ஈழத்தில் தமிழுக்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ள மரபு வழித் தமிழ் புலமையாளர்களில் முக்கியமான ஒருவராகக் கொள்ளப்படவேண்டியவர் கிழக்கிலங்களையின் மட்டக்களப்பு மண்ணின் மைந்தரான புலவர்மணி பெரிய தம்பிப் பிள்ளை.
முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்பட்டவரும் “யாழ் நூல்” தந்த பெருமைக்குரியவரும், பல்கலைக்கழக நிலையில் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்தரிடம் கல்விபயின்ற பெருமையும் இவருக்கு உண்டு.
ஈழத்தில் இலக்கியரசனையை விரிவடையச் செய்தவர்களுள் முக்கியமானவரும் யாழ்ப்பாணத்தில் பண்டிதர்களுக்குப் பணடிதராகவும்: அதேவேளை நவீன உரைநடை இலக்கியத்தின் உரைகல்லாகவும் திகழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடனிணைந்து நாவலர் காவிய பாடசாலையில் கல்விபயின்று கவிஞராய் மேலெழுந்த சிறப்பும் இந்த புலவர் மணிக்குண்டு.
மட்டக்களப்பின் மண்டூரில் 1899ஜனவரிமாதம் 8ஆம் திகதி பிறந்தவர் இவர். (08.01.1899) மண்டூர் வெஸ்லியன் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், கல்முனை வெஸ்லி மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பஆங்கிலக் கல்வியும் பெற்ற இவருக்கு “யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தமிழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நாவலர் காவியப் பாடசாலை ஒரு தனித்தன்மை வாய்ந்த நிறுவனம்! அரசினால் வழங்கப்படுகின்ற நன் கொடையைப் பெறும் இப்பாடசாலை இதில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு நன் கொடைவழங்குவது வழக்கமாக இருந்தது.
சுன்னாகம் அ. குமாரசாமிபுலவர், த.கைலாசப்பிள்ளை, பண்டிதர் மகாலிங்கசிவம், பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார், சாவகச்சேரி புலவர் பொன்னம்பலப்பிள்ளை, பண்டிதர் சோமசுந்தரம் என்று யாழ்ப்பாண அறிஞர் பலரின் நட்பும் தொடர்பும் ஆசிரியத்துவமும் இவரது கல்வியை உயர்த்தியுள்ளது.
தமிழ் கல்விக்காக இவர் மட்டுநகரில் இருந்து யாழ் கூட்டிவந்த நண்பர் இவரை குருநகருக்கருகேயுள்ள மரகதமடம் என்ற இல்லத்துக்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்த இளைஞர் இவரை வரவேற்று உபசரித்துள்ளார். அந்த இளைஞர் வேறுயாருமில்லை! பண்டிதர் மயில்வாகனம் என்று பெயர் கொண்ட பிற்காலமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரே தான்.
இந்த முதல் சந்திப்பை தன்னுடைய பிற்கால உள்ளதும் நல்லதும் என்ற நூலில் புலவர் மணி பதிவு செய்கின்றார்.
“யாழ்ப்பாணத்தில் வைத்து என் மீது அரும்பிய பண்டிதர் மயில் வாகனனாரின் அன்பு அவர் துறவியான பின்பு அருளாக மலர்ந்துள்ளதை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி நின்றேன்.’
இந்த முதல் சந்திப்பின் பிறகு அவரைத் தேடிச் சென்று பலவிஷயங்களைக் கற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணக் கோவில்கள் அனைத்திலும் பண்டிதர் மயில் வாகனனாரின் பிரசங்கம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். புலவர் மணியும் விடாமல் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு லயித்துக் கிடப்பார். அப்படி லயித்து லயித்தே நானும் பேசக்கற்றுக் கொண்டேன் பேச்சாளன் ஆனேன் என்றும் குறிக்கின்றார் இவர்.
விபுலானந்தரூடாகவே யோகர் ஸ்வாமியின் பழக்கமும் தொடர்பும் அருளாசியும் இவருக்குக் கிடைக்கிறது.
பண்டிதர் மயில்வாகனனார் விவேகானந்த சபையின் நிரந்தரமாகிவிட்ட காலத்தில் புலவர்மணியும் நாவலர் பாடசாலையை விட்டு விலகி விவேகானந்த சபையுடன் இணைகின்றார். மாலைவேளைகளில் நல்லூர் கந்தசாமி கோவிலில் யோகர்ஸ்வாமியும் ஸ்வாமி விபுலானந்தரும் இவரும் திருப்புகழ் படிப்பதுண்டு.
இவர் சாவகச்சேரி இந்து மகா சபையில் இருந்த போது இவரைத் தேடி சபைக்குவரும் அனைவருடனும் நட்புடனும் சமமாகவும் பழகினார். சாதிவெறி உச்சமடைந்திருந்த காலம் அது.
