Search This Blog

Wednesday, June 22, 2011

அணு அண்டம் அறிவியல் -33

அணு அண்டம் அறிவியல் -33

அணு அண்டம் அறிவியல் -33 உங்களை வரவேற்கிறது
கடவுளை நிராகரித்தது போலவே இயற்பியல் உலகம் 'ஈதரை'யும் நிராகரித்து விட்டது. காரணம் என்ன என்றால் 'If it cannot be detected,it simply does not exist' அதாவது ஒன்றை உணர முடியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்ற அதன் கொள்கை! அறிவியல் சில சமயங்களில்மிகவும்கறாராக நடந்து கொள்ளும். Yes, it is an obedient Student, at the same time a strict teacher! 

கடவுளுக்கான நிரூபணத்தைக் காட்டுங்கள் நாங்கள் தாராளமாக அவரை ஏற்றுக் கொள்கிறோம் என்றுதான் 
விஞ்ஞானிகள்
சொல்கிறார்கள்..ஆனால் நம் ஆன்மீகவாதிகள் கொண்டுவரும் நிரூபணங்கள் அவர்களுக்குபோதுமானதாக இல்லை..ஆத்தா கனவில் வந்தாள்விநாயகர் என் கண் முன்னாலேயே பால் குடித்தார்,சாமிப்படத்தில் இருந்து விபூதி சொரிந்தது என்றெல்லாம் நிரூபணங்களை (?)கொடுத்தால் சாரிBetterluck next time

சரி...DOUBLE STAR எனப்படும் ஒன்றை ஒன்று சுற்றக்கூடிய இரட்டை நட்சத்திரங்கள் வானத்தில் உண்டு. வில்லியம் டி சிட்டர் என்ற ஆசாமி இந்த மாதிரி இரட்டை நட்சத்திரங்களைக் கவனித்து (அவை ஒன்றின் மீது இன்னொன்று ஏற்படுத்தும் கிரகணங்களை கவனித்து) ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை வெளியிட்டார்..அதாவது ஒளியின் வேகம் அதை உமிழும் மூலத்தின் (light source ) வேகத்தால் பாதிக்கப்படுவதில்லை என்று.

உதாரணமாக 'V1 ' திசை வேகத்தில் செல்லும் ஒரு ரயிலின் மேல் இருந்து 'V2' திசை வேகத்தில் ஒரு கல்
எறியப்பட்டால் அதன் (கல்லின்)நிகர திசைவேகம் V1+V2 ஆக இருக்கும். இப்போது ஒளியின் வேகம் 'C ' என்றால் 'V ' வேகத்தில் செல்லும் ரயிலில் இருந்து வெளிப்படும் ஒளியின் வேகம் V + C ஆக இருக்க வேண்டும் என்று நம் 'காமன் சென்ஸ்' கூறும்..ஆனால் ஒளி அப்போதும் தன் வேகத்தை மாற்றாமல் C என்ற வேகத்தில் மட்டுமே செல்லும்.

90 
கி.மீ. வேகத்தில் செல்லும் ஒரு காரை நீங்கள் நெருங்க முயற்சிப்பதாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்கும் போது காரின் 'சார்பு வேகம்' (Relative velocity ) குறைய ஆரம்பிக்கும். நீங்கள் 10 கி.மீ. வேகத்தில் இருந்தால் காரின் வேகம் உங்களுக்கு 80 கி,மீ ஆக இருக்கும். நீங்கள் 50 
கி,மீ வேகத்தில் இருந்தால் உங்களுக்கு முன்னே செல்லும் காரின் வேகம் உங்களைப் பொறுத்து 40 கி,மீ ஆக இருக்கும். நீங்கள் 90 கி,மீ வேகத்தை எட்டிப்பிடித்து விட்டால் அந்தக் கார் உங்களுக்கு நிலையாக இருக்கும். சினிமா ஹீரோக்கள் செய்வது போல அப்போது நீங்கள் உங்கள் வண்டியில் இருந்து அதற்கு சுலபமாக குரங்கு போல் தாவவும் முடியும் . இதே நீங்கள் காருக்குப் பதிலாக
உங்கள் முன் ஓடும் ஒரு ஒளிக்கதிரை Chase செய்வதாகக் கொள்வோம். இதில் வினோதம் என்னவென்றால் உங்கள் வேகம் அதிகரிக்க அதிகரிக்க முன்னே சென்று கொண்டிருக்கும் ஒளியின் (உங்களைச் சார்ந்த) வேகம் குறையாது. நீங்கள் என்ன தான் அபார வேகத்தில் சென்று கொண்டிருந்தாலும் அது உங்களுக்கு தன் மாறாத வேகமான C யில் தான் சென்று கொண்டிருக்கும். கொஞ்சம் வேடிக்கையாக சொல்வதென்றால்

