Search This Blog

Wednesday, November 11, 2015

தீபவம்ஸ, மஹாவம்ஸவும், முன்னைய ஆராய்வாளர்களும்



தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற பாளி நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளை, 1500ஆம் ஆண்டுகளிலிருந்து, ஐரோப்பிய, இந்திய, இலங்கை, மற்றும் ஆராய்வாளர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர், இன்றும் ஆராய்கின்றனர், நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வு நூல்களும் இவை பற்றி எழுதப்பட்டுள்ளன. இவர்களுள், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்குப் பிற்பட்ட ஐரோப்பிய ஆராய்வாளர்களான George Turnour, Hermann Oldenberg, R.O. Franke, Rhys David, V. A. Smith, H. C. Norman, J. F. Fleet, Kern, Wilhelm Geiger என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அன்று ஜேர்மனிய ஆராய்வாளர்களே, இந்நூல்களை ஆராய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
ஐரோப்பிய ஆராய்வாளர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களில் கூறப்பட்டுள்ள கதைகளுக்கும், கிரேக்க, இலத்தீன மொழிகளின் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமையை ஆராய்ந்து, ஒப்பிட்டு உள்ளனர், சில கேள்விகளையும் எழுப்பியிருந்துள்ளனர். உதாரணமாக: விஜயனதும், 700 தோழர்களதும் இலங்கை அடைவையும், அதைத்தொடர்ந்து குவேனியால் செய்யப்பட்டவைகளையும், ஐரோப்பிய ஆராய்வாளர்கள், கிரேக்க Homer இன் இலக்கியங்களில் Circe தீவில் Ulysses இறங்கிய துடனும், அதன்பின்னர் நடைபெற்றவைகளுடனும் ஒப்பிட்டுள்ளனர்.
தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை அன்று ஆராய்ந்த ஐரோப்பியர்கள், தமக்குத் தெரிந்திருந்த கிரேக்க, இலத்தீன இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும், இலங்கையின் பாளி மொழி நூல்களில் கூறப்பட்டிருந்தவைகளுக்குமிடையில் காணப்பட்ட மிக நெருங்கிய ஒற்றுமைகளை அடையாளங் கண்டனர். அந்த ஒற்றுமை எப்படி உருவாகியிருக்கமுடியும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
ஆனால், அதற்கான விடைகளை, அவர்களால் ஆதாரபூர்வமாகக் காணமுடியாதே போனது. அவர்கள் குறிப்பிட்டமைபோல், இந்த ஒற்றுமை தற்செயலாக நடைபெற்றிருக்க முடியாது என்றே எவரையும் அவை கருதவைக்கும். ஆனால், இது எப்படி நடைபெற்றிருக்க முடியும் என்பதற்கான விடையை அறிவதைப் பொறுத்தமட்டில், அங்கு மூன்றே நடைபெற்றிருக்கமுடியும். அவையாவன:
1) இலங்கையில் பாளி மொழியில் இந்த நூல்களை எழுதியவர், அன்று, கிரேக்க நாட்டிற்கு, அல்லது “கொன்ஸ்தாந்திநோப்பிள்” (Constantinople) இற்குச் சென்றிருந்த நிலையில், அவர் கிரேக்க பண்டைய இலக்கியங்களையும், நூல்களையும் இயற்றியிருக்க முடியும், அல்லது, அவரின் சிந்தனைகளைக் கேட்டு, கிரேக்கர் ஒருவர் இலக்கியங்களை இயற்றியிருக்கமுடியும்;
2) இலங்கையில் பாளி மொழியில் இந்த நூல்களை இயற்றியிருந்தவர், கிரேக்க நாட்டிற்கு, அல்லது கொன்ஸ்தாந்திநோப்பிள் இற்குச் சென்றிருந்த நிலையில், ஹோமரின் இலக்கியங்களையும், ஏனைய இலக்கியங்களையும் அறிய வந்து, நாடு திரும்பி இயற்றியிருந்த இந்த நூல்களில், கிரேக்க இலக்கியங்களிலிருந்து அறிந்தவைகளைப் புகுத்தியிருக்கமுடியும்;
3) கிரேக்க தேசத்திலிருந்து, அல்லது “கொன்ஸ்தாந்திநோப்பிள்” இல் இருந்து இலங்கை வந்திருந்த ஒருவரூடாக அறிந்தவைகளை, இலங்கைப் புலவன் ஒருவன் இந்த நூல்களில் புகுத்தியிருக்கமுடியும்.