இங்குவரும் பள்ளர் பறையருக்கெல்லாம் கதிரை கொடுத்து உபசரிக்கின்றீராமே? இந்த புரட்சிகள் எல்லாம் இங்கே வேண்டாம் என அவர்கள் கடிய பதிலுக்கு இவரும் கடிய, இவரை சபை விலக்கி வெளியேற்றுகிறது. இதனால் வேதனையும் விரக்தியுமுற்றுத் திரிந்த புலவர் மணியை ஆறுதல் வார்த்தைகள் கூறி ஆற்றுப்படுத்தியவர்கள் ஐசக் ‘தம்பையா, எட்வர்ட் மேதர் போன்ற அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவப் போதகர்கள்.‘இங்கே எங்களிடம் பள்ளரும் இல்லை பறையரும் இல்லை! மனிதர்கள் எல்லாரும் சமமானவர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற நீங்கள் எங்களுடன் இணைந்து செயற்படுங்கள்’ என்று கூறினர்.
புலவர்மணியும் மதம் மாறி கிறிஸ்துவரானார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் பதவியை விட்டு விலகி சாவகச்சேரி மிஷன் கல்லூரியில் தமிழ்பண்டிதராகப்பதவி ஏற்றார். கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த இவரை வேதசாஸ்திர கல்லூரியில் இரண்டு வருடப் படிப்பிற்காக இந்தியாவிலுள்ள பசுமலைக்கு அனுப்பிவைத்தார்கள். அமெரிக்க மிஷனின் அரண்போன்றது பசுமலை.
‘கிறிஸ்து திருவவதார கீதங்கள்’ என்னும் சிறுபிரந்தம். ‘கிறிஸ்தவ சமய துயிலுணர்ச்சி’ என்னும் சிறு நூல், ‘இந்தியநோக்கில் கிறிஸ்தவ வேத வியாக்கியானம்’ என்னும் கட்டுரை போன்றவை பசுமலை காலத்தில் எழுதியவை. கிறிஸ்தவ சமயப் பிரசங்கியாக, பசுமலை. கோவை, சென்னை எனப் பிரபல்யம் கொண்டார். பசுமலை வேதசாஸ்திர கலாசாலை விடுதி மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார். ஆனாலும் கிறிஸ்தவமதமும் திருச்சபையும் ஒன்றாக செயற்படவில்லை என்ற உணர்வும், கிறிஸ்தவ சமூகத்தின் மேல்நாட்டு ஏகாதிபத்தியத்தைக் களைய வேண்டும் என்னும் வெறியு், கிறிஸ்தவ மேலைநாடுகளின் நோக்கங்கள் மீதான எதிர்ப்பும் இவரை அலைக்கழித்தன. பசுமலை பயிற்சி முடிந்து யாழ் திரும்பும்போது யாழ்ப்பாணத்தின் திருச்சபை செயலாளர் பதவி இவருக்காக ஒதுக்கப்பட்டுக் காத்திருந்தது.
பசுமலையில் புலவர்மணி சமயப் பிரசங்கியாக செல்வாக்குடனிருந்த காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் விபுலானந்தர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். தன்னைக் கண்டு மனமுருகிநின்ற புலவர் மணியிடம் ‘மட்டக்களப்பில் அதிகம்வேலையுள்ளது. ஆட்கள் தேவை’ என்று கூறினாராம் விபுலானந்தர்.
இது நடந்தது 1925ல். பசுமலை கலாசாலைப் பதவிகள் தனக்கிருந்த செல்வாக்கு, யாழில் தனக்கென ஒதுக்கப்பட்டுக்காத்திருந்த உயர்பதவி அனைத்தையும் உதறிவிட்டு 1926ல் தனது தாயகமான மட்டக்களப்புக்கு வந்தார்.
திருகோணமலை, மட்டக்களப்பு என ஆசிரியப் பதவி வகித்து நல்மாணவர்களை உருவாக்கினார்.
ஈழநாட்டில் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த புலவரும் தமிழ் அறிஞரும் சீர்த்திருத்த சிந்தனாவாதியுமான புலவர்மணி சிறியனவும் பெரியனவுமாக 15க்கும் கூடுதலான நூல்களை வெளியிட்டுள்ளார்.
முக்கியமாக பகவத்கீதைவெண்பா 1962
புலவர் மணி கவிதைகள் 1980
உள்ளதும் நல்லதும் 1982
கருமயோகம் : பக்தியோகம் , ஞானயோகம், பாலைக்கலி, விபுலானந்தர் மீட்சிபத்து, புலவர்மணி கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் தனது 79ஆவது வயதில் 02.11.1978ல் மரணம் அடைந்தார்.
தெளிவத்தை ஜோசப்
http://www.vaaramanjari.lk/
No comments:
Post a Comment