“இலங்கையின் தமிழ் வெகுசன அரசியலை” தெளிவான இரண்டு பண்பாட்டுக்
கோடுகளால் வகுத்து வரையறை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று புத்திபூர்மான
அரசியல். இது சாத்தியங்களின் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் வழியே
அரசியலை முன்னெடுப்பது. இந்த வழிமுறையில் குறிப்பிடத்தக்க வெற்றியை மலையகத்
தலைமைகள் பெற்றிருக்கின்றன. சி.வி வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான்
தொடக்கம் இன்றைய மனோ கணேசன் வரையில் இதற்கு உதாரணம். நிலமற்ற, கல்வி
மற்றும் பொருளாதார நிலையில் பின்னடைந்திருந்த மலையகச் சமூகத்தினை கடந்த
எழுபது ஆண்டுகளில் இவர்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறார்கள். இன்று வலுவானதொரு அரசியற் சமூகமாக
மலையகத் தரப்புப் பலமடைந்திருக்கிறது. கல்வியிலும் படிப்படியாக முன்னேறிக்
கொண்டிருப்போராக மலைய சமூகத்தினர் உள்ளனர்.
இந்த அரசியல்
முறைமைக்குள் எதிர்மறைப் பண்புகள் நிறைய உள்ளன என்பதையும் கணக்கிட்டே இதனை
மதிப்பிடுகிறேன். தொண்டமான், செல்லச்சாமி, பெரியசாமி சந்திரசேகரன், மனோ
கணேசன் ஆகியோருக்கு முன்னரே மலைய சமூகத்தின் அடையாளத்துக்கும்
இருப்புக்குமான அடித்தளம் போடப்பட்டிருந்தது. கோ. நடேசய்யர், ஏ.அஸீஸ்,
எஸ்.எம். சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, கே.ஜீ.எஸ். நாயர், பி.தேவராஜ்,
எஸ்.நடேசன் , ஓ.ஏ.ராமையா, வீ.கே. வெள்ளையன், இராஜலிங்கம் எனப் பெரியதொரு
செயற்பாட்டுத் தொடரணி இந்தத் தள நிர்மாணத்தைச் செய்தது. தொழிற் சங்கப்
போராட்டங்கள், வெகுஜன அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றின் வழியே மிகக்
கடினமான சாத்தியப் புள்ளிகளை இவர்கள் உருவாக்கினர். இந்தத் தளத்தில்
நின்றுகொண்டே தொண்டமானும் சந்திரசேகரனும் இப்பொழுது மனோ கணேசன், திலகராஜ்
போன்றோரும் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இத்தகைய
சாத்தியப்புள்ளிகளை நோக்கி அரசியலை முன்னெடுத்த வடக்குக் கிழக்குத் தமிழ்
தரப்புகளும் உள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையைத் துணிந்து
பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இதில் முக்கியமான ஒன்றாகும்.
இவர்கள்
கண்டறிந்து செயற்பட்ட புள்ளிகளால் உருவாகிய அரசியற் பெறுமானங்களே இன்று
மீந்திருப்பவை. இது கூட்டமைப்புப் போன்றவை செய்ததிலும் பார்க்க அதிகம்.
இந்தப் போக்கினை விமர்சனபூர்வமாக அணுகி மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். தேர்தல் ஜனநாயக வழிமுறையில் பேண வேண்டிய அரசியற் தந்திரோபாயத்தையும் அறத்தையும் உள்வாங்கி, சேதங்களும் சிதைவுகளுமற்ற பாதையை மெய்யான ஜனநாயக விழுமியங்களோடு உருவாக்க வேண்டும்.
இந்தப் போக்கினை விமர்சனபூர்வமாக அணுகி மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். தேர்தல் ஜனநாயக வழிமுறையில் பேண வேண்டிய அரசியற் தந்திரோபாயத்தையும் அறத்தையும் உள்வாங்கி, சேதங்களும் சிதைவுகளுமற்ற பாதையை மெய்யான ஜனநாயக விழுமியங்களோடு உருவாக்க வேண்டும்.
இரண்டாவது உணர்ச்சிகரமான
அரசியல். இது விளைவுகளைப் பற்றிய மதிப்பீடுகளற்றது. விமர்சனங்களும்
ஆய்வுமற்றது. அதாவது அறிவுக்கு எதிரானது. ஒற்றைப்படையாக இனமானத்தின்
அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தனக்கான தருக்கத்தையும்
நியாயங்களையும் உற்பத்தி செய்து வைத்திருப்பது. தன்னுடைய எதிர்த்தரப்பை
உணர்ச்சிகரமாகவே அணுகுவது. அடித்தால் மொட்டை. கட்டினால் குடுமி என்று
சொல்வார்களே அதைப்போல ஆதரவோ எதிர்ப்போ இரண்டும் கண்மூடித்தனமாகவே
இருக்கும். எதிர்ச்சக்தியையும் நட்புச் சக்தியையும் எப்படிக் கையாள்வது
என்று தெரியாமல் குழம்பிக் கிடப்பது. இதனால் அரசியற் தந்திரோபத்தைக்
கடைப்பிடித்து வெற்றிகளைப் பெற முடியாமல் காலம் முழுவதும்
புலம்பிக்கொண்டேயிருப்பது. எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண முடியாமல்
தவறுகளை பிறர் மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முற்படுவது.
வளர்ச்சியோ மாற்றமோ நிகழாமல் பழைய – புளித்துப்போன வழித்தடத்திலேயே
பயணிப்பது. இதனால்தான் தமிழ்ச்சமூகம் எழுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த
நிலையையும் விடத் தாழ்ந்து போயிருக்கிறது. இன்று வடக்குக் கிழக்குத்
தமிழர்கள் உலகம் முழுவதிலும் சிதறுண்டிருக்கிறார்கள். அடுத்த நாற்பது
ஆண்டுகளில் இவர்கள் அங்கே அடையாளமிழந்த சமூகத்தினராகி விடுவர். நாட்டில்
உள்ளவர்கள் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் அவர்களும் அடுத்த ஐம்பது
ஆண்டுகளில் மிகப் பலவீனமான சமூகமாகவே இருப்பர்.
No comments:
Post a Comment