Search This Blog

Tuesday, May 3, 2011

குறுந்தொகைக் கதைகள்-3, மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ?

மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ?
-முனைவர். மா. தியாகராஜன்.
சேவல் கூவி எழுப்பியது. செங்கதிரோனும் கிழக்கு வானிலே விழித்து எழுந்தான் - கதிர்களை விரித்து எழுந்தான்.

அந்த வேளையில்
, அந்தச் சிறு கிராமத்தில், ஒவ்வொரு தெருமுனையிலும் மக்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள்.

“என்ன பொன்னா
, நம் திருமாறனுடைய மகள் தேன்மோழி தேனூர்த் தென்னன் மகன் திண்ணனுடன் போய் விட்டாளாமே? தெரியுமா?” என்றார் எழிலன்.

“ஆமாம்! ஆமாம்! தெரியும்! தெரியும்! போனது மட்டுமா? திருமணமும் முடிந்து விட்டதாம்!” என்றார் பொன்னன்.

“அப்படியா எங்கே?” எழிலன் கேட்டார்.

“தேனூரிலேயே - அதாவது பையனுடைய ஊரிலேயே!” இயம்பினார் எழிலன்.

இவ்வாறு எழிலனும் பொன்னனும் பேசிக்கொண்டு நின்றனர். தெருவில். இவர்கள் பேசிக் கொண்டதை ஒட்டி இருந்த வீட்டின் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தி தீட்டிய காதுகளுடன் கூர்மையாய்க் கேட்டாள்.
ஆம்! அவள் வேறு யாரும் அல்லள். தேன்மொழியின் தோழியே! - பெயர் கனிமொழி என்பதாகும்.

தெருவில் நடந்த உரையாடலைக் கேட்ட கனிமொழி உடல் எல்லாம் பதைபதைத்தாள்
. உள்ளம் எல்லாம் பதறினாள்.

“அம்மா! அம்மா!” என்று கதறிய வாயோடும்; உதறிய கையோடும்; வடிகின்ற வியர்வையோடும்; படபடவெனத் துடிக்கின்ற இதயத்தோடும் ஓடினாள் சமையலறை நோக்கி.

“என்னடி? என்னடி?” என்று கேட்டபடியே கமையலறையில் இருந்து விரைந்து வந்தாள் அவளுடைய தாய்.

ஆம்! அவள்தான் தேன்மொழியின் வளர்ப்புத் தாய் - செவிலித்தாய் - தேன்மொழியைப் பெற்ற தாய்க்கு - நற்றாய்க்கு தோழி ஆவாள் - செல்லம்மாள் என்பது அவள் பெயர்.

ஓடி வந்த தாயும் மகளும் இடையிலே நின்றனர்
. ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டனர்.

“என்னம்மா? என்ன செய்தி? ஏன் இப்படிப் பதறுகிறாய்?” என்று கேட்டாள் செல்லம்மாள்.

“அம்மா! எப்படியம்மா சொல்வேன் அதை? என்று கதறினாள்.

பதறும் மகளைப் பாசத்தோடு தழுவிக் கொண்டாள். சிறிது நேரம் உடலைத்தடவிக் கொடுத்தாள்
, முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

ஆறுதல் பெற்ற கனிமொழி தான் கேட்டதை எல்லாம் தன் தாயிடம் கூறி முடித்தாள். கூரிய கண்களிலிருந்து நீர் வடித்தாள்.
மகள் கூறிய செய்தி கேட்ட செல்லம்மாள் மகளைப் போலவே பதறினாள். பதைபதைத்தாள். நெஞ்சு படபடத்தாள். பின்னர் ஆறுதல் அடைந்தாள்.

