Search This Blog

Tuesday, September 6, 2011

அவசரம் தேவையா?


அவசரம் தேவையா? -சுய முன்னேற்றக் கட்டுரை- படித்ததில் பிடித்தது.



அவசரம் தேவையா? 
சுய முன்னேற்றக் கட்டுரை:
படித்ததில் பிடித்தது.


சிலர் நேரமே இல்லை, அதனால் தான் அவசரப்படுகிறோம் என்று கூறலாம். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை எப்படியெல்லாம், எதிலெல்லாம் செலவழிக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பார்த்தால் ஒரு கணிசமான பகுதி உபயோகமில்லாத, தேவையில்லாத செயல்களில் வீணாகி இருப்பதை அறியலாம்.தேவையில்லாத செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தினால் தேவையானதைச் செய்ய நிறைய நேரம் மிஞ்சும். அவசரப்பட வேண்டிய அவசியமே இருக்காது.

டாக்டர் காப்மேயர் ஒரு நூலில் அழகாகக் கூறினார். "சாதனை புரிந்தவர்கள் கடிகாரத்தோடு போராடவில்லை. மாறாக அந்தக் கால மணல் கடிகாரத்தில் ஒவ்வொரு மணல் துணுக்காக விழுவது போல அவசரமில்லாமல் ஒரு நேரத்தில் ஒரு செயல் என நிதானமாக வாழ்ந்தார்கள்".

அந்தக் காலத்து மணல் கடிகாரத்தில் இரண்டு பரந்த பாகங்களுக்கு நடுவே மணல் துகள்கள் ஒவ்வொன்றாக மட்டுமே போக முடிந்த அளவுக்கு மிகக் குறுகலான இடைப்பகுதி இருக்கும். மேலே எத்தனை மணல் துகள்கள் இருந்தாலும் அந்த இடைப்பகுதி ஒவ்வொரு மணல் துகளை மட்டுமே கீழே அனுப்பும். இந்த உதாரணத்தை நாமும் நம் மனதில் நிறுத்திப் பதட்டமோ, தடங்கலோ இல்லாமல் அவசரமோ சோம்பலோ படாமல் செய்ய வேண்டிய செயல்களை முறைப்படுத்தி ஒவ்வொன்றாய்ச் செய்வது நலம்.

ஆனால் நமக்கிருக்கும் அவசரத்தில் பல சந்தர்ப்பங்களில் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்ய முற்படுகிறோம். அவ்வாறு செய்ய முனையும் போது எந்த ஒரு செயலுக்கும் நம்மால் முழுக்கவனம் செலுத்த முடிவதில்லை. ஆகவே செயல்கள் பெரும்பாலும் அரை குறையாகவே முடிகின்றன. எந்த ஒரு காரியத்தையும் முழுக்கவனத்தோடு செய்யும் போது தான் அது நேர்த்தியான சிறப்படைகிறது. விரைவாகவும் செய்ய முடிகிறது. அந்த செயலை நாம் மறுபடி சரி செய்ய வேண்டி வராது. செய்த வேலைக்காக வருந்த வேண்டி இருக்காது. எல்லா பெருஞ்சாதனையாளர்களும் ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று நிதானமாகவும், தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட்டதால் தான் அவர்களால் அதிகமான சாதனைகளைத் திறம்பட செய்ய முடிந்தது.

முன்கூட்டியே திட்டமிடுங்கள். மறுநாள் முக்கியமான பரீட்சையோ, நேர்முகத் தேர்வோ, பிரயாணமோ இருந்தால் தேவையானவற்றை முன் தினமே தயார் செய்யுங்கள். கடைசி நேரத்தில் பரபரக்க வேண்டிய அவசியம் இருக்காது. தினமும் அதிகாலையில் எழுவது ஒரு அருமையான பழக்கம். அது முடியாதவர்கள் தான் தினசரி வாழ்க்கையை அவசர ஓட்டத்தில் ஆரம்பிக்கிறார்கள். அந்த ஓட்டம் இரவு வரை தொடர்வதும் அந்த ஆரம்பப்பிசகால் தான்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய முக்கியமான செயல்களின் பட்டியலை முன் கூட்டியே எழுதி வையுங்கள். ஒவ்வொரு செயலையும் கவனமாக, சீராகச் செய்யுங்கள். மணல் கடிகார உதாரணத்தை மனதில் என்றும் வைத்திருங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயல் என்று சீரான வேகத்தில் செயல்படுங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு முன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டீர்களா என்று கவனியுங்கள். இப்படிக் கவனமாகவும், ஒழுங்காகவும் முன் யோசனையுடனும் செயல்பட்டால், இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் அலட்டிக் கொள்ளாமல் நிறைய சாதிக்கலாம்.

ஒரு விதை செடி ஆக, பூ காய் ஆக, காய் கனி ஆக, முட்டை குஞ்சு ஆக, கரு குழந்தை ஆக என இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் தேவைப்படுகிறது. அந்தக் காலம் முடியும் வரை அந்தப் பலனை விரும்புபவர்கள் காத்திருந்தே ஆக வேண்டும். அது போல நாம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் முறையாக, குறையில்லாமல் செய்து விட்டால் பின்பு நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையாக நம்பிக்கையோடு காத்திருப்பது தான். இதில் குறுக்கு வழி இல்லை.அப்படி உள்ளதாக எண்ணி அவசரப்பட்டு ஏதேதோ செய்யப் போனால் நாம் உருவாக்கியதை நாமே சிதைப்பது போலத் தான். விரும்புவது கிடைக்காமலே போய் விடும்.
கீரை விதைப்பவன் பலனைச் சில நாட்களில் அடையலாம். ஆனால் தென்னை விதைப்பவன் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டும். லட்சியத்தின் அளவு பெரிதாகப் பெரிதாக நாம் உழைக்க வேண்டிய காலமும், காத்திருக்க வேண்டிய காலமும் அதிகம் தான். ஆகவே நோய்களைத் தவிர்க்க வேண்டுமானால், நிறைய சாதிக்க வேண்டுமானால் அவசரத்திற்கு உடனடியாக விடை தந்து விட்டு வாழ்க்கையை நிதானமாக வாழ்வோம்.
நன்றி -என். கணேசன் பதிவு 2007

No comments:

Post a Comment