Search This Blog

Thursday, June 2, 2011

குதிரை கிடைத்தால் லகானை மறந்து விடாதீர்கள்




அதிர்ஷ்டம் என்பது என்ன?

இறைவன் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பம்; அவ்வளவுதான்.

கிடைக்கிற சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்பவனையே அதிர்ஷ்டசாலி என்கிறோம்.

சந்தர்ப்பங்களைத் தேடி அலைகிறவர்கள் பலர்; அது கிடைக்கவில்லை என்று அவர்கள் வாடுவார்கள். அவர்கள் எல்லாம் மதுரைக்கு போவதாக எண்ணிக் கொண்டு சேலம் ரயிலில் ஏறி உட்கார்ந்தவர்கள்!

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள் பலர். அவர்களெல்லாம் ரயிலைத் தவற விட்ட பிரயாணிகள்!

சரியான ரயிலுக்கு சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்தவனே, தான் விரும்பிய ஊருக்குப் போய் சேருகிறான்.

சரியான சந்தர்ப்பத்தைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவனே, தெய்வத்தின் உதவியோடு முன்னேறுகிறான்.

'எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாயிருக்கும்' என்ற தெளிந்த அறிவு எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை.

உண்மைதான்.

ஆனால் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் எந்தவிதத் தெளிவும் இல்லாதவர்கள்.

வாய்ப்பு கிடைத்ததாலே, முட்டாள் பணக்காரன் ஆனதுண்டு; வாய்ப்பு கிடைக்காததாலே திறமைசாலி தெருவில் அலைந்ததுண்டு.

'இந்த வாய்ப்பு' என்பது இறைவன் காட்டும் பச்சை விளக்கு.

கொத்தவால் சாவடியில் காய்கறி வாங்கி ஜாம் பஜாரில் கொண்டு போய் விற்றால், ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கும் என்று உனக்கு தெளிவாக தோன்றினால், அதை உடனடியாக செய்து விட வேண்டும்.

அந்த முதல் லாபத்திலேயே உனக்கு இரண்டாவது யோசனை உதயமாகும்.

வியாபாரத்தில் லாபம் வந்தால் அந்த வியாபாரத்தை  தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் சூதாட்டத்தில் லாபம் வந்தால் தொடர்ந்து சூதாட கூடாது.

ஒருவனிடம் கத்தியைக் காட்டி நீ ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டால், அந்த தைரியம் போலீஸ்காரரிடமும் கத்தியைக் காட்டச் சொல்லிப் பிடித்துக்கொடுக்கும்.

சிலர் வியாபாரத்தை சூதாட்டம் போலவும், கொள்ளையடிப்பது போலவும் நடத்துவர். இதை தவிர்க்காவிடில் சர்வ நாசம்தான்.

தர்மத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதுடன் புத்திசாலி தனமும் வேண்டும்.

சொத்தின் மதிப்பு குறையும் போது அதை வாங்க வேண்டும்.இன்னும் குறையும் என்று எண்ணினால் அது ஏறிவிடவும் கூடும்.

மதிப்பு ஏறினால் அதை விற்று விட வேண்டும்; இன்னும் ஏறும் என்று கருதினால், அது இறங்கி விடவும் கூடும்.

பர்மாவிலும், சைகோனிலும், இலங்கையிலும் எங்கள் நகரத்தார்கள் சொத்துக்களை விற்காமல் கெட்டார்கள். மலேசியாவிலே விற்று கெட்டார்கள்.

கத்தரி  செடி காயைத்தான் தரும்; அதிலே குழம்பு வராது.

கைகாட்டி வழியைத்தான் காட்டும். அதுவும் கூட வராது.

தெய்வம் பாதி; திறமை பாதி.

தெய்வம் வாய்ப்பை காட்டுகிறது. திறமை அதை லாபகரமாக்குகிறது.

உன்னிடம் விதை இருக்கலாம்; உரம் இருக்கலாம். வெள்ளம் போல் தண்ணீர் தரும் கிணறும் இருக்கலாம். நிலத்தில் வளம் இல்லை என்றால் அனைத்தும் வீண்.

ஆனால் வளமான நிலம் உன்னிடம் இருந்து விட்டால் மற்ற அனைத்தையும் நீ உருவாக்கி விட முடியும்.

அந்த வளமான நிலமே வாய்ப்பு என்பது.

பாம்பு நஞ்சு  நிறைந்தது; வேங்கை பயங்கரமானது; யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?

ஆனால், அவற்றை ஆட்டி வைக்க கூடிய திறமை சில மனிதர்களிடம் இருக்கிறது.

உங்களாலும், என்னாலும் முடியுமா? அந்த வாய்ப்பும் சிலருக்கே அமைகிறது.

அதனால்தான், வாய்ப்பு என்பது இறைவன் அளிப்பது என்றேன். அதை முறையாக பிடித்துக்கொண்டு முன்னேறுவதை அதிருஷ்டம் என்கிறேன்.

எழுதுவதற்கு பத்திரிக்கைகளோ படங்களோ இல்லை என்றால் நான் யார்?

நான் ஓர் அதிர்ஷ்டக்காரன்.

காரணம் இறைவன் எனக்கு அளித்த வாய்ப்பை மனித யத்தனதால் எவ்வளவு காப்பாற்றிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு காப்பாற்றிக் கொள்கிறேன்.

ஹிட்லருக்கு  கிடைத்த வாய்ப்பு, ஆணவத்தால் அழிந்தது.

சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு, திறமையினால் வளர்ந்தது.

வாய்ப்பை தவற விடுபவனே துருதிஷ்டசாலி.

அந்த வாய்ப்பு எல்லோர்க்கும் எப்போது வரும்?

அது முன் கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்?

கவியரசு கண்ணதாசன் 
கடைசிப் பக்கம் என்ற நூலில் இருந்து!
தமிழ் தாயகத்துக்காக:- ரவிச்சந்துரு 

No comments:

Post a Comment