இவைகள், ஹோமர் (Homer) பற்றியும், ஹோமரின் காலம் பற்றியும், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களின் காலங்கள் பற்றியும் ஆராய நிர்ப்பந்திக்கின்றன.
மேலும், தமிழ், இந்திய இலக்கியங்களிலும், இப்படியான ஒற்றுமைகள் உள்ளனவா என்பதை ஆராய, இவை நிர்ப்பந்திக்கின்றன.
எதுவிதத்திலும், மேலே குறிப்பிட்ட மூன்றினுள், முதலிரண்டிலொன்று நடைபெற்றிருந்தால், பூமியின் பல்வேறு மொழிகளைத் தெரிந்திருந்தவொரு பேரறிஞன் ஒருவன், அன்று இலங்கையில் இருந்துள்ளான் என்பதை அது வலியுறுத்தும்.
இந்தநிலையில், இந்த அறிஞன் பூமியின் பல்வேறு மொழிகளை ஒப்பிட்டு ஆராயவும் முற்பட்டேயிருந்திருப்பான். இந்த நிலையில், இலங்கையின் புலவன் எவனாவது, பூமியின் பல் வேறு மொழிகளை அறிந்திருந்தானா என்பதை இலங்கையின் இலக்கியங்களுடாகவும், இலக்கண நூல்களுடாகவும், கல்வெட்டுக்கள், ஏனையவைகளுடாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது; அவன் யார், அவனது காலம் என்ன என்பவைகள் ஆராய்ந்தறியப்பட வேண்டியுள்ளன.
மறுபுறத்தில், மேலே குறிப்பிடப்பட்டவைகளுள் முதல் இரண்டிலொன்று நடைபெற்று, ஆராய்வாளர்கள் கூறுவது போல், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகள் கி. பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டிருந்தால், அக்காலப் பகுதிகளுக்கு முன்னரே, கிரேக்கர்கள் இலங்கை மொழிகளைப் பற்றியும், தமிழ், சமஸ்கிருத, பாளி மொழிகளைப் பற்றியும் அறிந்திருந்திருப்பர்.
இது, கிரேக்கர்கள் தமது இலக்கியங்கள், மற்றும் மொழியாராய்வு, இலக்கண நூல்களில், கி;.பி.4ஆம் நூற்றாண்டு வரையில,தமிழ், சிங்களம், பாளி, சமஸ்கிருதம் என்ற பிற மொழிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் சந்தர்ப்பங்களை அதிகரிக்கிறது.
இந்தநிலையில், கிரேக்க, இலத்தீன் மொழியாராய்வு நூல்களையும், பிறமொழிகளின் இலக்கண நூல்களையும் ஆராயவேண்டியுள்ளது; அவற்றில் இலங்கை, இந்திய மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பது அறியப்படவேண்டும்.
கிரேக்க, இலத்தீன மொழியாராய்வு நூல்களிலும், இலக்கண நூல்களிலும் இலங்கை, இந்திய மொழிகள் குறிப்பிடப்படாது, இலங்கை, இந்திய மொழியாராய்வு, இலக்கண நூல்கள், கல்வெட்டுக்கள், ஏனையவைகளில் ஐரோப்பிய மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தால், மேற்குறிப்பிட்டவைகளுள் முதலிரண்டில் ஒன்று நடைபெற்றிருக்கவே சந்தர்ப்பங்கள் உண்டு.
துரதிஷ்டவசமாக, தமிழ், சிங்கள, பாளி, சமஸ்கிருத இலக்கண, மொழியாராய்வு நூல்களில், பிற மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதா; எக்காலத்தில், யாரால் அவை குறிப்பிடப்பட்டுள்ளன என்பவைபற்றி, இலங்கை, இந்திய ஆராய்வாளர்கள் ஆராய்ந்து குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது, இலங்கையின் இந்தப் பாளி மொழி நூல்களைப் பற்றிச் சரியாக அறிவதாயின், இலங்கை, இந்திய, ஐரோப்பிய பண்டைய இலக்கண, மொழியாராய்வு நூல்களையும் ஆராய நிர்ப்பந்திக்கிறது.
