Search This Blog

Wednesday, May 25, 2016

வீரப்பன்..


வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்; அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்; தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்;கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்; சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி; ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்; 3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்; படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்.
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்; இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;

1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது; கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது; இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதும் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்; இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று; வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்; 1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்; (ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை; அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்;இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூறுபேரை வீரப்பனார் தம்மோடு காட்டுக்குள் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார்.

அது 1997 ம் ஆண்டு. ஒரு முறை சந்தனக் கடத்தல் வீரப்பன், தவறுதலாக கானுயிர் புகைப்படக்காரர்கள் குருபகர் மற்றும் செனானியையும், வங்காளப் பேராசிரியர் மைத்தியையும்அரசு உயரதிகாரிகள் என்று தவறுதலாக நினைத்து கடத்திவிடுகிறான். இரண்டு வாரங்கள் கழித்து இருவரையும் விடுவிக்கிறான். சில மாதங்கள் கழித்து, வீரப்பனுடன் இருந்த 14 நாட்கள் அனுபவங்களை ‘சுதா’ என்னும் கன்னட வார இதழில் தொடராக எழுதுகிறார்கள். பின், “Birds, Beasts Bandits 14 Days With Veerappan” என்ற தலைப்பில் 2011 ம் ஆண்டு புத்தகமாக வருகிறது.
அதில், வீரப்பன் அவர்களுக்கு சொன்ன ஒரு கதையை குறிப்பிட்டுள்ளார்கள். அந்தக் கதை உண்மையில் வீரப்பனின் இன்னொரு இளகிய முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
யானையும், கடவுளும் பின்னே மனிதனும்:
குருபகர், செனானி மற்றும் வங்காளப் பேராசிரியர் மைத்திக்கும், வீரப்பனுக்கும் நடந்த உரையாடலில் வீரப்பன் இவ்வாறாக துவங்கி இருக்கிறான்…
“இந்தப் புவியில் மனிதனைப் போல் கொடூரக்காரர்கள் யாரும் இல்லை. மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான்… ஏன் பழி வாங்குவான் மற்றும் நேர்மையற்ற செயலை செய்வான். மனிதன் யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான். யானையை கொடுமைப்படுத்தி பணம் காண்பான்… ஏன் அதன் முடி, தந்தம் என அனைத்தையும் விற்பான்.. உண்மையில் மனிதனைப் போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை…” என்று கூறி உள்ளான்.
வீரப்பனின் இந்த உரை, மூவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்து இருக்கிறது. வீரப்பன் குறித்து சொல்லப்பட்ட பிம்பம் வேறு. ஆனால் அவனது உரையாடல் இதற்கு நேரெதிராக இருந்து இருக்கிறது.
அப்போது வீரப்பன் சொன்ன கதை இது…
“ஒரு காலத்தில் கடவுளும் இந்த பூமியில்தான் சந்தோஷமாக சக ஜீவன்களுடன், இந்த பூமியில் உள்ள வளத்தை பங்கிட்டு வாழ்ந்தார். அவர்கள் இந்த இயற்கையுடன் குதூகலமாக வாழ்ந்தார்கள். ஒரு நாள் இப்புவியில் மனிதன் தோன்றினான். புவியில் இருந்த அமைதிக்கு தொந்தரவு கொடுத்தான்.
கடவுள் இதனால் கவலை உற்றார். அவர் மற்ற உயிரினங்களுடன் கலந்து ஆலோசித்தார். மனிதன் மிக மோசமான உயிரினம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அவனால் ஒரு காலமும் இயற்கையுடன் இயைந்து வாழ முடியாது. அதனால், நாம் பூமியைவிட்டு வெளியே சென்று விடலாம் என்று திட்டமிட்டனர்.
அப்போது, ஒரு யானைக் கூட்டம் கடவுளிடம் வந்தது. கடவுள், யானைகளிடம் தன் முடிவை சொன்னார். அப்போது யானை கடவுளிடம், “இது என்ன முட்டாள்தனமான முடிவு. மனிதன் பொடியன். அவனால் நம்மை என்ன செய்துவிட முடியும். நாம் ஏன் இந்த அழகுமிகுந்த மலரை, வானத்தை, காட்டை, ஆற்றைவிட்டுப் போக வேண்டும்…?” என்றது.
