அணு அண்டம் அறிவியல்
அணு அண்டம் அறிவியல் உங்களை வரவேற்கிறது
சீடர்: குருவே, உங்கள் தேவனுடைய சாம்ராஜ்யத்தின் சிறப்பம்சம் என்ன?
இயேசுநாதர்: அங்கே காலம் என்பதே இருக்காது.
“Time is the longest distance between two places.” -Tennessee Williams
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே - ஒரு திரைப்படப் பாடல்
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே - ஒரு திரைப்படப் பாடல்
நண்பர்களே, சிறியவைகளுக்கான இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) சுவாரஸ்யமாக இருந்ததா? குவாண்டம் இயற்பியலில் சொல்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்ற போதும் வாசகர்களுக்கு சலிப்பு வராமல் இருக்க கொஞ்சம் டாப்பிக் மாற்றியிருக்கிறோம்.இது வரைக்கும் நாம் பார்த்தது அணு . இப்போது பார்க்கப்போவது அண்டம் . அணுவிற்கு சற்றும் குறையாத அதிசயங்கள் அண்டத்திலும் இருக்கின்றன.
ஏசுநாதரின் மிக அழகான ஒரு பதிலுடன் நாம் ரிலேடிவிடியை ஆரம்பித்திருக்கிறோம். விஞ்ஞானிகளால் மிகவும் ஆராயப்பட்ட ஒரு
ஆன்மீக வாசகம் இது. காலம் என்பதே இல்லாத ஒரு ராஜ்ஜியம் இருக்க முடியுமா? இந்திரனின் சபையில் தேவ கன்னிகளுக்கு
வயதே ஆவதில்லை என்று சொல்வார்கள் . (என்றும் பதினாறு தான் அவர்கள்) அப்படியென்றால் அவர்களுக்கு காலம் நகருவதில்லை என்று அர்த்தம். பகவான் விஷ்ணுவின் மீது அதீத அன்பு கொண்ட பக்தர்கள் 'நித்ய சூரி' களாக மாறுகிறார்கள் என்று ஒரு நம்பிக்கை. இவர்களுக்கும் காலம் என்பது இல்லை.[ஓஷோ கிண்டலாக சொல்வார்: காலம் இல்லையென்றால் தொடர்ந்து 'அல்லேலூயா' என்று மேகத்தின் மீது அமர்ந்து முடிவே இல்லாமல் பாடிக்கொண்டிருக்க வேண்டுமா? அப்படிப்பட்ட சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்] இவை எல்லாம் 'சயின்ஸ் ஃபிக்சன் ' போல தோன்றினாலும் ரிலேடிவிடி என்ன சொல்கிறது தெரியுமா? ஒளிக்கும் (ஃபோட்டான்கள்) கூட காலம் இல்லையாம்..காலம் நகர்வதை ஒளித்துகள்கள் உணர்வதில்லையாம்
காலம் என்பது மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வரம். மனிதனின் சாபமும் அது தான்.
காலம் எப்போது வரம் ஆகிறது? உங்களுக்கு மிக நெருக்கமான ஒருவர் இறந்து விடுகிறார். கணவனோ மனைவியோ அம்மாவோ அப்பாவோ! அப்போது வாழ்க்கையே முடிந்து விட்டது போல நரகமயமாகத் தோன்றுகிறது. ஆனால் காலம் நகர்கிறது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என்று உருண்டோடி வருடங்கள் நகர்கின்றன. ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களின் இறப்பு உங்களை பெரிதாக பாதிப்பதில்லை.It 's all part of life ! இந்த விதத்தில் காலம் ஒரு வரம்
காலம் எப்போது சாபமாகிறது? காலம் நகர்வதில்லையே என்று ஒரு விதத்தில்.. இன்டர்வியூ-வுக்கான நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது , காதலிக்காக காத்திருக்கும் போது...அப்புறம் காலம் நகர்கிறதே என்று ஒரு விதத்தில்..புத்தம் புதிய அழகிய மனைவியுடன் ஹனிமூன் சென்றிருக்கும் போது, ஊட்டியோ, சிம்லாவோ , மெல்லிய குளிர், இளமை, அழகான தனிமையான காஸ்ட்லி ரிசார்ட் + நிறைய காதல் ..இந்த சூழ்நிலையில் காலம் நகர்கிறதே என்று கவலையாக இருக்கும்..(என்ன அதுக்குள்ள ஒரு மணி ஆயிருச்சா??) சூரியன் மேற்கில் விழும் ..மீண்டும் காலையில் விடியும்..அப்புறம் ரிசார்டை காலி
செய்ய வேண்டியது தான்..'இந்த நிமிடம், இந்த நிமிடம் இப்படியே உறையாதா" என்று பாட்டெல்லாம் பாடினால் காலம் அதைக் கேட்காது (ஒரு கருந்துளையின் விளிம்புக்கு (EVENT HORIZON ) நீங்கள் ஹனிமூன் போனால் ஒரு வேளை காலம் உறைந்து போகலாம்!)
