Search This Blog

Wednesday, May 4, 2011

தன் மகிழ்ச்சிக்குப் பிறருக்குத் தொல்லை தரலாமா?

தன் மகிழ்ச்சிக்குப் பிறருக்குத் தொல்லை தரலாமா?
ஒரு காலத்தில், லியோயாங், சீனத் தலைநகராக இருந்தது. அது மிகவும் பரபரப்பான நகரமாக இருந்தது.

எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் இந்த நகருக்கு வந்த வண்ணம் இருந்தனர். வியாபாரிகள் பட்டும் தேயிலையும் விற்க வந்தனர். மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதி, வாழ்வில் வெற்றி பெறும் கனவுகளோடு வந்தனர். பெற்றோர் குழந்தைகளுடன் சிங்க நடனம், நாட்டியம், உடற்பயிற்சி நிகழ்வு, பொம்மலாட்டம் என்று பல்வேறு நிகழ்வுகளைக் காண வந்தனர். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ பலரும் வந்தனர்.

தலைநகரை அடைய பெரிய கதவுகள் இருந்தன. அந்தக் கதவுகளுக்கு முன் மிகப் பெரிய அகண்ட நதி ஒன்று இருந்தது. நதியைக் கடக்கப் பல படகுகள் இருந்தன. வண்ணமயமாய், பல்வேறு அலங்கார வளைவுகளுடன் அவை அமைக்கப்பட்டிருந்தன. மீன், வாத்து, சிங்க முகம் என்று படகுகள் பலவிதமாய் அனைவரையும் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நதியைக் கடக்க, மக்கள் இந்தப் படகுகளில் கூட்டம் கூட்டமாக ஏறிச் சென்றனர். குழந்தைகள் படகுகளில் பயணம் செய்யும் ஆர்வத்துடன் காத்துக் கிடந்தனர்.

படகில் செல்லும் போது, அனைவரும் அமைதியான நதியைக் கண்டு மகிழ்ந்தார்கள். அதன் அழகை ரசித்தார்கள். எடுத்து வந்த உணவுப் பொருட்களை உண்டார்கள்;. படகிலேயே விளையாட்டுக்கள் விளையாடினார்கள். பாடல்கள் பாடிச் சென்றார்கள்.
அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதிக்கு அன்று ஏனோ ஆயிற்று. நதி அரசன் அமைதி குலைந்தது. கடுங்கோபத்துடன் எழுந்தான். மக்கள் அனைவரும் பயப்படும் வண்ணம் பெரிய அலைகளை எழுப்பினான். அந்த அலைகளில் படகுகள் மாட்டிக் கொண்டு தவித்தன. படகில் இருந்த பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் அலறினர். தவிக்கும் மக்களைக் கண்டு, நதி அரசன் மிகவும் மகிழ்ந்தான். மேலும் மேலும் பெரிய அலைகளை உண்டாக்கிப் பெரும் தொல்லைகள் கொடுத்தான். நதி அரசனுக்கு அன்று செய்த செயல்கள் பெருமகிழ்ச்சி கொடுத்தது.

அதனால் அந்த நாள் முதல், மக்கள் அல்லல்படுவதைக் கண்டு ரசிக்க நதி அரசன் பெரிதும் விரும்ப ஆரம்பித்தான். தினம் பெரிய அலைகளை எழுப்பி விளையாட ஆரம்பித்தான்.

ஒரு நாள், ஒரு சிறுமி, படகிலிருந்து விழுந்து, நதியில் மூழ்கி, தவித்து, கஷ்டப்பட்டுக் கரையேறினாள். அந்த ஏழைச் சிறுமி அப்போது தின்று கொண்டிருந்த அரிசி உருண்டை நதியோடு சென்றது. அவளுடைய பூனையும் நதியில் விழுந்து சிக்கித் தவித்தது. அரிசி உருண்டை, பூனை இரண்டையும் இழந்த சிறுமி, ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அவளது அழுகுரல் கருணை தெய்வம் குவான் யின்-னுக்கு கேட்டது. இனியும் நதியரசன் அட்டகாசம் மக்களைச் சேரக் கூடாது என்று முடிவு செய்து, உதவி செய்ய எண்ணினார்.

கருணை தெய்வம் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து, பெரும் அலைகளை எழுப்பிய வண்ணம் இருக்கும் நதிக்கரையை அடைந்தார். நதியை நோக்கி, "நதி அரசனே! நதி அரசனே! தயவு செய்து வெளியே வா. நான் உன்னோடு பேச வேண்டும்" என்றார்.

சுவையான உணவு உண்டு கொண்டிருந்த நதி அரசனுக்கு இந்தக் குரல் கேட்டது. வெறுப்புடன் எழுந்து, நீருக்கு வெளியே வந்தான்.

குவான் யின் முகம் மலர்ந்து, மிகவும் பணிவுடன், "நதி அரசனே.. மக்களுக்கு அல்லல் தரும் இந்தப் பெரிய அலைகளை எழுப்பாமல் நிறுத்த வேண்டும். அலைகள் பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேர் அதில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் தெரியுமா?" என்று அமைதியாகக் கருணையோடு கேட்டார்.