இந்திய ஆராய்வாளர்களுள், A. L. Basham, Bimala Churn Law, K. A. நீலகண்டசாஸ்த்ரி, மற்றும் ஒருசிலரே, இலங்கையின் இந்த நூல்களை ஆராய்வதில் ஈடுபட்டு இருந்தனர்.
சிங்களவர்களுள், James de Alwis, G. P. Malala sēkara, E. W. Adikāram, S. Paranavitāna, G. C. Mendis, Walpola Rāhula> K. M. D. Silva,மற்றும் சிலர், இந்தப் பாளி மொழி நூல்களை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்னைய காலங்களிலிருந்து ஆராய்ந்து, ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வந்துள்ளனர்.
ஜேர்மனியின் Bavāria மாநிலத்தின் தலைநகரான Munichஇல், இலங்கையின் இந்தப் பாளி மொழி நூல்களுள் மஹாவம்ஸ என்பதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்களுள் ஒருவரான Dr. Wilhelm Geigeஇன் வழிகாட்டலில் தனது உயர் பட்டப்படிப்பினை 1927 – 1930வரை மேற்கொண்டவரான G. C. Mendis என்பவர், “An Historical Criticism of the Mahāvamsa” என்ற பெரும் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார்.
இவர்கள், இந்த நூல்கள் யாரால், எப்பொழுது இயற்றப்பட்டவை; இவைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவை என்பவைகளையெல்லாம் ஆராய்ந்திருந்தனர். G. C. Mendis, தனது “The Pāli Chronicles of Ceylon “ (1946) என்ற ஆய்வுக் கட்டுரையிலும் “Problems of Ceylon History” (1967) என்ற ஆய்வு நூலிலும், இந்தப் பாளி மொழி நூல்களைப்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அவர் இந்தப் பாளி மொழி நூலில் கூறப்பட்டுள்ளவைக்கும், சமஸ்கிருத மொழி இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்பட்டிருப்பவை களுக்கும் இடையிலுள்ள சில ஒற்றுமைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.
இலங்கை இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளவைக்கும், வட இந்தியச் சமஸ்கிருத மொழி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்கும் இடையில் காணப்பட்ட சில ஒற்றுமைகளும், கிரேக்க மொழி இலக்கியங்களுக்கும், இலங்கையின் பாளி மொழி இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பவைகளுக்குமிடையில் காணப்பட்ட ஒற்றுமையும், 1930ஆம் ஆண்டுகளில், சிங்களவருக்கும் ஆரியன் இனத்தவர்களுக்குமிடையில் ஒருவித இணைப்பை வலியுறுத்திக்கூற, சிங்கள பௌத்தர்களுக்கு மேலும் உதவியாக அமைந்தன.
இவர்களது ஆய்வுகளும், முடிவுகளும், பின்னைய ஆராய்வாளர்களால் எழுதப்பட்டுவரும் நூல்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுவரும் போதிலும், இவர்களது ஆய்வுகளும், முடிவுக்கு வரும் முறையும், விஞ்ஞானத் தன்மையற்றதாகவே காணப்படு;கின்றன. இவை தொடர்பாக அவர்கள் கூறுபவைகள் கற்பனைகளாகவே உள்ளன.
தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களில் கூறப்பட்டுள்ள பல் வேறு முக்கிய விடயங்களுக்கும், கிரேக்க, சமஸ்கிருத இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சிலவற்றிற்குமிடையில்தான் ஒற்றுமைகள் காணப்படுகின்றன என்பதற்கில்லை.
இலங்கையின் பாளி மொழி நூல்களில் கூறப்பட்டுள்ளவைகளுக்கும், கிரேக்க, சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களில் கூறப்பட் டுள்ளவைகளை விட, தமிழ் புலவர்களுக்கும், அவர்களால் இயற்றப்பட்டதாகக் கூறப்பட்டுவரும் தமிழ் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்களுக்குமிடையில்தான் மிகப் பெரிய அளவிலும், மிக நெருங்கியதுமான தொடர்புகள் காணப்படுகின்றன.