காதலில் கூட காலம் உறைந்து விடுவதாக சொல்கிறார்கள்..நீங்கள் யாரையாவது உண்மையாக (?) காதலித்திருந்தால் இதை உணர்ந்திருக்க முடியும் .பாம்பே ஜெயஸ்ரீ பாடும் 'வசீகரா' பாடலில் ரிலேடிவிடி வருகிறதா என்று தெரியவில்லை..எனக்கு காதலில் அனுபவம் இல்லை..எனவே அனுபவம் உள்ள பெரியவர்கள் காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே என்பது எந்த அளவு உண்மை என்று சொல்லவும்.
ஊர் மெச்சும் அழகுடன் இருந்தவர்கள் காலத்தின் போக்கில் முதுகு வளைந்து நரை திரை மூப்பு மேவி படுக்கையில் விழும்விஷயம் நம் சித்தர்களை மிகவும் பாதித்தது என்று தோன்றுகிறது.வாழ்வின் நிலையாமையை விளக்கும் இந்த மாதிரி தத்துவங்களை தமிழ் இலக்கியங்களில் பஞ்சமில்லாமல் பார்க்க முடியும்.
'அங்கம் கலிதம் பலிதம் முண்டம்" என்று உடல் தளர்ந்து முடி உதிர்ந்து பல் விழுந்து தள்ளாடி வரும் கிழவனை பஜகோவிந்தம் வர்ணிக்கிறது
"காலன் வரும் முன்னே கண்பஞ்சடையும் முன்னே" என்று பட்டினத்தாரும் இதையே தான் சொல்கிறார் ..
காலத்தைப் பற்றி சிலர் இப்படி (கொஞ்சம் ஓவராக) ஆன்மீகமாக யோசித்துக் கொண்டிருக்க சிலர் அறிவியல் பூர்வமாகவும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
“Time is the longest distance between two places.” இதன் அர்த்தம் புரிகிறதா? ஓகே புரியவில்லை என்றால் பரவாயில்லை...போகப் போகப் புரியும்.
ஐன்டீனுக்கும் 'காலம் என்றால் என்ன?' என்ற கேள்வி மனதில் தோன்றியது. நம்மிடம் யாராவது 'டைம் என்ன?" என்று கேட்டால் பெருமிதமாக வாட்சைப் பார்த்து "ஃபைவ் தர்ட்டி " என்கிறோம். ஐன்ஸ்டீனிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி அவரை என்னவோ பண்ணியிருக்கவேண்டும். 'டைம்' என்றால் என்ன என்று அவர் யோசிக்க ஆரம்பித்து விட்டார். இதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், காலம் என்றால் என்ன? காலம் என்பது நம்மை ஆன்மீக ரீதியாகவோ அறிவியல் ரீதியாகவோ பெரிதாக பாதிப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. சினிமாவுக்கோ டிரெய்னுக்கோ நேரம்
சன் டி.வி யில் செய்திகள் ஆரம்பிப்பதற்கு முன் 07:29:01 , 07:29:02, 07:29:03
என்று 07:30:00 வரை நொடிகள் நகர்ந்து கொண்டே இருக்கும் போது இனிமேல் கொஞ்சம் கவனியுங்கள்..அந்த நொடிகளுடன் சேர்ந்து ஏதாவது நகருகிறதா? இல்லை கடிகார முட்கள் நகர்வது வெறுமனே ஒரு இயந்திரவியல் செயல்பாடா? காலம் உருண்டோடியது என்கிறோம்..ஏதாவது உண்மையிலேயே உருண்டு ஓடியதா? இல்லை காலம் என்பது மாயையா?