"ஹா.. ஹா.. ஹா.. " என்று நதி அரசன் தன் தாடி குலுங்கச் சிரித்தான். "அழகிய பெண்ணே.. உனக்கு ஒன்று தெரியுமா? இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விழுவதைக் கண்டு சிரிக்காமல் இருப்பவரும் உண்டோ?" என்று தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான் நதி அரசன்.

இதைக் கேட்டு குவான் யின் பொறுமையாக இருக்க முயன்றார். வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, "உன்னுடைய மகிழ்ச்சிக்காக அடுத்தவர்களை தவிக்க வைப்பது சரியா?" என்று கேட்டார்.

"ஹா.. ஹா.. ஹா.. எனக்கென்ன வந்தது. எனக்கு இது ரொம்பவும் பிடிக்கிறது!" என்று கூறி, நதி அரசன் கருணை தெய்வத்தின் வார்த்தைகளை ஏற்க மறுத்தான். தன்னுடைய சக்தி அனைத்தையும் வெளிக்காட்டத் துணிந்தான். இடி போன்று சிரித்து, மலையளவு உயரமான அலைகளை எழுப்பினான்.

குவான் யின்-னுக்கு நதி அரசனின் செயல் ஏமாற்றத்தைத் தந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சொர்க்கத்திற்குத் திரும்பினார். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு யோசனை தோன்றியது.

திரும்பவும் மறு நாள் அதே இடத்திற்கு வந்தார். அழகிய பெண்ணாக மாறினார். மீன்காரப் பெண்ணின் உடையில், மீன் கூடையோடு நின்றார். நேரே சந்தைக்குச் சென்றார். மிகவும் கூட்டமான இடத்தில் தன் கூடையை வைத்தார். மீன்களைத் தரையில் பரப்பி வைத்தார். பெண் மிகவும் அழகாக இருந்ததாலும், மீன்கள் மிகவும் நன்றாக இருந்ததாலும், அவரைச் சுற்றி பலரும் கூட ஆரம்பித்தனர்.

எல்லோரும் மீனவப் பெண்ணைப் பார்க்க விரும்பினர். சிறிது நேரத்திலேயே அத்தனை மீன்களும் விற்றுப் போயின. இருந்தாலும் மக்கள் அவளைச் சுற்றி நின்றனர். அவளது அழகிய கண்களால் அனைவரையும் நோக்கி, "அன்பார்ந்த மக்களே! என்னிடம் இருந்த மீன்கள் விற்று விட்டன. அதனால் நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்று கேட்டாள்.

கூட்டம் அமைதியாக இருந்தது.

பதில் வராதது கண்டு, அவளே தொடர்ந்து, "யார் என்னுடைய கூடையிலே அதிக பணத்தைப் போடுகிறார்களோ, அவர் என்னை மணக்கலாம். ஆனால் கூடையில் விழாத பணம் அத்தனையும் எனக்கு" என்று மீனவப் பெண் கூறினாள்.

கூட்டத்தில் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

ஒரு இளைஞன் மீனவப் பெண்ணை சந்தேகத்துடன் பார்த்தான். "உன்னால் எப்படி அதிகப் பணம் போட்டவரைக் கண்டு பிடிக்க முடியும்?" என்று கேட்டான்.

மிகவும் கிழிந்த உடையோடு இருந்த இன்னொரு இளைஞன், "என்னிடமோ பணம் ஏதுமில்லை. அவளை மணக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை" என்றான் ஆதங்கத்துடன்.

இன்னொருவன், "இந்தக் கூடை தான் பெரியதாக இருக்கிறதே.. எறியும் காசு எப்படி அதில் விழாமல் போகும்" என்று தன் பங்கிற்கு தன் கருத்தைக் கூறினான்.

அனைவரும் தங்கம், வெள்ளி, பித்தளை காசுகளை எடுத்து, மீனவப் பெண்ணின் கூடையில் எறிய ஆரம்பித்தனர். ஆனால் என்ன அதிசயம்! காசுகளுக்கு கண்கள் இருந்தன போலும். எந்தவொரு காசும் கூடைக்குள் சென்று விழவேயில்லை. அனைத்தும் கூடையைச் சுற்றியே விழுந்தன.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அழகிய பெண்ணை மணக்கும் ஆசையில் அனைவரும் காசுகளை எறிந்து முயன்றனர்.

வேண்டிய மட்டும் காசுகள் சேர்ந்தும் அதை அழகிய பாலம் கட்டக் கொடுத்தாள் மீனவப் பெண். ஒரு வருடத்தில் லியோயாங் நதியில் ஒரு அழகிய பாலம் கட்டப்பட்டது.

நதி அரசன் இன்னமும் பெரிய அலைகளை எழுப்பிய வண்ணமே இருந்தான். ஆனால், அதனால் மக்களுக்கு ஏதும் தொந்தரவு இருக்கவில்லை. தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தை, நாய், பூனை என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் பாலத்தில் நடந்து, நதியைக் கடந்தனர். இதைக் கண்டு கருணைக் கடவுள் குவான் யின் மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்குத் திரும்பினார்.
-சீன நாட்டுக் கதை
மொழிபெயர்ப்பு: சித்ரா சிவக்குமார், ஹாங்காங்.

No comments:

Post a Comment