|| உபநிடத அறிமுகம்
யஜுர் வேதத்தில் அமைந்திருக்கும் உபநிடதங்களில் முக்கியமானது ‘கட
உபநிடதம்’ ஆகும். யமதேவருக்கும் நசிகேதன் எனும் சிறுவனுக்கும் இடையே
நடக்கும் உரையாடலாக இந்த உபநிடதம் அமைந்துள்ளது. இந்த உபநிடதத்தில் இரண்டு
அத்தியாயங்களும், ஒவ்வொரு அத்தியாயத்திலும் மூன்று வல்லிகளும்
(பிரிவுகளும்) உள்ளன.
|| நன்மையானதும் இன்பமானதும்
கட
உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தின், இரண்டாவது வல்லியில் “ஷ்ரேயஸ்” மற்றும்
“ப்ரேயஸ்” எனும் இரண்டு விஷயங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
>> ஷ்ரேயஸ் - நிரந்தரமான நன்மை அளிக்க கூடியது
>> ப்ரேயஸ் - தற்காலிகமான இன்பத்தை அளிக்க கூடியது
>> ப்ரேயஸ் - தற்காலிகமான இன்பத்தை அளிக்க கூடியது
”நன்மைக்கான பாதை வேறு (நன்மைக்கான பாதை மோட்சத்திற்கானது). இன்பத்திற்கான
பாதை வேறு (இன்பத்திற்கான பாதை ஆத்மநாசத்திற்கானது). இவ்விரண்டும்
முற்றிலும் வேறான பலனைக் கொண்டவையாக மனிதனைக் கட்டுகின்றன. அந்த இரண்டில்
நன்மைக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து கொண்டவனுக்கு நல்வாழ்வு உண்டாகின்றது.
யார் இன்பத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கிறானோ அவன் மோட்சத்திலிருந்து
வீழ்ந்து விடுகின்றான் (மோட்சத்தை அடைய சிரமப்படுகின்றான்).” [கட உபநிடதம்
1:2:1, யஜுர் வேதம்]
”நன்மை தரக்கூடியதும் இன்பம் தரக்கூடியதும் என
இரண்டு வகையானவற்றை மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கின்றான். அறிவுள்ளவன்
அந்த இரண்டையும் நன்கு பகுத்து ஆராய்கின்றான். அந்த அறிவுடையவன் இன்பத்தை
விடுத்து நன்மையைத் தேர்ந்தெடுக்கின்றான். அறிவற்றவன் பொருள்களை
அடைவதற்கும் அவற்றைக் காப்பதற்கும் இன்பத்தை தேர்ந்தெடுக்கின்றான்.” [கட
உபநிடதம் 1:2:2, யஜுர் வேதம்]
|| எது இன்பமானது? எது நன்மையானது?
மனிதன் வாழ்க்கை எனும் சாலையில் பயணிக்கும் போது, அவன் அடிக்கடி நன்மை
மற்றும் இன்பம் என இரண்டு வெவ்வேறு பாதைகளை சந்திக்கின்றான். அவற்றுள்
இன்பம் எனும் பாதை பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் புலன்களுக்கு சுகத்தை
தருபவையாகவும் இருக்கும். உலக மக்களில் பெரும்பாலானவர்கள் இன்பத்திற்கு
மயங்கி அதில் மூழ்கி விடுகின்றனர். தற்காலிகமான இன்பத்தை தரும் பாதையில்
பயணித்து, தம் இலக்கை அடைய முடியாமல் குழம்பி தவிக்கின்றனர். சிலர் அதுதான்
தாம் அடையவேண்டிய இலக்கு என கருதி அங்கேயே இறுதிவரை கிடந்து மடிகின்றனர்.
வாழ்க்கையில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல், வாழ்க்கையின் இலக்கான
மோட்சத்தையும் அடையாமல் இறப்பதால் அத்தகையவர் மீண்டும்
பிறப்பெடுக்கின்றனர்.
வாழ்க்கையில் எல்லாமே விதிப்படி நடக்கும்
என்பது பொருத்தமற்ற கருத்தாகும். வாழ்க்கையில் ஒரு துன்பம் நேர்ந்தவுடன்,
உடனே “எல்லாம் என் விதி” என்று துவண்டு விடுவார்கள். நிகழ்காலத்தில் நாம்
அனுபவிக்கும் எல்லா இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் நம்முடைய இறந்த கால
செயல்களே முக்கிய காரணமாகும். அதுபோல எதிர்காலத்தில் நாம் அனுபவிக்க
வேண்டிய “விதி” இப்போது நிகழ்காலத்தில் நம் கையில் தான் உள்ளது. இதுதான்
கர்ம நியதி.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், வரம்பு மீறிய உடலுறவு
கொள்தல், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்தல், மிக அதிக நேரம் உறங்குதல், மிக
குறைந்த நேரம் உறங்குதல், எப்போதும் தொலைக்காட்சி பார்த்தல் – இவ்வாறு
(கண், காது, மூக்கு, நாக்கு, மெய்) என ஐம்புலன்களுக்கு தற்காலிக இன்பத்தை
தரக்கூடிய யாவும் பின்னாளில் பெரும் துன்பத்தை தரும். ஆதலால் தான், ப்ரேயஸ்
என சொல்லப்படும் இவற்றை தவிர்த்து விடும்படி வேதாந்தம் அறிவுரைக்கின்றது.
நல்ல நூல்களைக் கற்றல், தினமும் தியானம் மேற்கொள்தல், யோகாசன பயிற்சிகளை
செய்தல், ஆரோக்கியமான மற்றும் நலம் தரும் உணவுகளை உட்கொள்தல், போதுமான
நேரம் உறங்குதல், வேண்டியவருக்கு உதவி செய்தல், தெய்வ வழிபாட்டில்
ஈடுபடுதல், முறையான விரதங்கள் மேற்கொள்தல் போன்றவை நன்மை தரக்கூடிய
செயல்கள் ஆகும். எனவே வேதாந்தம் நமக்கு எப்போதும் நன்மையை மட்டுமே
தேர்ந்தெடுக்கும்படி வழிகாட்டுகின்றது. நன்மையான பாதை தான் மோட்சத்திற்கான
பாதை. ஓம் ஷாந்தி
No comments:
Post a Comment