இயற்பியல் காலத்திற்கு நிறைய வரையறைகள் சொல்கிறது. பிக் பாங் என்ற பிரபஞ்சப் பெரு வெடிப்பின் போது ஒரு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று வெளி(SPACE) , இன்னொன்று காலம்(TIME)..அதற்கு முன்னே வெளியும் இல்லை காலமும் இல்லை பிறகு எப்படி திடீரென்று வெடித்தது? என்றால் அது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. வெய்யில் காலத்தில் வியர்வை நனைய ஆபீஸ் சென்று அங்கே மேனேஜரிடம் டோஸ் வாங்கி விட்டு, இன்னும் போன் பில் கட்டவில்லையே என்று வருத்தப்பட்டு சாயங்காலம் மனைவி வாங்கி வரச் சொன்ன எதையோ மறந்து விட்டு அவளிடம் டோஸ் வாங்கும் இந்த பரிதாப நிலைமையை நினைக்கும் போது பிரபஞ்சம் வெடிக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அதைப் பற்ற வைத்த ஆசாமியை நிறைய பேர் கொலை வெறியுடன் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல்!
வெளியும் காலமும் ஒன்றோடொன்று இணை பிரியாத இரட்டைகள் என்கிறது இயற்பியல். அதாவது காலத்தை வெளியின் நான்காவது பரிமாணம் என்கிறது. ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான மூன்று வெளியின் பரிமாணங்களை (X Y Z ) நம்மால் கற்பனை செய்வது சுலபம் .ஆனால் இந்த மூன்றுக்கும் செங்குத்தான நான்காவது பரிமாணமான 't ' யை கற்பனை செய்வது மனித மூளையால் இயலாத காரியம்..
இயற்பியல் காலத்திற்கு நிறைய வரையறைகள் சொல்கிறது. பிக் பாங் என்ற பிரபஞ்சப் பெரு வெடிப்பின் போது ஒரு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று வெளி(SPACE) , இன்னொன்று காலம்(TIME)..அதற்கு முன்னே வெளியும் இல்லை காலமும் இல்லை பிறகு எப்படி திடீரென்று வெடித்தது? என்றால் அது இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. வெய்யில் காலத்தில் வியர்வை நனைய ஆபீஸ் சென்று அங்கே மேனேஜரிடம் டோஸ் வாங்கி விட்டு, இன்னும் போன் பில் கட்டவில்லையே என்று வருத்தப்பட்டு சாயங்காலம் மனைவி வாங்கி வரச் சொன்ன எதையோ மறந்து விட்டு அவளிடம் டோஸ் வாங்கும் இந்த பரிதாப நிலைமையை நினைக்கும் போது பிரபஞ்சம் வெடிக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.அதைப் பற்ற வைத்த ஆசாமியை நிறைய பேர் கொலை வெறியுடன் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல்!
வெளியும் காலமும் ஒன்றோடொன்று இணை பிரியாத இரட்டைகள் என்கிறது இயற்பியல். அதாவது காலத்தை வெளியின் நான்காவது பரிமாணம் என்கிறது. ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான மூன்று வெளியின் பரிமாணங்களை (X Y Z ) நம்மால் கற்பனை செய்வது சுலபம் .ஆனால் இந்த மூன்றுக்கும் செங்குத்தான நான்காவது பரிமாணமான 't ' யை கற்பனை செய்வது மனித மூளையால் இயலாத காரியம்..
காலம் என்பது பொறுட்களின் மாற்றத்தால் ஏற்படும் ஒரு விளைவு (side effect ) என்கிறது இன்னொரு வரையறை. காலத்தின் நகர்வு காரணமாக நாம் மாற்றங்களை உணருகிறோமா இல்லை மாற்றங்களால் காலத்தை உணர்கிறோமா என்று சொல்வது கடினம்.(கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா??) ஒரு பனிக்கட்டி இருக்கிறது. அதை அப்படியே
வைத்திருந்தால் அது உருகி நீராக ஓடுகிறது. காலத்தின் ஓட்டத்தால் அது மாற்றம் அடைந்ததா இல்லை அது உருகி வழிந்து ஓடிய மாற்றத்தால் நாம் காலத்தை உணர்ந்தோமா என்று சொல்வது கடினம்.