(1 ) மனிதனுக்கும் ஒளிக்கும் ரன்னிங் ரேஸ் வைத்தால் ஒளி தான் எப்போதும் ஜெயிக்கும். (உங்களுக்கு முன்னே விரையும் ஒளியை ஒரு போதும் நீங்கள் அடைய முடியாது)

(2 ) ஒளியின் போட்டான்களை வைத்துக் கொண்டு நம்மால் டென்னிஸ் விளயாட முடியாது (இது ஏன்? டென்னிஸ் விளையாட்டில் சில சமயம் பந்தை மெதுவாகவும் சில சமயம் வேகமாகவும் அடிக்க வேண்டி இருக்கும்.. ஒளித்துகள்கள் நாம் எந்த வேகத்தில் அடித்தாலும் , ஒரே வேகத்தில் தான் செல்லும்.
எனவே டென்னிஸ் அசாத்தியம். (படம் 1 )

ஒளியின் வேகத்தை மிகத் துல்லியமாக அன்றைய வி
ஞ்ஞானிகள் அளந்து விட்டிருந்தார்கள். ஆனால் திசைவேகம் என்றால் 'எதைப் பொறுத்து' என்று சொல்ல வேண்டும் என்பதால் இந்த ஒளிவேகம் எதைப் பொறுத்து என்று அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு புள்ளியையும் எந்த ஒரு இடத்தையும்
அது நிலையாக உள்ளதா அல்லது ஏற்கனவே (சீரான) இயக்கத்தில் உள்ளதா என்று சொல்வது அசாத்தியம் . நியூட்டனின் முதல் இயக்க விதி இதை தான் சொல்கிறது.
இதை LACK OF ABSOLUTE SPACE என்பார்கள். எனவே பிரபஞ்சத்தில் எந்த ஒரு இடத்தையும் நாம் இதுமட்டும் தான் எப்போதும் நிலையான நகராத ABSOLUTE SPACE என்று சொல்ல முடியாது. பிரபஞ்சத்தின் மையத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றால் (ஒரு நகரும் சக்கரத்தின் மையம் நகராது என்று நமக்கு அனுபவத்தில் தெரியும்)
பிரபஞ்சத்திற்கு மையம் என்பதே கிடையாது ! அல்லது பிரபஞ்சத்தில் எல்லா இடங்களுமே மையம் தான். (உங்கள் வீட்டின் சமையல் அறை கூட பிரபஞ்சத்தின் மையம் தான்) 
LACK OF ABSOLUTE SPACE என்றால் என்ன என்று கேட்டால் ஒருவருக்கு இரே இடத்தில் நடந்தாகத் தோன்றும் இரண்டு செயல்கள் இன்னொருவருக்கு வெவ்வேறு இடங்களில்
நடந்ததாகத் தோன்றலாம். இந்த உதாரணம் பாருங்கள்: (படம் 2 )


