Search This Blog

Friday, September 30, 2011

ஓங்காரத்து உட்பொருள்



சுவாமிநாதன்
கும்பகோணத்துக்கு அருகில் சுவாமிமலை என ஒரு தலம் இருப்பதை அனைவரும் அறிவர். இந்தத் தலத்து இறைவன் சுவாமிநாதன் சில குடும்பத்தினருக்குக் குலதெய்வமும் ஆவன். முருகன் சுவாமிநாதனான புராணக்கதையைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவர். இந்தக் கதையைச் சில வேறுபாடுகளுடன் கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைப் புராணம், முதலிய தலபுராணங்களும், பாம்பன் சுவாமிகளின் குமாரசுவாமியம், குமரகுருபரரின் திருச்செந்தூர் கலிவெண்பா முதலிய தோத்திர நூல்களும் கூறுகின்றன.
தந்தையாகிய சிவனின் சிஷ்யபாவத்தையும் தனயனான முருகனின் குருபாவத்தையும் உள் அடக்கி, அருணகிரிநாதர், கந்தரநுபூதியில்,
“நாதா குமர நமஎன்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள்தான்”
என வினவி, முருகன் ஓதிய அந்தப்பொருள் இன்னதென நம்மை உய்த்து உணர விட்டுவிட்டார்.
இந்த நிகழ்ச்சியினால் முருகனுக்கு உபதேசமூர்த்தி, சுவாமிநாதன், பரமகுரு, குமரகுரு, குருபரன் எனக் காரணப் பெயர்கள் எழுந்தன.

