ஸர்ப்பவஸ்யம்
'ஸர்ப்பவஸ்யம்' எனப்படும் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் இருப்பதாகக் காணப்படுகிறது. பாம்பு மந்திரத்துக்குக் கட்டுப்படுகிறது. நாகத்தைக் கட்டும் மந்திரங்கள் உண்டு. தமிழ்ப்படங்களிலும் தெலுங்குப்படங்களிலும் பார்க்கலாம். நாகதேவதையையோ அல்லது நாககன்னிகையையோ கட்டுப்படுத்துவார்கள்.
விச்சாதாரி நாகம் என்ற ஒன்றையும் காட்டுவார்கள். வித்யாதர நாகம் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். யந்திரங்கள், அவை அடங்கிய தாயத்துக்கள் முதலியவையும் பயன்படுகின்றன.
சில மூலிகைகளுக்கு சக்தியுண்டு. வெள்ளெருக்குக்குப் பாம்பு பயப்படுகிறது.
அதை நான் நேரே பார்த்திருக்கிறேன்.
வீட்டுக்குள் நுழைந்துவிட்ட கருநாகம் ஒன்றை விரட்ட, பூஜையில் இருந்த வெள்ளெருக்கு வேர்ப் பிள்ளையார் உதவினார். அகத்திய ஆவணத்தில் ஒரு பழைய மடலில் இந்த விபரம் இருக்கிறது.
மலாயாவின் காடுகளில் ஒரு வகைப் பிரம்பு விளைகிறது. அதன் வேர்ப்பகுதி பாம்பின் தலைபோல் இருக்கும். பிரம்பு வளைந்து நெளிந்து இருக்கும். அது இருக்கும் இடத்தில் பாம்பு வராது என்பார்கள். பேயையும் விரட்டும் என்பார்கள். அந்தத் தடியிலேயே ஆண்தடியும் பெண்தடியும் உண்டு என்கிறார்கள். பாம்புப் பிடாரர்கள் சில மூலிகைகளைப் பாம்புக்கு நேரே பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
மனதின் ஆற்றலாலும் பாம்பை வசப்படுத்தலாமாம்.
மலேசியாவில் Cobra King என்ற பட்டத்தை வைத்திருக்கிறவர் ஒருவர் இருக்கிறார். இன்னொருவரும் இருந்தார். எல்லாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல பாம்பு, விரியன் பாம்பு முதலியவற்றை வசியப்படுத்தி அவற்றுடன் விளையாடிக் காட்டுவார். நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகளுடன் பலநாட்கள் ஒரே கண்ணாடிக் கூண்டில் வசித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
அவரிடம் ஒருமுறை கேட்டேன். அவர் தம்முடைய மன ஆற்றலால் பாம்புகளை வசியப்படுத்துவதாகச் சொன்னார். "அது என்ன ஹிப்னட்டிஸமா, அல்லது மெஸ்மரிஸமா?" என்று கேட்டதற்கு, "You can call what you want, Sir", என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆமோதிக்கவுமில்லை; மறுக்கவுமில்லை.
தரையில் கிடக்கும் பாம்பை உசுப்பிவிடுகிறார். அது தலையைத் தூக்கி ஆடுகிறது. நல்லபாம்பாக இருந்தால் படமெடுத்து ஆடுகிறது. அதன் லெவலுக்குக் கீழே தரையில் கைகளையும் கால்களையும் பரப்பி ஊன்றிக்கொண்டு, தரைக்கு மேல் கொஞ்ச உயரத்திலேயே படுத்த மாதிரியாக, ஆனால் தரையில் உடல் படாமல் அப்படியே இங்கும் அங்குமாய் லேசாக அசைகிறார். ஆனால் பார்வை மட்டும் பாம்பின் கண்களின்மேல். பார்வையையை மட்டும் திருப்புவதேயில்லை. அதன் பின் ஒரு கையை மட்டும் தூக்கி, பாம்பின் தலைக்கு நேரே பக்கவாட்டில் மிக மெதுவாக அசைக்கிறார். பாம்பு மிக லேசாக தலையை பக்கவாட்டில் அசைக்கிறது. அப்புறம் அவரும் அசையாமல் இருக்கிறார். பாம்பும் அசையாமல் இருக்கிறது. பிறகு அந்தக் கையைப் பாம்பின் தலைக்கு மேலே மெதுவாகக் கொண்டு செல்கிறார். பாம்பின் தலை மண்டையின் பின்புறத்தில், கழுத்துக்கு மேற்புறமாக நடுவிரலால் தொட்டு தடவுகிறார். அது அசையாமல் இருக்கிறது. அதன்பின் அதை அப்படியே எடுக்கிறார். அதுபாட்டுக்கு வளைந்து நெளிந்து அவர் கையில் இருக்கிறது. சீறவில்லை. அதை அப்படியே கிட்டத்தில் கொண்டுவந்து அதன் வாயில் முத்தமிடுகிறார்.
இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது பார்வையை மட்டும் அசைக்கவில்லை. கண்களைச் சிமிட்டவும் இல்லை. Intense Look என்பார்களே அதுமாதிரியான ஒரு தீட்சண்யமான பார்வை. பார்த்துக்கொண்டிருப்பவர்களே ஆடாது அசையாது லயித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஹிப்னட்டிஸமா, மெஸ்மரிஸமா......
அல்லது வர்மமா?
எல்லாம் கலந்த மாதிரி இருக்கிறது.
பின்னணியில் ஏதும் மந்திரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. திருக் குர்ஆனில் பாம்பைக் கட்டுப்படுத்தும் சில ஆயத்துக்கள் இருக்கின்றன என்று சொன்னார்.
ஈப்போ என்னும் ஊரில்தான் அவர் இருந்தார். அவருடன் தொடர்பு கொண்டு, படம் வாங்கி ஸ்கேன் செய்து போடுகிறேன். பாம்பு வசியத்தைப் பற்றி அவரிடம் இன்னும் விபரமாகக் கேட்டு, அவர் சொன்னால் எழுதுகிறேன். பாம்புப் பிடாரர்களிடம் கேட்டால் நிறைய விபரம் கிடைக்கும்.
No comments:
Post a Comment