ஓடும் ரயில் இருந்து கொண்டு ஒருவர் ரப்பர் பந்து ஒன்றை தட்டி விளையாடுகிறார். அவருக்கு ஒவ்வொரு முறையும் பந்து ஒரே இடத்தில் (வெளி) பட்டு மேலே எம்பி வருவதாகத் தோன்றும் . ஆனால் இதே நிகழ்ச்சியை ரயில்வே பிளாட்பாரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு அந்த பந்து ஒரு முறை ரயிலின் தளத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் (வெளியில்) தாக்கி மேல் எழுந்து மீண்டும் ஒரு சில நூறு மீட்டர்கள் தள்ளி இன்னொரு இடத்தில் தளத்தைத் தாகும். ( பந்து மீண்டும் வருவதற்குள் ரயில் நூறு மீட்டர்கள் நகர்ந்து விடுவதால்) ரயிலின் இருப்பவருக்கு பந்தின் உந்தல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நகர்ந்ததாகத் தோன்றும். ஆனால் பிளாட்பாரத்தில் (அவரைச் சார்ந்து நிலையாக) இருக்கும் ஒருவருக்கு பந்தில் உந்தல்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் (வெளிகளில்) நடந்தாகத் தோன்றும்.மேலும் ஓடும் ரயிலில் நீங்கள் ஒரு பத்து மீட்டர் உள்ளே நடந்தால் அது வெளியே இருந்து பார்ப்பவருக்கு நீங்கள் ஒரு ஐநூறு மீட்டர் நடந்ததாகத் தோன்றும் (ரயில் அவருக்கு இயக்கத்தில் இருப்பதால்)

உண்மையில் அவை ஒரே இடத்தில் நடந்ததா அல்லது வெவ்வேறு இடங்களிலா என்றால் இரண்டுமே சரிதான்.

இது பார்ப்பவரின் FRAME OF REFERENCE (FOR ) ஐப் பொருத்தது. 
FRAME OF REFERENCE ஐத் தமிழ்ப்படுத்தும் அளவு என்னிடம் பொறுமையும் இல்லை ஞானமும் இல்லை.(அளவீட்டு சட்டம்என்றெல்லாம் யாராவது தமிழ்ப்படுத்தினால் அப்புறம் நடப்பதே வேறு!) யாரவது சரியான மொழிபெயர்ப்பு தெரிந்தால் சொல்லவும். FOR என்றால் என்ன என்றால் இயற்பியலில் சில விஷயங்கள் (வெளி,காலம், நிறை) பார்ப்பவர் அல்லது கவனிப்பவர் அல்லது அளவிடுபவர் எங்கே , எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தது. பிரபஞ்சத்தில் ஒருவர் இந்த நிகழ்ச்சி ஒருமணி நேரம் தான் நடந்தது என்று சொன்னால் இன்னொருவர் அதே நிகழ்ச்சியை இல்லை அது ஒருநிமிடம் தான் நடந்தது என்று சூடம் அணைத்து சத்தியம் செய்ய முடியும். நம் சூரியன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒளிவீசி வருகிறது. (இது நமக்கு!) பிரபஞ்சத்தில் இன்னொரு யாரோ வேற்றுக்ரக வாசிக்கு சூரியன் என்ற நட்சத்திரம் JUST ஒரு மாதம் முன்னால் தோன்றி ஒரு மாதம் முடிந்ததும் மறைந்து விட்டதாகத் தோன்றலாம் . (இடம் , பொருள் , ஏவல் !) ஒருவரின் அம்மா தவறி விட்டால் அவரிடம் சென்று அவர் உனக்கு மட்டும் தானா? எங்களுக்கும் அம்மா தான் என்று சொல்ல முடியும். அதே மனைவி தவறி விட்டால்? ஒரே வார்த்தை இடத்தைப் பொறுத்து வெவ்வேறு பொருளையும் தர முடியும்.