துரதிஷ்டவசமாக, அன்றைய, இன்றைய சிங்களவர்களும், ஐரோப்பியர்களும், ஏனையோர்களும், இந்தத் தொடர்புகளை அறியுமளவிற்குத் தமது தமிழ் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளமுடியாதநிலை இருந்துள்ள போதும், தமிழக, இலங்கைத் தமிழ் இலக்கிய, வரலாற்;றுப் பேராசிரியர்களும், ஆராய்வாளர்களும்கூட, இன்றுவரை, இவற்றை ஆராய்ந்தறியாத நிலைதான் தொடர்கிறது.
இதற்கு முக்கிய காரணம், மஹாவம்ஸ, தீபவம்ஸ என்ற நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்டிருந்த நிலையிலும், சிங்களம், சிங்களவர் என்பவைகளை முன்னைய ஆராய்வாளர்கள் “ஆரியன்,” சமஸ்கிருதம் என்பவைகளுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் தொடர்புபடுத்தி வந்த நிலையிலும், தமிழ் என்றால், திராவிடன், சைவம், “இந்து” என்பவைகளுடனுமே தொடர்புகள் இருக்கமுடியும் என்ற முடிவு முன்னைய ஆராய் வாளர்கள் மத்தியில் மிகவும் உறுதியாக இருந்து வந்த நிலையிலும், தமிழ் இலக்கியங்களுக்கும், இலங்கையின் பௌத்த வரலாற்றினைக் கூறும் நூல்களாகக் கருதப்பட்ட தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களுக்குமிடையில் எந்வித தொடர்புகளும் இருக்கமுடியாது என்ற ஆணித்தரமான முடிவுக்கு, அவர்கள், ஒப்பிடுகையைச் செய்யாதே, வந்திருந்தமையாகும்.
இன்று கூட, மிகச்சிறு பகுதித் தமிழ் ஆராய்வாளர்களும், மக்களுமே, தமிழருக்கும், பௌத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது எனக் கருதுகின்றனர்.
ஆனால், இதற்கான விஞ்ஞானரீதியிலான போதிய ஆதாரங்களை இலக்கிய, தொல்பொருள் ஆய்வுகளுடாக அறியமுடியாத நிலையில்தான் ஆராய்வாளர்கள் இருந்து வருகின்றனர்.
இவை, எமது முன்னைய ஆராய்வாளர்களது ஆராயும் தன்மை, வல்லமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது; எமது அரசியல்வாதிகளின் அறிவு டைமை பற்றிச் சிந்திக்கவைக்கிறது.
இப்படிக் கூறும்போது, ஒருபுறத்தில், சிலர் மிகவும் அவசர அவசரமாக, 1963ஆம் ஆண்டில், S. J. குணசேகரம் என்பவர் “The Vijayan Legend and the Āryan Myth – A Commentary on Dr. G. C. Mendis’ Mahābhārata Legends in th Mahāvamsa “ என்ற ஆய்வு நூலையும்; “The Sinhalese of Ceylon and the Āryan Theory – Letters of a Tamil Father to his son” என்ற ஆய்வு நூலை, Samuel Livinstone என்பவரும் எழுதியிருந்தனர் எனவும்; அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், ஏனையோர்கள், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை ஆராய்ந்து, அவைகள் கட்டுக் கதைகளைக் கூறுகின்றன என நிராகரித்துள்ளனர் என்றும் கூற முற்படமுடியும்.
ஆனால், இவர்களது ஆய்வுகள் எதுவும், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளை, விஞ்ஞான ரீதியாக ஆராயவே யில்லை; அவர்களது நிராகரிப்புகளுக்கான நியாயப்படுத்தல் கள், விஞ்ஞானத் தன்மையான ஆதாரங்களைக் கொண்டதாகவும் இல்லை. மேலும், முன்னையோர்களது ஆய்வுகள், விஜய, சிங்களவர் என்பவற்றை “ஆரியன்” அல்ல என நிறுவும் நோக்கத்தினைக் கொண்டே இருந்துள்ளனவன்றி, தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களை, இலக்கிய ஆய்வு என்பதற்கு உட்படுத்தவுமில்லை; தீபவம்ஸ, மஹாவம்ஸ என்பவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் வரலாற்று உண்மைகளா, இல்லையா என்பதை இலக்கியங்களுடாக உறுதிப்படுத்தவுமில்லை!