நம்மை சுற்றி உள்ள எல்லாம் மாறாமல் அப்படியே ,( நமக்கெல்லாம் வயசாகாமல், பூமி சுழலாமல் எல்லாம் அப்படியே
போட்டது போட்டபடி) இருந்தால் நம்மால் காலத்தை உணர முடியுமா? ஆனால் இது சாத்தியம் இல்லை..மாற்றம் தான் பிரபஞ்சத்தின் ஆதாரம்.இயக்கம் தான் பிரபஞ்சத்தின் இயற்கை. "Natura facit saltus !!! " சமஸ்கிருதம் பிரபஞ்சத்தை சராசரம் என்கிறது . (சரா மற்றும் அசரா ..இயங்குவது மற்றும் நிலையாக இருப்பது..இந்த ஒரே வார்த்தையில் ரிலேடிவிடி மற்றும் குவாண்டம் இயற்பியல் இரண்டும் வந்துவிடுவதை கவனியுங்கள்..ரிலேடிவிட்டி என்பது இயக்கத்திற்கான இயற்பியல்.குவாண்டம் எல்லைக்கு அப்பால் பொருட்களின் இயக்கம் உணரப்படுவதில்லை என்கிறது குவாண்டம் இயற்பியல்) இயக்கம் இருந்தாலே காலமும் இருக்க வேண்டும். ஏனென்றால் இயக்கம் என்பது வெளி (SPACE ) இல்லாமல் சாத்தியம் இல்லை.வெளி என்பது காலம் இல்லாமல் சாத்தியம் இல்லை..எனவே இயக்கம் காலத்தை உண்டாக்குகிறது .
சரி இந்த இயக்கம் எந்த அளவு இருக்கலாம்? மிகக் குறைந்த அளவு இயக்கம் என்றால் என்ன? நத்தை நகருவதா? குழந்தைகள் ஒரு நொடிக்கு ஒரு நானோ மீட்டர் வளர்கிறார்கள் என்கிறார்கள்..அதுவா? சரி விடுங்கள் நமக்கு ஞாபக சக்தி என்ற ஒன்று இல்லை என்றால் நம்மால் இயக்கத்தை உணர முடியுமா என்று கேட்கிறார் ஒரு கிரேக்க அறிஞர் !
சரி மிக அதிக இயக்கம் என்றால் என்ன? என்னது ஏரோப்ளேனா?
உளறாதீர்கள்..பின் அதிகபட்ச இயக்கத்திற்கு உதாரணம் என்ன? மிகக் குறைந்த நேரத்தில் அதிக தூரங்களைக் கடக்க வேண்டும்..முயற்சி செய்யுங்கள்.என்னது ராக்கெட்டா? இல்லை!
என்ன சொன்னீர்கள்? ஹ்ம்ம் சரி தான் ! கொஞ்சம் சத்தமாக சொல்லுங்களேன்..என்னது 'ஒளி' யா? யார் சொன்னது? சொன்னவருக்கு ஒரு சாக்லேட் பரிசு...வீசுகிறேன் பிடித்துக் கொள்ளுங்கள்..
ஆமாம் ஒளி தான் அது.பிரபஞ்சத்தில் நடக்கும் அதிகபட்ச இயக்கத்திற்கு உதாரணம். சார்பியலில் ஒளி ஒரு பிரிக்க முடியாத அம்சம். ஒளி பிரபஞ்சத்தின் பேரதிசயம். ஒளியைப் பற்றிய சிந்தனைகள் தான் ஐன்ஸ்டீனை ரிலேடிவிடி என்ற சித்தாந்தத்தை கண்டுபிடிக்கத் தூண்டின.
இந்த பிரபஞ்ச அதிசயம் ஒளி..இதைப் பற்றி அறிந்து கொள்ள நம் அ-அ-அ வில் அடுத்த சில அத்தியாயங்களை அர்ப்பணிப்போம்..
சமுத்ரா
No comments:
Post a Comment