மக்கட்பேறு என்ற காப்பியப் பண்பு அடைக்கலக்காதையில் விவரிக்கப்படுவது அறியவருகிறது.

மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று....



புனல் விளையாட்டு
மாடலன் மறையோன் அகத்திய முனிவன் வாழ்ந்த பொதிகை மலையை வலம் வந்து, குமரியாற்றில் நீராடித் தன் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கிறான் என வரும் காட்சி, பெருங்காப்பியப் பண்பான புனல் விளையாட்டை தன்னகத்தே அடைக்கலக் காதை கொண்டுள்ளது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழில் ஆங்கண்...

ஞாயிற்றின் தோற்றம்
பெருங்காப்பியப் பண்புகளில் ஒன்றான ஞாயிறைப் பற்றியக் குறிப்புகள் மூன்று இடங்களில் இளங்கோவடிகளால் அடைக்கலக் காதையில் கையாளப்பட்டுள்ளன.

காதலி தன்னோடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுகென..

மாடலன் மறையோன் நகர்புறத்தே இருக்கும் இந்தப் புறஞ்சேரி துறவிகளுக்கே உரியது என்றும், கண்ணகியைக் கூட்டிக்கொண்டு கதிரவன் மறைவதற்குள் மதுரை அகநகர் செல்க என்று கோவலனுக்குச் சொல்லுகின்ற இடம் வருகிறது.

மாதரி என்ற இடையர் குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருவதற்கு முன்பாக கண்ணகியின் பெருமைகளை மாதரியிடம் கூறும் போது,

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு..

நா வற்றிப் போய் தான் வாடிய போதும், கடுமையான வெப்பத்தினால் நடக்க முடியாமல் தன் கணவன் உடம்பு வருந்தியதென மிகத் துயர் உற்றாள் என்கிறார் கவுந்தியடிகள்.

முளைஇள வெண்பல் முதிக்குறை நங்கையோடு
சென்ற ஞாயிற்றுச் செல்சுடர்..........

அறிவில் சிறந்து விளங்கும் பெண்ணான கண்ணகியை அடைக்கலமாகப் பெற்றுக்கொண்டு மேற்கே கதிரவன் மறைகின்ற மாலை நேரத்தல் மாதரி தன் இருப்பிடம் நோக்கிப் புறப்படுகிறாள் என வரும் காட்சியில் ஞாயிற்றைப் பற்றியக் குறிப்புகள் வருகின்றன.

நாற்பொருள் பயத்தல்
அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு வகை உறுதிப்பொருள்களை பயப்பதாக அமையவேண்டும் என பெருங்காப்பியப்பண்புகள் கூறுகின்றன. கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாகக் கொடுப்பதற்கு முன்பாக,

தவமுடையோர் தருகின்ற அடைக்கலக் பொருள் மிகச் சிறிதாயினும் பின்பு அது மிகப் பெரியப் பேரின்பத்தைக் கொடுக்கும்..
என்று கூறும் கவுந்தியடிகள், அதற்கு விளக்கமாக உத்திரகௌத்தன் என்னும் அரசனின் மகனைப்பற்றியும், இல்லற வாழ்வில் அறம் புரிந்த சாயலன் மற்றும் அவன் மனைவி பற்றியும் கூறுகின்றார்.

சாயலனின் மனைவி தன் வினைகள் நீங்க வேண்டும் என்பதற்காக ஒரு தவ முனிவனுக்கு உணவளிக்க முனைகிறாள். பிறரால் துன்புறுத்தப்பட்டு பசியோடு அவள் வீடடினில் நுழைகிறது ஒரு கருங்குரங்கு. முனிவனின் பாதத்தை வணங்கி, அவன் உண்ட பின் மீதமிருந்த உணவை உண்டு, முனிவன் கை கழுவிய நீரையும் அருந்திப் பெரும்பசி தீர்த்தது. அம்முனிவனும் சாயலனின் மனைவியிடம், உன் பிள்ளைகளோடு இக்குரங்கையும் ஒரே நிலையில் வைத்துப் பாதுகாக்கவும் என அடைக்கலமாகக் கொடுத்தான். அவளும் விருப்பத்தோடு வளர்த்து வந்த அக் குரங்கு இறந்துவிடவே, குரங்கிற்காக ஒதுக்கப்பட்டப் பொருளை அதனுடைய தீய பிறப்பு அறுக எனத் தானம் செய்தாள்.

காதற் குரங்கு கடைநாள் எய்தவும்
தானம் செய்வழி அதற்கொரு கூறு
தீதுஅறுக என்றே செய்தனள்.....

அத்தானத்தின் பயனாக மறுபிறவியில் அக்குரங்கு உத்தமகௌத்தன் எனும் அரசனுக்கு அழகும் அறிவும் ஒருங்கே பொருந்திய மகனாகப் பிறக்கிறது. முப்பதிரண்டு ஆண்டுகால அரசாட்சியில் பல வகையானத் தானங்களைச் செய்து தெய்வ வடிவம் பெறுகிறான். முற்பிறப்பில் கருங்குரங்காய் இருந்த தான் சாயலன் மனைவி செய்தத் தானத்தால் இத்தெய்வ வடிவம் பெற்றேன் என்பதை உலகம் அறிவதற்காகத் தன் தெய்வ வடிவில் ஒரு பாகத்துக் கையைக் கருக்குரங்கின் கையாகக் கொள்கிறான்.