ஓம் – பொதுமந்திரம்
‘ஓம்’ எனப்படும் பிரணவ மந்திரத்தை இந்துக்களில் அனைத்துப்  பிரிவினரும் பயன்படுத்துகின்றனர். இறைவனின் பெயர்களாகிய மந்திரங்களுக்கு முன் ‘ஓம்’ என்னும் ஓரெழுத்து மந்திரத்தையும் இறுதியில் போற்றி எனப்பொருள்படும் நம: என்ற சொல்லையும் இணைத்து, மந்திரத்தை உச்சரிப்பர். ஓம் ஸ்ரீ மாத்ரே நம:, ஓம் நாராயணாய நம: என்பன போல
சிவநெறியில் தோத்திரம் சாத்திரம் ஆகியவற்றில் “ஓம்’ எனும் பிரணவம் ஆளப் பெற்றிருக்கும் முறைமையையும் அவற்றில் கூறப்படும் பொருளைச் சுட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.
ஓங்காரத்தின் பலபெயர்கள்
பிரணவம், குடிலை, குண்டலி, பிரமம், பரம், சிவம், மாமாயை, சுத்தமாயை, நாதம், விந்து, வைந்தவம் எனப் பலபெயர்கள் ஓங்காரத்துக்கு உண்டு.
பிரணவத்திற்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தத்தால் அவ்விரண்டும் பிரணவமென்றோ சிவசத்தி என்றோ ஒருபெயரால் வழங்கப்படும். பிரணவம் சத்தியின் பெயராலும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பெயர்களாவன: பரை(பரன்), வாகீசுவரி(வாகீசுவரன்), வித்தை, மாயை, பரவிந்து(பரநாதம்), பராசத்தி(பரசிவன்), மாமாயை, குண்டலி என்பன.
பிரணவம் – பிரபஞ்ச வித்து
ஒருபொருள் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அவை 1.முதற்காரணம்,(material cause) 2.நிமித்தகாரணம் அல்லது கருத்தா,. 3.துணைக்காரணம் அல்லது கருவி காரணம்.(instrumental cause) என்பன.
குடத்திற்கு மண் முதற்காரணம்;. குயவன் நிமித்த காரணம்;. தண்டசக்கரம் துணைக்காரணம்.
அதுபோல, பிரபஞ்சத் தோற்றத்துக்கு மாயை முதற்காரணம்;. சிவம் நிமித்தகாரணம்;. சிவசத்தி துணைக் காரணம்.
சிவம் முழுவதும் ஞானமே வடிவானது. சிவத்துடன் பிரிப்பின்றி இருப்பது சித்சத்தி. அது ஆற்றல் வடிவமானது. சிவத்துக்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தம் சூரியனுக்கும் சூரிய ஒளிக்கதிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. உலகுக்குச் சூரியனால் பயன் சூரியக்கதிர்களால் வருவதுபோல, உயிர்களுக்குச் சிவத்தால் வரும் நன்மை சிவசத்தியால் கிடைக்கிறது. சூரியன் ஒளியால் அறியப்படுதல்போல் சிவத்தைச் சிவசத்தியால் அறியப்படும்.
சிவத்துக்குச் சிவசத்தி போல இன்னொரு சத்தியும் உண்டு. அதற்குப் பரிக்கிரக சத்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சக்தி என்று பெயர். இந்தப் பரிக்கிரகசத்தி ஜடசத்தி. ஜடம் என்றால் அறிவற்றது என்று பொருள். சித்சக்தி X ஜடசத்தி.
மாயை என்னும் பிரபஞ்ச முதற்காரணமாகிய ஜடசத்தி, சித்சத்தியைத் தாரகமாகக் கொண்டிருக்கும். சித்சத்தி சிவத்துடன், சூரியன் சூரியஒளி போலக் குணி குணசம்பந்தத்துடன் இருக்கும்.
இந்த மாயையே பிரணவம். இது சித்சத்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இப்பிரணவம் சித்சத்தியின் வடிவம் என்றும் கூறப்படும்.
மாயையும் சத்தியும் சம்பந்தப்பட்டு இருப்பதைக் காட்டும் ஒரு பெயர் மாயாசத்தி.
சித்சத்தியை குணமாகவும் சிவத்தைக் குணியாகவும் கொள்ளும் ஒருவடிவத்தில் சித்சத்தியாகிய பிரணவம் சிவவடிவம் என்றும் கொள்ளப்படும்.
சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன்  விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும்.
பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம்.
இதனைத் திருமந்திரம்,
“ஓங்காரத்தின் உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓங்காரம் அதீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ ரூபமே” (தந்திரம்9)
எனக் கூறியது.
மாயை சடப்பொருளாயினும் சிவசத்திசம்பந்தத்தால் அறிவுடைப்பொருள் (சேதனம்) ஆகவே கொள்ளப்படும்.
ஓங்காரம் சிவசொரூபம்
“கைலாஸ சிகராவாஸம் ஓங்கார ஸ்வரூபிணம்
மஹாதேவம் உமாஅர்த்த க்ருதசேகரம்”
என அதர்வண வேத மாண்டூக்யோபநிஷதமும்,
“துறந்தோர் குடிலை சிவனுருவம் என்றே உணர்ந்து சொல்லுவார்”
என வாயு சங்கிதையும் கூறுவதால்,
குணம் குறி கடந்த சிவபரம்பொருள், உயிர்களை உய்விக்க எடுத்துக் கொள்ளும் திருமேனிகளில் ஒன்று, ஓங்காரம் என்னும் பிரணவத் திருமேனி.
“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (திருவாசகம், சிவபுராணம்,33)
‘நான் உய்யும் பொருட்டு என் உள்ளத்துள் பிரண வடிவமாக நிலைபெற்றுள்ள உண்மைப்பொருளே’ என்பது இதன் பொருள்.
ஓம் என்பதன் பொருள் சிவமே
உயிரில் சிவம் ஓங்காரமாய் நிற்கும் உபகாரம்
