Search This Blog

Friday, May 5, 2017

கீழடி கண்டுபிடிப்பின் தனித்துவம் என்ன? தமிழர் நாகரிக வரலாற்றின் உயிர் நாடி


சங்க காலத் தமிழகத்தில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. முதன்முறையாக ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான முழுமையான அடையாளங்கள் கீழடியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வளர்ச்சி பெற்ற முழுமையான ஒரு நகரம் இப்போது இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு தமிழக வரலாற்றுக் காலத்தை புதிய மறுபரிசீலனையை நோக்கி நகர்த்துகிறது. அதுமட்டுமல்ல, தமிழகத்தின் இலக்கியத்திற்கும் வரலாற்றிற்கும் அறிவியல் பூர்வமான ஒளிபாய்ச்சும் இடமாக கீழடி இருக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பலரும் பழந்தமிழகத்தை ஒரு இனக்குழு சமூகமாகத்தான் வரையறுத்தார்கள். சிந்துவெளி நாகரிகத்தைப் போல, ஒரு நகர நாகரிகம் இங்கு இல்லை என்பது அவர்கள் கருத்தின் அடிப்படை. இலக்கிய வர்ணனைகளை மட்டும் வரலாற்று ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே கடந்த இலக்கியத்தைக் கடந்த ஆதாரங்கள் கண்டறியப்படாத நிலையில் அவர்களது கருத்துக்கு உயிர் இருந்தது. ஆனால், இன்று கீழடியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் அந்தக் கருத்தியலை தகர்த்திருக்கின்றன. சங்க காலத்தில் நகர நாகரிகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பிக்கின்றன.
நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்திய வரலாற்றுப் பேரவையின் (ஐசிஎச்ஆர்) மாநாடு இருவாரங்களுக்கு முன் ( 2016 டிச.29,30 தேதிகளில்) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கீழடி கண்டுபிடிப்புகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்த அமர்வுக்கு தலைமை வகித்த வரலாற்று அறிஞர் பேராசிரியர் ரொமிலா தாப்பர், “தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் இவை. இக்கண்டுபிடிப்புகளின் மூலம் தமிழக வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள அந்த நகரத்திற்கு கீழடி என்றுதான் பெயரா?
வரலாற்றில் இரண்டு உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, ஹோமர் எழுதிய இலக்கியத்தில் “டிராய்” என்ற பெயர் இருப்பதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த நகரத்தை பூமியின் அடியில் ஆய்வு செய்து கண்டுபிடித்தார்கள். இது ஒரு வகை என்றால், இன்னொரு வகையாக இந்தியாவில் ஹரப்பா-மொகஞ்சதாரோவை குறிப்பிடலாம். அங்கு கண்டறியப்பட்ட நகரத்திற்கு முன்பு என்ன பெயர் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. கண்டறியப்பட்ட இடத்தில் இருக்கும் கிராமங்களின் பெயர்தான் ஹரப்பா-மொகஞ்சதாரோ.
இப்போது கீழடியில் கண்டறியப்பட்டுள்ள நகரத்தின் பெயர் என்னவென்று தெரியாது, இப்போது இருக்கும் அந்த கிராமத்தின் பெயர் கீழடி என்பதால், அந்தப் பெயரிலேயே அழைக்கிறோம். ஆனால், சங்க கால இலக்கியங்களில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில், இது பழைய மதுரையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், சங்க இலக்கியத்தில் மதுரை என்பது திருப்புவனத்திற்கு நேர் மேற்கிலும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கிலும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய மதுரையோ திருப்பரங்குன்றத்திற்கு வடகிழக்கிலும் திருப்புவனத்திற்கு வடமேற்கிலும் இருக்கிறது.
ஆனால், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள நகரமானது சங்க இலக்கியத்தில் வருகிற நிலவியல் குறிப்பின் படி மிகத் துல்லியமான இடத்தில் அமைந்துள்ள நகரமாக இருக்கிறது. எனவே இதுவே சங்க கால மதுரையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு நகர நாகரிகம் என்று எதன் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்?
ஒரு நகரத்தினுடைய முழுமையான கட்டமைப்பு அங்கு கண்டறியப்பட்டுள்ளது. வரிசை வரிசையாக கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; அந்த தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளிச் செல்லவுமான அமைப்புகள்; அந்தக் கால்வாய் தடத்தை ஒட்டி சிறிதும் பெரிதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்.
இவைகளெல்லாம் முதன்முறையாக கிடைத்துள்ளன. இவற்றை ஒப்பிடுவதற்கு தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ வேறு இடங்களே இல்லை.
மேலும் ஆப்கானிஸ்தானப் பகுதியைச் சேர்ந்த சூது பவளத்தினால் ஆன மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும் ,வட இந்திய பிராகிருத பெயர்கள் தாங்கிய எழுத்துக்களும் கிடைத்துள்ளன. பானை ஓடுகளில் இதுவரை 73 பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல, ஒரு தொழிலகம் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப்பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மொத்தத்தில், வணிகமும் பண்பாடும் ஊடறுத்துக் கிடக்கும் பெருநகரமாக இது இருந்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5000க்கும் மேற்பட்ட பொருட்களை முழுமையாக பட்டியலிட முடியாது என்றாலும், வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சிறந்த சான்றுகளை நம்மால் அங்கே காண முடிகிறது.

(எழுத்தாளர் சு.வெங்கடேசன் நேர்காணல்)

https://theekkathir.in

No comments:

Post a Comment