தானம் செய்தும் தனக்கு அடைக்கலமாகத் தந்தப் பொருளை இகழாது போற்றித் தங்களின் மக்களோடு மக்களாக ஒன்றாக வளர்த்து வந்ததால், சாயலனும் அவன் மனைவியும் குறையாத இன்பத்தைத் தரும் வீடு பேறு பெற்றார்கள் எனக் கவுந்தியடிகள் உரைக்கின்றார்.

பெருங்காப்பியப் பண்பான நாற்பொருள் பயத்தல் அடைக்கலக் காதையில், கோவலனின் சிறப்புகளை மாடலன் மறையோன் கூறும் இடத்தும், அடைக்கலம் தருவதும், அதைப் பேணுவதும் என கவுந்தியடிகள் மாதரியிடம் கூறும் இடத்தும் நமக்கு விரிவாக விளக்கப்படுகிறது.

கிளைக் கதைகள்
பெருங்காப்பியப் பண்பான கிளைக் கதைகள் அமைதல் என்பனவும் அடைக்கலக் காதையில் கூறப்பட்டுள்ளன எனபதனை நாம் முன்பே பார்த்த கோவலனின் சிறப்புகளில் மாடலன் சொல்லும் மூன்று கதைகளும், அடைக்லப் பொருள் குறித்து கவுந்தியடிகள் சொல்லும் குரங்குக் கை வானவனின் புராணக் கதையும் உறுதிப்படுத்துகின்றன.

நாடகக் காப்பியம்
சிலப்பதிகாரம் தலைசிறந்த நாடகக் காப்பியம் என்று அறுதியிட்டுத் துணிந்து கூறுகிறார் வ.சுப. மாணிக்கம் அவர்கள் . கதை மாந்தர்களின் வாழ்க்கைச் செயல்கள் பல காலங்களில், பல ஆண்டுகளில் நிகழ்வன. ஆனால் நாடக ஆசிரியன் நடந்த கால அளவை எவ்வளவு குறுக்கமுடியுமோ அந்த அளவுக்குக் குறுக்கி, சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பவைப் போலக் காட்டுவான். இத்தன்மையை சிலப்பதிகாரத்திலும் பயன்படுத்தியுள்ளார் இளங்கோவடிகள்.

மாதவியைத் துறந்த கோவலன் வீடு வந்த அன்றே கண்ணகியைக் கூட்டிக் கொண்டு பொழுது புலர்வதன் முன் மதுரை செல்கிறான். கவுந்தியடிகளின் சந்திப்பு, மாடலன் மறையோன் வருகை, புறஞ்சேரியில் இருக்கக்கூடாது மதுரை நகருக்குச் செல்க என மாடலன் கோவலனுக்குச் சொல்லி விட்டு விடைபெறுதலும், மாதரியின் வருகையும், கண்ணகியை அடைக்கலம் பெறுவதும் என அடைக்கலக் காதையும் நாடகப் பண்போடு விறுவிறுப்பாகப் படைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.

முடிவுரை
உலகத்தின் சிறந்த மொழிகளில் ஒன்றாகிய இலத்தீன் மொழி கண்ட காப்பியம் ‘ஏனத்’. கிரேக்க மொழி கண்ட காப்பியம் ‘ஏதிசி’. அகிலப் புகழ்ப்பெற்ற ஷேக்ஸ்பியரின் ‘மாக்பெத்’. இவ்விலக்கியங்களுக்கு மேலாகப் பெரிதும் பேசப்படுவது, உன்னதமானக் காப்பியம் எனப் புவியோரின் புகழைச் சூடியது மில்டனின் ‘இழந்த சொர்க்கம்’ ஆகும். ஆனால் பத்தாயிரம் வரிகளுக்கு மேம்பட்ட இக்காப்பியத்திற்கு,

.. சிறந்தவொரு காப்பியம் என்பதற்கு அளவு முக்கியமல்ல
என்பது கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டலின் கூற்றாகும். அந்த வகையில் ஏறத்தாழ ஐயாயிரம் அடிகளைக் கொண்ட சிலப்பதிகாரம், அதன் உள்ளடக்கத்தால், உரைத்திருக்கும், உணர்த்தியிருக்கும் பொருள் சிறப்புகளால் உலகளாவிய நிலையில் ஒரு பெருங்காப்பியமென்றே பெருமிதத்துடன் நாம் கூறுவதற்கு அடைக்கலக் காதையிலும் பல பெருங்காப்பியப் பண்புகள் நிறைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது.




துணை நூல்கள்
1. இலக்கிய மரபு, மு.வரதராசன், மறுபதிப்பு 2006, பாரி நிலையம், சென்னை.
2. காப்பியத் திறன், சோம. இளவரசு, முதற் பதிப்பு 1987, மணிவாசகர் நூலகம், சென்னை.
3. காப்பியப் பார்வை, வ.சுப. மாணிக்கனார், முதற் பதிப்பு 2010, ராமையா பதிப்பகம், சென்னை.
4. காப்பியத் துளிகள், க. இராஜசேகரன், முதற் பதிப்பு 2008, சீதை பதிப்பகம், சென்னை.
5. சிலப்பதிகாரத்தில் மெய்ப்பாடுகள், இரா. சந்திரமோகன், ப. சரவணன், முதற் பதிப்பு 2007, ராமையா பதிப்பகம், சென்னை.
6. தமிழ் இலக்கியச் சிகரங்கள் ஐம்பது, ப. இளவழகன், முதற் பதிப்பு 2008, நர்மதா பதிப்பகம், சென்னை.
7. சிம் கையேடு

No comments:

Post a Comment