ஆண்டவா, என் எதிரிகளை நான் கவனிச்சுக்கிறேன், நண்பர்களை நீ பார்த்துக்கோனு ரஜினிகாந்த் ஒரு படத்துலே வேண்டுவார். ஞாபகம் இருக்கா? நல்ல நண்பர்கள் கிடைக்கவும், நீங்க புண்ணியம் செஞ்சு இருக்கணும். கிட்டத்தட்ட எல்லோரோட வாழ்க்கையிலும் , இதுதான் நிலைமை. கூட இருக்கிறவங்க , நல்லவங்கனு நம்பி - நீங்க அவங்க கஷ்டப்படுறப்போ , அதைப் பார்க்க மனசு பொறுக்காம , உதவி செஞ்சு இருப்பீங்க . ஆனா, அவங்க எதோ அது நம்ம கடமை மாதிரி கொஞ்ச நாள்ல நினைக்க ஆரம்பிப்பாங்க. அதுக்கு அப்புறம் தான் கொடுமை, நமக்கு ஒரு கஷ்டம் னு வர்றப்போ , அவங்களுக்கு உதவி பண்ண கூடிய சூழ்நிலை இருந்தும் , அவங்க கண்டுக்கிடுவதே இல்லை.
உதவியும் செஞ்சுட்டு , இளிச்சவாயன் பட்டம் வாங்கிட்டு - பார்க்கிறவங்க எல்லோரும் பார்க்கிற ஒரு ஏளன பார்வை இருக்கே...! அய்யோடா... சாமி ! .
பண உதவின்னு இல்லை, ஏதாவது வேலை சம்பந்தமா இருக்கலாம். அரசாங்க அலுவலகத்தில் ஏதாவது ஒரு வேலையா இருக்கலாம்.
இதை விட பயங்கரமான விஷயம் , தேனொழுக பேசி , நம்ம கூடவே இருந்து - நம்ப வைச்சு கழுத்தை அறுக்கிற கோஷ்டி. இந்த மாதிரி ஆளுங்களை , நீங்க நேருக்கு நேர மோதியும் - பாடம் புகட்ட முடியாத , சூழ்நிலை இருக்கலாம். இவங்களை எப்படி அடக்குறது?
.. என்ன இருந்தாலும், அவன் என் நண்பன், .. என் கூட பிறந்தவன் , அவனை எப்படின்னு , இன்னும் யோசிச்சுக்கிட்டு இருக்காதீங்க ... நல்லவனா இருக்கலாம் , அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு...! அவங்களோட தப்பை உணர வைக்குறதும், உங்க கடமை தான்... நீங்க நேரடியா எதும் செய்ய வேண்டாம்.
சரபேஸ்வரரை நீங்கள் கும்பிட்டால் போதும். நாம் ஏற்கனவே அதைப் பற்றி சில கட்டுரைகள் பார்த்து விட்டோம். அது தவிர, நம்பிக்கை துரோகம் மூலம் , நீங்கள் இழந்த அனைத்தையும் - உங்களுக்கு திரும்ப பெறவும், வஞ்சித்தவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டவும் - சில சக்தி வாய்ந்த ஸ்தலங்கள் உள்ளன. அப்படிப் பட்ட ஆலயம் ஒன்றை, நாம் இன்று காண விருக்கிறோம்..
அருள்மிகு புல்வாநாயகி திருக்கோயில், பாகனேரி, சிவகங்கை மாவட்டம்
பிறரால் அநீதி இழைக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றோர், பொருளைக் கொடுத்து ஏமாற்றப்பட்டோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வழிபடுகிறார்கள். இதற்காக கோயில் எதிரேயுள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் வருகின்றனர். அம்பாள் சன்னதி முன் நின்று கொண்டு, கொடிமரத்தை கட்டிக் கொண்டு தங்கள் குறையைச் சொல்லி வணங்குகின்றனர். அம்பிகை, தன்னை தஞ்சம் அடைந்தோருக்கு துணையாக உடன் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.
அசுரன் ஒருவன், தான் பெற்ற வரத்தின் பலனால் பூலோகத்தில் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். அவனை அழித்து தங்களைக் காக்கும்படி மக்கள் சிவனை வழிபட்டனர். அவர் அம்பிகை மூலமாக அவனை அழிக்க ஒரு தந்திரம் செய்தார். அப்போது, அம்பிகை விளையாட்டாக சிவனின் கண்களை மூட, அவர் அம்பிகையை பூலோகில் பிறக்கச் செய்தார். இங்கு வந்தவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து, மாயையாக போர் புரிந்தான். ஒருகட்டத்தில் அவன், புல் வடிவம் எடுத்தான். எனவே, அம்பிகை மானாக வடிவெடுத்து புல்லை மேய்ந்து, அவனை அழித்தாள். இவ்வேளையில் புதிய மானைக் கண்ட மக்கள் அதை நெருங்கினர். அம்பிகை ஓடிச்சென்று, ஓரிடத்தில் பூமிக்குள் புகுந்து கொண்டாள். மக்கள் அங்கு தோண்டியபோது, அம்பாளின் சிலை வடிவம் இருந்தது. மகிழ்ந்த மக்கள் அச்சிலையை இங்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். புல்வநாயகி என்றே பெயர் சூட்டினர்.
அசுரனை அழித்தபோது உக்கிர வடிவம் எடுத்த அம்பிகைக்கு இங்கு பஞ்சலோக சிலை உள்ளது. சாமுண்டீஸ்வரி எனப்படும் இவளது உக்கிரத்தை மக்களால் தாங்க முடியாதென்பதால், இச்சிலையை மூலஸ்தானத்திற்குள்ளேயே வைத்துள்ளனர். இங்கு ஆனி மாதம் நடக்கும் திருவிழாவின்போது ஒருநாள் மட்டும் இவள் ஊருக்குள் வலம் வருவாள். அப்போது, அம்பிகையின் பார்வை மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக, கண்களை பூமியைப் பார்த்தபடி அமைத்துவிடுவர். அன்று, புதிதாக திருமணம் செய்தோர், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் இந்த அம்பிகையைப் பார்க்க மாட்டர்.
அம்பிகையை வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு நடக்கும் விழாவின்போது மஞ்சுவிரட்டு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. கோயில் எதிரேயுள்ள தீர்த்தம் மிக விசேஷமானது. வஜ்ரகிரீடம் என்ற புழு, காலப்போக்கில் கல் போன்று கடினத்தன்மையுடையதாக மாறும் தன்மை கொண்டது. இதை சாளக்ராமம் என்பர். இவ்வகையான புழுக்கள் இக்கோயில் தீர்த்தத்தில் உள்ளது. எனவே, இந்த தீர்த்த்தில் நீராடி அம்பிகையை வழிபடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் தல விருட்சமான நெய் கொட்டா மரத்தின் கீழ், அக்னியம்பாள் பீட வடிவில் இருக்கிறாள். பக்தர்கள் இவளுக்கு மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கின்றனர்.
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்
.
Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_06.html#ixzz1XAKhuLQ3
No comments:
Post a Comment