உயிர்கள் வினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகருதல் வேண்டும். அதனால் அனுபவம் ஏற்பட்டு ஆணவமலம் அல்லது அறியாமை என்னும் மறைப்பு சிறிது சிறிதாக நீங்கும்; அறிவு வளரும். வினைகள் உடலாலும் வாக்காலும் மனத்தாலும் செய்யப்படுவன. உடலாலும் வாக்காலும் வினைசெய்வதற்கு முன் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களில் செயல் பற்றிய சிந்தனை முகிழ்க்கின்றது.
அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
இது, சைவசித்தாந்தத்தில், சிவம் உயிருக்குள் உயிராக நின்று உயிரின் உணர்வினை நிகழச் செய்கின்ற முறையைக் கூறுவதாகும்.
ஓங்காரத்தின் வழி சிவம் ஆன்மாவின் இச்சை கிரியை ஞானங்களை எழுப்பிச் வினையை அனுபவிக்கச் செய்து மலபரிபாகம் வருவித்து முத்தியை அளிக்கும் நெறியைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன.
சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற  சொற்றொடர்கள்  திருமுறைகளில் உள்ளன.
ஓங்காரம் –ஓரெழுத்து மந்திரம்
சிவம் கருணையால் கொள்ளுகின்ற வடிவங்களில் மந்திர வடிவமும் ஒன்று. சிவபரம்பொருளை வழிபடுபவர்கள் மந்திர எழுத்துக்களில் வைத்து வழிபடுவது வழக்கம். அம்முறையில் ஓங்காரம் சிவனது திருமேனி.
ஓங்காரம் சப்தவடிவினது. அது சுத்தமாயை என்னும் அறிவற்ற சடப்பொருளின் விருத்தி. சிவசத்தி சுத்தமாயையில் கலந்து இயக்கிக் கொண்டிருப்பதால்,அது சிவனின் திருமேனியாக உபசாரமாகச் சொல்லப்படும்.
முருகனே ஓங்கரத்துட்பொருள்:
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டு
தூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”
என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள், முருகன் ஓங்காரத்து உட்பொருளாக இருப்பதை,
” ஓதிய ஐந்து,
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே!”
என்று பாடினார்.
ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாகிய ஒரு பரம்பொருளே “குருசிஷ்ய பாவ”த்தின் மேன்மையை உலகு அறிந்து உய்யும் பொருட்டு , இரண்டு பொருளாகி, அரன் சீடனாகவும் குமரன் குருவாகவும் திருவிளையாடல் புரிந்தது என அறிதல் வேண்டும்.
விநாயகனே ஓங்காரத்துட் பொருள்
கச்சியப்ப முனிவர் தம்முடைய விநாயகபுராணத்தில் பிரணவம் என்பது ஏகாட்சரம் என்னும் பெயருடைய மந்திரம் என்றும் அது விநாயகப் பெருமானுக்கு உரிய மந்திரம் என்றும் கூறியுள்ளார். யானைமுகப் பெருமானின் முகத் தோற்றமே ஓம் எனும் ஓரெழுத்துமந்திரம் போலக் காட்சி அளிக்கும்.
ஓங்காரத்துள் பிரபஞ்சம் எல்லாம் அடங்கும் என்பதைக் காட்டவது விநாயகப் பெருமானின் பேழை வயிறு.
விநாயகன், கணபதி எனும் பெயர்கள் சிவனுக்கும் உண்டு. விநாயகனே சிவன். சிவனே விநாயகன்
விநாயகனும் முருகனும் சிவனின் தடத்த வடிவங்களே. எனவே, இவ்விருவரை வழிபடுவது சிவ வழிபாடே.
பிரமன் செய்த குற்றம்
சைவசித்தாந்தம் சத்காரிய வாதம் பேசும். அதாவது’ உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன்றாது’. உள்ளது போகாது; இல்லது வாராது’ என்பது சத்காரிய வாதம். சத்காரியவாதத்தில் உள்ளபொருள் முற்றாக அழிந்து விடுவதில்லை. காரியமான பொருள் அழியும்போது அதன் முதற்காரணத்தில் அடங்கும். மண்குடம் அழியும்போது அதன் முதற்காரணமான மண்ணாகும். பொன்னால் ஆன நகை அழியும்போது அதன் முதற்காரணமான பொன்னாகும்.
மாயா காரியமான பிரபஞ்சம் அதன் முதற்காரணமான(material cause) மாயையில் ஒடுங்கும். மீளத் தோன்றும்போது எதில் ஒடுங்கியதோ அதிலிருந்துதான் தோன்றும். பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவன்தான் அதனை ஒடுங்கியதிலிருந்து அதனை மீளத்தோற்றுவிப்பான்.  எனவே சங்கார காரணன் அதாவது பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவனே மீளத் தோற்றுவிக்கும் கருத்தாவுமாவன்.
எனவே, படைத்தல் தொழிலைப் புரியும் பிரமன், அழித்தல் தொழிலின் பின் நிகழும் உண்மைகளை உணரான்.  முத்தொழிலுக்கும் கருத்தாவாகிய முதல்வன் சங்கார கருத்தா ஆகிய சிவனே ஆவன். அவனே பிரபஞ்சத்தைப் பிரணவமாகிய முதற்காரணத்தில் ஒடுக்குபவன். ஒடுங்கிய அந்தக் காரணத்திலிருந்து சங்கார கருத்தாவாகிய அவனே மீளத் தோற்றுவிப்பவன். அதனால் பிரணவத்தின் உண்மைப் பொருள் பிரமப் பெரும்பொருளாகிய சிவமே என்று அறியாமல், படைத்தல் தொழிலைச் செய்கின்ற தானே பிரணவப் பொருள் என்று அகந்தையில் கூறினான். அதனால் முருகனால் தண்டிக்கப்பட்டான் என்பது புராணக் கதை.  புராணக் கதையைச் சாத்திரப் பின்னணியில் உணரவேண்டும்.
முடிவுரை:
ஓங்காரத்தின் தோற்றமும் பொருளும் மேலோட்டமாக ஒருவாறு விளக்கப்பட்டது. இங்குக் கூறப்பட்டவை மிகக் குறைவே. ஞானசாத்திரங்களைக் கொண்டு விரிவாக விளக்கம் பெறல் வேண்டும்.

No comments:

Post a Comment