இந்து மத வரலாற்று தொடர் பாகம் -9 அக்னிகுண்டத்தில் வளர்ந்தஅறிவு
by Keyem Dharmalingam oகுருஜியின் அருளாசியுடன்...
இந்து மத வரலாற்று தொடர் பாகம் -9
அக்னி குண்டத்தில் வளர்ந்த அறிவு
வேதங்களை பற்றி பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் வேதங்களின் கருத்துகளை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறோம். அப்படி வருந்தியவர்களில் வருத்தங்களை போக்குவது நமது கடமையாகும். எனவே நான்கு வேதங்களும் எதை பற்றி பேசுகிறது என்பதை எடுத்து சொல்வது அவசியமாகிறது. அதனால் இந்த அத்யாயத்தில் ரிக் வேதத்தின் முழுமையான வடிவத்தை சுருக்கி காட்டுவது மிகவும் முக்கியமாகும். காரணம் என்னவென்றால் வேதங்களை புரிந்து கொண்டால்தான் இந்து மதத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம் ஆகும். இது மட்டும் இந்த வேதத்திற்கு தனிப்பட்ட பெருமை அல்ல. மனித சிந்தனையானது நூல் வடிவாக முதன்முதலில் கொண்டு வரப்பட்டது இந்த வேதத்தின் மூலமாகத்தான் அதாவது உலகின் முதல் நூல் ரிக் வேதம் தான். நான்கு வேதங்களிலும் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1,82,211 ஆகும். இதில் 1,52,222 பாடல்கள் ரிக் வேதத்திலேயே இருக்கிறது அதாவது நான்கு வேதங்களில் முக்கால் பங்கு பாடல்கள் ரிக் வேதத்திற்கு சொந்தமாகும். இந்த வேதம் பத்து மண்டலங்களாக அதாவது பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பத்து பாகங்களும் 1028 சூத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூத்தகமும் தனிதனியான விஷயங்களை எடுத்து சிறப்பாக பேசுகிறது. ரிக் வேதம் தனிமனிதனாலோ குழுக்களாகலோ உருவாக்கப்பட்டது அல்ல. சிந்து நதி தொடங்கி கங்கை நதி வரையிலும் பரவி கிடந்த பல ஞான புருஷர்களால் கண்டறியப்பட்டு பல தலை முறைகளால் உருவாக்கப்பட்டதே ஆகும்.
ரிக் வேதத்தில் முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இரண்டாவது பாகத்தை கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள். மூன்றாவது பாகத்தை விஸ்வாமித்திரரும்,நான்காவது பாகத்தை வாமதேவரும் ஐந்தாவது பாகத்தை அந்திரியும்,ஆறாவது பாகத்தை பரத்வாஜரும், ஏழாவது பாகத்தை வஸிஷ்டரும்,எட்டாவது பாகத்தை ஆங்கிரகரும், ஒன்பதாவது பாகத்தை கன்வரும் கண்டறிந்து வெளிபடுத்தியதாக கருதப்படுகிறது.
லட்சத்திற்கு மேல் பாடல்கள் ரிக் வேதத்தில் இருந்தாலும் அவைகள் சமயப் பாடல்கள், வாழ்க்கை பாடல்கள், தத்துவப் பாடல்கள் என்று மூன்று வகையாக பிரித்துவிடலாம். இருப்பினும் இந்த பாடல்களில் வழிபாட்டு பாடல்களான சமய பாடல்கள் தான் அதிகமாக இருக்கிறது உடம்பும் மனதும் தனிதனியானவைகள் அல்ல. ஒன்றாகவே ஆனது என்று ஆதிமனிதர்கள் நம்பினார்கள். வாழ்வில் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையை கண்டறிந்த பிறகு பண்பட்ட சிந்தனை வளர்ச்சி அதிகரித்த பிறகு உடல் வேறு உள்ளம் வேறு என்ற தெளிவை பெற்றார்கள். இந்த தெளிவான அறிவு மக்களிடம் எப்படி இருந்தது என்பதை ரிக் வேத தத்துவப் பாடல்கள் தெளிவுபடுத்துகிறது. அலை வீசும் கடலுக்கடியில் சில முத்துக்கள் தான் கிடைக்கும் என்பதை போல் சமயப் பாடல்கள் என்ற அலைகளுக்கிடையில் தத்துவப்பாடல்கள் என்ற சில முத்துக்கள் தான் ரிக் வேதத்தில் பின்னிக் கொண்டிருக்கின்றன.