சினம் கொண்ட கடவுள், “நீங்கள் இங்கேயே தங்கி, உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு சொர்க்கத்திற்கு சென்றார்.” என்று கதையை முடித்த வீரப்பன், பின் இவ்வாறு சொல்லி இருக்கிறான், “பாருங்கள் இப்போது… அந்த பாவப்பட்ட யானைக்கு என்ன ஆனது என்று…? அது சுதந்திரமாக சுற்ற, காடுகள் இல்லை. சர்க்கஸில் பிச்சை எடுத்து சாப்பிடுகிறது”என்று.
இந்தக் கதையும் வீரப்பனின் வாதமும், இந்த மூவரையும் குழப்பமடைய செய்திருக்கிறது.
உண்மையை சொன்னால் யாரும் நம்பபோவதில்லை:
அவர்களுடனான ஒரு உரையாடலின் போது, தேனீர் அருந்தியவாறே செனானியிடம், “இப்போது பந்திப்பூர் காட்டில் எத்தனை நீள தந்தமுள்ள யானைகள் இருக்கும்…?” என்று கேட்டு இருக்கிறான். அதற்கு செனானி, “ஏழு யானைகள் இருந்தாலே பெரிது. தந்தத்திற்காக தொடர்ந்து யானைகள் கொல்லப்பட்டு வருகின்றன. இப்போதெல்லாம் நீள தந்தமுள்ள யானைக் குட்டிகளை பார்ப்பதே அரிதாக இருக்கிறது…” என்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவர் வீரப்பனிடம், “நீள தந்தமுள்ள யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் இனி தந்தத்திற்காக யானைகளை கொல்லக்கூடாது…” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு வீரப்பன் மெல்லிய குரலில், “நான் யானைகளைக் கொன்று பல ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், இதை நான் சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் இந்த காட்டிற்கு வந்தது. அவர்களை பார்த்தவுடன் நான் கண்டு பிடித்துவிட்டேன், அவர்கள் யானையை வேட்டையாட தான் வந்திருக்கிறார்கள் என்று. அவர்களை எச்சரித்து அனுப்பினேன். ஆனால், அவர்கள் யானையை கொன்றுவிட்டார்கள். அவர்களை இன்னொருமுறை இக்காட்டில் பார்த்தால் சும்மாவிடமாட்டேன்” என்றுள்ளான்.
பின் ஒரு நீண்ட மெளனத்திற்கு பின், வீரப்பன், “இந்தக் காட்டில் எது நடந்தாலும், என்னையே குற்றம் சுமத்துகிறார்கள். வேட்டைக்காரர்கள் தைரியமாக யானையை வேட்டையாடி தந்தத்தை கடத்துகிறார்கள். ஆனால், நான் பழியை சுமக்கிறேன்….”
அப்போது செனானி குறுக்கிட்டு, “2000 யானைகளை வேட்டையாடி நீங்கள் தந்தத்தை கடத்தி உள்ளீர்கள் என்று ஊடகம் சொல்கிறதே…?” என்று வினவி உள்ளார்.
அதற்கு வீரப்பன். “அதுவெல்லாம் பொய். பிறர் செய்யும் குற்றங்கள் எப்போதும் என் தலையில் வந்து விழுகின்றன…”
இவ்வாறாக செல்கிறது அப்புத்தகம்.
வீரப்பனின் கதையும், வீரப்பன் கதையும்:
இப்போது ஏன் வீரப்பன் கதையும், வீரப்பனின் கதையும் என்கிறீர்களா… அல்லது ஏன் வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு கட்டுரை என்கிறீர்களா…? இல்லை, உண்மையாக வீரப்பனை கதாநாயகனாக சித்தரிக்கவில்லை. நிச்சயம் அவன் கொடுங்குற்றம் செய்தவன்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இப்போது மேற்கு தொடர்ச்சி மலைகளை வீரப்பனுக்கு முன், வீரப்பனுக்கு பின் என்று பிரித்துவிட முடியும். வீரப்பன் தன் கதையில் சொல்லியது போல் இப்போது உண்மையில் யானைகள் உலா வர இடம் இல்லை. மலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக கோபிநத்தம் பகுதியில் நான் சந்தித்த வன உயர் அலுவலர், “முன்பு வீரப்பன் இருக்கும் பயத்தில், ரியல் எஸ்டேட் முதலைகள் இங்கு முதலீடு செய்ய தயங்கின. அப்போது காடு காடாக இருந்தது. ஆனால், இப்போது தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில்தான் காடு இருக்கிறது…” என்றார் மிகக் கவலையாக.
உண்மையில் வீரப்பன் பலியாடுதான். உண்மையான குற்றவாளிகள் இன்னும் தைரியமாக வெளியே சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேட்டூர், சத்தியமங்கலம் பகுதியைச் சுற்றி வீரப்பனாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடியவன் என்ற முறையில் சொல்கிறேன். இது வரை வீரப்பன் குறித்து வந்த பதிவுகள் எதுவும் வீரப்பனை சரியாக பதிவுசெய்யவில்லை. இதற்கிடையே வரப்போகும் காவல் துறை அதிகாரி விஜயகுமாரின் புத்தகமும் காவல்துறையின் சார்பை சொல்வதாகதான் இருக்கப் போகிறது.
ஒரு வீரப்பனை அழித்துவிட்டோம். இப்போது ஓராயிரம் வீரப்பன்கள் உருவாகிவிட்டார்கள். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது எப்போது… நாம் கானகத்தை காப்பது எப்போது…?

– மு. நியாஸ் அகமது

No comments:

Post a Comment