மறுபுறத்தில், மற்றொருசாரார், தமிழுக்கும், பௌத்தத்திற் கும் இடையிலிருந்து வந்த தொடர்புகளை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 1940களிலேயே ஆராய்ந்து நூல் ஒன்றை எழுதியிருந்தார் என்றும்; பல பேராசிரியர்களும், ஆராய்வாளர்களும் தமிழ் நாட்டின் பௌத்தம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகள் “Buddhism in Tamil Nadu” என்ற பெயரின்கீழ் 1998ஆம் ஆண்டில் Institute of Asian Studies சென்னையினால் வெளியிடப்பட்டிருந்தது எனவும்; வேறு பல ஆய்வு நூல்கள் பல ஆராய்வாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது எனவும் கூறமுடியும்.
ஆனால், துரதிஷ்டவசமாக, தமிழ் - பௌத்தம் - தமிழ் நாடு என்றவுடன் சகலரும் குறிப்பிடும் மணிமேகலை காப்பியத்தினைக்கூட, இந்த ஆராய்வாளர்களும், பேராசிரியர்களும் விஞ்ஞானரீதியாக ஆராயவில்லை என்பதுதான் கசப்பான, மறுக்கப்படமுடியாத உண்மையாகும்!
இப்படி, இலக்கியங்களைப் பாடசாலை, பல்கலைக் கழகக் கல்விகளில் கற்றிராதவர்களும்; வேறு துறைகளைச் சார்ந்தவர்களும்; இலக்கிய, வரலாற்று ஆராய்வுகளை எப்படிச் செய்வது என்பதைப் பல்கலைக்கழக, உயர் படிப்புக்களில் கற்காதவர்களுமான நாங்கள் கூறுவதை, பெரும்பான்மையான வாசகர்கள் ஏற்பதற்குக் கடினமாகவே இருக்கும். இது, ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என ஏற்கப்பட்டு வந்தவர்கள் பிரச்சனையிலிருந்து நழுவிக்கொள்ளப் பெரும் உதவியாகவுமிருக்கும்.
இப்படியான சூழ்நிலைகளில், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் என ஏற்கப்பட்டு வந்தவர்கள் மௌனம் சாதித்துக் கொள்வதையும் காணமுடியும். முறைமையாக்கல் கல்விக்குப் பழக்கப்பட்டவர்களது நிலை, இப்படியேதான் இருக்கமுடியும். இதில் வியப்படைய எதுவுமில்லை.
ஆனால், இந்த முகநூலில் இனிச் செய்யப்படும் ஆய்வுகளையும், வரப்படும் முடிவுகளையும் படித்து, ஆராயும் ஒருவர், தமிழ் பேசும் மக்களின் பரிதாபநிலையை நன்கு உணரமுடியும்.
தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களுக்கும், தமிழிலக்கியங்;கள், விஞ்ஞான நூல்களுக்குமிடையில் காணப்படும் நெருங்கிய தொடர்புகளை முழுமையாக ஆராய்வது, பரந்துபட்டவொரு ஆய்வாகும். இந்தநிலையில், வாசகர்கள் சுய ஆராய்வில் ஈடுபட இடமிளிக்கும் நோக்கிலும், இந்த ஆய்வுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை தேவையற்ற விதத்தில் அதிகரிக்காது பார்த்துக்;கொள்ளவும், இங்கு தெரிந்தெடுக்கப்பட்ட விதத்திலே, சில மிகமுக்கிய விடயங்கள் மாத்திரம் ஒப்பிடப்பட்டு, ஆராயப்படவேண்டியுள்ளது, ஏனையவைகளை, வாசகர்கள் சுயமாக ஆராய்ந்தறிய விடவேண்டியுள்ளது.
எதுவிதத்திலும், தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியில் மாத்திரம்தான் இன்று கிடைக்கப்பெறுவது, தமிழ் மொழியை மாத்திரம் தெரிந்திருப்பவர்கள், இவற்றினை ஆராய முடியாது செய்துள்ளது. மஹாவம்ஸ நூலைச் சங்கரன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்திருந்த போதும், அந்த மொழி பெயர்ப்பு நூலானது, யாழ் பல்கலைக் கழக நூலகம் தவிர்ந்த ஏயை நூலகங்கள் எதிலும் கிடைக்கக்கூடியதாக இன்றில்லை.