இனி ரிக் வேதத்தின் ராஜபாட்டைக்குள் பிரவேசித்து வேதக் கருத்துகளை தரிசனம் செய்வோம்.
மனிதன் என்பவன் யார் என்ற கேள்வியை ரிக்வேதம் முன் வைத்து மனிதன் உயிர், உடம்பு, ஆத்மா ஆகிய மூன்றின் கலவை என்ற பதிலை தருகிறது. இந்த மூன்றும் இல்லாத மனிதனை கற்பனையில் கூட பார்க்க முடியாதல்லவா. உயிர் தன்னை வெளிப்படுத்த உடம்பு என்பது அவசியம் அந்த உடம்பில் தான் ஆத்மா கொலுவிருக்க முடியும். அழகிய இந்த மூன்றையும் மனிதனுக்கு கொடுப்பது யார்?அழகான சரீரம் அமைய கருமுட்டையை கொடுப்பவள் தாய். அந்த சரீரம் உருவாக விந்துவான உயிரைக் கொடுப்பவன் தகப்பன். உயிரையும் உடலையும் இயக்கும் சக்தியாகிய ஆத்மாவை கொடுப்பவன் இறைவன். உடலும் உயிரும் தந்த தாய் தந்தையை கண்களால் காணமுடியும். அறிவுப் பொருளான ஆத்மாவை கொடுத்த இறைவனை வெறும் கண்களால் காணமுடியாது. அவனை தரிசிக்க ஞானக் கண் வேண்டும். ஞானக்கண் பெற்று இறைவனை தரிசித்து விட்டால் ஆனந்தம் என்பது அன்றாட வாழ்வின் அனுபவமாகி விடும்.
ரிக் வேதத்திற்கு சொந்தமானதை அறிய உபநிஷதம் மனிதன் என்பவன் அன்னநிலை, பிரான நிலை, மனோநிலை, விஞ்ஞான நிலை, ஆனந்த நிலை என்று ஐந்து வகையான ஆக்கப்பட்டதாக சொல்கிறது. இந்த ஐந்தில் அன்னநிலை என்பது உடம்பை குறிக்கும், பிரான நிலை உயிரை குறிக்கும், மனோ நிலை ஆத்மாவாகும், விஞ்ஞான நிலை அறிவாகிய ஞானமாகும், ஆனந்த நிலை என்பது இறைவனோடு கலப்பதால் ஏற்படும் பெருங்களிப்பாகும். இதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வகையிலும் நாம் எடுத்து கொள்ளலாம். அதாவது கருவிலே உருவாகிய தாய் நம்மை தகப்பனிடம் தருகிறாள். தகப்பன் ஞானம் பெறுவதற்காக நம்மை குருவிடம் அனுப்புகிறார். ஞானத்தை தரும் குருவோ நம்மை அழியாத ஆனந்தத்தை தரும் ஆண்டவனிடத்தில் கொண்டு சேர்க்கிறான். எனவே மனிதனின் இறுதி லட்சியம் இறைவனின் திருவடிகளை சேர்வதே ஆகும் என்று ரிக் வேதம் வலியுறுத்துகிறது.