காலம் சார்புடையது என்பதை இந்துக்களின் புராணங்கள் அப்போதே அறிந்து வைத்திருந்தன போலும். நமக்கு ஆறுமாதங்கள் தேவர்களுக்கு ஒரு பகல் வேளை..இன்னொரு ஆறுமாதங்கள் அவர்களுக்கு ஒரு இரவு வேளை என்கிறார்கள்.. நமக்கு மார்கழி மாதம் வரும் போது தேவர்களுக்கு இரவு முடிந்து மெல்ல மேல அடிவானம் வெளுக்கிறது. ஒரு நாளிலேயே மிகவும் இனிமையான பொழுது அதிகாலை வேளை அல்லவா? அது தான் கிருஷ்ணர் 'மாதங்களில் நான் மார்கழி' என்கிறார். (நமது ஆறு மாதங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அவர்கள் ஒரு பகல் என்று பெயர் வைத்தார்கள் என்று நினைக்க வேண்டாம்..உண்மையில் இங்கு ஆறுமாதங்கள் கழிந்து விட்டிருக்க அங்கே 12 மணி நேரம் தான் ஓடியிருக்கும்) தேவர்களாவது பரவாயில்லை ! நம் தலை பிரம்மா இருக்கிறாரே? அவரது ஒரு பகல் பொழுது நம் நான்கு யுக காலத்தை ஆயிரத்தால் பெருக்கினால் வரும் காலம். (கிட்டத்தட்ட நானூறு கோடி பூமிவருடங்கள்!) இது மாதிரி நூறு ஆண்டுகள் அவர் வாழ்வாராம். தன் பகல் பொழுதில் பிரபஞ்சத்தை படைத்து விட்டு ராத்திரி சரஸ்வதி போட்டுத் தந்த பாதாம் பாலைக் குடித்து விட்டு படுக்கப் போகும் முன் தான் படைத்த பிரபஞ்சத்தை திரும்பிப் பார்த்து 'அய்யே, இது நல்லாவே இல்லை' என்று கூறி விட்டு
அழிலப்பர் எடுத்து அழித்து விடுவாராம்..

இப்படி ஒரு கதை :-

பிரம்மா சொம்பை எடுத்துக் கொண்டு பாத்ரூம் போனாராம்:

"அங்கே என்ன சத்தம் ?" என்று கேட்டாராம்

"ராவணன் பிறந்திருக்கிறான்" என்றார்களாம்

அவர் காலைக்கடனை முடித்து விட்டு கால் கழுவிக் கொண்டு வெளியே வந்தாராம்
"அங்கே என்ன சத்தம் ?" என்று கேட்டாராம்

"ராவணன் யுத்தத்தில் மடிந்து விட்டான் " என்றார்களாம்.. ராவணன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்வார்கள்.


இந்த மாதிரியான காலக் குழப்பங்கள் ரிலேடிவிடியிலும் சாத்தியம் தான்..நம் பூமியும் பிரம்ம லோகமும் ஒன்றுக்கொன்று நிலையாக இருந்தால் இது சாத்தியம் இல்லை. பிரம்ம லோகம் நம்மை விட்டு கிட்டத்தட்ட ஒளிவேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தால் இது ஒருவேளை சாத்தியம்.(ஒரு வேளை நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்னவோ? யாருக்குத் தெரியும்?)

காலம் எவ்வாறு சார்புடையது என்பதை இந்த உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.


