அது
உடலுக்கும்
பருவத்திற்கும் நடுவே
தீர்க்க முடியாத புதிரென
திங்கள்தோறும்
முகிழ்கிறது
‘தாங்கவே முடியவில்லை’
என்கிறாள் மகள்
அம்மாவுக்குத் தெரியும்
அது எப்போதும் அப்படித்தான்
மடல் பூத்த தாழையின்
மணம் போலும்
மடந்தையர் எவரும்
கடந்துவரும் இரகசியமெனவும்
பேதைமை தொலைந்து
பெதும்பையென திரளும் பொழுதில்
ஒவ்வொரு சிறுபெண்ணையும்
சேர்த்தணைக்கும் இவ்வலி
வழிவழியாகத் தொடர்ந்திருக்கிறது
துளிர்த்து இலைவிட்டு கிளைப்பரப்பியிருக்கும்
அடிபெருத்த மரத்தின்
திண்மைக்குள்
வளையமிட்டிருக்கும்
அநாதியான காலமென
அந்த நித்திய வேதனை.
Sakthi Jothi
No comments:
Post a Comment