ரிக் வேதத்தில் புகழ்பெற்ற பருஷசூத்தகம் பத்தாவது மண்டலத்தில் அடங்கியுள்ளது. இந்த சூத்தகத்திலுள்ள மந்திரங்கள் மிகவும் அர்த்த புஷ்டியானது ஆகும். அந்த சூத்தகத்தின் கருத்தை சுருக்கமாக விளக்கி சொல்ல முயற்சிப்போம். விராட் புருஷனான கடவுள் நாம்காணும் இடத்திலும் கானாத இடத்திலும் பரவிகிடக்கிறான். ஏனென்றால் அவனது உருவம் கண்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானது. அவனுக்கு ஆயிரம் தலைகளும் பல்லாயிரம் கைகளும் பல நூறு கோடி கால்களும் உள்ளன. பூமியின் எல்லா திசைகளையும் அண்டசராசரத்தின் ஒவ்வொரு துகள்களையும் அவனது கைகள் தாங்கி கொண்டிருக்கின்றது. இந்த சூத்தகத்தின் மூலம் கண்ணுக்கு தெரியாமல் நுணுக்கரிய நுண்ணியனாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் இறைவனுக்கு மனித உடல்கள் இருப்பது போன்ற கற்பனையை வேத ரிஷி வர்ணனை தருகிறார்
கடவுளை மனித வடிவாக்கியது சரிதானா முறைதானா என்ற வாதங்கள் வேத உரையாசியர்களால் இன்று வரை எழுப்பட்டு கொண்டிருக்கிறது. பதில் தான் இன்னும் கிடைத்த பாடில்லை. ஏன் இந்த கேள்வி புருஷ சூத்தகத்தை பார்த்து கேட்கபடுகிறது என்றால் 33 வகையான பெயர்களைக் கொண்டு கடவுள் வர்ணனை செய்யப்பட்டாலும் வேத கால கவிஞர்களான ரிஷிகள் காட்டியது தேவதைகள் இயற்கையின் வடிவங்களாக இருக்கிறது என்பது தானே தவிர மனிதர்களாக இருப்பதாக அவர்கள் கூறவில்லை.
மின்னலை ஆயுதமாகக் கொண்ட இந்திரன் தான் வேதப் பாடல்களில் முழுமுதற்கடவுளாக கருதப் படுகிறான். மக்களின் அபிமனாத்திற்குய கடவுளாகவும் நான்கில் ஒரு பகுதி இந்திரனை பற்றி மட்டுமே பேசுகிறது அதற்குஅடுத்த படியாக அக்னியும் மூன்றாவதாக மழையை தரும் வருணனும் நான்காவதாக காற்றுக் கடவுளான வாயுவும் சூரிய சந்திரர்களும் வணங்கப்படுகிறார்கள். பருவக் காலங்களில் வரும் மந்த மாருதமும் சண்டமாருதமும் காலை பொழுதின் நாயகியான உஷாவும் கோபத்தோடு இருக்கும் ருத்திரனும், விஷ்ணுவும், அஷ்வினி தேவர்களும், பிரகஸ்பதி, பிரஜாபதி, அதிதி என்று இன்னும் பல தேவதைகளும் வேத ரிஷிகளின் பாடல்களால் ஆராதிக்கபடுகிறார்கள். இந்த பாடல்களில் எந்த தேவதையும் மனித வடிவமாக சித்தரிக்கப் படவில்லை. மாறாக புருஷ சூத்தகம் மட்டுமே கடவுளை மனித வடிவில் வர்ணனை செய்கிறது. அது ஏன்? மிக முக்கியமாக இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறைவனை மனித வடிவில் காட்ட முயற்சிக்கும் புருஷ சூத்தக பாடல் ரிக் வேதத்தின் கடைசி பகுதியாகத்தான் வருகிறதே தவிர முதற்பகுதியிலோ நடுப்பகுதிலோ வரவில்லை.
எனவே சென்ற அத்யாயத்தில் நாம் சிந்தித்த படி பூர்வ குடிமக்கள் தான் கடவுளை மனித வடிவில் வணங்கினார்கள் அவர்களின் கொள்கைகளை பிறகு வேதங்களோடு இணைக்கப்பட்டன என்ற வாதத்திற்கு இது வலுசேர்க்கிறதல்லவா.
ரிக் வேத காலத்தில் ஜாதி பிரிவுகள் இல்லை. வர்ணம் என்ற வார்த்தை மனித நிறங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர சாதியை குறிக்க பயன்படவில்லை. வெள்ளை நிறம் கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும் தேவர்கள் என்றும் கருதப்பட்டார்கள். கருப்பு நிற மக்கள் தாசர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கருதப்பட்டார்கள். தேவாசுர யுத்தம் என்று ரிக்வேதம் பேசுவது எல்லாம் வெள்ளை நிற மக்களுக்கும் கருப்பு நிற மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல்களே ஆகும். இந்த பூசல்கள் முடிவு வெற்றி தோல்வியை தராமல் இரண்டு இனக் குழுக்களும் ஒன்றிற்குள் ஒன்று கலந்து போய் விட்டதாகவே ரிக் வேதம் கூறுகிறது. ரிக் வேதக் கருத்துபடி பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்திரர் என்னும் நான்கு வகையான மக்கள் அனைவரும் ஒரே வர்ணத்தை சேர்ந்தவர்களே அவார்கள்.
