Search This Blog

Tuesday, September 11, 2018

நீர் வர்த்தகப் பண்டமாக மாற்றமடைவது மனிதர்களது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையுமா??



உலக வர்த்தக கழகத்தின் GATT ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தகப் பண்டமாக வரையறுக்கின்றது. இது ஒரு நாட்டில் இருந்து தண்ணீரை இன்னுமொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யக்கூடாது என்கின்றது. இதனடிப்படையில் தென்னாபிரிக்காவில் தண்ணீர் தனியார் மயப்படுத்தப்பட்டுவிட்டது நீங்கள் செலுத்திய பணத்தின் அளவுக்கேற்ப நீர் குழாய்களினூடாக வழங்கப்படும் பணம் முடிவடைந்ததும் நீர் வரத்து நின்று விடும் மீண்டும் பணம் செலுத்தினால் மாத்திரமே நீரை அனுபவிக்க முடியும். இதன் மறைமுக செய்தி யாதெனில் நீங்கள் இருப்பதற்கு வதிவிடமில்லையா? நீர்க் கட்டணம் செலுத்த வசதியில்லையா?? நீங்கள் இங்கு உயிர்வாழ தகுதியற்றவர் என்பதே ஆகும்.
1990 களிற்கு முன்னர் நீர், வளி, சூரிய ஒளி ஆகியவை இலவசப் பண்டங்களாக வரையறுக்கப்பட்டிருந்தன. எனினும் இன்று சீனா, ஜப்பான் போன்ற வளி மாசடைந்த நாடுகளில் ஒக்சிசன் வணிகப் பண்டமாக மாற்றமடைந்து விட்டது. நீரானது அநேகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் வணிகப் பண்டமாக மாற்றமடைந்து விட்டது ஆக மிஞ்சியிருப்பது சூரிய ஒளி மாத்திரமே. அதற்கும் உத்தரவாதம் இல்லை.
சரி மற்ற நாடுகளின் கதை எதற்கு நம் நாட்டு நிலையை சற்றுப் பார்ப்போம். இலங்கையைப் பொறுத்த வரை இன்றைய நிலையில் அநேக நகரங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாய் நீரையே நம்பியுள்ளன. இது ஏனைய நாடுகளைப் பொறுத்தவரை மிக மலிவான விலையில் விநியோகிக்கப்படுகின்றது அதாவது முதல் 05 அலகுகளிற்கு ரூபாய் ஐம்பது மாத்திரமே ஆகும். எனினும் வவுனியா போன்ற சுண்ணக்கல் நிறைந்த பிரதேசங்களில் தனிப்பட்டவர்கள் குடிநீரை லீற்றர் 50 சதத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதனை பெறுவதற்கு நீங்கள் பாத்திரங்களுடன் செல்ல வேண்டும். அதே போன்று கோமரங்கடவல, பதவிஸ்ரீபுர, பொலனறுவை மற்றும் அநுராதபுர போன்ற ஆர்சனிக் போன்ற உலோக இரசாயனங்கள் உள்ள பிரதேசங்களில் நீரை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மாத்திரமல்லாது தனிப்பட்ட மற்றும் பொது நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடனும் நீர் பெறப்படுகின்றது. இதை விடக் கொடுமை என்னவெனில் தனிப்பட்ட ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கொள்கலன்களில் ஒரு லீற்றர் குடிநீர் தற்போது ரூபாய் 60 தொடக்கம் 70 ஆகவும் 19 லீற்றர் கொல்களன்களில் (கொள்கலன் கட்டணமாக ரூபாய் ஆயிரம் செலுத்த வேண்டும்) ரூபாய் 200 தொடக்கம் 250 வரை விற்கப்படுகின்றது.
சரி இலங்கையையும் பார்த்தாச்சா இனி நம்ம மட்டக்களப்பு பக்கம் வருவோம். மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் கிணற்று நீரை தமது குடிநீரிற்கான மூலாதாரமாக பயன்படுத்துகின்றனர் அதே வேளை மட்டக்களப்பின் நகரப் பகுதிகளில் தற்போது குழாய் நீர்ப் பாவனை அதிகரித்துள்ளது. இதற்கான நீர் வழங்கலானது உன்னிச்சை மற்றும் உறுகாமம் குளங்களை நம்பிய வகையிலேயே அமைந்துள்ளது. ஆனால் இந்த பாரிய குளங்கள் அமைந்துள்ள பிரதேச மக்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு இக்குளத்திலிருந்து குழாயினூடாக வழங்கப்படும் நீர் எந்தளவிற்கு பயன்படுகின்றது என்றால்... (வேண்டாம் நமக்கெதற்கு இப்பரிதாபத்துக்குரியவர்களின் அவலக் கதை....)
