யதார்த்த சினிமா என்றால் என்ன...? ஒரு பத்து வருடங்களுக்கு முந்தய கோலிவுட் மொழியில் சொன்னால் “லா லா... லா லா...” என்று பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு காதலுங்குறது தோட்டத்துல காய்க்கிற பலா இல்ல... வானத்துல இருக்குற நிலான்னு மொக்கைத்தனமா டயலாக் பேசும் படங்கள். இப்போதைய கோலிவுட் மொழியில் சொன்னால் அழுக்கு சட்டை, தாடியுடன் முரட்டுத்தனமான ஹீரோ, வெட்டிப்பய ஹீரோவை வெரட்டி வெரட்டி காதலிக்கிற ஹீரோயின். ஆனால் உண்மையிலேயே யதார்த்த சினிமா என்றால் என்னவென்று பதார்த்தமாக நம் முன்பு படைத்திருக்கிறார் ஒரு மேலை நாட்டு இயக்குனர்.
Title: Paranormal Activity
Tagline: Don’t see it alone
Country: United States
Language: English
Year: 2007
Genre: Mystery, Horror
Cast: Katie Featherston, Micah Sloat
Director, Cinematographer, Editor: Oren Peli
Producers: Steven Schneider, Jason Blum
Length: 97 Minutes
ஒரு இளம் தம்பதியர், ஒரு படுக்கையறை இதுதான் கதை என்று சொன்னால் உடனே அங்கே செக்ஸ்தான் கதைக்கருவாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அது சில மென்முத்தக்காட்சிகளை தவிர்த்து சிறிதளவேனும் இல்லை.
இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் ஒன்றாக ஒரு பிளாட்டில் வாழ்கிறான். (திருமணம் செய்துக்கொள்ளாமல் எப்படி ஒரே வீட்டில் வாழலாம் என்று அபத்தமாக கேட்கக்கூடாது). அவனுடைய காதலிக்கு சின்ன வயதில் இருந்தே ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை பின்தொடர்வதாக ஒரு நம்பிக்கை. அவளை திருப்திப்படுத்தும் நோக்கில் காதலன் ஒரு கேமரா வாங்கி அவர்களது தினசரி இரவை படம் பிடித்து காலையில் அதை போட்டு பார்க்கிறார்கள். முதல் இரவும் (அந்த முதலிரவு அல்ல), இரண்டாவது இரவும் அமைதியாக நகர மூன்றாவது இரவில் கதவு தானாக அசைகிறது. அங்கிருந்து ஆரம்பிக்கும் திகில் ஒவ்வொரு இரவாக முன்னேறி இருபத்தி ஒறாவது இரவில் உச்சக்கட்டம் அடைவதே மீதிக்கதை.
இந்தப்படத்தின் ஸ்பெஷாலிடி, இது வழக்கமான சினிமா போல் அல்லாமல், ஏதோ உண்மையிலேயே ஒரு தம்பதியர் தம் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்தாற்போல ஒரு உணர்வை தருகிறது. படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடை நீங்கள் நம்பிவிட்டால் படத்தை இன்னும்கூட அதிகம் ரசிக்கலாம்.
ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடிய இந்தப்படத்தை கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவில் தனியாளாக அமர்ந்து பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு மணிநேர படம் முடிந்தநிலையில் பேசாமல் ஆப் பண்ணிட்டு அம்மா பக்கத்துல போய் படுத்துடலாமான்னு நினைக்கிற அளவுக்கு படம் திகிலானுபவம் தந்தது. இத்தனைக்கும் படத்தில் பெரிய அளவில் கிராபிக்ஸ், சவுண்ட் எபக்ட்ஸ் எதுவுமில்லை. ஒவ்வொரு முறையும் படுக்கையறையை காட்டும்போதும் என்னடா நடக்கப்போகிறது என்று பல்லைக் கடித்துக்கொண்டு எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள்.
2007ம் ஆண்டு இந்தப்படத்தை ஒரு திரைப்பட விழாவில் வெளியிட்டபோது நிறைய ரசிகர்கள் பாதி படத்திலேயே எழுந்து போய்விட்டார்களாம். படம் பிடிக்காமல் அல்ல, பயத்தினால். அதனால்தானோ என்னவோ படத்தை விநியோகம் செய்ய ஆள் கிடைக்காமல், பல தடைகளை கடந்து 2009ம் ஆண்டு படம் வெளியாகியிருக்கிறது. ரிலீஸான புதிதில் மந்தமாக இருந்த வசூல் படத்தில் காட்டப்படும் இரவுகளைப் போல 21 நாட்கள் கழிந்தபின்னர் சூடு பிடித்து குறைந்த முதலீட்டில் எக்கச்சக்க வசூலை வாறிக்கொடுத்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு சென்னை மோட்சம் திரையரங்கில் வெளியானது. பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் தூக்கப்பட்டுவிட்டது. இந்தப்படத்தின் prequel கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்திருக்கிறது. மேலும், அதனுடைய prequel அதாவது paranormal activity 3 அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இந்தப்படத்தை நான்கைந்து நண்பர்கள் குரூப் சேர்ந்து பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. முடிந்தவரைக்கும் தனியாளாக, தனியறையில் இரவு நேரத்தில் பாருங்கள். அதுதான் ஒரிஜினல் திரில். இல்லை, நான் ரொம்ப தைரியசாலி என்று மார்தட்டுபவர்கள் உங்கள் தங்கை, தம்பி, மனைவி அல்லது கணவருடன் சேர்ந்து பார்த்து அவர்களை பயப்பட வைப்பது தனி சுகம்.
பதிவிறக்க லிங்குகள்:
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
No comments:
Post a Comment