ஜன நெருக்கடியும் இடநெருக்கடியும் ஏற்பட்டபொழுது சமூக தேவைகளுக்காக தொழிலின் அடிப்படையில் மனிதர்கள் பிரிக்கப்பட்டார்களே தவிர அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் கருதப்படவில்லை. அதாவது பிறப்பின் அடிப்படையில் நான்கு தொழில்களும் பிரித்து வைக்கப்படாமல் சர்வ சுதந்திரமாக யார் வேண்டுமென்றாலும் கல்வி போதிக்கும் பிராமணனாகவோ உடல் உழைப்பு செய்யும் சூத்திரனாகவோ இருக்க அனுமதிக்கபட்டார்கள் அதே நேரம் ஒரு தொழிலை செய்பவன் சாகும் வரை அதே தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இல்லை. சூத்திரனாக இருந்து உடல் உழைப்பு செய்யும் ஒருவன் தான் விரும்பினால் கல்வி கற்று பிராமணனாக மாறிவிடலாம்.
இந்த கருத்திற்கு வேதங்களிலேயே வலுவான ஆதாரங்கள் இருக்கிறது ரிக் வேதத்தின் இரண்டாவது மண்டலத்தை உருவாக்கிய விஷ்வா மித்திரர் மகரிஷி அடிப்படையில் கௌசீகன் என்ற சத்ரியன் ஆவான். இவர் தனது ஆர்வத்தால் தனது மக்களை காக்கும் அரசியல் தொழிலை விட்டுவிட்டு தவம் செய்து மந்திரங்களை உருவாக்கும் பிராமணனாக மாறிவிடுகிறான். வேதங்களால் இவர் சிறந்த அந்தணராகவும் போற்றப்படுகிறார். பிறப்பின் அடிப்படையில் வர்ணங்கள் உருவாக்கப்பட்டு இருந்தால் ஒரு சத்ரியன் எப்படி பிராமணனாக மாறி இருக்க முடியும். இன்று மற்ற சாதியினர் சமைத்த உணவை பிராமணர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சாப்பிட மறுக்கிறார்கள். நாகரீக சமூகம் வளர்ந்து விட்ட இன்றைய காலத்தில் இந்த பழக்கம் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட மறைமுகமாக வலுவாக இருப்பதை பலர் அறிவார்கள். ஆனால் வேதகாலத்தில் உணவை தயாரிப்பதிலும் உண்பதிலும் எந்த பாகுபாடும் இருந்ததாக தெரியவில்லை.
ரிக் வேதத்திலுள்ள பல பாடல்களில் சூத்திரர்கள் சமைத்த உணவை பிராமணர்கள் உண்டதற்கான பல ஆதாரங்கள் காட்டப்பட்டுள்ளன. உணவு விஷயத்தில் மட்டுமல்ல திருமண விஷயத்திலும் பாகுபாடுகள் வேதகாலத்தில் இல்லை. சத்திரிய பெண்ணை பிராமணனும், பிராமணப் பெண்ணை சூத்திரனும் மணந்து கொண்டதாக பலத் தகவல்கள் கிடைக்கின்றன. இதை எயாதி, ருஷ்யசுருந்தர் ஆகியோர் கதைமூலம் நம்மால் அறிந்து கொள்ளமுடிகிறது.
கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று ரிக் வேதம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ரிக் வேதத்திலுள்ள தைந்திரிய உபநிஷதம் இதை தெளிவுபட காட்டுகிறது. மனிதன் எங்கிருந்து வந்தான் எங்கே இருக்கிறான் இறுதியில் எங்கே போகிறான் என்பதை இந்த உபநிஷதம் ஒரு பாடல் மூலம் அழகுபட விளக்குகிறது.