படத்தில் ஒரு ரயிலின் மிகச்சரியான மையப் புள்ளியி
ல் ஒரு ஒளி மூலம் (S )உள்ளது. அது ரயிலின் இரண்டு பக்கங்களிலும் (எதிர் எதிர் திசைகளில்) இரண்டு ஒளிக்கற்றைகளை அனுப்புகிறது. ரயிலின் இரு முனைகளிலும் வைக்கப்பட்டுள்ள இரண்டு கண்ணாடிகள் (M1 ,M2 )அந்த ஒளியைப் பிரதிபளித்து மீண்டும் மூலத்திற்கு அனுப்பும். ரயில் சீரான ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கொள்வோம். ரயிலில் உள்ள ஒரு ஆள் இதைப் பார்க்கும் போது அவருக்கு ரயில் நிலையாக இருப்பது போலத் தோன்றும். ஒளிமூலம் ரயிலுக்கு சரியான நடுப்புள்ளியில் இருப்பதால் இரண்டு பக்கங்களிலும் அனுப்பப்பட்ட ஒளிக்கற்றைகள் (R1 ,R2 ) கண்ணாடிகளால் பிரதிபளிக்கப்பாட்டு சரியாக ஒரே சமயத்தில் திரும்பி வந்து சேரும். (நோ டவுட்??) ஓகே..

இப்போது இதே நிகழ்வை பிளாட்பாரத்தில் இருந்து ஒருவர் கவனிப்பதாகக் கொள்வோம். அவருக்கு ஒளிக்கற்றை R1 விரைவாக கண்ணாடியை போய் முட்டிவிடுவதாக் தோன்றும். ரயில் நகர்ந்து கொண்டிருப்பதால் கண்ணாடியும் R1 வை நோக்கி கொஞ்சம் முன்னே வருகிறது. எனவே அது விரைவாகத் திரும்பி வந்து விடும். ஆனால் ஒளிக்கற்றை R2 விடுபட்டதும் கண்ணாடியை போய் சேர சிறிது 'எக்ஸ்ட்ரா' நேரம் ஆகிறது. ரயில் நகர்ந்து கொண்டிருப்பதால் கண்ணாடிR2 ஐ விட்டு சிறிது விலகிச் செல்கிறது. எனவே அது வந்து சேர கொஞ்ச நேரம் ஆகும். R1 முதலில் வந்து விடும்.

அதாவது ஒருவருக்கு ஒரே நேரத்தில் நடந்தாக சொல்லப்படும் இரண்டு நிகழ்வுகள் இன்னொருவருக்கு வெவ்வேறு நேரங்களில்
நடந்ததாகத் தோன்றலாம்.. ஒளி திரும்பி வரும் நேரத்தை வைத்துக் கொண்டு ரயிலில் இருப்பவரும் பிளாட்பாரத்தில் இருப்பவரும் தங்கள் தங்கள் கடிகாரத்தை வடிவமைப்பதாக வைத்துக் கொண்டால்
இரண்டும் வெவ்வேறுநேரம் காட்டும் தானே? சுருக்கமாக சொல்வதென்றால் பிரபஞ்சகடிகாரம்என்று எதுவும் இல்லை..THERE IS NO UNIVERSAL CLOCK...இந்திரனும்பிரம்மாவும் அவரவர்உலகத்துக்கு தகுந்த கடிகாரத்தை அவரவர்உலகங்களில் மாட்டி வைத்திருப்பார்கள். அவைகள் ஒத்துப்போக வேண்டும்என்று அந்த அவசியமும் இல்லை..
 

சரி உங்களுக்கு மத்வாசாரியாரைத் தெரியுமா? என்னடா இது ஐன்ஸ்டீனை அறிமுகம் செய்வதாக சொல்லி விட்டு சாமியாரை எல்லாம் அறிமுகம் செய்கிறாரே என்று குழம்ப வேண்டாம்.(வெயிட்..அவர் ஜெர்மனியில் இருந்து வர வேண்டாமா? கொஞ்ச நேரம் ஆகும்.)சம்பந்தம் இருப்பதால் தான் சொல்கிறேன்..மத்வரின் அருமையான,ஆழமான ஒரு சித்தாந்தம் 'த்வைதம்'. (சங்கராச்சாரியாரின்அத்வைதத்திற்கு அப்படியே opposite ) த்வைத சித்தாந்தத்திற்கும் ரிலேடிவிடிக்கும் என்ன சம்பந்தம்? காத்திருங்கள்...





சமுத்ரா 

No comments:

Post a Comment