சரி இலங்கையிலே அதிக வறுமையான பிரதேசமாக மத்திய வங்கியின் தரவுகளின் படி உறுதிப்படுத்தப்பட்ட இந்தப் படுவாங்கரை பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமே மிக வித்தியாசமானது நன்கு மழை பெய்யும் காலப் பகுதிகளில் குழாய்க் கிணறு அல்லது மிக ஆழமாக தோண்டப்பட்டு மிகச் சிறிதளவே நீருள்ள கிணறுகளில் இருந்து நீரை மொண்டு எடுப்பர் அதுவும் கிணறுகள் நம்ம ஊர்களில் இருப்பதைப் போன்று வீட்டுக்கு வீடு இருக்காது கிராமத்தில் தப்பித் தவறி ஏதாவது ஒன்று இருந்தால் தான் அதில் நீரை அள்ளுவதற்காக பல மைல் தூரத்திற்கு குடத்தை இடுப்பில் இடுக்கிப் பிடித்தபடி நடக்க வேண்டும். சரி இப்படியாவது தண்ணீர் கிடைக்குதே என்று ஆறுதலா இருப்பம் என்று பார்த்தால் யூலை தொடங்கிடும் பிறகு என்ன கிணறு எல்லாம் வற்றி விடும் பிரதேச சபையின் தண்ணீர் பவுசரிற்காக மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியது தான். அதுல அரைகுறையாக பிடிச்சிட்டு அன்றைய பொழுதை கழிக்க வேண்டியது தான். சில நேரங்களில பயிரை நடுகை செய்தால் சில நேரங்களில் நீர் இருக்காது முதலுக்கே மோசமாகி விடும் பிறகு என்ன நம்ம 'ரவுண்ட் அப்' தான் இருக்கே அடிச்சிட்டு படுத்தா நேரா சொர்க்கம் தான்.
சரி விடயத்துக்கு வருவோம் இப்ப ஐந்து யுனிட் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்குது சுகமாக குளிக்கிறீங்க குடிக்கிறீங்க முழுமையான வியாபாரப் பண்டமாக தென் ஆபிரிக்கா போன்று இலங்கையிலும் தனியார்மயமாக மாற்றமடைந்தால் ஒரு யுனிட் குறைந்தது ஆயிரம் ரூபாவாக மாற்றமடையும் மட்டக்களப்பு நகரப் பகுதி, காத்தான்குடி பிரதேசங்களில் இருப்பவர்கள் ஒரு குவளை தண்ணீரில் ஒரு குடும்பமே குளிக்க வேண்டி வரும் கக்கா போகலாம் கழுவ இயலாது தண்ணீரை முகர்ந்து பார்க்கலாம் குடிக்க இயலாது. தேநீரை இப்ப இருப்பதை விட பல மடங்கு விலையில் விற்க வேண்டி வரும் சாப்பிட்ட கை கழுவ தண்ணீர் இருக்காது பிறகு என்ன ஒருவனும் சாப்பாட்டுக் கடைக்கு வரமாட்டான் இழுத்த மூட வேண்டியது தான். இங்கு நான் படுவாங்கரை பிரதேச மக்களைப் பற்றி கதைக்கவில்லை ஏனெனில் அவர்கள் இறந்த காலத்துடன் நீரின்றி இறந்திருப்பார்கள்.
சரி குடிநீரை பற்றி மாத்திரமே கதைக்கானே குடிநீரை வியாபாரப் பண்டமாக்கினால் ஏனைய விடயங்கள் குறிப்பாக விவசாயத்தின் நிலை என்ன என்று நீங்கள் கேட்பது விளங்குகின்றது. சரி அதையும் சொல்லிட வேண்டியது தான்.
தனியார் நிறுவனங்கள் எல்லாம் நீ நான் என போட்டி போட்டு குடிநீரிற்காக இருக்கின்ற நிலங்களை எல்லாம் கபளீகரம் செய்வார்கள். அந்த நீரை இலங்கையில் மாத்திரம் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் போட இயலுமா அதை நடைமுறையில் சாத்தியமும் இல்லையே பிறகென்ன வளைகுடா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளிற்கு பாரிய அளவில் நீர் தேவையே எடுடா அந்த மெசின உறிஞ்சடா அந்த நீரை என போட்டி போட்டு நீரை உறிஞ்சுவாங்க ஒரு கட்டத்துக்கு மேல வேகமா உறிஞ்சினா என்ன நடக்கும்?? ம்ம் ஒன்று நீரோட்டம் மாறி கடல் நீர் கலந்து தண்ணீர் சவறாகும் இல்லாட்டி ஆமா தண்ணீர் ஊறுவதே நின்று விடும் பிறகென்ன விவசாயத்தை நம்பியிருக்கின்ற 32%ற்கு மேற்பட்ட மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒரு பெரிய சாவு மணியா அடிச்சிட வேண்டியது தான். நிலமெல்லாம் பாலைவனமாகிவிடும் பிறகென்ன நாமளும் அடுத்த எத்தியோப்பியா சோமாலியாவா வளர்ந்திடுவோம்.
ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே நீரும் காற்றும் சூரிய ஒளியும் இலவசப் பண்டங்களாக இருக்கும் வரை தான் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம், ஜாதி, மதம் எல்லாம், என்று முழுமையாக வியாபார பண்டமாக மாற்றமடைகின்றதோ அதற்கு பிறகு இருப்பவர் மட்டுமே இங்கு இருக்க உரிமையுடையவர். இன்றைய நிலையில் தினமும் இருநூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் நீரை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ளுகின்றனர் ஒரு இருபத்திநாலு மணி நேரம் நீர் கிடைக்காமல் விட்டாலே சிறுநீரகம் போன்ற இன்றியமையாத உறுப்புகள் தற்காலிகமாக செயலிழக்க ஆரம்பித்து விடும். நீடித்தால் நிரந்தர செயலிழப்பும் மரணமும் தான்.
ஆகவே எங்கள் வருங்கால சந்ததியும் நீரையும் காற்றையும் எங்களை போன்றே இலவசமாக அனுபவிப்பதற்கேற்ற வகையில் நீர் ஆதாரங்களையும் மரங்களையும் பாதுகாப்பது மாத்திரமல்ல தனியார் கைக்கு செல்ல விடாதும் தடுப்பது இலங்கையராகிய எமது கடமையாகும். எம்மவர் தானே என தவறுகளுக்கு துணை சென்றால் நாளை பாதிக்கப்படப்போவது நீங்களும் உங்கள் சந்ததியுமே.
சிந்தித்துச்_செயல்படுவோம் நீரின்றி_அமையாதுலகு

Pragash Sinnarajah

No comments:

Post a Comment