பிரம்மம் என்னும் கடவுளை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்ட பிறகு முனிவர் தமது தந்தையான வருண தேவனிடம் கேள்விகள் கேட்கிறான் அதற்கு வருணதேவன் பல பதில்களை சொல்லி கடைசியாக எதிலிருந்து எல்லாப் பொருட்களும் வெளியேறுகிறதோ எதனால் எல்லாப் பொருட்களும் காக்கப்படுகிறதோ எதில் எல்லாப் பொருட்களும் ஒரு நாள் திரும்பி வந்து அடங்குகிறதோ அதுதான் பிரம்மம் என்று வருணதேவன் குறிப்பிடுகிறான். இந்த சொற்றொடரில் வருகின்ற பொருள்கள் என்னபதம் மனிதன் உட்பட சகல ஜீவ ராசிகளையும் ஜடப் பொருட்களையும் குறிக்கிறது. இப்படி மனிதனையும் மற்ற பொருட்களையும் படைத்த இறைவனுக்கு எப்படிபட்ட உருவத்தை கொடுக்கலாம் என்று வேத ரிஷி சிந்திக்கிறார். இறைவனை மிருகமாகவோ பறவையாகவோ சிந்தித்து பார்ப்பதை விட மனிதனாக சிந்தனை செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று அவர்கருதுகிறார். ஏனென்றால் அவர் பறவைக்காகவோ மிருகத்திற்காகவோ இறைவனை பற்றிய தகவலை தரவில்லை அல்லவா. மனித வடிவில் இறைவனை உருவப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு தலையும் இரண்டு கால்களும், கைகளும் கொடுத்தால் அவனும் சாதாரண மனிதனாக கருதப்பட வாய்பிருக்கிறதே தவிர சர்வசக்தி வாய்ந்த ஆண்டவனாக கருதமுடியாது. அதனால் வேதக் கவிஞன் இறைவனுக்கு ஆயிரம் தலைகளும், ஆயிரம் கைகளும் கொடுத்து உருவகப்படுத்துகிறான்.
தன்னைக் காட்டிலும் சக்தி மிகுந்த வேறு ஒன்று இருந்தால்தான் மனிதன் அதை பயத்துடனும் வியப்புடனும் மதிப்பான். இந்தக் கருத்தை கொண்டுதான் ரிக் வேதத்தில் புருஷ சூத்தகத்தில் பிரமாண்டமான வடிவத்தை இறைவனுக்கு கொடுத்து வேதகால கவிஞன் போற்றிபாடுகிறான். அத்தகைய பிரமாண்ட வடிவுடைய ஈஸ்வரனுக்கு விராட் புருஷன் என்ற பெயரையும் சூட்டுகிறான். விராட் புருஷனை பற்றி பகவத் கீதையும் பேசுகிறது.
விராட் புருஷனின் தன்மைகளை பற்றி புருஷ சூத்தகம் விளக்கம் கொடுப்பதை பார்ப்போம். விராட் புருஷன் தனியாகவே இருக்கிறான் இதே நிலையில் தான் முன்பும் இருந்தான் இப்போதும் இருக்கிறான் இனி எப்போதும் அப்படியே இருப்பான். அவன் அழிவு என்பதை அறியாதவன் உணவை எடுத்துக் கொள்ளும் எல்லா உயிர்களும் இவனிடமிருந்தே வருகின்றது. உயிரை உற்பத்தி செய்யும் அவன் ஒவ்வொரு ஜீவனுக்கு உணவையும் உற்பத்தி செய்கிறான். உணவு என்பது உடலை வளர்ப்பது அன்று. உயிரை வளர்ப்பதாகும். விராட் புருஷன் எல்லா தெய்வங்களை விட மேம்பட்டவன். இவனுக்கு இணையாக எந்த கடவுளும் இல்லை. ஏனென்றால் இவனே எல்லா கடவுளுமாக இருக்கிறான். இவனது மனதிலிருந்துதான் சந்திரன் தோன்றினான் இவன் கண்களிலிருந்து சூரியன் தோன்றினான். இந்திரனும் அக்னியும் இவனது வாயிலிருந்து தோன்றியவர்களே. இவன் சுவாசம் தான் வாயுவாகும். உலகத்தில் காணுகின்ற யாவும் காணாத எல்லாமும் இவனன்றி வேறில்லை. உலகப் பொருளாகவும் இருக்கிறான் அந்த பொருட்களுக்கு அப்பாலும் இருக்கிறான். இப்படி 16 பாடல்களாக புருஷ சூத்தகம் பிரம்மத்தை பற்றியும் அதன் உருவம் ஆற்றல் குறித்து விளக்கி கொண்டு போகிறது. இந்த விளக்கங்களுக்கு இடையில் மனித சிருஷ்டியை பற்றியும் பேசுகிறது.
இனி ரிக் வேதத்தின் அக்னி என்ற இரண்டாவது மண்டலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம். .
No comments:
Post a Comment