இந்தச் செய்தியைத் தேன்மோழியின் தாய் நல்லம்மாளிடம் எப்படியும் தெரிவிக்க வேண்டும்! இது நம் கடமை அல்லவா! ஒரு வளர்ப்புத் தாயின் பொறுப்பு அல்லவா? ஐயோ! கடவுளே! எப்படி இதைச் சொல்வது? இதை அந்தத் தாய் தாங்கிக் கொள்வாளா? ஐயய்யோ! கடவுளே! ஏன் என்னைச் சோதிக்கின்றாய் இப்படி?” என்று பலவாறு புலம்பினாள்
. தவித்தாள்.

இறுதியில் இச்செய்தியை நற்றாய்க்கு நல்லம்மாளுக்குத் தெரிவிப்பது தன் கடமை. நற்றாய்க்கு அறத்தோடு நிற்பது தன் பொறுப்பு என்பதை உணர்ந்தாள்
. உடனெ புறப்பட்டாள். தேன்மோழியின் இல்லம் போய்ச் சேர்ந்தாள்.

ஏற்கனவே அதனை அறிந்து கொண்ட நற்றாய் நல்லம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். செல்லம்மாள் தன் உள்ளத்தில் தோய்ந்திருந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நல்லம்மாளுக்கு முன் சென்று நின்றாள்; அமைதியாய் அமர்ந்தாள்
. மெல்ல வாய் திறந்தாள். மெதுவாகப் பேசத் துவங்கினாள்.

“தோழி! நல்லம்மா! நடந்தது நடந்து
விட்டது. வருந்தாதே! எல்லாம் நன்மைக்கே! இப்படி நடந்து விட்டாலும் நம்முடைய பெண் மிக மிகப் புத்திசாலித்தனமாகவே நடந்து கொண்டிருக்கிறாள்.”

“எப்படி?”

“பையன் மிகவும் அறிவுள்ளவன்
, கழல்களிலேயே சிறந்த கழல்களை ஆராய்ந்து பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கால்களிலே அணிந்துள்ளவன். வலிமை வாய்ந்த வேல் ஒன்றைப் பற்றியுள்ள வீரம் செறிந்தவன். எனவே, நல்லவனைத் தான் தன் கணவனாக நம் பெண் தேர்ந்தெடுத்துள்ளாள். எனவே, பையன் எப்படிப்பட்டவனோ? எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று கவலை கொள்ளத் தேவையில்லை” என்று இயம்பினாள்.

ஐயோ! தோழி! அது எல்லாம் சரிதான்! இப்பொழுது அவள் எங்கு இருக்கின்றாளோ? எப்படி இருக்கின்றாளோ? என்றும் தெரியவில்லையே!”

“நல்லம்மா! வருந்தாதே! நல்லபடியாகவே எல்லாம் முடிந்திருக்கிறது!”

“என்ன சொல்கிறாய் செல்லம்மா?”
“ஆம்! திருமணம் முடிந்து விட்டது! மணப்பறை மங்களமாய் முழங்க, வரிசங்கு ஊதி ஒலிக்க, இரு மனம் கலந்த திருமணம் நடந்து முடிந்து விட்டது. கழல் அணிந்த கால்களை உடைய தலைவன் திண்ணன் என்பவன் வளையல் அணிந்த நம் மகளின் கையைப் பற்றி அழைத்துச் சென்று மணம் முடித்துக் கொண்டான்.

நாலூர் என்றோர் ஊர். அங்கு வாழும் மக்கள் கோசர்கள் ஆவர். அவர்கள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கும் ஊர்ப் பொது மன்றத்தில் கூடுவர். அவர்கள் வாய்ச் சொல் தவற மாட்டார்கள். ஒன்றே சொல்வர். அதுவும் நன்றே சொல்வர். அப்படிச் சொன்னதைச் சொன்னபடி அன்றே செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்களுடைய வாய்ச் சொல்லைப் போலவே திருமணமும் தவறாமல், நல்லபடியாய் முடிந்துள்ளது. எனவே அவள் வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது. கவலையை நீ விட்டு ஒழி! என்று கூறித் தேற்றினாள். 
“பறைபடப் பணிபலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொண்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையோடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே!”
(குறுந்தொகை: 15 - ஒளவை.)

No comments:

Post a Comment