தீபவம்ஸ நூலானது, தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இது, தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களின் ஆராய்வானது, தவிர்க்கமுடியாதபடி, ஆங்கிலம் தெரிந்தோரால் மாத்திரமே ஆய்வு செய்யப்படக் கூடிய நிலை பெருமளவில் காணப்படுகிறது.
அறிவியலைப் பொறுத்தமட்டில், இது, தீபவம்ஸ, மஹாவம்ஸ என்ற நூல்களை ஆராய்வதூடாகத் தமிழ் மாணவர்கள் தமது அறிவையும், ஆராயும் தன்மையையும் வளர்த்துக் கொள்வதற்குப் பெரும் தடையாகவுள்ளது. இப் பிரச்சனையையும், ஏனைய பிரச்சனைகளையும் சுலபமாகத் தீர்க்க, எமது மாணவர்கள், தமது ஆங்கில அறிவை உயர்த்திக்கொள்வதே புத்திசாதுரியமானது.
பூமியின் ஒரு மொழியையல்ல, பல முக்கிய மொழிகளையும் கற்றுக் கொள்வது, ஒருவருக்குப் பலவகையிலும் உதவும்; அவரின் சமூகத்திற்கும் உதவும். ஆனால், பிறவொரு மொழியைக் கற்பவர் அந்த மொழியைத் தலைமுறை, தலைமுறைகளாகப் பேசிவந்த சமூகத்தவரே தானும் எனக் கருதாவிடில், அவர் புத்திசாதுரியமானவராக இருப்பார்.
இந்தநிலையில்,விளக்கங்களை முழுமையாக ஏற்படுத்திக் கொள்ளப் போதுமானவை எனக் கருதப்படும் அளவில், மிகக் குறைந்த ஆய்வுகளே இங்கு செய்யப்படுகின்றன. மேலும், விளக்கங்களைத் தொடர்ச்சியாகவும், சுலபமாகவும் ஏற்படுத்த உதவும் விதத்தில், ஒருவித ஆய்வுத்தொடர்ச்சி இருக்கும் விதத்திலேயே, ஆய்வு விடயங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
சில நூல்கள் யாழ் குடாவிலும், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் சாதாரண பொது நூலகங்களில் கிடைப்பது கடினமான நிலை காணப்படுவதால், நூல்களில் இருந்து பெற்றுத்தரப்படும் ஆய்வுகளுக்குத் தேவையான பகுதிகள், முழுமையாகத் தரப்படுகின்றன.
எதுவிதத்திலும், இன்று இணையத்தளங்களில் பண்டைய தமிழ் நுல்களை ஒருவர் முழுமையாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதால், அந்த இனையத்தள விபரங்களும் ஆங்காங்கு தரப்படுகின்றன.
ஆங்கில மொழி நூல்களிலிருந்து தரப்பட்டிருப்பவைகளுக்குத் தமிழாக்கம் தரப்படவில்லை.
எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாம் ஆய்வுகளைச் செய்யத் தெரிந்தவர்களேயன்றி, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அல்ல என்றே கருதுகின்றனர். இந்தநிலையில், தமிழாக்க மானது சிலவேளைகளில் கருத்துக்கள் மாற வழிவகுத்துவிடுமாகையால், அவை ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன.
இங்கு செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும், வரப்பட்டு உள்ள முடிவுகளையும் வாதிக்காது விடுவது, இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு இறுதித்தீர்வுகான எந்தவிதத்திலும் உதவ மாட்டாது. மாறாக, அது இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு இறுதியான ஒரு தீர்வுகாணப்படாது, பிரச்சனை தொடரவே வழியமைக்கும். இது புத்திக்கொவ்வாத செயற்பாடாகவே அமையும்.
கடந்த காலங்களில் நடைபெற்றுவந்ததுபோல், இன்றும் நாம் தவறுகளைத் தொடர்ந்து விடவும் முடியாது, தவறுகள் விடப்படுவதைத் தொடர்ந்து அனுமதிக்கவும் முடியாது. அப்படித் தவறுகள் விடப்படுவதின் தாக்கங்கள், தமிழ் பேசும் சமூகத்தினை மாத்திரமல்ல, இலங்கையின் சகல சமூகங்களையும், மீள்வதற்கு மிகவும் கடினமான நிலையினுள் நிரந்தரமாகத் தள்ளிவிடும்.
Thanks 
Vettivelu Thanam

No comments:

Post a Comment