Karunakaran Sivarasa
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தேவைகளைப் பற்றி அரசாங்கத்துடன் பேசுவதில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “நாங்கள் கோருவது உரிமை அரசியலே தவிர, சலுகை அரசியல் இல்லை” என்பதுவாகும்.
இதைப்பற்றிய விவாதங்களும் விளக்களும் தாரளமாக நிகழ்ந்த பிறகும் இந்த வேதாளம் இன்னும் முருங்கையை விட்டு இறங்கவேயில்லை.
ஆனால், இதற்குப் பின்னே இருக்கிற விசயந்தான் சுவாரசியமானது. நமது கவனத்திற்குரியது.
உரிமையைத் தவிர, சலுகைகள் எதையும் பெறவே மாட்டோம் என்று சொல்கிற
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், மலைய மக்களைப்
பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக்
கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கெஞ்சிக் கேட்டு சில வேலைகளைத் தங்கள்
பகுதிகளில் செய்து விட்டு தங்களின் நெஞ்சை நிமித்திக் கொண்டு
திரிகிறார்கள்.
இதற்காக இவர்கள் மலையக அமைச்சர்களைக்
குளிர்விக்கப்படுகிறபாடு கொஞ்ச நஞ்சமல்ல. மலைய அமைச்சர்கள் வடக்குக்
கிழக்குக்கு வந்து விட்டால் ஆராத்தி எடுப்பது முதற்கொண்டு கொழும்புக்குப்
போகும்போது எடுத்துச் செல்லும் உபாகரப் பொருட்கள் வரையில்... ஸ்..
அப்பப்பா..
இது ஒரு பெரிய காவடி. (காமடி)
இந்தத் தகவலைச் சொல்லிச் சிரித்ததே மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைவர் ஒருவர்தான்.
அந்த அரசியல் தலைவர் சொன்னார், “இப்பிடி எங்ககிட்ட கேட்டு (கரைச்சல்
தந்து) தங்களோட தேவைகளைப் பெறுவதை விட இவங்களே (தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பினரே) அரசாங்கத்திடம் நேரடியாக மக்களுக்கான நன்மைகளைப்
பெறலாமே?!” என.
“இதை நீங்களே அவர்களிடம் சொல்லலாமே!” என்றேன்.
“நாங்க பல தடவை சொல்லீட்டம். ஆனா அவங்க கேக்கிற மாதிரித் தெரியேல்ல” என்றார் அவர்.
நான் அவருக்குச் சொன்னேன், “இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஏறக்குறைய
200 ஆண்டுகள்தான். ஆனால் அவர்கள் இன்று அரசியலில் பலமானதொரு தரப்பாக
மாறியிருக்கிறார்கள். சில பல குறைபாடுகள், விமர்சனங்கள், மறுபார்வைகள்
இருந்தாலும் இலங்கையின் யதார்த்த நிலை, பாராளுமன்ற அரசியல் முறைமை
போன்றவற்றைக் கவனத்திற் கொண்டு பார்த்தால் மலையத் தரப்பின் வளர்ச்சியும்
முன்னேற்றமும் பெரியது. ஆனால், வடக்குக் கிழக்கு நமது பாரம்பரியப்
பிரதேசம், தமிழர்களே இலங்கையின் மூத்த குடிகள், ஆதியினர், ஆட்சிச்
சிறப்புகள் ஆயிரத்தைக் கொண்டோர் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கிற
வடக்குக் கிழக்கு மக்களும் அவர்களுடைய தலைமைகளும் இன்று உங்களிடம் (மலையக
சமூகத்தினரிடத்திலே) இரந்து வாழும் நிலையில்தான் உள்ளனர். இதற்குள் உலக மகா
அரசியல் விளக்கங்கள் வேறு” என்று.
எழுந்து என்னுடைய கைகளை அவர் பற்றிப் பிடித்து கட்டி அணைத்தார்.
அவருக்கு மேலும் சொன்னேன், “உங்களை (அமைச்சர்களை) இப்பொழுது (அமைச்சர்களாக
பதவியில் இருக்கும் வரையில்) அவர்கள் அங்கே அழைத்து மதிக்கிறார்கள். இங்கே
கொழும்புக்கு வரும்போதும்கூட உங்களைக் கனம் பண்ணுகிறார்கள். ஆனால், இதே
மதிப்பை மலைய மக்களுக்கோ வடக்குக் கிழக்கில் உள்ள இந்திய வம்சாவழியினருக்கோ
இவர்கள் கொடுப்பதில்லை. இதுதான் அவர்களுடைய தந்திரோபாயம். தாங்கள்
சுத்தவாளிகள் என்று காட்டிக் கொள்வது. அதேவேளை தந்திரமாகக் காரியத்தை
நிறைவேற்றிக் கொள்வது. மறுபக்கத்தில் வேறுபாடுகளையும் நுட்பமாகப் பேணிக்
கொள்வது...” என்று.
அவர் பேச்சற்றுச் சில கணங்கள் அப்படியே உறைந்து போயிருந்தார்.
No comments:
Post a Comment