Search This Blog

Thursday, September 29, 2011

வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்



அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியும். அதே சமயம் வாழைத்தண்டின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். தென்கிழக்கு ஆசியாவில் தோன்றிய வாழை முதன் முதலாக நியூகினியாவில் உருவானது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும்.
எனவே, இது பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட மிக முக்கிய தாவரம் ஆகும்.

வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால், நமக்குத் தெரியாத பல மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது வாழைத்தண்டு .
கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்ட வாழைத் தண்டின் அனேக மருத்துவக் குறிப்புகள் பற்றி நமது முன்னோர் ஆயுர்வேத புத்தகங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் கூறியிருக்கிறார்கள். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது.

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment